கல்லுளிச் சித்தர்

கல்லுளிச் சித்தர் பாடல்

Posted on

 

பிர்ம சொரூபத்தை நாடு உன்
கர்ம வினையோட வழிதனைத் தேடு
மர்மந் தெரிவிக்கும் வீடு கண்டு
தர்ம நெறிமுறைதன்னில்நீ கூடு. 1

ஆதி பரம்பொருளைப் போற்றி என்தன்
ஆத்தாளின் பாதத்தை மனதினி லேற்றி
சோதிச் சுடரொளியை நோக்கி எங்கள்
தூயகுரு பதமலரைச் சிரமீது தாக்கி. 2

முத்தர்கள் தன்னைத் துதித்து மேலாம்
மோனத்தின் நிலையை மனத்தினில் ஏற்றி
சுத்த நிராமயங் கண்டு வேதச்
சுடரெனும் பொருளைஉன் னிதயத்துட் கொண்டு 3

ஞான நிலை அறிய வேண்டி இந்த
ஞாலத்தில் ஆபாச வழிதனைத் தாண்டி
மோன நிலையினில் சேர்த்து ஆதி
முச்சுடர் ஆகிய தீபத்தைப் பார்த்து. 4

நித்தியா னந்தமெனத் தேர்ந்து சதா
நில்மல மானதோர் பரவெளி சார்ந்து
பத்தியாய் வாழ்ந்திட வேணும்ஆசா
பாசத்தை நீக்கில்மெய்ஞ் ஞானமது தோணும் 5

எட்டி பழுத்தாலும் என்ன? காசு
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன?
கட்டி வராகனிருந்து என்ன? அதைக்
காவல்கள் போட்டுநீ காத்திருந்து என்ன? 6

நீரிலாக் கிணறு இருந்தென்ன? மனம்
நேராய் நடவாத பிள்ளையிருந்து என்ன?
ஊரிலா ஆறிருந்து என்ன? நமக்கு
உதவி இல்லாது மனிதர் உறவிருந்து என்ன? 7

தவமது செய்தாலும் என்ன? நீ
சமத்தன் என்றேபே ரெடுத்தாலும் என்ன?
சிவபூசை செய்தாலும் என்ன? அரன்
சேவடியை மறவாமல் இருந்தாலும் என்ன? 8

காசிபோய் வந்தாலும் என்ன? பெரிய
கனக தண்டிகையேறித் திரிந்தாலும் என்ன?
வாசியைத் தெரிந்தாலும் என்ன? நாளும்
மகராசன் என்றுபேர் பெற்றாலும் என்ன? 9

புராணம் படித்தாலும் என்ன? இந்தப்
பூலோகம் தன்னில் மறைந்திருந்து என்ன?
திராசு நிலையாய் இருந்து என்ன? தினம்
சிவசிவா என்றே செபித்தாலும் என்ன? 10

வித்தைகள் பலபடித்து என்ன? நீ
மென்மேலுஞ் சாத்திரம் கற்றாலும் என்ன?
சித்துகள் தெரிந்தாலும் என்ன? நாளும்
சிறப்பாக வார்த்தை உரைத்தாலும் என்ன? 11

பெண்டாட்டி பிள்ளை இருந்து என்ன? முதிர்ந்த
பெரியோர்கள் பாதத்தைப் பூசித்தும் என்ன?
துண்டாகப் போயிருந் தென்ன? நீ
துலையாத கற்கோட்டை கட்டியிருந்து என்ன? 12

மாடிமேல் வீடிருந்து என்ன? இந்த
வையகத் தோர்மெய்க்க வாழ்ந்தாலும் என்ன?
கூடிக் குலாவி இருந்த தென்ன? கையெடுத்துக்
கும்பிட்டுக் கூத்தாடித் திரிந்தாலும் என்ன? 13

தாய்தந்தை துணையிருந்து என்ன? உற்ற
சனங்களும் உபகார மாய் இருந்தென்ன?
நாய்போல் அலைந்தாலும் என்ன? வரும்
நமனுக்குத் தப்பி ஒழிந்தாலும் என்ன? 14

சரியை கடந்திடவும் வேணும் இந்தச்
சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும்.
கிரியையைப் பார்த்தறிய வேணும் மனவாக்குக்
கெட்டாத சொரூபத்தைத் தெரிந்திடவேணும் 15

யோகந் தெரிந்திட வேணும், உனக்
குண்டிமுதல் ஆனதைச் சுருக்கிடவேணும்,
பாகமது தெரியவே வேணும், குரு
பாதம் அதை மறவாமல் இருந்திடவேணும். 16

கொலைகளவு நீக்கிவிட வேணும் உலகில்
கொடியோன் எனும்பேரைப் போக்கிடவேணும்
புலைகளைத் தொலைத்து விடவேணும் இன்று
பொல்லாத மாயையை விலக்கிடவேணும். 17

சோதியைக் கண்டு அறிய வேணும் வேதச்
சுடரெனும் தீபத்தைப் பார்த்தறிய வேணும்
ஆதிம்பிர் மந்தெரிய வேணும் அதை
அன்புடன் சாத்திரத் தாற்தெரிய வேணும். 18

ஞானநிலை தெரியவே வேணும் இதில்
நால்வேத உண்மை தெரிந்திட வேணும்
மோன நிலைதெரியவே வேணும் யோக
முடிவான வத்துவை முன்தெரிய வேணும். 19

அட்ட கரு மம்தெரிய வேணும் அதற்
காதார மானஆலை தெரிய வேணும்
திட்டமாய் வாசிநிலை வேணும் இத
தெரிந்துகொண் டாற்சித்தன் ஆகவே வேணும் 20

பந்தங் கடந்தவனே சித்தன் பாரிலே
பஞ்சமா பாதகத்தை விட்டோனே பத்தன்
இந்தவிதந் தெரிந்தவனே சித்தன் அதில்
என்நிலைமை கண்டவனே சீவ முத்தன் 21

தன்னையே தானறிந்தோன் சித்தன் வாசி
தனித்திருந் தேபழக்க முற்றோனே முத்தன்
உன்னைஉன் னாலறிவோன் சத்தன் ஞான
யோகநிலை தன்னையு மறிந்தோனே முத்தன் 22

பவுரணை நாளதனி லேதான் வாசிப்
பழக்கமது செய்யவா ரம்பிக்க வேதான்
நவநாதர் செய்முறைகள் இதுதான் கண்டு
நாட்டத்தைக் கொண்டு வழிபார்ப்பர் இதுதான் 23

வாசிப் பழக்கத்தை நாட்டு தீட்சை
மார்க்கப் படியே வழிகண்டு தீட்டு
பாசிப் பயறு அன்ன மூட்டுதினம்
பத்திய மாகவே காலத்தை ஓட்டு 24

பெண்போகத் தாசை வையாதே நல்ல
பிரணவ சொரூபத்தை நழுவ விடாதே
மண்பொன்மேல் இச்சைகொள் ளாதே பொல்லா
மாயையில் அகப்பட்டு நீயுழ லாதே 25

அட்டாங்க யோகமது செய்வாய் அதி
அனந்தநிலைகண்டு மோனத்தில் உய்வாய்
கட்டாக ஓர்நிலையில் நில்லு அந்தக்
கரணம் அடக்கிய மேலேறிச் செல்லு 26

நந்திதன் கொலுவை விடாதே அந்த
நாட்டத்தை விட்டுநீ அலைந்து கெடாதே
அந்தணன் பீடத்தில் நீயே நின்று
ஆத்தாளைக் கண்டு பணிந்திடு வாயே 27

தானாக மேலேஓர் வீடு கதவு
தான்சாத்தி இருக்கின்ற வழிதிறந் தோடு
மேனாட்டுக் கப்பலை ஓட்டு பாயை
விரித்துநீ மேற்தூக்கிச் சுக்கானைப்பூட்டு 28

ஆதாரம் ஆறையும் பார்த்து உன்றன்
அறிவினுக்கு எட்டிய நங்கூரங் கோர்த்து
மாதா தெரிசனை அறிந்து அந்த
வழியிலே திட்டியின் வாசல்திறந்து 29

ஆறுதல வீட்டையும் கண்டு அங்கே
அவரவர் வாசஞ்செய் அருமையைவிண்டு
தேறுவதை நீ வெளிவிடாதே நல்ல
திருவான மேல்வாசல் கண்டுபின்னிடாதே 30

பாதைவழி ஏறியே செல்லு மயிர்ப்
பாலத்தின் வழியேபோய்ப் பட்சமாய நில்லு
தாதை இருப்பிடம் பாரு யாரும்
சஞ்சாரம் இல்லாத தனித்திடஞ்சேரு 31

மூலதாரத்தையும் பார்த்து நல்ல
முச்சந்தி வீதியின் வாசியைச் சேர்ந்து
நாலா விதங்களும் தெரிந்து அங்கே
நவகோண சக்கரத்து உண்மை அறிந்து 32

சங்குத் தொனிகேட்கில் ஆகும்
சத்தமுங் கேட்கப் பயம்விலகிப் போகும் அந்தச்
எங்கும் நிராமயமாய்த் தோணும் மேலும்
இயல்பாக நாதத் தொனியங்கே காணும் 33

சதுரகிரி உச்சிமீது ஏறி அதைத்
தானங்கே பார்த்துபிர மானந்த மீறி
இதுகயி லாசகிரி யென்று போற்றி
இனிமையாய் வழிதெரிந்து தவ்விடஞ் சென்று 34

கருநெல்லிக் காட்டுக்குள் சென்றே உட்
கருவான தாமரைத் தடாகத்துள் நின்றே
பெருவாரித் தீர்த்தங்கள் ஆடி வாய்
பேசாமல் ஊமைபோல் மோனத்தை நாடி 35

கருஞ்சாரை வெண்சாரை யோட
அதைக் கண்டு ஒடுங்கி வழிதனைத் தேடப்
பெரும்பாலும் அருவி செறிந்து
வரப் பிறங்கும்பிர மானந்த மிதுவென்று அறிந்து 36

மூலக் கணேசனைக் கண்டு அவர்
முன்னின்று போற்றியே தெரிசித்துக் கொண்டு
கோலத் துடன் அங்கு இருந்தும் செல்லக்
குணமாயாய் ஆனந்தப் பரவெளி பொருந்தும் 37

சோதி சொரூபத்தைப் பார்த்து அதிற்
சொக்கியே நின்றிடத் தேகமும் வேர்த்து
ஆதி மகாலிங்கங் கண்டு அதில்
ஐம்புலன் ஒடுங்கியே ஆனந்தங் கொண்டு 38

சுந்தர தெரிசனம் செய்து சிற்
சொரூப நிலையதனில் நின்று நான் உய்து
அந்தரத் தோர்களைப் போற்றி இது
ஆச்சரியம் என்றேதான் வாசியை ஏற்றி 39

கண்டுகொண் டேன்சிற் பரத்தை ஞானக்
கண்கொண்டு பார்த்தறிந் தேன்அட் சரத்தை
விண்டுயான் சொல்லமுடியாது இந்த
மேதினி யோர்க்குலெகு விற்கிடை யாது 40

மனமானது தடங்கியே போச்சு இந்த
மாயையை விட்டுக் கரையேறல் ஆச்சு
சினமென்னுங் கோபம்அறுத் தாச்சு யோகம்
சித்திய தாகவே முத்தியும் ஆச்சு 41

ஆசையை ஒருநாளும் வேண்டேன்மேல்
ஆறு தலத்திலும் கண்டதைப் பூண்டேன்
ஓசை ஒளிக்குளே நின்றேன்அதை
உற்றுற்றுப் பார்த்துப்பின் அங்கங்குச் சென்றேன் 42

ஆயிரத்து எட்டிதழும் கண்டேன் கண்டு
அந்தந்த நிலையையும் மனத்தினிற் கொண்டேன்
தாயின் சொரூபத்துள் ஆச்சு இன்னும்
சகலபுவ னங்களும் பிண்டத்தில் ஆச்சு 43

அஞ்ஞானம் என்பதும் போச்சு பர
மானந்து மென்ப தது நிசப் பேச்சு
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ இந்த
மேதினி யோர்கள் அறியார்களையோ 44

இல்லறம் உள்ளதும் நாமே அதி
ஏற்கையா யிருந்தோர்க்குச் சாதனமாமே
நல்லறம் தேடியலை யாதே மேலாம்
நாதாந்த வெட்டவெளி யாயிருக்கும் போதே 45

மோன நிலைகண்டு தேறு பர
முத்திக்கு வித்தான கருத்தில் நின் றேறு
ஞான நிலையதுவும் கிட்டும் பூவில்
நாடி இருக்கலாம் வெகுகால மட்டும் 46

சுழிமுனை திறக்கும்வழி பாரு அந்தச்
சூட்சாதி சூட்சத்தைக் கண்டதின் சீரு
வழியுடன் சுந்தரர் நூறே சொல்லும்
மார்க்கத்தின் வழியாகச் சென்றுநீ தேறே 47

மச்சரும் எண்ணூறிற் கொஞ்சம்
வாய்விண்டு சொல்லினர் தெரியவே சதமாய்க் பதமாய்
இச்சை ஒழித்து நீ பாரு அதனால்
இகபர இரண்டையும் காணவெகு சீரு 48

தீட்சையின் மார்க்கமும் தெரிய குரு
தேசிகன் இருநூறில் வழிதுறை அரிய
மாட்சிமை யாக உரைத்தார் அதை
வாங்கித் திருமூலர் குகைக்குள் மறைந்தார் 49

சட்டமுனி கற்பவிதி நூறு அதனைத்
தான்பார்த்து நல்ல வழியினில் தேறு
வெட்டவெளி யாகவே தோணும் ரோமர்
விரித்துச்சொன் னாரந்த ஐஞ்ஞூறிற்காணும் 50

செய்பாக மானதுவும் முன்னே கருவைத்
தெரிந்துகுரு முறையாகச்செய்வாய்நீ பின்னே
கைபாகத் துடன் செய்தால் ஞானம்கிட்டுங்
கடைத்தேறல் ஆமிந்தத் திடத்துடன்மோனம் 51

பத்திய பாகங்கள் ஆக முறையாய்ப்
பாங்குடன் தானுண்பாய் நரைதிரை போக
முத்தி வழியைத் திறந்து பார்த்து
மோசங்கள் வாராமற் செய்வாய் சிறந்து 52

பூலோக ஆசையைத் தள்ளு ஞானம்
போதிக்குங் குருகண்டு அடுத்துநீ கொள்ளு
சாலோக பதவியது கிட்டும் வேறே
சம்பத்து வேண்டுமோ இதுவந்த மட்டும் 53

யோக முறை கை விடாதே விட்டுவிட்டு
ஒன்றுந் தெரியாமல் நீயும் கெடாதே
பாகம தாகவே செய்வாய் பய
பத்தியா எப்போதுஞ் சரத்தினில் உய்வாய் 54

ஞான வழிகண்டு கூடு வரும்
நலமான முத்தி வழிதனைத் தேடு
மோன நிலையிலே நில்லு குரு
முத்திக்கு கிடமான வழியிலே செல்லு 55

வாழ்நாளை வீணில்விடாதே கெட்ட
மாய வலைஅகப் பட்டுழலாதே
பாழ் போகில் எதுவும்வாராதே பரி
பக்குவ மாகிடில் நீ பின்னிடாதே 56

தூக்கத்தில் ஆசைவை யாதேஇது
சுகமெனக்காண்பித்து மயக்குமப் போதே
ஊக்கத் துடனிருப் பாயே தூங்கி
உலகோர் சிரிக்கவு டம்பெடுப்பாயே 57

மீறித் திரிவதும் வீணே பரியாச
மேசெயும் வார்த்தைக்கு இடமது காணே
தேறித் தெளிவது பாரம் உன்றன்
சித்தம் மடக்கித் திரிவது சாரம் 58

ஆணவத் தால் வருங்கேடு அதை
அறியாமல் நடப்பது சுனைகெட்ட மாடு
தாணுவின் பாதத்தை நாடு என்றும்
தன்தேகம் போகாமல் கற்பங்கள் தேடு 59

ஆசை மயக்கில் செல்லாதே நீ
அன்புடன் தெரிந்ததை வெளியில் சொல்லாதே
பாசத்து அகப்படாது நீயே ஞான
பரிபூர ணானந்த பதம்அடை வாயே 60

பார்த்துத் தெரிந்து கொள் என்றே எனக்குப்
பட்சமாய்ப் போகருஞ் சொல்லினார் என்றே
ஆத்தும சத்தியாய் நானே அவரை
அன்புடன் போற்றிப் பணிந்துகொண் டேனே 61

குருநாதன் என்னை மதித்துப் பேர்
கொடுத்தாரே கல்லுளி யென்றே விதித்து
திருநாமம் பெற்றபின் நானே அவரைத்
தெரிசித்து யோகத்தின் சித்திபெற்றேனே 62

கல்லுளிச் சித்தனென்றேதான்
கனிந்துமே கூப்பிட்டார் சித்தர்களேதான் ளேதான்
சொல்லிய படியென்னைத்தானே எவரும்
சுட்டி அழைத்திடில் நேரில் வருவேனே 63

என்னூலும் மறுபதோடாறு நானும்
இயம்பினேன் சக்கரத் தியல்பதின் கூறு
முன்னூலும் பின்னூலு மாய்ந்தே நீ
முக்கியம் இன்னதென மனதுக்குள் வாய்ந்தே 64

சாத்திர மெத்தனையோகோடி சித்தர்
தான்சொன்ன வாத வயித்தியந் தேடி
சூத்திரம் பத்தொன்ப தாக யானும்
சொல்லிய நூல்தனை வழிதுறை யாக 65

பார்த்துத் தெளிந்தவனே சித்தன் பரி
பக்குவ மாக அறிந்தோனே பத்தன்
நேர்த்தியாய் என்னூல்கற் றோனே அவன்
நீடூழி காலம்வரை யோகம் பெற்றோனே 66