கடுவெளிச் சித்தர்

கடுவெளிச் சித்தர்

Posted on Updated on

 

கடுவெளிச் சித்தர்

“வைதோரைக் கூட வையாதே- இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் பறவைகள் மீதில் எய்யாதே
வேம்பினை உலகில் ஊட்டாதே- உந்தன்
வீராப்பு தன்னை விளங்க நாட்டாதே
நீர்மேற் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதின் மெத்தவும் நேயம் – சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்”
  -ஆசான் கடுவெளிச்சித்தர்-

“பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றைன மறையும் மறைந்தன் தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்”

மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நூறாண்டுகள் முழுமையாக வாழலாம் என்கிறார்கள் சித்தர்கள். மனதிற் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளி சித்தர். அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்தால் முழு ஆயுளோடு வாழ வழி சொல்கிறார் கடுவெளியார். “யாரிடமும் எதையும் யாசித்துப் பெறாதீர்கள், மனதில் எந்த இச்சைகளுக்கும் அடிமையாகாதீர்கள், பெண்களின் மீது ஆசை வைத்து மோகத்தை வளர்க்காதீர்கள், உயிரினங்களுக்கு துன்பம் செய்யாதீர்கள், உங்களுக்கு கெடுதல் செய்பவர்களையும் நீங்கள் பாவச் சொல்லில் திட்டாதீர்கள், எந்த கஷ்டம் வந்தாலும் பொய் பேசாதீர்கள், மனைவியை பழிக்காதீரகள், மமதையுடன் தான் என்கிற அகம்பாவத்துடன் நடக்காதீர்கள், அடுத்தவரை கெடுக்க நினைக்காதீர்கல், நூறு பேரின் நடுவே தன்னை போற்ற வேண்டும் என புகழ் விரும்பி அலையாதீர்கள். இந்த செயல்களை தவிர்த்தாலே மனிதன் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வாழலாம் என்கிறார். மதுரை அடுத்துள்ள கல்லுப்பட்டிக்கு அருகிலுள்ள ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும் அற்புதங்களும் நிகழ்த்தியவர் முனியாண்டி. சாதாரண, மனிதரைப் போன்றே இயல்பான, அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளிக்கும் இவர் உடலில் காவி உடையை சுற்றியிருப்பார். அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும் அவர்களின் ஆன்மாவிடம் பேசி, அந்த அன்பர்களுக்கு தெரியாமலே அவர்களின் பிரச்சனைகலிருந்து அவர்களுக்கு விடுதலை வழங்கி விடுவார்.

அரிஜன வகுப்பைச் சார்ந்த தாய் தந்தையருக்கு பிறந்தவர் கடுவெளி சித்தர். தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேய விட்டுவிட்டு அரச மரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார். அப்போது மனதை மயக்கும் இரம்மியமான மணமும், மெல்லிய மணியோசையும் கேட்க, மெல்ல கண் திறந்தவர், சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம் அவருக்கு எதிரே தீட்சணய பார்வையுடன் வாட்டசாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்றிருந்தது. அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர், பயத்தில் ஓடிச் சென்று தனக்கு அருகே இருந்த அரசமரப் பிள்ளையாரை தழுவிக்கொண்டார். அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த போல் உணர்வால் உடல் முழுவதும் சிலிர்ந்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண் விழித்தபோது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்தது. சித்தரின் தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டு சொன்னது “இப்போது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன், இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதீட்சை செய்தது தாத்தா சித்தர் என்கிற மகான். அவர் வழியில் வந்தவன் நான். நீங்கள் எமது கையால் தீட்சைப் பெற்று சித்தராக வேண்டும் என்பது இறைகட்டளை. இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன். உங்களுக்கு உபதேசம் தருவேன்” என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்துவிட்டது. சிறுவனான முனியாண்டி இந்த நிகழச்சியை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தாத்தா சித்தர் தினமும் சிறுவன் முன்பு தோன்றி மறைந்துவிடுவார். மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் பகவானுக்குரிய எல்லா யோகங்களும் தவங்களும் செய்து முடித்து சித்தரானார். இந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார். சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சித்தர் வயல் வேலை செய்வாராம். அங்கே தன்னோடு பணிபுரிகிற நண்பர்களுக்கு மதிய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்கள் பசியை போக்குவார். அதே போல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப் போல் பறப்பாராம். இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாக சொல்கிறார். இந்த சிறு வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம்.
சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சில தேவதைகள் தடுக்க முயலுமாம். ஆனால் எந்த தடை தடங்களுக்கும் செவி சாய்க்காமல் சித்தர் முனியாண்டி தவத்தை மேற்கொள்வாராம். அதேபோல் சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தியிருந்ததால் வடநாட்டிலுள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும் ஸ்ரீலங்காவிலுள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று முருகனை தரிசித்துவிட்டு திரும்புவாராம்.

சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தி இருப்பது போல காற்றாய் மறையும் சக்தியும் இருந்தது. ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்தபோது, ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய, அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள். சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே “இந்த உலகத்தில் எனக்கு பூட்டா? முடியாது? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார். அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர் முன் கைவிலங்கு வந்து விழுந்ததாம். அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் “அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள், அப்படியே விரட்டுவிடுங்கள்” என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர். ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டியை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது. அடுத்த நொடி அவர்கள் கண் திறந்தபோது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர் முனியாண்டி ஆச்சரியமாக பார்க்க அவர் “என்ன பண்றது, பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல் உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க, மனசைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஓட்டலுக்கு செல்லாமலே நகர்ந்துவிட்டார்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
“நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”
– கடுவெளிச் சித்தர் –

கடு வெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கபட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை, ஆனால் இவரின் வரலாறு யாருக்குமே தெரியாத பொக்கிஷம் போல ஆகி விட்டது.

கடுவெளிச் சித்தர் பாடல்
ஆனந்தக் களிப்பு
வாத வைத்தியம்

பஞ்ச சாத்திரம் ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது.
காஞ்சியில் சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. காஞ்சிபுரத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் கடுவெளிச்சித்தரின் பாடல் ஒன்றையே நான் வியந்து நோக்குகிறேன். உலகையே சுத்தவெளியாக நோக்கி தனது தத்துவப்பாடல்களை யாத்ததினால் இவர் கடுவெளிச்சித்தர் என அழைக்கப்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். மற்றும் சிலரே சோழநாட்டிலுள்ள கடுவெளி என்னும் ஊரத் தனது பிறப்பிடமாகக் கொண்டததினால் இவர் கடுவெளிச்சித்தர் எனறழைக்கப்படுகிறார் என்கிறார்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் வகையில் அமைந்த இவரது ஒரு பாடலைத் தழுவிய என் மழலை வரிகள்,
பசுந்சோலைதனில் மலர்களினடுவே
மனமயங்கியிருந்த மதிகெட்ட
மனிதனவன் மனதிலொரு ஆசை கொண்டு
கட்டிலிலே மனையாளொடு குழாவியொரு
சிறு தொட்டிலை நிரப்ப
ஜயிரண்டு மாதமன்றோ
அவதிஇறாள் மங்கையவள்
முல்லையாய் மலர்ந்த
அம்மழலை முதிர்ந்ததும் ஜயகோ
மூளைகெட்ட மானிடனாய்
தாய்தந்தை தவமிருந்து
தாமடைந்த அப்பூவுடலை
மண்குடம் போட்டுடைப்பதைப் போலே
மண்மீது வீணடித்தானே !

சக்தி

இத்தகிய அற்புத தத்துவ முத்துக்கள் விளைந்த உள்ளத்தில் ஊறிக்கிடந்த சமுதாய விழிப்புணர்ச்சி இவரது மற்றொரு பாடலில் தெரிகிறது.

நல்லவனைப் போலே நடிக்காதே – மனிதா
கள்வனின் வடிவாகாதே
தப்பான வழி உறவுகளை – மனிதா
தவறிக்கூட நீ இழைக்க எண்ணாதே
உன் சொந்தம் இல்லாப் பொருளை – மனிதா
உன் வசம் ஆக்க முனையாதே
நண்பனைப் போல் உறவாடி – மனிதா
நயவஞ்சகமாய் பகை மூட்டாதே
ஆமாம் உலகில் மனிதனின் உள்ளம் அவனுக்குக் கொடுக்கும் உபத்திரவங்களை அவன் அடையும் மார்க்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, கடுவெளிச் சித்தர் பகரும் பாடல் அறிவூட்டுகிறது. ஆக மொத்தம் சித்தர் என்போர் மனிதர்களின் சிருஸ்டிப்பா என்னும் கேள்வியை விடுத்து சித்தர்கள் கூறும் பொருள் மிக்க பாடல்களை ஒஉரிந்து கொள்வது மனதின் மென்மையை வளர்க்கும் என்பதே உண்மை.

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

இரும்பை-605 010. ஆரோவில், விழுப்புரம் மாவட்டம். இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம். திருஞானசம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். சுந்தரர் ஊர்த்தொகை  நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள். நடராஜரையும் சிவகாமியம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க, அதன்  மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். இவ்விடத்தில் நின்று கொண்டு சுவாமி, அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே  நேரத்தில் தரிசனம் செய்யலாம். பின்புறத்தில் முருகன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடனும், கால பைரவர்  தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடியும் காட்சி தருகின்றனர். சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் “மகாகாளநாதர்’ என்ற பெயர் பெற்றார்.

மூன்று முக லிங்கம் :

கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தை கலைத்தான். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். மன்னனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவ பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர்.  விழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின்  தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை சித்தர் பார்த்து விட்டார். தேவதாசியின் நடனத்தால் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள்,  சித்தரின் செயலை தவறாக பேசி அவரை ஏளனம் செய்தனர். கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, “”தான் அமைதியாக இருப்பதை இம்மக்கள் தவறாக எடுத்துவிட்டார்களே, அவர்களுக்காகத்தானே நான் அனைத்திலும் மேலான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்!” என்று சிவனை வேண்டி பதிகம் பாடினார். தன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலி ல் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறியது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான். சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய   லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்கு காட்சி தந்து  முக்தி கொடுத்தார்.

குயில்மொழி நாயகி:

அம்மனின்திருநாமம் குயில்மொழி நாயகி.  இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற  கோலத்தில் அருளுகிறாள். கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம். இதனால் அம்பாளுக்கு “குயில்மொழி நாயகி’ என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள்  அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

கலா சந்திரன் :

இக்கோயில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு “கலா சந்திரனாக’ காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில்  அமர்த்திய கோலத்தில் அருளுகிறார். சூரியனின் இந்த தரிசனம்  விசேஷமானது.

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வரலாறு:

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.

பூராடம் நட்சத்திர தலம்:

சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

சித்தர் வழிபாடு:

முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது. சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது.

பூராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:

சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்.

இருப்பிடம்:

தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது. திறக்கும் நேரம்: காலை 9 – 10 மணி, மாலை 5 – 6 மணி. பூராடம் நாட்களில் காலை 8 – 1 மணி வரை.

கடுவெளிச் சித்தர் ஆனந்தக்களிப்பு பாடல் :

 

Advertisements

குழந்தை வரம் அருளும் கடுவெளிச் சித்தர்

Posted on Updated on

சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த இறைவனின் சித்தப்படி நடப்பவர்களுமே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த இறைவனின் சித்தப்படி நடப்பவர்களுமே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதனாலேயே ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்ற சொல் வழக்கு வந்தது. மனிதர்களை, அவர் களின் பிறப்பை உணர்ந்து இறைவனுடன் இணையச் செய்வதற்காகவே அவதரித்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் பிறந்த இடமும், அவர்கள் உலாவிய இடமும், சித்தர்கள் சமாதி அடைந்த இடமும், சித்தர்கள் அருளாசி கிட்டும் இடமும் சித்தர் பீடமாக இன்றும் வணங்கப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர்தான் கடுவெளி சித்தர். இவர் திருஇரும்பை மாகாளத்தில் (திண்டிவனம்) பிறந்து, வாழ்ந்து அங்கு பல சித்துகளை செய்து மக்களை மகிழ்வித்துள்ளார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கடுவெளியில் சில காலம் தங்கி அங்கு சில சித்துகளை செய்துள்ளார். பின்னர் காஞ்சீபுரம் சென்று அங்கிருந்து கடுவெளியில் ஒளிவடிவான பரம் பொருளை தேடிவந்து சித்தாடல் புரிந்து 35 பாடல்களை இயற்றி உள்ளார். கடுவெளியில் உள்ள சிவபெருமானை பரமநாதர் என்று தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

கடும் தவம் செய்வதாலும், தான–தருமங்களை செய்வதன் மூலமும் இறைவனை அடைய முடியும் என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு விளக்கியவர் கடுவெளி சித்தர்.

கடுவெளி சித்தர் ஜீவசமாதி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் எடையூர்–சங்கேந்தி கடைத்தெருவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து செல்கிறது.

கடும் தவம் மேற்கொண்டு தனது சித்துவிளையாடல்கள் மூலம் பக்தர்களை ஈர்த்தவர் கடுவெளி சித்தர். கடுவெளி சித்தர் இறைவனை வெட்ட வெளியில் வழிபட்டு வந்தார். அவர் வணங்கிய சிவனின் திருநாமம் பரமானந்தர். அம்பாளின் பெயர் பாலாம்பிகை. சித்தர்கள் அம்பாளை தங்களுக்கு சக்தி கொடுப்பதற்காக வணங்குவர். கடுவெளி சித்தர் பராசக்தியை வாலைக்குமரியாக வழிபட்டார்.

ஆலயம் அமைந்துள்ள ஊர் கடுவெளி. சித்தர் உறைந்ததும் இங்கேதான். அதன் அருகில் உள்ள ஊர் சித்தாலத்தூர். அதாவது கடுவெளி சித்தர் அடக்கமானதால் கடுவெளி சித்தர் ஆலத்தூர் என்பது மருவி கடுவெளி சித்தராலத்தூர் என அழைக்கப்பட்டது.

கடுவெளி சித்தர் சிவபெருமானை துதித்து உள்ளமுருக பாடி வழிபட்டார். அப்போது அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தம்முடைய பேரன்பை வெளிப்படுத்தும் வண்ணம் கடுவெளியில் உள்ள சிவலிங்கத்தை இரண்டாக பிளக்க வைத்தாராம். சிவலிங்கம் பிளவுபட்டு அதிலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டதாக பல புராணங்களில் படித்திருந்தாலும், கடுவெளி சித்தரை மகிழ்விக்க இறைவன் வெளிப்பட்டதும் அவ்விதமே இருக்கவேண்டும்.

‘நந்தவனத்திலோர் ஆண்டி–அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி– அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’

–என்ற பிரபலமான பாடலை இயற்றியவர் இந்த கடுவெளி சித்தர் தான்.

ஆண்டி ஒருவன் தினசரி பிச்சையெடுத்து உண்பவன். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத அவன் ஒருநாள் நந்தவனம் ஒன்றை பார்க்கிறான். அதில் விதவிதமாக வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த செடி, கொடிகளுக்கு குளத்து நீரை தினசரி ஊற்றினால் எவ்வளவு செழுமையாக இருக்கும் என்று நினைத்தான். உடனடியாக ஒரு குயவனிடம் சென்று, தனக்கு தோண்டி ஒன்றை கொடுக்குமாறு கேட்கிறான்.

அதற்கு குயவன் ஒரு தோண்டிக்கு எட்டணா விலை கேட்கிறார். ஆண்டியிடம் காசு இல்லை. இப்படி ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, பத்து மாதங்கள் கடந்து விட்டன. ஆண்டியும் தோண்டியை பொறுமையுடன் கேட்டுவந்தான். ஒரு நாள் குயவன் மனமிரங்கி தோண்டி யொன்றை அந்த ஆண்டிக்கு அன்பளிப்பாக வழங்கினான். ஆண்டிக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியில் தோண்டியை தலையில் வைத்துக் கொண்டு ஆடியபோது, அது கீழே விழுந்து உடைந்தது.

இது சாதாரண ஆண்டி, குயவன் கதையல்ல; மனிதனின் ஜீவ ரகசியம். ‘பத்து மாதங்கள் தவமிருந்து கிடைக்கப்பெற்ற உடலை மனிதன் போற்றி பாதுகாக்காது, அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வீணே அழித்து வருகிறானே’ என்ற அனுதாபத்தில் பாடப்பட்டது.

பத்து மாதங்கள் தவம் செய்து பெற்றது மனிதா. நீ கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பதற்குத் தானோ? எவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தை பெற்றிருக்கிறாய். இந்த உடல் உள்ள போதே ஆன்மா கடைத்தேற வழி காண வேண்டாமா? என்று மனிதனை இடித்துரைக்கின்றார் கடுவெளி சித்தர்.

கடுவெளி சித்தர் ஜீவசமாதியில் சிறிய அகல்விளக்கில் தீபம் ஏற்றி வைத்து வழிபடும்போது, அதன் வெளிச்சம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது பெரிய அளவில் தெரிகிறது. கோவிலில் அர்ச்சகர் சங்கு ஊதி பூஜை செய்கிறார். அந்த நேரத்தில் ஜீவசமாதி அருகில் நின்று கொண்டு நாய் (பைரவர்) சங்கு ஊதுவதைப் போன்றே ஒலி எழுப்பி சித்தரை வணங்கும் நிகழ்வு என்றே அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.

பிரபஞ்ச வெளியில் (கடுவெளி) இருந்துதான் ஆன்மாவானது தாயின் கருவறைக்குள் செல்கிறது. இங்கு வெட்டவெளியாக, கடுவெளியாக சித்தர் அருள் நிலவுவதால் நீண்ட காலங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடுவெளி சித்தரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று கடுவெளி சித்தருக்கு யாகம் வளர்த்து அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை செய்யப்படும். ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று திருவிழா நடத்தப்படுகிறது.

மோட்ச தீபம்

கடுவெளி சித்தர் சூரிய கிரகத்துக்கு உரியவர். சூரிய கிரகத்தை ஆத்மகாரகன், பிதுர்காரகன் என்பார்கள். அதாவது முன்னோர்களாக என்றும் நிலைத்து விளங்குபவன். கடுவெளி சித்தர் வழியாக கடுவெளி பரமநாதரை (சிவபெருமானை) வணங்கினால், ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோ‌ஷங்கள் யாவும் நீங்கும். மேலும் கடுவெளியில் மோட்ச தீபம் ஏற்றி நமது முன்னோர்களை நினைத்து கடுவெளி சித்தரையும், பரமநாதரையும் வணங்கினால் முற்பிறப்பு பாவங்களும், பித்ரு சாபங்களும் அடியோடு நீங்கி வாழ்க்கை வளமாகும்.

கடுவெளிச் சித்தர் ஆனந்தக்களிப்பு பாடல் :

கடுவெளிச் சித்தர்

Video Posted on Updated on

ஆனந்தக் களிப்பு

பல்லவி

பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சரணங்கள்

சாபங்கொடுத்திட லாமோ – விதி
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ – இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ. பாப

சொல்லருஞ் சூதுபொய் மோசம் – செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் – எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம். பாப

நீர்மேற் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் – சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். பாப

நந்த வனத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. பாப

தூடண மாகச்சொல் லாதே – தேடுஞ்
சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே – சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே. பாப

நல்ல வழிதனை நாடு – எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு. பாப

நல்லவர் தம்மைத்தள் ளாதே – அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே – கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. பாப

வேத விதிப்படி நில்லு – நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாதக நிலைமையே சொல்லு – பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. பாப

பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே – எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே
இச்சைய துன்னை யாளாதே – சிவன்
இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே. பாப

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு – சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு – உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. பாப

மெய்க்குரு சொற்கட வாதே – நன்மை
மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே
பொய்க்கலை யால்நட வாதே – நல்ல
புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே. பாப

கூட வருவதொன் றில்லை – புழுக்
கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை – அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. பாப

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு – இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு – அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. பாப

உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னும் காட்டை – வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. பாப

காசிக்கோ டில்வினை போமோ – அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசமுன் கன்மங்கள் சாமோ – பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. பாப

பொய்யாகப் பாராட்டுங் கோலம் – எல்லாம்
போகவே வாய்த்திடும் யாவர்க்கும்போங் காலம்
மெய்யாக வேசுத்த சாலம் – பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம். பாப

சந்தேக மில்லாத தங்கம் – அதைச்
சார்ந்துகொண் டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தமில் லாதவோர் துங்கம் – எங்கும்
ஆனந்த மாக நிரம்பிய புங்கம் . பாப

பாரி லுயர்ந்தது பத்தி – அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. பாப

அன்பெனும் நன்மலர் தூவிப் – பர
மானந்தத் தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன்னுட லாவி – நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. பாப

ஆற்றறும் வீடேற்றங் கண்டு – அதற்
கான வழியை யறிந்து நீ கொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு – ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கொண்டு. பாப

ஆன்மாவா லாடிடு மாட்டந் – தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் – நாளும்
வையி லுனக்கு வருமே கொண் டாட்டம். பாப

எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. பாப

இந்த வுலகமு முள்ளுஞ் – சற்றும்
இச்சைவை யாமலே எந்நாளுந் தள்ளு
செந்தேன்வெள் ளமதை மொள்ளு – உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. பாப

பொய்வேதந் தன்னைப் பாராதே – அந்தப்
போதகர் சொற்புத்தி போதவோ ராதே
மைவிழி யாரைச்சா ராதே – துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. பாப

வைதோரைக் கூடவை யாதே – இந்த
வைய முழுதும் பொய்த் தாலும்பொய் யாதே
வெய்ய வினைகள்செய் யாதே – கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே. பாப

சிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத்தாண் டாதே – நல்ல
சன்மார்க்க மில்லாத நூலைவேண் டாதே. பாப

பாம்பினைப் பற்றியாட் டாதே – உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே – உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே. பாப

போற்றுஞ் சடங்கைநண் ணாதே – உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே – பிறர்
தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே. பாப

கஞ்சாப் புகைபிடி யாதே – வெறி
காட்டி மயங்கியே கட்குடி யாதே
அஞ்ச வுயிர்மடி யாதே – புத்தி
அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே. பாப

பத்தி யெனுமேனி நாட்டித் – தொந்த
பந்தமற் றவிடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி – நாளுந்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. பாப

செப்பரும் பலவித மோகம் – எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் – நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். பாப

எவ்வகை யாகநன் னீதி – அவை
எல்லா மறிந்தே யெடுத்துநீபோதி
ஒவ்வாவென்ற பல சாதி – யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. பாப

கள்ளவே டம்புனை யாதே – பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே
கொள்ளைகொள் ளநினை யாதே – நட்புக்
கொண்டு பிரிந்துநீ கோள்முனை யாதே. பாப

எங்குஞ் சயப்பிர காசன் – அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் – தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன். பாப