சித்தர்கள்

இராமதேவர் சித்தர் வாழ்கை வரலாறு

Posted on

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,

மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு
உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா

எனவுரைத்துள்ளார். இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.
ஒருமுறை காசிமாநகரில் திருக்கோயில் கொண்ட இறைவன் விசுவநாதரைக் கொண்டு வந்து தம் ஊரான காயாரோகணத்தில் (நாகப்பட்டினத்தில்) நிறுவிட இராமதேவர் எண்ணம் கொண்டார். இயல்பாகவே இவர் சஞ்சார சமாதியில் லயித்திடுவார். தாம் நடந்து கொண்டே இருந்தபோதும் இவரது எண்ணம் மட்டும் எங்கோ சென்றிருக்கும். எதனையும் இவரது கண்கள் நோக்கிடாது; காதும் கேட்காது; சுவாசமும் ஓடாது.

இத்தைய நிலையில்தான் இராமதேவருக்கு காசி விசுவநாதரை நாகப்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. உடனே எழுந்து இராமதேவர் விரைந்து நடக்கலானார். எத்தனை நாட்கள் அவர் நடந்தார் என்று அவருக்கே தெரியாது. சுயநினைவு இல்லாமலேயே அவர் நடந்தபடி சென்று கொண்டிருந்தார்.

ஒரு நாள் சுயநினைவு வரப் பெற்றார். அப்போது தாம் காசியில் இருப்பதை இராமதேவர் உணர்ந்தார். உடனே விரைந்து சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்த இராமதேவர் பின் காசி மாநகரத்து இறைவனான விஸ்வநாதப் பொருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்து மகிழ்ந்தார். மீண்டும் வந்து கங்கையில் மூழ்கி அவர் எழுந்தார். அப்போது அவருடைய கரத்தில் லிங்கத் திருவுரு ஒன்று இருந்தது. அதைக் கண்டதும் இராமதேவர் மிகவும் மகிழ்ந்தார். மீண்டும் நாகப்பட்டினத்துக்கு வந்த இராமதேவர் தாம் கங்கையில் மூழ்கியெடுத்து வந்த காசி விஸ்வநாதப் பொருமானது திருவுருவமான இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். தினந்தோறும் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திருவுருவை பூஜித்து வந்ததுடன் தியானத்திலும் மூழ்கினார்.

அந்தக் காலத்தில் நாகைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து சென்றிடும். பெரும்பாலும் அரேபிய நாடுகளிலிருந்து வந்து செல்லும் கப்பல்களே அதிகம். அக்கப்பல்களில் வரும் அரேபியர்களைக் கண்டு இராம இராமதேவர் வியந்தார். தாமும் அவர்களுடன் பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.

ஒரு நாள் வழக்கம் போல் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண் விழித்துப் பார்த்தபோது தாம் அரேபியாவில் இருப்பதை உணர்ந்தார். ‘தாம் எப்படி அங்கு வந்தடைந்தோம்’ என்பது அவருக்கே புரியவில்லை. அந்த எண்ணத்துடன் தியானத்தில் அமர்ந்தவர் சஞ்சார சமாதியில் ஆழ்ந்து மெக்காவுக்கு வந்து சேர்ந்து விட்டார். கடல் வழியில் வந்தாரா? அல்லது தரை வழியில் வந்தாரா? என அவருக்குத் தெரியாது.

வறண்ட பாலைவனம். எங்கு பார்த்தாலும் மணல் பரப்பு. கண்ணுக்கு எட்டிய வரை மணல் பரப்புதான் தென் பட்டது. வெப்பம் மிகுந்திருந்தமயால் வியர்வை ஆறாகப் பெருகியது. இராமதேவர் விழித்தவாறே நின்று கொண்டிருந்தார். வெகு தொலைவில் ஒட்டகம் ஒன்று வருவதை அவர் கண்டார். அந்த ஒட்டகத்தின் பின் ஒன்று, இரண்டு என எண்ணற்ற ஒட்டகங்கள் வரிசையாக வந்தபடி இருந்தன.

பாலைவனத்தில் தன்னந்தனியாக நின்ற இராமதேவரைக் கண்டதும் அரேபியர்கள் தங்களது நாட்டிற்குள் எவனோ அத்துமீறி நுழைந்துள்ளான் என்று எண்ணி விரைந்து வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

“ யார் நீ? ”
“ எங்கிருந்து நீ வருகிறாய்? ”
“ எப்படி இங்கு வந்தாய்? ”

என்று ஆளாளுக்கு அவரிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர். இராமதேவர் அவர்களுக்கு பதில் கூற முயன்றும் அவரது பதிலை காது கொடுத்துக் கேட்போர் யாருமில்லை. அவர்கள் ஆக்ரோஷத்துடன் அவரைக் கொல்ல நெருங்கினர். அவர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். அவனால் இராமதேவர் உயிர் பிழைத்தார்.

இதுபற்றி போகர் 7000 – இல்,

யூகியாம் மதிமந்திரி யோகவானாம்
உத்தமனார் அங்கொருவர் தான் இருந்தார்
யோகியாம் சின்மயத்தில் சேர்ந்த சித்து
ஒளிவான ரிஷி ஒருவர் அங்கிருந்தார்

என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரேபியர்கள் அவரிடம், ”நீ ஏன் தீன் தேசத்துக்கு வந்தாய்? உன்னைத் தண்டிக்காமல் விடமாட்டோம்” என்று கத்தினர். இதுபற்றி…..

போனாரோ மலைநாடு குகை கடந்து
பொங்கமுடன் நபிதனையே காணவென்ரறு
காணாறு பாதைவழி செல்லும் போது
கருங்காளை நபிக்கூட்டம் மிகவாய்க் கண்டு
மானான மகதேவர் பதியிலப்பா
மார்க்கமுடன் வந்ததனால் உநதமக்கு
தீனான தீன்பதியில் உந்தனைத் தான்
திட்டமுடன் சபித்திடுவோம் என்றிட்டாரே.  5800

என்று போகர் 7000 – இல் 5800 – ஆவது பாடலில் கூறப்பட்டுள்ளது மேலும்,

என்றவுடன் இராமதேவர் தாள் பணிந்து
எழிலான வார்த்தையது கூறும்போது
சென்றதுமே யாகோபு என்று கூறி
சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது தானும் ஈந்து
சிறப்புடனே அசன் உசேன் என்று கூறி
வென்றிடவே உபதேச பிரணவத்தை
விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே.  5801

ஓதவே நபிநாயகர் கூட்டத்தாரகள்
உத்தமர்கள் மனம்போலே மனதுவந்து
நீதமுடன் மக்கபுரி கோட்டைக் குள்ளே
நிஷ்களங்க பக்கிரி யாகோபு தன்னை
கோதமுடன் கொண்டு சென்றார் அரண்மனைக்குள்
கேறாமல் கொத்துபா ஓதினார்கள்
வீதமது பயனறிந்த சித்து தாமும்
விடுபட்டு வந்ததொரு யாகோபாச்சே  5802

என்று போகர் 7000 – இல் கூறுப்பட்டுள்ளது. அதாவது ”உன்னைத் தண்டிக்காது விடமாட்டோம்” என்று அரேபியர் கத்தினார். உடனே இராமதேவர் அவர்களின் தாள் பணிந்து மிகவும் நயமான வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார். உடனே அவர்கள் இராமதேவரிடம், ”அப்படியானால் நீ எங்களின் மதத்தில் சேர்ந்துவிடு” என உரைத்து, ”இன்று முதற்கொண்டு உனது பெயர் யாகோபு” என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி அவருக்குச் சுன்னத்தும் செய்து வைத்தனர். பின் அவர் உண்பதற்க்கு ரொட்டியும் கொடுத்து உபதேசமும் செய்து வைத்தனர்.

அன்றிலிருந்து யாகோபு எனப் பெயரிடப்பட்ட இராமதேவர், அவர்கள் மனம்போல் நடந்து கொண்டார். பின் அவரை அரேபியர்கள் மக்கா நகரத்துக் கோட்டையுள் இருந்த அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தங்கள் மறை நூலாகிய குரானை ஓதுவித்தார்கள். யாகோபுவும் அனைத்தையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்து அவர்களது நம்பிக்கைக்கு உரியவரானார்.

வெகு விரைவிலேயே மெக்கா நகர மக்கள் யாகோபுவைத் தம்முள் ஒருவராக ஏற்றுக கொண்டனர். அவரும் அரேபி மொழியில் பேசிப் பழகினார். அவர்களது நோய்களையும் போக்கியருளினார். அவர்களுக்குள் உண்டான வழக்குகளைச் சிக்கல் ஏதுமின்றித் தீர்த்து வைத்தார்.

காலப்போக்கில் யாகோபுக்கு சீடர்கள் பலர் சேர்ந்தனர். தன் சீடர்கள் மூலமாய் அரபு நாட்டிலிருந்து அரிய மூலிகைகளைக் கொண்டுவரச் செய்த யாகோபு அவற்றின் தன்மைகளை ஆராய்ந்தறிந்தார். கற்ப மூலிகைகளின் திறனை சோதித்தறிய தாம் சாமதியில் இருக்க விரும்பிய யாகோபு தம் விருப்பத்தைச் சீடர்களிடம் கூறினார். அவர்களிடம் யாகோபு, ”நான் சமாதியில் அமர்வேன். பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்றெழுவேன்” என்றார். ”இது எப்படி சாத்தியம்?” என்று வியந்த சீடர்கள் அவரது கூற்றை நம்ப முடியாது தவித்தனர். ஆனாலும் தம் குருநாதருடைய வாக்கை அவர்கள் மீறவில்லை.

யாகோபு சமாதி நிலை கொள்வதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டு குழி தோண்டப்பட்டது. அக்குழிக்குள் நான்கு புறமும் சுவர்களும் எழுப்பப்பட்டன. சமாதிக்குள் இறங்கிய யாகோபு தன் சீடர்களிடம் கூறியதாக பின்வரும் பாடல் விளக்குகிறது.

இறங்கியே சமாதிதனில் இருந்துகொண்டு
எழிலாகச் சீடனுக்கு அதிகம் சொல்வார்
சுரங்கம் என்ற குழிதனிலே போறேன் அப்பா
சுருதிபொருள் கருவி கரணாதி எல்லாம்
அரங்கமுடன் உள்ளடக்கி மனதிருத்தி
வையகத்தின் வாழ்க்கை எனும் தளை அகற்றி
உரங்களுடன் பத்தாண்டு இருப்பேன் என்று
உத்தமனார் யாகோபு கூறினாரே.                    போகர் 7000 – 3872

சமாதிக்குள் இறங்கிய யாகோபு தன் சீடனிடம், “பத்தாண்டு காலத்துக்கு நான் சமாதியில் இருப்பேன். பின் வெளியே வருவேன். அவ்வாறு நான் சமாதியில் இருந்து வெளிவரும்போது அற்புதங்கள் பல நிகழ்ந்திடும். பின் தேன்மாரி பொழியும். நறுமண மலர்கள் பூத்துக் குலுங்கி வாசனையப் பரப்பும். விலங்குகளும் ஞானம் பேசும். இம்மாதிரியான அடையாளங்களைக் கொண்டு நான் சமாதியில் இருந்து வெளிவரும் நாளை நீ உணர்ந்திடலாம்” என்று கூறியதுடன் அச்சமாதியை மூடிவிடுமாறும் கூறினார்.

ஆண்டுகள் பத்தும் கழிந்தன. யாகோபு உரைத்தது போன்றே அவர் சமாதியிலிருந்து மீண்டு வந்தார். தனது சீடன் சமாதி அருகிலேயே தனக்காகக் காத்திருந்தது கண்டு மனம் மகிழ்ந்தார். அவனுக்கு உபதேசங்கள் பலவற்றை உரைத்தருளினார். யாகோபு தான் சமாதிக்குள் சென்ற பின் நடந்தது என்ன என்று தனது சீடனிடம் கேட்டபோது அவன், “குருதேவ! தாங்கள் சமாதிக்குள் சென்ற பிறகு பெருங்கூட்டம் கூடியது. யாகோபு சாமாதிக்குப் சமாதிக்கு போய்விட்டார். இனி அவர் திரும்பவே மாட்டார். அவரது உடல் மண்ணோடு மண்ணாய்ப் போகும் ” என்று மிகவும் கேவலமாகப் பேசினர்.

இந்நிகழ்வு பற்றி போகர் 7000 – இல்,

கூச்சலுடன் வெகு மாண்பர் கும்பல் கூடி
குவலயத்தில் வேகமுடன் வார்த்தை சொன்னார்
ஏச்சாகக் கூறினதோர் மொழிகட்கு எல்லாம்
எதிராக யான் ஒன்றும் பேசேன் பாரே                    3886

பாரேதான் வெகுகாலம் சமாதி பக்கம்
பாரினிலே வருவாரும் போவாரும் உண்டு
நேரேதான் அவர்களிடம் வார்த்தை பேசேன்
நேர்மையுடன் சமாதியிடம் பள்ளி கொள்வேன்
கூரேதான் சமாதியிடம் இருந்து கொண்டு
கொப்பெனவே தேவர் வரும் காலம் மட்டும்
ஊரேதான் போகாமல் காத்திருந்து
உறுதியுடன் சேவையது கண்டிட்டேனே.                3887

அதாவது சீடன் யாகோபுவிடம், “பல பேர் பலவிதமாகக் கூச்சலிட்டுப் பேசினர். நான் எதனையும் காதில் கேட்டுக் கொள்ளாதிருந்தேன். தங்களது சமாதிக்கு அருகிலேயே படுத்து உறங்கினேன். இரவும் பகலும் சமாதிக்குக் காவலாய் இருந்தேன். ஒரு முறை கூட நான் எனது ஊருக்குப் போகவே இல்லை” என்றான்.

சீடன் உரைத்து கேட்ட யாகோபு, “சீடனே! அவர்கள் பேசியதில் தவறு ஏதுமில்லை. இந்த மானிட தேகம் நிலையற்றது. காயகற்பம் உண்டு காயத்தைச் சித்தி செய்து நான்கு யுகங்கள் வாழ்ந்தாலும், பின் ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாய்த்தான் போகும். நான் மீண்டும் சமாதியில் இருக்க விரும்புகிறேன்.

இம்முறை முப்பது வருடங்கள் கழிந்த பின்னரே நான் வருவன், நான் சமாதிக்குச் சென்ற பின் என்னைப் பற்றித் தவறாகப் பேசியோருக்குக் கண் பார்வை பறிபோய்விடும்!” எனவுரைத்துவிட்டு மீண்டும் சமாதிக்குள் இறங்கிவிட்டார்.

இம்முறை சமாதியின் மீது பாறாங்கல் கொண்டு மூடப்பட்டது. சமாதியைப் பார்க்க வந்தவர்கள், “அடப் பாவமே! இனி யாகோபு திரும்பி வருவது இயலாது” என்று ஏளனமாகப் பேசியதுமே அவர்கள் பார்வை பறிபோனது. அதுமட்டுமல்லாது.

குருடராய் போனவர்கள் சிலது மாண்பர்
குவலயத்தில் அழிந்தவர்கள் சிலது மாண்பர்
திருடராய் ஒளித்தவர்கள் சிலது மாண்பர்
தீர்க்கமாய் வாய்குளறிச் சிலது மாண்பர்    3901
என்று போகர் 7000 – இல் கூறப்பட்டுள்ளது.

பார்வை பறிபோனதுமே, “ஐயகோ! இவ்வாறு பார்வை பறிபோய்விட்டதோ!” என்று அடித்துக் கொண்டார்கள் ‘வாய்க் கொழுப்பினால் வந்த வினை இனி தீருமோய?’ என்று கதறியழுதனர்.

முன்நின்று யாகோபு வருவதெப்போ
மூவுலகில் சாபமது தவிர்பதெப்போ
மன்னரவர் மாண்பர்களின் வினையைநீக்கி
மானிலத்தில் வரம்கொடுக்கும் காலம் எப்போ.    3902

என்று அழுது புலம்பியவாறு காத்துக் கிடந்தனர். ஆண்டுகள் பல உருண்டோடின. இதனிடையே மாண்டவர்கள் பலர். உயிருடன் இருந்தவர்கள் பலர்.

கோடியாம் சிலபேர்கள் ஞானவான்கள்
குவலயத்தில் வெகுநாளாய்ப் பேருண்டாக
நாடியே சமாதியிடம் கிட்டிருந்து
நாதாந்தப் பேரொளிவின் சாமாதி முன்னே
வாடியே காத்திருந்த சீடர் தாமும்
வன்மையுடன் உபதசம் பெற்றார் தானே.

யாகோபு உரைத்தபடி சமாதியின் அருகேயே முப்பது ஆண்டுகள் சீடர்கள் காத்திருந்தனர். பின் சமாதியிலிருந்து யாகோபு வெளிவந்த்தும் அவரது தரிசனம் பெற்றனர். ஜோதி வடிவாய் வெளிவந்த யாகோபு தம் சீடர்களது குறைகளைப் போக்கியருளினார். ஆனால் அவருக்கு மெக்கா நகரத்து வாழ்க்கை அலுத்துப் போனது. ஜீவன்முக்தி அடைய தான் தமிழகத்திற்குத் திரும்பிச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானத. சிறிது காலம் தம் சீடர்களுடன் தங்கிய யாகோபு அவர்களுக்கு வேண்டிய நல்லுபதேசங்களைச் செய்தருளினார். பின் அவர் தன் சீடர்களிடம், “நான் மீண்டும் சமாதிக்குச் செல்கிறேன். இனி நான் திரும்பமாட்டேன்” என்றுரைத்தருளினார்.

யாகோபு உரைத்ததைக் கேட்டு அவரது சீடர்கள் திடுக்கிட்டனர். அவரைப் பணிந்து தொழுது அழுதனர். ‘அவர் மீண்டும் சமாதிக்குச் செல்லக் கூடாது. தங்களுடனே இருக்க வேண்டும்.’ என்று மன்றாடினர். ஆனால் அவர்களிடம் யாகோபு, “அட மூடர்களே! அவ்வாறே நான் இருந்தாலும் நான் இருக்கும் காலம் வரையில் என்னுடனேயே நீங்களும் இருக்க இயலுமா? பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். இந்த உடம்புதான் அழியுமே தவிர ஆன்மா ஒருபோதும் அழியக்கூடியதல்ல. எனவே நீங்கள் வருந்த வேண்டாம். நான் என்றும் உங்களுடனேயே இருப்பதாக எண்ணுங்கள்” என்று கூறிவிட்டு விடைபெற்று மீண்டும் சமாதிக்குள் புகுந்தார்.
யாகோபு மெக்காவில் சமாதி கொண்டதாக சிலர் கூறுவர். ஆனால் அவர் சமாதியுள் இருந்து வெளிப்பட்டுத் தமிழகம் வந்தவுடன் சதுரகிரியில் சிறிது காலம் தங்கியிருந்தார். தாம் மெக்காவில் இருந்தபோது அரபி மொழியில் எழுதிய மருத்துவ நூல்களைத் தமிழில் இயற்றினார். பின் சதுரகிரி வனத்தில் சிலகாலம் தங்கிய யாகோபு என்ற இராமதேவர் பின் அழகர் மலைக்கு வந்து அங்கேயே சமாதி அடைந்தருளினார்.

தமிழகத்திற்கு வந்து தம் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்ததுமே அவர் மீண்டும் இராமதேவராகவே மாறினார் என்றும், அதனாலேயே அவர் அழகர்மலையில் சமாதியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

Advertisements

அகப்பேய்ச் சித்தர்

Posted on Updated on

 

மனத்தைப் பேய் என உருவகித்துப் பாடியதால் அகப்பேய்ச் சித்தர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அகம்+பேய்+சித்தர் = மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவரென இவருக்குக் காரணப் பெயராக அமைந்துள்ளது. அகப்பேய்ச் சித்தர் நாயனார் சாதியைச் சேர்ந்தவர். துணி வணிகஞ் செய்து பிழைத்து வந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார்.

வேட்டி, புடவை முதலான துணிமணிகளை வீடு வீடாகச் சென்று விற்கும்போது எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்திருப்பார். அவர்களின் ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள் அவர் மனத்தைத் தொட்டன. மனிதன் துன்பம் இல்லாமல் வாழ முடியாதா? இரவு பகலாகச் சிந்தித்தார். அவ்வாறு பாதிக்கப் படுகிறவர்கள் ஏதாவது விமோசனம் காண வேண்டும் என்று நினைத்தார். தம் மனத்தை அடக்கிட நினைத்தார்.

அப்போது ஏ! என் அகமே! ஆசையால் ஆடுகிறாய்;
ஆணவத்தால் ஆடுகிறாய் ; பாசத்தால் ஆடுகிறாய் ;
வேஷத்தால் ஆடுகிறாய் இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே !
அடங்கிக் கிடக்க மாட்டாயா? என்று குமுறுகிறார்.

நஞ்சுண்ண வேண்டாமே – அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சம் அலையாதே – அகப்பேய்
நீ ஒன்றும் சொல்லாதே

என்று பாடி, மனம் பேய் போன்று அலைவதைத் தடுத்து நிலைநிறுத்தி விடு என்று அறிவுரை கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர். இவரது நூல்களுள் வாத வைத்தியம், யோக ஞானப் பாடல்கள் பரிபாஷைகளைப் பெற்று, கடினமானதாக அமைகின்றன. (பரிபாஷை :ஒவ்வொரு துறையிலும் அதற்கே உரிய கலைச்சொற்கள் உண்டு. அவற்றைப் பரிபாஷை என்று குறிப்பிடுவார்கள்.) மேலும் அகப்பேய்ச் சித்தர் பாடல் 90, பூரண ஞானம் 15 என்ற நூல்கள் யோக ஞான சாஸ்திரத் திட்டு ஏழாம் பாகத்தில் (தாமரை வெளியீடு) உள்ளன. அகப்பேய்ச் சித்தர் திருவையாற்றில் சித்தியடைந்தார் என்பர்.

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது. மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார்.

மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் “அகப்பேய் சித்தர் பாடல்கள் 90” என்ற நூலை இயற்றினார். “அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான்”, என்பது இவரின் வாக்கு. இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை: அகப்பேய் சித்தர் பாடல் – 90 அகப்பேய் பூரண ஞானம். இவர் சித்தியடைந்த திருத்தலம் : – திருவையாறு.

தியானச்செய்யுள் இலை உடையுடன் கலை உருவாய் காட்சி தரும் காரியசித்தி சுவாமியே மாறாத சித்தியை மரப்பொந்தினில் பெற்ற மங்காச் செல்வரே அசைகின்ற புத்தியை இசைக்கின்ற சித்தியால் இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே. தன்னை அறியவேண்டும் – அகப்பேய்! சாராமல் சாரவேண்டும் பிள்ளை அறிவதெல்லாம் அகப்பேய்! பேய் அறிவு ஆகும் அடி ஒப்பனை அல்லவடி – அகப்பேய்! உன் ஆனை சொன்னேனே! அப்புடன் உப்பெனவே – அகப்பேய்! ஆராய்ந்திருப்பாயே! கருத்து: தன்னை அறியவேண்டும் – தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும்.

நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார்.

தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர். அகப்பேய் சித்தர்

பூசை முறைகள்:

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் சுவானியின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்கான தியானச் செய்யுளை மனமுருகக் கூற வேண்டும். பின்பு பின்வருன் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களைக் காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தைப் போக்குபவரே போற்றி!
7. சங்கீதப்பிரியரே போற்றி!
8. சூரியன் சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூசை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்கு காட்சியளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் சுவாமியே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் அகப்பேய் சித்தரே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக இளநீர் (வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பழம் பால் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்ட வேண்டும்.

நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ அகப்பேய் சித்தரின் பூசை பலன்கள்:

இவர் நவக்கிரகத்தில் குரு பகவானைப் பிரதிபலிப்பவர்.

வியாழக்கிழமை இவரை பூசிக்க சிறந்த நாள். இவரை வழிபட்டால்,

1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷ்ங்கள் அகலும்.
2. பணப்பிரச்சினைகள், புத்திர பாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினை போன்றவை அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும்.
4. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
5. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
6. கொடுக்கல், வாங்கல், பிரச்சினை வழக்குகள் அகலும்.
7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.
8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

மருதிருவர் பெற்ற சாபம் சிவகங்கை அருகே உள்ள காளையார்கோவில் பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர்.

1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. கருவறைக்குள் மாமிச பண்டங்கள் மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.

பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஓற்றரை நியமித்தார் மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.

சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர். மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார். மண்ணுக்குள் புதைக்கப்பட்டார் அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.

அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். மருதிருவர்களுக்கு சாபம் தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார். அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.

ஜீவ சமாதி :

அகப்பேய்ச் சித்தரின் கொளஞ்சியப்பர் ஆலயம் – விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். பெருமை மிக்க அருட்கூடமாய் திகழும் இத்தலமானது சித்தர் பூமி என்கிற நம்பிக்கை நிறைவாய் இருக்கிறது. பாம்பாட்டிச் சித்தரின் குருவாகிய அகப்பேய் சித்தர் இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போன்று கோரக்கர் ஜீவ சமாதி கொண்ட 12 தலங்களில் இதுவும் ஒன்றென சொல்கிறார்கள்.

பெரும்பாலும் சித்தர் சமாதிகளில் சிவலிங்கம் தான் இருக்கும். சிலவிடங்களில் விநாயகர் இருப்பார் , சீர்காழி சட்டைநாதர் சமாதி , விருத்தாசலம் பாம்பாட்டி சித்தர் மற்றும் நாகப்பட்டினம் அழுகன்னி சித்தர் சமாதிகளில் பலிபீடம் தான் இருக்கிறது . இங்கும் அருகருகேயுள்ள இரண்டு மூல ஸ்தானத்தில் ஒன்றில் விநாயகரும் மற்றொன்றில் பலிபீடமும் அமைந்துள்ளது .

மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் அருள்பாலிக்க கூடிய இவ்விடமே அகப்பேய் சித்தரின் சமாதியாகும் .  மணிமுத்தாற்றை தீர்த்தமாகவும், கொளஞ்சி மரத்தை தல விருட்சமாகவும் கொண்ட இத்தலத்தில் சித்தர்களின் அருளும், சிவனின் சாந்நித்யமும், குமரக் கடவுளின் நீதி பரிபாலனமும் நிறைந்திருக்கிறது. தற்போது இங்கு சித்தர்கள் மண்டபம் ஒன்று அமைத்துள்ளார்கள் அருமையாக உள்ளது ,, கோவில் பின்புறம் மான்கள் இருப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாகும் .. இவர் இங்கு கோயில் கொண்ட கதையும் சுவாரஸ்யமானது. >> இத்தலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்தது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து கொண்டு மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டியபடி அந்த பக்கம் செல்வார்கள். காலை சுமார் பத்து மணிக்கு செல்லும் அவர்கள் அந்தி சாய்வதற்குள் வீடு திரும்பி விடுவார்கள். அந்த அளவுக்கு மனித நடமாட்டம் குறைந்த காட்டுப்பகுதியாக விளங்கியது. >> எல்லா மாடுகளும் பால் தருகிறது . ஆனால் ஒரு வெள்ளைப் பசு மட்டும் நான்கைந்து நாட்களாக சொட்டு பால் கூட தர மாட்டேங்குதே என்று கவலையுடன் இருந்த பண்ணையார் ஒரு நாள் அப்பசுவை கண்காணித்தார்.ஒருநாள் தோட்டத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது அந்த வெள்ளைப் பசு மட்டும் தனியாக ஒரு புதருக்குள் சென்றதை கவனித்த பண்ணையார் அதை பின் தொடர்ந்து சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி கண்டு அதிர்ந்து நின்றார். >> புதரின் அருகே சென்றதும், பசு சுற்றும் முற்றும் பார்த்து, தனது கண்களை மூடி நின்றது. அதன் காம்பிலிருந்து தானாக பால் பொழிந்து கொண்டிருந்தது. பசுவின் அருகில் சென்ற பண்ணையார் ஆதூரமாய் அதைத் தொட்டார். கண் திறந்த பசு, தன் பணி முடிவடைந்த நிலையில் அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தது. பால் பொழிந்த இடம் ஒரு கல் பீடமாக இருக்க கண்டார்.ஊராரிடம் நடந்ததை சொல்லி கூட்டி வந்து காட்டினார். இவர் குமரக்கடவுள் என்று உணர்ந்த மக்கள் கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே தோன்றியதால் கொளஞ்சியப்பர் என்று திருநாமம் சூட்டி வழிபட்டார்கள். >> சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் கோயிலின் அழகிய ராஜகோபுரம் காண்பவர் கண்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது உள்ளே சென்றவுடன் பலிபீடம், கொடிமரம், மயில் ஆகியவற்றைக் கடந்து துவாரபாலகர்களின் அனுமதியோடு உள்ளே செல்லும் நாம் கருவறைகளைக் காண்கிறோம். ஒன்றில் சித்தி விநாயகர். அண்ணனின் அருகே அருவமாய், சுயம்புவாய் தோன்றிய கொளஞ்சியப்பர் வீற்றிருக்கிறார். விநாயகருக்கும், கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் மூன்றடி உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. >> இத்தலத்தில் ‘பிராது கட்டுதல்’ என்ற ஒரு வழிபாடு இருக்கிறது. கோயிலின் பிரகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு…. நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை, பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இக்கோயிலில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பெண்ணெய் மருந்து தரும் வழக்கமும் இருக்கிறது திருத்தல வரலாறு : விருதாச்சலத்திற்கு வருகை தந்த சுந்தரர் சிவஅடியார்களுடன் சிவாலய தரிசனம் செய்து அந்ததந்த தல நாதனையும், தேவியையும் தமிழ் மணக்க, உள்ளம் உருகச் செய்யும் பாடல்களால் ஆராதித்த இவர் பழமலையை அடைந்தார். சுந்தரர் இது என்ன ஊர்? என்று தொண்டர் ஒருவரிடம் கேட்டார். இவ்வூர் பெயர் பழமலை என்னும் விருதாச்சலம். பரமனின் திருநாமம் பழமலைநாதர், அம்பிகை விருத்தாம்பிகை என்று பதில் கூறிய தொண்டரிடம் ஊரும் பழமலை, அம்பாளும் கிழவி, அரனோ தொண்டுக்கிழம் இவர்களை போற்றிப் பாடி ஆகப்போவது ஒன்றுமில்லை நடையை கட்டுவோம் என்று அலட்சியமாக கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தார் சுந்தரர். பிரபஞ்சத்திற்கே ஆதாரமான சிவபெருமான் மெல்ல சிரித்தார். அன்னையோ அடுத்து நடக்க போவதை அறிந்து கொள்ளும் ஆவலோடு ஈசனின் முகம் பார்த்து நின்றாள். பழமலைநாதர் தனது ஞானக்குழந்தையான முருகனிடம் சுந்தரருக்கு பாடம் புகட்டும்படி அருளாணை இட்டார். வேடனாய் வடிவெடுத்த வேலவன் சுந்தரர் கூட்டத்தை சுற்றி வளைத்தார். நாணேற்றி அம்பின் முனையில் நிறுத்தினார். அஞ்சி நின்ற சுந்தரர் வசமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துக்கொண்டார் முருகன். அவற்றைத் திரும்பத் தரும்படி கெஞ்சினார் சுந்தரர். வேலவன் பழமலை வந்து பெற்றுக்கொள் என்று கம்பீரமாய் கட்டளை இட்ட போதுதான், தான் ஈசனை மதிக்காமல் வந்தது தவறு என்பதை உணர்ந்த சுந்தரர் உடனே பழமலை சென்று ஈசனை பாடி துதித்தார். உடனே இறையருள் பெற்றார். ஈசனின் ஆணைப்படி பழமலை பதியின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாய் அமர்ந்தார் வேலவன். அமைவிடம் : கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாளநல்லூர் கொளஞ்சி யப்பர் திருக்கோயில். இத்தலத்திற்கு செல்ல விருத்தாசலத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதிகள் இருக்கின்றன. இங்கே இன்னொரு வசதி, மற்ற கோயில்களைப் போல மதிய வேளையில் நடை சாத்தப்படாததுதான். காலை 6 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 14 மணிநேரம் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.

 

சிவவாக்கியர்

Posted on Updated on

சிவ சிவ என்ற சிவ வாக்கியர் சிவவாக்கியர் .

பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன.

ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர். அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார்.

“இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே” என விவாதிப்பவரும் உண்டு.

அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம். சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.

“கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே.”

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.

அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ?

உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம்
உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா
உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா?

“அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு.”

எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார். இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர்.

பிறக்கும்போதே “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே பிறந்ததால் ‘சிவவாக்கியர்’ என்று பெயர் பெற்றார். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரை தரிசித்தார்.

சிவவாக்கியரை அந்த சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரை சோதிக்க எண்ணிய சித்தர் “சிவவாக்கியா செருப்பு தொழில் செய்த காசு என்னிடம் உள்ளது. இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வா” என்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார். அடுத்த நிமிடம் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான கை ஒன்று வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது.

சிவவாக்கியார் காசுகளை அந்தக் கையில் வைத்தார். உடனே, வளையோசையுடன் அந்தக்கை தண்ணீரிலே மறைந்தது. அதனைக் கண்ட சிவவாக்கியர் சிறிதும் ஆச்சரியப்படாமல், பேய்ச்சுரைக்காயை நீரில் அலம்பிக்கொண்டு திரும்பி வந்து சித்தரை வணங்கினார். சித்தர், சிவ வாக்கியரை மீண்டும் சோதிக்க எண்ணி, “சிவவாக்கியா இதோ இந்த தோல் பை தண்ணீரிலும் கங்கை தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளைக் கேள். அவள் கொடுப்பாள்” என்றார்.

அதன்படியே சிவவாக்கியரும் கேட்டார். சித்தர் செருப்பு தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து ஒரு கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்து விட்டு மறைந்தது. சிவவாக்கியர் அப்போதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ படவில்லை. சிவவாக்கியரின் பரிபக்குவ நிலையை கண்ட சித்தர், அவரை அன்போடு தழுவினார். “அப்பா! சிவவாக்கியா! முக்தி சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இரு” என்று சொல்லி கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து “இவற்றை சமைத்துத் தரும் பெண்ணை மணந்துகொள்” என்று கட்டளையிட்டார். சிவவாக்கியர் குருவை வணங்கி, அவர் தந்த பொருட்களோடு அங்கிருந்து புறப்பட்டார்.

ஒருநாள் பகல் வேளையில் சிவ வாக்கியர் நரிக்குறவர்கள் கூடாரம் அமைத்திருந்த பகுதி வழியாகச் சென்றார். அப்போது வெளியில் வந்த கன்னிப்பெண் ஒருத்தி சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி, “சுவாமி! தங்களுக்கு வேண்டியதைத் தர சித்தமாயிருக்கிறேன்” என்றாள். சிவவாக்கியர், “என்னிடம் உள்ள இம்மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்து எனக்கு உணவு தரமுடியுமா?” என்றார்.

குறப்பெண்ணும் ஒப்புக்கொண்டு அவரிடமிருந்து வாங்கி சமைக்கத் தொடங்கினாள். என்ன ஆச்சரியம்! மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது. சமையலை இனிதே முடித்த அவள், சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள் குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்த அவர் மகிழ்வோடு அவள் இட்ட உணவை உண்டார். காட்டிற்குச் சென்றிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் இவரை வணங்கி “குருசாமி! தங்களின் பாதம் பட இந்த குடிசை என்ன தவம் செய்ததோ?” என்று சொல்லி வணங்கி நின்றனர். “தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப்பெண்ணை என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். “சுவாமி நீங்கள் எங்களுடனே தங்குவதாயிருந்தால் எங்கள் குலப்பெண்ணைக் கொடுக்கிறோம்” என்றனர் குறவர்கள். சிவவாக்கியர் சம்மதித்தார். இல்லறத்தில் இருந்தாலும் தவத்தைக் கைவிடவில்லை. அதே சமயம் குறவர் குலத்தொழிலையும் கற்றுக்கொண்டார்.

ஒருநாள், சிவவாக்கியர் காட்டிற்குள் சென்று ஒரு பருத்த மூங்கிலை வெட்டினார். வெட்டப்பட்ட இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் திடுக்கிட்டார். சிவபெருமானே! என்ன இது நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா? செல்வம் அதிகமானால் கவலைகளும் அதிகமாகுமே என்று பயந்து ஓடிப்போய் தூரத்தில் நின்றுகொண்டு அங்கு வந்த நரிக்குறவர்களிடம் அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வெளிவருகிறான் என்று சொல்லி துகள்கள் உதிர்வதை சுட்டிக்காட்டினார்.

குறவர்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த தங்கத்தையெல்லாம் மூட்டையாக கட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் இருட்டிவிட அங்கேயே தங்கிவிட முடிவு செய்தனர். இருவர் காவல் காக்க இருவர் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று உணவு உண்டார்கள். அதன் பின் தங்கம் நிறைய உள்ளது, நாம் இருவர் மட்டுமே அதனை பங்கு போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழலாமே என்று திட்டமிட்டு மற்ற இருவருக்காக வாங்கிய் உணவில் விஷத்தைக் கலந்து கொண்டு கிளம்பினர்.

உணவுடன் வந்த அவர்களை பார்த்ததும் மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அதோ எதிரில் இருந்த கிணற்றில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று வேண்டினர். வந்தவர்கள் இருவரும் உணவு பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு தண்ணீர் கொண்டு வருவதற்காக சென்றனர். மூட்டைக்கு காவலாக இருந்த இருவரும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் கிணற்றுக்கு அருகில் சென்றவுடன் காலை வாரிவிட்டு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்றனர். “இனி இந்த தங்க மூட்டை நம் இருவருக்கும் தான்” என்று மகிழ்ந்து உணவு உண்டனர்.

உணவில் விஷம் கலந்திருப்பதால் இருவரும் அங்கேயே விழுந்து மாண்டனர். மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காட்டிற்கு வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் கண்டு ஐயோ இந்த எமன் இவர்களை கொன்று போட்டுவிட்டதே என்று வருந்தினார். சிவவாக்கியர் ஒருநாள் வானவீதி வழியே சென்று கொண்டிருந்த கொங்கண சித்தரை கண்டார். கொங்கணரும் சிவவாக்கியரைப் பார்க்க இருவரும் நட்புகொண்டு சந்தித்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து இருவரும் அடிக்கடி சந்தித்தனர். சிவவாக்கியர் மூங்கிலைப் பிளந்து கூடைகள் பின்னி விற்பதைக் கண்டார் கொங்கணர்.

இந்த மகான் தங்கம் செய்யும் வித்தை அறிந்திருந்தும் இப்படி வறுமையில் வாழ்கிறாரே என்று வருந்தினார். சிவவாக்கியர் இல்லாத சமயமாக பார்த்து, அவர் வீட்டிற்குச் சென்று அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புத்துண்டுகளை வாங்கி அவற்றை தங்கமாக மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றார். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் அவர் மனைவி கொங்கணர் வந்ததையும், நடந்த விவரங்களையும் சொல்லி தங்கத்தை கணவர் முன் வைத்தார். சிவவாக்கியர் இவைகளைக் கொண்டுபோய் கிணற்றில் போட்டுவிட்டு வா என்று கூற அவளும் அப்படியே செய்தாள். சிவவாக்கியர் மனைவியை அழைத்து உனக்கு தங்கத்தின் மீது ஆசையா என்று கேட்டார். அதற்கு அவள் சுவாமி! தங்களுடைய மாறாத அன்பு இருந்தாலே போதும், எனக்கு தங்கம் தேவையில்லை என்று கூறிவிட்டாள். சிவவாக்கியர் மனமகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். இல்லறம் நல்லறமாக நடந்தது.

ஒருநாள் சிவவாக்கியரை சில சிவ பக்தர்கள் சந்தித்தனர். “சுவாமி எங்களது பாவங்களை போக்கிக் கொள்ள சித்தர்களை தரிசனம் செய்ய வேண்டும், கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டினர். சிவவாக்கியர் சற்று யோசித்தார். “அவர்களை ஏன் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுகள் மூலம் தங்கம் செய்து அதனால் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க போகிறோம்” என்றனர். அதற்கு சிவவாக்கியர் கடகடவென சிரித்து “அன்பர்களே! உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பிறகு நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் எல்லோரும் தங்கத்தை அடைய எளிய வழி” என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த அன்பர்கள் உண்மையை உணர்ந்து சென்றார்கள்.

வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!’ என்று சிவவாக்கியர் உரத்துப்பேசும்போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. ஆனால், அதற்குள், ‘கோயில் உங்கள் மனதில் இருக்கிறது. கடவுள் உங்கள் எண்ணத்தில் இருக்கிறது. அது அழிவதும் இல்லை. அந்தக்குளம் வற்றுவதும் இல்லை!’ என்ற கருத்தை உணரும்போது இவரின் ஆன்மிக நெறி எதிர்மறை சிந்தனைக்குள் இருக்கும் நேர்கூற்றுகளாகவே கனிகின்றன.

பசுவின் மடியில் கறந்த பாலை மீண்டும் அதன் மடியில் செலுத்த முடியாது. கடைந்தெடுத்த வெண்ணெய் தயிராகாது. பறித்த பூவும், உதிர்த்த காயும் மரத்தில் ஒட்டாது. அதுபோல இறந்தவர்கள் யாவரும் திரும்ப பிறப்பதில்லை. என்பது சிவவாக்கியரின் ஆன்மிக சிந்தனை. காலையும் மாலையும் குளித்தால் உடல் அழுக்கு போய்விடும் உள்ளத்து அழுக்குகளை குளிப்பாட்டுவது யார்? இதை எப்படி குளிப்பாட்டுவது? எங்கேதான் அழுக்கில்லை. அழுக்குள்ள இடங்களை கண்டறிந்து தூய்மைப் படுத்த இயன்றால் தூய ஜோதியுடன் உள்ள இறைவனுடன் இரண்டறக்கலந்து வாழமுடியும் என்கிறார் இவர்.

சிவவாக்கியர் தியானத்தில் ஆழ்ந்தார். இறைவா மக்களுக்கு தூய்மையான எண்ணம் உருவாவதற்கு நீதான் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினார். இவர் தன் அனுபவங்களை பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாகியம்’ என்று அழைக்கப்படுகிறது. இவருடைய பாடல்களில் சிவ என்னும் சொல்லும் அதிகமாக உள்ளது. இவர் ஒரு சமரச் ஞானி. இவர் பாடலில் இராமஜெபமும் உண்டு. சிவவாக்கியர் முதலில் நாத்திகராக இருந்தார். பிறகு சைவராக மாறி சிவவாக்கியர் ஆனார். அதன்பிறகு வீரவைணவரானார். இவர் நாடிப் பரீட்சை என்னும் நூலை எழுதினார். சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தியடைந்ததாக கூறப்படுகிறது. இன்றும் பௌர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் இவருக்கு சமாதி பூசை நடைபெற்று வருகிறது.

தியானச் செய்யுள் சிவனில் சிந்தை வைத்து ஜீவனில் சித்து வைத்து அவனியைக் காக்க வந்தா அழகர் பெருமானே… அபாயம் நீக்கி சிவாயம் காட்டும் தங்கள் தங்கத் தாமரைத் திருவடிகள் காப்பு. சிவவாக்கியர் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, உதல் சித்தராகப் போற்றப்படும் இந்த சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள், குங்கும திலமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருக பாடி சங்கு புஷ்பம், அல்லது தும்பைப் புஷ்பம் அல்லது வில்வத்தால் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள் :

1. பாவங்களைப் போக்குபவரே போற்றி!
2. எங்கும் வியாபித்திருப்பவரே போற்றி!
3. சிவ பெருமானின் அவதாரமே போற்றி!
4. ஜீவராசிகளை காப்பவரே போற்றி!
5. ருத்ரனின் அவதாரமே போற்றி!
6. தீமைகளை அழிப்பவரே போற்றி!
7. சர்வ வல்லமை படைத்தவரே போற்றி!
8. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
9. தேவர்களுக்கெல்லாம் தேவரே போற்றி!
10. சிவனின் அருள் பெற்றவரே போற்றி!
11. சிவசக்தி உருவமாகத் தோன்றுபவரே போற்றி!
12. கலைகளுக்கு அதிபதியே போற்றி!
13. காருண்ய மூர்த்தியே போற்றி!
14. மன நிம்மதி அளிப்பவரே போற்றி!
15. மங்களங்கள் தருபவரே போற்றி!
16. மகிமைகள் உடைய சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பின் மூலமந்திரமான “ ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி! “ என்று 108 முறை ஜபிக்கவேண்டும்.

பின்பு நிவேதனமாக பழங்கள், சுத்தமான விபூதி, தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். சிவவாக்கியரின் பூசா காரிய சித்திகள் இவர் சந்திர கிரகத்தினை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும் என்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் இவரை பூசிக்க வேண்டும்.

மேலும் இவரை வழிபட்டால்..

1. மனவியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலை மாறும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்.
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து திங்கட்கிழமையன்று பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

“நட்ட கல்லை தெய்வம் என்று  நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி வந்து முனுமுனுவென்று  சொல்லும் மந்திரம் ஏதடா?” – சிவவாக்கியார் – சித்தர்களுள் சிறந்தவராக கருதப்படுபவர் சிவவாக்கியார்.

தாயுமானவர், பட்டினத்தார் ஆகியவர்களால் பாராட்டப் பட்டவர். சிவவாக்கியார் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர். பிறக்கும் போதே “சிவ” “சிவ” என்று சொல்லிக் கொண்டு பிறந்த படியால் சிவவாக்கியார் என்று அழைக்கப் படுவதாக சொல்லப் படுகிறது. போகர் தனது சப்தா காண்டத்தில் சிவவாக்கியார் தை மாதத்தில் வரும் மகநட்சத்திரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார். நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

‘நட்ட கல்லும் பேசுமோ?’ – சிவன்மலைக்கு வித்திட்ட சிவவாக்கியர்

‘இறைவா மக்களுக்கு அகத்தூய்மை என்பது ஏற்படாதா? அதை உருவாக்கத்தான் எத்தனைகோயில்கள்? எத்தனை தெய்வங்கள்? எத்தனை ஞானநூல்கள்? எத்தனை உபதேசங்கள்? எத்தனை இருந்தும் மக்கள் வீண்பொழுதை கழிக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்களே? இவர்களுக்கு நற்சிந்தனையை அளித்து கருணை அருளக்கூடாதா?’ என்று வேண்டி நின்றதோடு, அதற்கான பல்லாயிரக்கணக்கான பாடல்களை இயற்றியவர் சிவவாக்கியர். சிவ,சிவ மந்திரத்தை உள்ளளியாக கொண்டிருந்தாலும், சிவனையே துதித்து மனம் உருகினாலும் குறப்பெண்ணை மணந்து குறவர் வாழ்க்கையை¬யே மேற் கொண்டதாலே என்னவோ வள்ளிக்குறத்தியுடன் காட்சியளிக்கும் சுப்பிரமணியரை மூலவராக கொண்ட சிவன்மலையில் வாசம் செய்து அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனுக்கு பூஜை செய்து வந்திருக்கிறார் சிவவாக்கியர். சுப்பிரமணியக்கடவுள் மூலவராக இருந்தாலும் இந்த மலை சிவன்மலை என்று அழைக்கப்படுவதற்கு பெயர்க் காரணமே சிவவாக்கியர் தங்கி பூஜித்த மலை என்பதால்தான். சிவவாக்கியர் மலை, சிவமலையாகி, பிறகு சிவன்மலையாக உருமாறியிருயிருக்கிறது.

சிவவாக்கியர் ஜீவசமாதி :

சிவவாக்கியார் கும்பகோணத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

உரோம ரிஷி

Posted on Updated on

உரோம ரிஷி

உரோம ரிஷி  சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி. இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார். அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.  அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது.

உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.  அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம். உரோமபுரியிலிருந்து ஞானத்தை நாடி தென் தமிழ்நாட்டிற்கு வந்தார் எனவே உரோம ரிஷி என்றொரு கருத்தும், இல்லை, இவரின் உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

ஆனால் அவரோ தன்னைப்பற்றி…

“கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே ”

பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் .
ஞால : பரிசுத்த மெய்ஞஞானம்
பதம் : பாதம்

இந்தப் பாடல் அவரது உரோம ரிஷி ஞானம் நூலில் இருந்து…இந்த ஞானவானின் ஞானத்தை அவரின் பாடல்களே நமக்கு காட்டி தருகின்றன. இதோ ஒரு பாடல்…

தியானத்தைப் பற்றி… 

செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே.

போலிகளைப் பற்றி…. 

மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.

தவநிலையைப் பற்றி… 

சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே

என உரோம ரிஷி ஞானம் கூறுகிறது.

சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று
,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு
முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை
அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது.

இதோ அப்பாடல்..

“காடேரி மலையேறி நதிகளாடி 
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால் 
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி 
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே ” 

சித்தர்களாக,ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோம ரிஷி ஞானம் சொல்கிறது. இவர் சிங்கி வைப்பு, உரோம ரிஷி வைத்திய சூத்திரம், வகார சூதிரம், உரோம ரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். நல்லோர் தாள் போற்றி! நாயகன் தாள் போற்றி !!

உரோம ரிஷி என்னும் சித்தர் அருளிச்செய்த காயகல்ப்பமுறை இந்த ஆசரமத்திற்கு கிழப் புறம் , செங்க்கொடிவேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அச்செடியின் பூ பிச்சிப்பூ போலவும்  ,நிறம் சிவப்பாகவும் ,வேர் ரத்த நிறமாகவும் இருக்கும் . அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க இரும்பு சுத்தியாகும் . அந்த இரும்பை உலையில் இட்டு தகடாக அடித்து , அத்தகடை ஆட்டு எருவில் புடமிட்டு ,ஏரஞ்சி தயலத்தில் சுருக்கிட பேதிக்கும் . அதை மறுபடி உலையில் காய்ச்சி செங்க்கொடிவேலி சாற்றில் சுர்க்கிட பத்து வயதாகும் . அதை சுண்ணம் செய்து   பசுவின் நெய்யில் ஒரு வாரம் புசித்துவர தேக சித்தியாகும் . மற்றொரு முறை அந்த செங்க்கொடிவேலி செடிக்குப் பக்கத்தில் , கருங்கொடி வேலி என்ற ஒரு செடி  இருக்கிறது .அதன் இலை நொச்சியிலை போல் இருக்கும் . அந்த இலையை பிடிங்கி வந்து கசக்கி சாறு பிழிந்து ,, வெந்த சோறில் ஒருக் கைப்பிடி எடுத்து ,அதில் அந்த சாரை முன்று துளியிட்டு அந்த சாதத்தை முன்று நாள் வரை சாப்பிட்டு வர தேகசிதியாகும் என்றார் .

தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மாக்கள் இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும். ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார். ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடவே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த உரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதைக் கண்ட சித்தர் கோவில் வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலின் வெளியிலேயே இறைவன் தரிசனம் தந்ததாக கூறுவர். உரோமமுனி அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

“கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக் கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம் நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே ” – உரோம ரிஷி

இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார். போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் இதனால் உரோம ரிஷி என்று அழைக்கப் பட்டார். இவர் கும்பகோணதிட்கு அருகிலுள்ள கூந்தலூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த பொது தாடி வழியாக பொன் வரவழைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது. “உரோம ரிஷி ஞானம் ” என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன. வகார சூதிரம் உரோம ரிஷி வைத்தியம் 1000 உரோம ரிஷி பூஜா விதி உரோமரிஷி பஞ்சபட்சி சாத்திரம் ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

உரோமமுனி இயற்றிய நூல்கள் :

1. உரோமமுனி வைத்தியம் – 1000
2. உரோமமுனி சூத்திரம் – 1000
3. உரோமமுனி ஞானம் – 50
4. உரோமமுனி பெருநூல் – 500
5. உரோமமுனி குறுநூல் – 50
6. உரோமமுனி காவியம் – 500
7. உரோமமுனி மூப்பு சூத்திரம் – 30
8. உரோமமுனி இரண்டடி – 500
9. உரோமமுனி சோதிட விளக்கம்
10. நாகாரூடம் 11. பகார சூத்திரம்
12. சிங்கி வைப்பு
13. உரோமமுனி வைத்திய சூத்திரம் ஆகியன.

உரோமமுனி தியான செய்யுள் கனிந்த இதயம், மெலிந்த உருவம், சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?

அலையும் மனதை அடக்கி அருள் அள்ளியே தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம். உரோமசித்தரின் பூசை முறைகள் தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் உரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி சாதிபுஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள் :

1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி! 8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்தபிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீஉரோமரிஷி முனி சித்தர் சுவாமியே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.

பூசைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். உரோமரிஷி சித்தரின் பூஜா பலன்கள் இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர்.

மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டுமென்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் இச்சித்தரின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்…

1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது நீங்கிடும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்.
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை மாறிடும்.
5. தாயார், மகன், மகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைகொள்ளும். இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். திங்கள் கிழமை இவருக்கு உகந்த நாள்.

குதம்பைச்சித்தர்

Posted on

குதம்பை சித்தர்

குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான். குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து

“குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.

ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீ குதம்பைச் சித்தரின் பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் குதம்பைச் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. சிவனை பூசிப்பவரே போற்றி!
2. ஹடயோகப் பிரியரே போற்றி!
3. சூலாயுதம் உடையவரே போற்றி!
4. மோட்ச ஞானம் அளிப்பவரே போற்றி!
5. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
6. ஜோதி சொரூபரே போற்றி!
7. சிவ ஒளியாய் திகழ்பவரே போற்றி!
8. விபூதி அலங்காரப்பிரியரே போற்றி!
9. நாட்டியப்பிரியரே போற்றி!
10. இதய சுத்தம் உள்ளவரே போற்றி!
11. வாக் பந்தனம் செய்பவரே போற்றி!
12. அபயம் அளிக்கும் தேவரே போற்றி!
13. இந்திரன் முதலான தேவர்களை பூசிப்பவரே போற்றி!
14. ஊனமுற்றவரைக் காப்பாற்றுபவரே போற்றி!
15. ஓம் என்ற பீஜாட்சரமாய் வாழ்பவரே போற்றி!
16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் குதம்பை சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் குதம்பைச் சித்தரே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். நிவேதனமாக பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

தியானச் செய்யுள்:

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே அத்திமரம் அமர்ந்து ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன் நல்லாசி தருவாய் குதம்பை சித்த பெருமானே! குதம்பை சித்தர் பூஜா பலன்கள் இவர் நவக்கிரகங்களில் கேதுபகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்..

1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.
2. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அபிவிருத்தி ஏற்படும்.
3. சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்துபோடும் நிலை மாறும்.
4. மூளையில் இரத்தம் உறைதல், மனப்பிராந்தி, வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், இவையெல்லாம் அகன்று தெளிவு ஏற்படும்.
5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோசங்கள் விலகும்.
6. போதை பொருட்களுக்கு அடிமைஆகுதல், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. ஆன்மீகப் பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும். இவருக்கு பல வர்ண வஸ்திரம் அணிவிக்கலாம். இவரை பூஜிக்க உகந்த நாள் வெள்ளிக்கிழமை.

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது. இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார். ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.

குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி…இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார். அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை. அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்… தவம்… தவம்… எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன்.  இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும். என்றான். குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. யார் வாசியோகம் என்ற  கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். அவரது திருவுருவத்தை மயூரநாதர் கோயிலில் தரிசிக்கலாம். மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!

குதம்பைச் சித்தர் பாடல் குதம்பை சித்தர், மக்களுக்கு சொல்லும் கருத்தை குதம்பை என்ற ஒரு பெண்ணுக்கு சொல்வது போல் தம் பாடலில் சொல்கிறார். குதம்பை சித்தர், சித்தர்களின் பன்பிற்க்கு சற்றும் மாறாதவர் என்று தான் சொல்ல வேண்டும். 32 பாடல்களை கொண்ட இவரது அனைத்து பாடல்களும் பாட எளியவை.  வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி ?

1 கண்டதை மட்டும் உண்மை என்று இருப்போர்க்கு அத்தாட்சி எதற்க்கு? இதன் மூலம் கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் என்கிறார் மேலும் உண்மையை அறியும் வாய்ப்புகள் இருந்தாலும் கேட்பதில்லை..

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக் கற்பங்கள் ஏதுக்கடி – குதம்பாய் கற்பங்கள் ஏதுக்கடி ?

2 இவ்வுடலால் பெற்ற பொருள் கொண்டு இன்பமுரும் மனிதருக்கு கேட்டதை தரும் கற்பகங்கள் எதற்க்கு? காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு வீணாசை ஏதுக்கடி – குதம்பாய் வீணாசை ஏதுக்கடி ?

3 காண்பதை கூட காணமல் கருத்தில் சிக்கியிருப்போர்க்கு வீணான ஆசை எதற்க்கு,அது (அவ்வுடலின் உயிர்) இருந்தென்ன போயென்ன? வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச் சஞ்சலம் ஏதுக்கடி – குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி ?

4 வஞ்சகமில்லாத வழியான சிவபதத்தை கண்டோர்க்கு சஞ்சலம் தான் சஞ்சலத்தில் விழும்! ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பாய் வாதாட்டம் ஏதுக்கடி ?

5 அனைத்திற்க்கும் ஆதாராமான, எவருகும் எட்டாத அச்சிவனின் அடியையும் முடியையும் கண்டவர் சப்தநாடிகளும் ஒடுங்கி நிற்பர், எவ்விதமான வாத பிரதி வாதங்களும் அங்கு இடம் காணாது. நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு முத்திரை ஏதுக்கடி – குதம்பாய் முத்திரை ஏதுக்கடி ?

6 எப்போதும் ஊன் உரக்கமில்லாமல் சிவநினைவோடு இருப்போர்க்கு அச்சாரம் தேவை இருக்காது. தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு மந்திரம் ஏதுக்கடி – குதம்பாய் மந்திரம் ஏதுக்கடி ?

7 பூதநாதனின் தந்திரங்கள் நிறைந்த சன்னிதியில் இருப்போர்க்கு, அவன் நாம நினைவை தவிர மந்திரங்கள் கூட தேவை இருக்காது. சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு உத்தியம் ஏதுக்கடி – குதம்பாய் உத்தியம் ஏதுக்கடி ?

8 உண்மையான தவத்தில் இருப்போற்க்கு, உயர்வு என்ற போதைக்கு அடிமை ஆவதில்லை. நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு வாட்டங்கள் ஏதுக்கடி – குதம்பாய் வாட்டங்கள் ஏதுக்கடி ?

9 ஆவுடை நாதனின் நடுவில் இருக்கும் லிங்க சொருபத்தில் நாட்டம் கொண்டோர்க்கு துக்கம், சோர்வு, போன்ற எதிர்மரை விளைவுகள் வருவதில்லை. முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச் சத்தங்கள் ஏதுக்கடி – குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி ?

10 மெய்ஞானிகள் தாம் பேசுவதையே இறைவன் கேட்க வேண்டும் என்று எண்ணுபவரல்லர் ஆகவே அவர்களுக்கு பேச்சு என்னும் சத்தங்களின் தேவை இருக்காது. உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு இச்சிப்பிங்கு ஏதுக்கடி – குதம்பாய் இச்சிப்பிங்கு ஏதுக்கடி ?

11 வாயுவை உயர்த்தி தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்டகோடியை கண்டவர்களுக்கு இவுலகின்பகளின் தேவைஇருக்காது. வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு மோகாந்தம் ஏதுக்கடி – குதம்பாய் மோகாந்தம் ஏதுக்கடி ?

12 துக்கமே வாழ்க்கையை நெறிபடுத்தும், அந்த துக்கதிலும், பிற இன்பத்திலும் வெளியொளியான அடியை கண்டோர்க்கு மோகம் நிறைந்த, சிற்றின்ப ஏகாந்த நினைவின் தேவைஇருக்காது சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு ஏகாந்தம் ஏதுக்கடி – குதம்பாய் ஏகாந்தம் ஏதுக்கடி ?

13 இறப்பை போக்கும் சிவ வழியைவிட்டு, தம் தனிவழி சென்றோர்க்கு இனியதிலும் இனியதான பேரானந்த ஏகாந்தமிருக்காது. அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத் தந்திரம் ஏதுக்கடி – குதம்பாய் தந்திரம் ஏதுக்கடி ?

14 வேற்றுமை அந்தரங்கத்தில் உழழும் மூடர்கள், சிவதந்திர நினைவில் வரமாட்டர். ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு ஞானந்தான் ஏதுக்கடி – குதம்பாய் ஞானந்தான் ஏதுக்கடி ?

15 ஆனந்த தாண்டவ நாதனை எப்போதும் நினைவில் கொன்டோர்க்கு உலகஞானமெதற்க்கு? சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப் பத்திரம் ஏதுக்கடி – குதம்பாய் பத்திரம் ஏதுக்கடி ?

16 நாதன் தாள் கூடத்தை அனுதினம் துதிப்போற்க்கு, பத்திர பட்டயமெதற்க்கு. முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச் சட்கோணம் ஏதுக்கடி – குதம்பாய் சட்கோணம் ஏதுக்கடி ?

17 அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு நட்டணை ஏதுக்கடி – குதம்பாய் நட்டணை ஏதுக்கடி ?

18 முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப் பத்தியம் ஏதுக்கடி – குதம்பாய் பத்தியம் ஏதுக்கடி ?

19 அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப் பல்லாக்கு ஏதுக்கடி – குதம்பாய் பல்லாக்கு ஏதுக்கடி ?

20 அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு முட்டாங்கம் ஏதுக்கடி – குதம்பாய் முட்டாங்கம் ஏதுக்கடி ?

21 வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு யோகந்தான் ஏதுக்கடி – குதம்பாய் யோகந்தான் ஏதுக்கடி ?

22 மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப் பூத்தானம் ஏதுக்கடி – குதம்பாய் பூத்தானம் ஏதுக்கடி ?

23 செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு கைத்தாளம் ஏதுக்கடி – குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி ?

24 கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக் கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பாய் கொண்டாட்டம் ஏதுக்கடி ?

25 காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி குதம்பாய் கோலங்கள் ஏதுக்கடி ?

26 வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு உண்காயம் ஏதுக்கடி – குதம்பாய் உண்காயம் ஏதுக்கடி ?

27 மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி – குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

28 பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு முட்டாக்கு ஏதுக்கடி – குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி ?

29 தாவரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி – குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி ?

30 தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை ஏதுக்கடி – குதம்பாய் பின்னாசை ஏதுக்கடி ?

31 பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு உத்தாரம் ஏதுக்கடி – குதம்பாய் உத்தாரம் ஏதுக்கடி ?

32 பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்குபவர் குதம்பைச் சித்தர். இவர் தம் பாடல்களில் காதில் அணியும் அணிகலன்களுள் ஒன்றான குதம்பையை முன்னிலைப் படுத்தி, ‘குதம்பாய்’ என்று பாடியதால்தான் குதம்பைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். குதம்பைச் சித்தரின் 246 கண்ணிகளும், 246 முத்துக்களும் மாணிக்கங்களாகும். ஓர் எழுத்துக்கு ஒரு கோடி என்று கொட்டிக் கொடுத்தாலும் கிட்டாத ரத்தினங்கள் என்று சமய உலகம் போற்றிப் பாராட்டுகிறது. இவர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாகக் கூறுவர். சித்தர் ஞானக் கோவையில் உள்ள 32 பாடல்கள் தவிர, யோக ஞான சாத்திரத் திரட்டில் இவரது பாடல்கள் காணப்படுகின்றன. இவரது பாடல்கள் புரட்சிகரமானவை. சாதி, சமயம், இனம், மதம் இவற்றைச் சாடி, மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டும் வகையில் அமைந்தன என்பதனைக் கீழ்வரும் பாடல் வரி உணர்த்துவதனைக் காணலாம்.

சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்று      
ஓதி யுணர்ந்தறிவாய் – குதம்பாய்      
ஓதி உணர்ந்தறிவாய்.

உலகப் பொருள்களின் நிலையாமையை உணர்ந்து அழியாத மெய்ப் பொருளை உணர்ந்த ஞானிகள் புறச் சடங்குகளில் ஈடுபட மாட்டார்கள்.

யோக நெறி, பக்தி நெறி, புறப் பூசை ஆகிய அனைத்தையும் கடந்த மேலான நிலையை அடைந்த அவர், கீழ்ப்பட்ட நிலைகள் தேவையில்லை எனப் பாடுகின்றார்.

நித்திரை கெட்டு நினைவோடு இருப்பார்க்கு       
முத்திரை ஏதுக்கடி – குதம்பாய்       
முத்திரை ஏதுக்கடி.    

உள்ளத் துறவே துறவு ; புறத்துறவு துறவன்று என்பது இவர் கொள்கையாகும். ஆழ்ந்த பொருள் கொண்டதும், மிக எளிமையானதுமான பாடல். சிந்தனைக்குச் சவால் விடும் பாடல்.  இப்பாடலைப் பாடி பாமர மக்களிடமும் நன்மதிப்புப் பெற்றவர்தான் குதம்பைச் சித்தர்.   இவர் பாடல்கள் பல்வேறு அறிஞர்களையும் திகைக்க வைத்தது. அனுபவத்தாலன்றி இவைகளின் பொருள் புலப்படாது.

சித்தர் பாடல்கள் அனைத்தும், அனுபவத்தில் முகிழ்ந்தவையே ஆகும். எனவேதான், சித்தர்களின் பாடல்கள்களுக்குப் பொருள் எழுதுவது மிகவும் சிரமமான, கடின செயலாகும். குதம்பைச் சித்தர் அரிய கருத்துக்களை கொண்ட பாடல்கள் பல புனைந்துள்ளார்.

குதம்பை என்பது பெண்கள் காதுகளில் அணியும் ஒரு வகை அணிகலன். அவ்வணிகலன் அணிந்த பெண்ணை முன்னிறுத்திப் பாடியதால் இவர் குதம்பைச் சித்தர் என அழைக்கப்பட்டார்.

வேறு சிலர் இச்சித்தர் தமது மனதையே குதம்பையாக உருவகித்துப் பாடியதால் இவர் குதம்பையாகச் சித்தர் என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.

ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி அவளுக்கு அறிவுரை கூறும் விதத்தில் பாடல் புனைவது தமிழ் இலக்கியத்தில் ’மகடூஉ முன்னிலை’ எனப்படும்.

குதம்பைச் சித்தரின் பாடல்கள் தமது அமைப்பாலும், எளிமையான தம்மையாலும் சாகாவரம் பெற்றவை.

கண்ணிகள் :– இரண்டு மலர்களை எடுத்து மாலைத் தொடுத்தல் போல், இரண்டு அடிகளால் பாடப்படும். இலக்கிய வகை ‘கண்ணி’ இவ்விலக்கிய வகை சொல்லப்படும் கருத்தை மிகஎளிதாக மக்கள் நெஞ்சில் பதிக்கப் பயன்படுகிறது.

தாயுமானவர் இயற்றிய ‘பராபரக்கண்ணி’,  குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் இயற்றிய ‘ நிராமயக்கண்ணி ’ இவ்வகை இலக்கிய நூல்களாகும். இவ்வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களும் அடங்கும். குதம்பைச் சித்தரின் பாடல்களை ‘குதம்பைக்கண்ணி’ எனப் புதுப்பெயரிட்டு அழைக்கலாம்.

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமில்லா கோபாலன் தம்பதிகள், யாதவ கிருஷ்ணனை வேண்டி நின்றனர். அந்த வேண்டுதலின் அருள்பாலிப்பாக ’ ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் கோபாலின்’  மனைவி ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றாள்.

’ஆடி மாதம் விசாகத்தில்’ பிறந்ததால் இவன் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாகப் புகழ் பெறுவான்’ எனச் சோதிடர் குறித்தனர்.

வாராது வந்த மாமழைப்போல் குழந்தை பிறந்ததால் அவனுக்கு விதவிதமான அலங்காரம், ஆடைகள், அணிமணிகளை பூட்டி மகிழ்ந்தனர்.

காதில் கம்மல் { குதம்பை } பூட்டினர், பெண் பிள்ளை போல் அலங்கரித்தனர்.

காதில் குதம்பை ’ பளிச்சென ’ மின்னுவதைக்கொண்டு… ’ வா…. குதம்பாய் …,  என அழைத்தனர். அப்பெயரே இறுதிவரை குதம்பையாக நிலைத்துவிட்டது.  சிறு வயது முதலே இறைவனிடம் மாறாத அன்பு பூண்ட குதம்பை காலை, மாலை தவறாது ஆலயம் சென்று ஆண்டவனுக்கு நடக்கும் பூசனைகளை, ஆகம விதிகளை உன்னிப்பாகக் கவனித்தான்.

இல்லம் திரும்பிய பின்னும் ஆலய நினைவுகளை மனதில் நிறுத்தி இன்புற்று மகிழ்வான். தினம் இந்நிகழ்வுகள் நடைபெற்று வரும். குல வழக்கப்படி மாடுகளை மேய்ப்பார். கிராமத்து வழியாகத் தலயாத்திரை செல்லும் முனிவர்கள், ரிஷிகளைத் தம் இல்லத்தில் தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்து, வணங்கி வழி அனுப்பி வைப்பார். ஏழைகளுக்கும், துன்பமுற்றோர்களுக்கும் உதவுவார்.

ஒருநாள் பொழுது ஒரு சித்த யோகி குதம்பையை அழைத்து வாசி யோகத்தினையும், ஊதுகின்ற மூச்சினை அறிந்த சித்தன் , வாசியின் நுட்பங்களை, காயத்ரி மந்திரத்தையும், உடலைப்  பொன்னாக மாற்றக் மாற்றக் கூடிய விந்தையை விளக்கி ஆசீர்வதித்தார்.

உள்ளம் தழுதழுத்து, உடல் சிலிர்த்து. ‘ ஐயனே, எளியேன் எம்மையும் பொருட்டாக எண்ணி அருளாசி வழங்கியதற்கு ஏது செய்வேன் “ என நிற்க,   ‘ காரணம் காரியமின்றி எதுவும் இவ்வுலகில் நடப்பதில்லை.   உனது கடந்த வினைப்பயன், பிறவிப் பயன் இப்போது தொடர்கிறது.
போன பிறவியின் போது  உத்தமனாக சிவ சிந்தனையுடன் கடும் தவம் புரிந்தாய்.  ஆனால், தவம் முடிவடையும் முன்பே உனது ஆயுள் முடிந்துவிட்டது.   இந்தப் பிறவியில் உன்னிடம் எம்மைக்  கொண்டு சேர்த்திருக்கிறது.  இனி நீ பெற்ற ஞானம், அறிவு மக்களுக்கு பயனாக அமையட்டும். அதுவே உன் பணியாக தொடரட்டும்’ என்று உளமார வாழ்த்திச் சென்றார்.

சித்த யோகி சொன்னதை வேத வாக்கியமாகக் கொண்டு மக்களுக்கு உபதேசித்தார். தமது ஆற்றலை ஆன்மிகத்தை, மக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டினார். உயிர்ப்பலி கொடுப்பதையும், மக்களின் அறியாமை, மூடப்பழக்க வழக்கங்களையும் கண்டு மனம் வாடி, அதனைச் சாடி தனது பாடல்மூலம் அறிவுறுத்தினார்.

சாதி,மத வேற்றுமைகளை, பிரிவினை,உயர்வு தாழ்வுகளை கடுமையாக விமர்சித்தார்.
இறுதியில் மாயூரத்தில் சமாதி நிலைப் பெற்றார்.

 

காலம்:

குதம்பை முனிவர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் ஆகும்.

குதம்பைச்சித்தர்

அழுகுணிச் சித்தர் ( அழுகணிச் சித்தர்)

Posted on Updated on

  அழுகணிச் சித்தர்

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது.  இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில்  வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம்  தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு  என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று  அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர்  இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே  அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ  இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ  உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்….

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ..

நண்பா!.. பிறப்பும் அதனால் வரும் இறப்பும் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பிறப்பும் இறப்பும் இல்லாத ஆன்மா தன் உண்மை இயல்பை அறியும்போது மரண பயம் அற்றுப்போகும். இதனைத்தான் ஆன்ம விடுதலையென வேதங்கள் கூறுகின்றன. ஆன்மாவான நான் அழிவில்லாதவன். ஐம்பூத சேர்க்கையாலான உன் பருவுடல் மட்டுமே அழிகிறது. உன் வினைப்பயனுக்கேற்ப நான் வேறோர் உடலைத் தேடவேண்டியிருக்கிறது. நின் ஆசைகளும், அவற்றின் விளைவுகளான வினைகளும் அற்றுவிடுமாயின் உடல் விட்டு உடல் என்று நான் ஓடத்தேவையில்லை

அழுகுணிச் சித்தரின் பாடல்

புல்லர் இடத்திப்போய்ப் பொருள் தனக்குக் கையேந்தி
பல்லைமிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி!
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
பொருள்: நல்வழியைக் கைவிட்டுத் தீ நெறியிலே நடப்போர் துறவு வேடம் பூண்டிருந்தாலும் உணவுக்கும் உடைக்கும் திண்டாடுவார்கள். மானந்துறந்து, பொருள் வேண்டி கையேந்தி பல்லைக்காட்டி பரக்கப் பரக்க விழிப்பார்கள். இந்நிலையை அழுகணிச் சித்தர் தன்மேல் ஏற்றிப் பாடுகிறார். நான் இந்நிலையில் இருக்கின்றேன். என்னுடைய இந்நிலையை போக்க வேண்டும். எனக்கு அருள்வாயாக. பொருளைத் தரவேண்டும் என்று சத்தியை வேண்டுகிறார்.

அழுகுணி சித்தர் பீடம்:

ஏதாவது ஒன்று கிடைக்கவேண்டுமென்றால் குழந்தைகள், அழுது அடம்பிடித்து பெற்றோரிடம் எளிதாகப் பெற்றுவிடுவர். இதைப்போலவே தனக்கு முக்தி கிடைக்க எண்ணிய சித்தர் ஒருவர், உலகத்தின் அன்னையான அம்பிகை நீலாயதாட்சியிடம் அழுது பெற்றுள்ளார். இதனால் இவர், “அழுகுணி சித்தர்’ என்றே பெயர் பெற்றார். கோரக்கரின் சீடரான அழுகுணி சித்தர், இத்தல அம்பிகை மீது அதீத பக்தி கொண்டு, இங்கேயே தங்கி தினமும் அம்பிகையை வழிபட்டார். அம்பிகையிடம் முக்தி வேண்டி, சிறுவன் போல கண்ணீர் விட்டு அழுது, அடம்பிடித்து பிரார்த்தனை செய்தார். அம்பிகையும் அவருக்கு அருள்புரிய சிவனிடம் வேண்டவே, அவர் சித்தருக்கு முக்தி கொடுத்தருளினார். இவரது ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது.

“வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ!”
– அழுகணிச் சித்தர் –

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மை. பொதுவாக இவர் தனது பாடல்களில் “உன்னை அறியாமல் உலகத்தில் உள்ளவைகளை அறிவதால் எந்தவிதப் பயனுமில்லை” என்னும் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம். இவர்,

அழுகணி சித்தர் பாடல் 200
ஞான சூத்திரம் 24
அழுகண் வைத்தியம்
அழுகண் யோகம்
அழுகண் ஞானம் ஆகிய நூல்களை இயற்றியதாக சொல்லப் படுகிறது.

நாகப் பட்டினத்தில் உள்ள நீலாய‌தாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இவர் சமாதி இன்றும் உள்ளதாக சொல்லப்படுகிறது.     தாடியும் முடியுமாக அந்த மனிதர் நடந்து கொண்டிருப்பார். அவர் கண்களிலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கும். அவரை அங்கே பார்த்தேன், இவ்விடத்தில் பார்த்தேன் என்பார்கள். ஆனால் எங்கும் தங்க மாட்டார். முடிவில்லாத வழிப்பயணத்தில் போய்க் கொண்டே இருப்பார். யார் எது கேட்டாலும், பதில் கூறவும் மாட்டார். அவர் கண்கள் மட்டும் அழுது கொண்டே இருக்கும். இதனாலேயே இச்சித்தருக்கு அழுகண் சித்தர் என்று வழங்கினர். காலப்போக்கில் அழுகண்ணர் என்றும் அழுகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கினர் என்பதும் தெரிய வருகிறது.     இச்சித்தர் ஊரைப் பார்த்து அழுதார். உலகைப் பார்த்து அழுதார், தன்னையே பார்த்தும் அழுதார்.

பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.
– பாழாய் முடியாதோ. என்று பாடுகின்றார்.

இப்பாடலில் ‘கண்ணம்மா’ என விளித்துப் பாடுவது இறைவனை. பிற்காலத்தில் வந்த பாரதியாரின் கண்ணன் பாட்டு இதன் அடிப்படையில் தோன்றுகின்றது.
வேதாந்தக் கருத்துகள், வைத்தியம், யோகம்,ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளார்.
அழுகண் சித்தர் பாடல் 200, ஞான சூத்திரம் 23 ஆகிய இரண்டு நூல்கள் அவருடைய படைப்புகளாகும்.

நாகப்பட்டினத்தில் உள்ள     சிவபெருமான் கோயில் வளாகத்திலேயே அழுகண் சித்தர் சமாதியும் உள்ளது.

இவரது வரலாறோ அன்றிக் காலமோ துணிய முடியாதனவாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகிலுள்ள அருள்மிகு திருமலை நம்பி திருக்கோவில் முன்புறம் உள்ள புளிய மரத்துக்கு அடியில் அவர் வசிப்பதாக கருதப்படுகிறது.

அழுகணிச் சித்தர் ஞானம் பாடல்கள் :

அழுகணிச் சித்தர் ஆறாதாரம் பாடல்கள்:

கடுவெளிச் சித்தர்

Posted on Updated on

 

கடுவெளிச் சித்தர்

“வைதோரைக் கூட வையாதே- இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் பறவைகள் மீதில் எய்யாதே
வேம்பினை உலகில் ஊட்டாதே- உந்தன்
வீராப்பு தன்னை விளங்க நாட்டாதே
நீர்மேற் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதின் மெத்தவும் நேயம் – சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்”
  -ஆசான் கடுவெளிச்சித்தர்-

“பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றைன மறையும் மறைந்தன் தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்”

மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நூறாண்டுகள் முழுமையாக வாழலாம் என்கிறார்கள் சித்தர்கள். மனதிற் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளி சித்தர். அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்தால் முழு ஆயுளோடு வாழ வழி சொல்கிறார் கடுவெளியார். “யாரிடமும் எதையும் யாசித்துப் பெறாதீர்கள், மனதில் எந்த இச்சைகளுக்கும் அடிமையாகாதீர்கள், பெண்களின் மீது ஆசை வைத்து மோகத்தை வளர்க்காதீர்கள், உயிரினங்களுக்கு துன்பம் செய்யாதீர்கள், உங்களுக்கு கெடுதல் செய்பவர்களையும் நீங்கள் பாவச் சொல்லில் திட்டாதீர்கள், எந்த கஷ்டம் வந்தாலும் பொய் பேசாதீர்கள், மனைவியை பழிக்காதீரகள், மமதையுடன் தான் என்கிற அகம்பாவத்துடன் நடக்காதீர்கள், அடுத்தவரை கெடுக்க நினைக்காதீர்கல், நூறு பேரின் நடுவே தன்னை போற்ற வேண்டும் என புகழ் விரும்பி அலையாதீர்கள். இந்த செயல்களை தவிர்த்தாலே மனிதன் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வாழலாம் என்கிறார். மதுரை அடுத்துள்ள கல்லுப்பட்டிக்கு அருகிலுள்ள ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும் அற்புதங்களும் நிகழ்த்தியவர் முனியாண்டி. சாதாரண, மனிதரைப் போன்றே இயல்பான, அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளிக்கும் இவர் உடலில் காவி உடையை சுற்றியிருப்பார். அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும் அவர்களின் ஆன்மாவிடம் பேசி, அந்த அன்பர்களுக்கு தெரியாமலே அவர்களின் பிரச்சனைகலிருந்து அவர்களுக்கு விடுதலை வழங்கி விடுவார்.

அரிஜன வகுப்பைச் சார்ந்த தாய் தந்தையருக்கு பிறந்தவர் கடுவெளி சித்தர். தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேய விட்டுவிட்டு அரச மரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார். அப்போது மனதை மயக்கும் இரம்மியமான மணமும், மெல்லிய மணியோசையும் கேட்க, மெல்ல கண் திறந்தவர், சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம் அவருக்கு எதிரே தீட்சணய பார்வையுடன் வாட்டசாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்றிருந்தது. அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர், பயத்தில் ஓடிச் சென்று தனக்கு அருகே இருந்த அரசமரப் பிள்ளையாரை தழுவிக்கொண்டார். அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த போல் உணர்வால் உடல் முழுவதும் சிலிர்ந்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண் விழித்தபோது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்தது. சித்தரின் தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டு சொன்னது “இப்போது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன், இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதீட்சை செய்தது தாத்தா சித்தர் என்கிற மகான். அவர் வழியில் வந்தவன் நான். நீங்கள் எமது கையால் தீட்சைப் பெற்று சித்தராக வேண்டும் என்பது இறைகட்டளை. இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன். உங்களுக்கு உபதேசம் தருவேன்” என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்துவிட்டது. சிறுவனான முனியாண்டி இந்த நிகழச்சியை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தாத்தா சித்தர் தினமும் சிறுவன் முன்பு தோன்றி மறைந்துவிடுவார். மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் பகவானுக்குரிய எல்லா யோகங்களும் தவங்களும் செய்து முடித்து சித்தரானார். இந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார். சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சித்தர் வயல் வேலை செய்வாராம். அங்கே தன்னோடு பணிபுரிகிற நண்பர்களுக்கு மதிய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்கள் பசியை போக்குவார். அதே போல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப் போல் பறப்பாராம். இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாக சொல்கிறார். இந்த சிறு வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம்.
சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சில தேவதைகள் தடுக்க முயலுமாம். ஆனால் எந்த தடை தடங்களுக்கும் செவி சாய்க்காமல் சித்தர் முனியாண்டி தவத்தை மேற்கொள்வாராம். அதேபோல் சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தியிருந்ததால் வடநாட்டிலுள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும் ஸ்ரீலங்காவிலுள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று முருகனை தரிசித்துவிட்டு திரும்புவாராம்.

சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தி இருப்பது போல காற்றாய் மறையும் சக்தியும் இருந்தது. ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்தபோது, ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய, அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள். சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே “இந்த உலகத்தில் எனக்கு பூட்டா? முடியாது? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார். அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர் முன் கைவிலங்கு வந்து விழுந்ததாம். அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் “அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள், அப்படியே விரட்டுவிடுங்கள்” என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர். ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டியை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது. அடுத்த நொடி அவர்கள் கண் திறந்தபோது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர் முனியாண்டி ஆச்சரியமாக பார்க்க அவர் “என்ன பண்றது, பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல் உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க, மனசைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஓட்டலுக்கு செல்லாமலே நகர்ந்துவிட்டார்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
“நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”
– கடுவெளிச் சித்தர் –

கடு வெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கபட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை, ஆனால் இவரின் வரலாறு யாருக்குமே தெரியாத பொக்கிஷம் போல ஆகி விட்டது.

கடுவெளிச் சித்தர் பாடல்
ஆனந்தக் களிப்பு
வாத வைத்தியம்

பஞ்ச சாத்திரம் ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது.
காஞ்சியில் சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. காஞ்சிபுரத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் கடுவெளிச்சித்தரின் பாடல் ஒன்றையே நான் வியந்து நோக்குகிறேன். உலகையே சுத்தவெளியாக நோக்கி தனது தத்துவப்பாடல்களை யாத்ததினால் இவர் கடுவெளிச்சித்தர் என அழைக்கப்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். மற்றும் சிலரே சோழநாட்டிலுள்ள கடுவெளி என்னும் ஊரத் தனது பிறப்பிடமாகக் கொண்டததினால் இவர் கடுவெளிச்சித்தர் எனறழைக்கப்படுகிறார் என்கிறார்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் வகையில் அமைந்த இவரது ஒரு பாடலைத் தழுவிய என் மழலை வரிகள்,
பசுந்சோலைதனில் மலர்களினடுவே
மனமயங்கியிருந்த மதிகெட்ட
மனிதனவன் மனதிலொரு ஆசை கொண்டு
கட்டிலிலே மனையாளொடு குழாவியொரு
சிறு தொட்டிலை நிரப்ப
ஜயிரண்டு மாதமன்றோ
அவதிஇறாள் மங்கையவள்
முல்லையாய் மலர்ந்த
அம்மழலை முதிர்ந்ததும் ஜயகோ
மூளைகெட்ட மானிடனாய்
தாய்தந்தை தவமிருந்து
தாமடைந்த அப்பூவுடலை
மண்குடம் போட்டுடைப்பதைப் போலே
மண்மீது வீணடித்தானே !

சக்தி

இத்தகிய அற்புத தத்துவ முத்துக்கள் விளைந்த உள்ளத்தில் ஊறிக்கிடந்த சமுதாய விழிப்புணர்ச்சி இவரது மற்றொரு பாடலில் தெரிகிறது.

நல்லவனைப் போலே நடிக்காதே – மனிதா
கள்வனின் வடிவாகாதே
தப்பான வழி உறவுகளை – மனிதா
தவறிக்கூட நீ இழைக்க எண்ணாதே
உன் சொந்தம் இல்லாப் பொருளை – மனிதா
உன் வசம் ஆக்க முனையாதே
நண்பனைப் போல் உறவாடி – மனிதா
நயவஞ்சகமாய் பகை மூட்டாதே
ஆமாம் உலகில் மனிதனின் உள்ளம் அவனுக்குக் கொடுக்கும் உபத்திரவங்களை அவன் அடையும் மார்க்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, கடுவெளிச் சித்தர் பகரும் பாடல் அறிவூட்டுகிறது. ஆக மொத்தம் சித்தர் என்போர் மனிதர்களின் சிருஸ்டிப்பா என்னும் கேள்வியை விடுத்து சித்தர்கள் கூறும் பொருள் மிக்க பாடல்களை ஒஉரிந்து கொள்வது மனதின் மென்மையை வளர்க்கும் என்பதே உண்மை.

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

இரும்பை-605 010. ஆரோவில், விழுப்புரம் மாவட்டம். இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம். திருஞானசம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். சுந்தரர் ஊர்த்தொகை  நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள். நடராஜரையும் சிவகாமியம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க, அதன்  மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். இவ்விடத்தில் நின்று கொண்டு சுவாமி, அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே  நேரத்தில் தரிசனம் செய்யலாம். பின்புறத்தில் முருகன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடனும், கால பைரவர்  தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடியும் காட்சி தருகின்றனர். சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் “மகாகாளநாதர்’ என்ற பெயர் பெற்றார்.

மூன்று முக லிங்கம் :

கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தை கலைத்தான். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். மன்னனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவ பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர்.  விழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின்  தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை சித்தர் பார்த்து விட்டார். தேவதாசியின் நடனத்தால் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள்,  சித்தரின் செயலை தவறாக பேசி அவரை ஏளனம் செய்தனர். கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, “”தான் அமைதியாக இருப்பதை இம்மக்கள் தவறாக எடுத்துவிட்டார்களே, அவர்களுக்காகத்தானே நான் அனைத்திலும் மேலான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்!” என்று சிவனை வேண்டி பதிகம் பாடினார். தன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலி ல் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறியது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான். சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய   லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்கு காட்சி தந்து  முக்தி கொடுத்தார்.

குயில்மொழி நாயகி:

அம்மனின்திருநாமம் குயில்மொழி நாயகி.  இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற  கோலத்தில் அருளுகிறாள். கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம். இதனால் அம்பாளுக்கு “குயில்மொழி நாயகி’ என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள்  அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

கலா சந்திரன் :

இக்கோயில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு “கலா சந்திரனாக’ காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில்  அமர்த்திய கோலத்தில் அருளுகிறார். சூரியனின் இந்த தரிசனம்  விசேஷமானது.

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வரலாறு:

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.

பூராடம் நட்சத்திர தலம்:

சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

சித்தர் வழிபாடு:

முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.

பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.

இருப்பிடம்:

தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. திறக்கும் நேரம்: காலை 9 – 10 மணி, மாலை 5 – 6 மணி. பூராடம் நாட்களில் காலை 8 – 1 மணி வரை.

கடுவெளிச் சித்தர் ஆனந்தக்களிப்பு பாடல் :