காயக் கப்பல்

காயக் கப்பல்

Posted on

ஏலேலோ ஏகரதம் சர்வரதம்
பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ

பஞ்சபூதப்பலகை கப்பலாய்ச்சேர்த்து
பாங்கானஓங்குமரம் பாய்மரம் கட்டி
நெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம்
மானாபிமானங் கயிறாகச் சேர்த்து

ஐந்தெழுத்தைக் கட்டிசாக்காகயேற்றி
ஐம்புலன் தன்னிலே சுக்கானிறுத்தி
நெஞ்சுகடாட்சத்தால் சீனிப்பாய்தூக்கி
சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து!

தஞ்சலான வெள்ளத்தில் தானே அகண்டரதம் போகுதடா
ஏலேலோ ஏலேலோ.
களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு.
கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல்

நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளு
நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல்
மூக்கணைமூன்றையுந் தள்ளுடா தள்ளு
முப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல்

திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளு
திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல்
பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு
பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ (ஏலேலோ)

தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து
தாரம் சகோதரம் தானதும் மறந்து
பந்தமும் நேசமும் பாசமும்மறந்து
பதினாலு லோகமும் தனையும்மறந்து

இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி
ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி
அந்திரமானவெளி அருளானந்த வெள்ளத்தில்
அழுந்துதையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ    -முற்றிற்று-

Advertisements