ஏகநாதர்

ஏகநாதர்

Posted on

ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர் பாடல்

காரண மான கணபதி
சற்குரு கர்த்தனுங் காப்பாமே
நாரணன் நான்முகன் நல்ல
குருமுனி நாதனுங் காப்பாமே. 1

முன்கலை யான முடிவான
சோதியின் முற்றிலும் தானறிந்தே
பின்கலை யான பிரமாண்ட
சோதியைப்பேணித் துதிப்பேனே. 2

புத்தியும் வித்தையுந் தந்தருள்
பாதனைப் போத மயமாக்கி
சித்தியும் பத்தியும் கண்டந்த
நாதனைத் தேகல யத்துள்வைத்து. 3

சித்தம் பலத்திலச் சிதம்பர
வித்தையைத் தேறித் தெளிந்தேதான்
சத்தம் பிறந்திட வாசி
அறிந்து தானும் நடந்தேனே. 4

நத்தும் உலகத்தோர் சித்தை
அறிந்திட நல்ல ததியெனவே
தத்துவ மான எழுத்தஞ்சு
னாலேதான்வரை கீறினனே. 5

அங்கி பொருந்தின வீட்டுக்கோர்
அஞ்சு அஞ்சுக்கும் அஞ்சாக
தங்கி இருந்திடு மந்திர
விஞ்சையைத் தான்கண்டு பேறும்பெற்றேன். 6

அங்கங்கே மாறினால் அட்டகர்

மத்தொழில் ஆடும் இதுதானும்

சங்கை யுடனே துகையைப்

பெருக்கித் தான்வரை கீறிடுவாய். 7

தானாயிருக்கும் பிரமத்தின்

தன்செயல் தன்னை அறிந்தாக்கால்

வானாகி நின்று மறைபொருள்

ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ? 8

அருவு முருவும் திருவும்

பலவுமாய் ஆதிசி தம்பரத்தைக்

கருவும் குருவும் கண்டறிந்

தோர்கள் கையா லெழுதுவரோ? 9

தானந்த மான தத்துவங்

கண்டோர்கள் தானேதா னெவ்வுயிர்க்கும்

ஆனந்த மாகி யறிவை

அறிந்தவர் அட்சரம் தானறிவார். 10

ஏக வெளியில் இருக்கின்ற

சக்கரம் ஏது மறியார்கள்

சாகாக்கால் என்றும் வேகாத்

தலையையென்றும் தானே அறிவாரோ. 11

வாதங்கள் செய்வது வேரொன்றும்

இல்லை வாசி அறிந்தோர்க்கு

நாதம் பிறந்திடக் கண்டறிந்

தோர்கள் நான் என்று சொல்லுவரோ? 12

யோகமும் ஞான முகந்து

அறிந்தோர்கள் உண்மை அறிவார்கள்

தாகமும் பசியும் கோபமும்

வந்தவர் தாமும் அறிவாரோ? 13

தானென்ற தத்துவ மாயை

அறுத்தவர் தன்னை அறிந்தோர்கள்

ஊனென்ற ஊமை எழுத்தை

அறிந்தவர் உற்பனந் தானறிவார். 14

சூட்சாதி சூட்சங்கள் என்று

மௌனத்தின் சொல்லும் பொருளறிந்தால்

பேச்சோடே பேச்சாகப் பேசி

இருப்பரைப் பெரியோர் தாமறிவார். 15

பேசாது இருந்த மௌனங்கள்

என்பது பேசத் தெரிந்தோர்கள்

ஆசான் உரைத்த உபதேசம்

என்று அறிவுள்ளோர் தானறிவார். 16

வாதமும் ஞானமும் ஒன்றென்று

சொல்வதும் வையகத் தோர்அறிய

சூதகங் கெந்தியும் தாளகம்

வங்கமும் சொல்லும்நா தங்களல்லோ? 17

ஆடுஞ் சரக்கு அறுபத்தி

னாலும் அவரவர் தாமறிவார்

காடு மலையுஞ் செடியுஞ்

சரக்கென்பர் காணாதார் காணுவரோ? 18

தானே அறிவது சித்தி

இதுவென தத்துவந் தானறிந்தோர்

வீணே அலைந்து திரிந்துநம்

வேதத்தை விரும்பித் தேடுவரோ? 19

தங்க ளிடத்தில் இருக்கும்

பொருள்தனைத் தாங்களே தானறிந்தால்

எங்கே இருக்கு தெனச்சொல்லித்

தேடி ஏங்கி அலைவாரோ. 20

பண்டு பழுத்த கனியைப்

பொசிக்கப் பறிக்கப் பொருள் அறிந்தால்

உண்டு சுகித்து உடம்பை

வளர்த்து உறங்கித் திறிவாரோ. 21

இத்தனை சித்தையும் கண்டு

தெளிந்தவர் ஏது மறியார்போல்

பித்தனைப் போலவே வத்துவைத்

தேடிப் பேசா திருப்பாரோ? 22

தாங்காமல் விட்ட குறையாளர்க்கு

எய்திடும் தத்துவத் தைநினைக்க

பாங்கான ஐவரும் கட்டின

வீட்டில் பரம சுகம்பெறுவார். 23

ஓங்காமல் ஓங்கும் பிரம

சொரூபத்தின் உண்மை தனையறிந்தால்

நீங்காத செல்வம் நிலைபெற்ற

மாதவம் நின்ற பொருளறிவார். 24

எங்கெங்கு பார்த்தாலும்

எங்குங்குருநாதன் இருப்பிடந்தானறிந்தோர்

பங்கமாய் உள்ள பரம

சுகத்தையே பார்த்துத் திரிவாரோ? 25

அற்பமாய் எண்ணியே கற்பங்கள்

தேடி அலைவர் வெகுகோடி

சொற்பங்க ளல்ல சுருதி

முடிவல்லோ சொன்னது கற்பங்கள்தான். 26

வாசம் பொருந்தும் சதுர

கிரியின் மகத்துவங் கண்டோர்கள்

தேசங்கள் தோறுங் கற்பங்கள்

தேடித் திரிவரோ தானறிந்தோர். 27

கண்டதை விண்டிலர் அண்டர்களானாலும்

கருத்தைச் சொல்லார்கள்

விண்டிலர் கண்டிலர் வேணது

சொல்லுவர் வேத முடிவறியார். 28

பாசம் பொருந்தும் கருநெல்லிவெண்சாரை

பார்த்தோர்க்கு தான்தெரியும்

பேசப் படாதென்று சித்தர்கள்

சொல்லுவர் பேசத் தெரியார்போல். 29

நீந்தின செந்தூரம் நேரான

பூரணம் நின்ற நிலையறிந்தால்

சாத்திரம் ஏதுக்குத் தானறி

யாருக்குச் சகலமும் வேணுமென்பார். 30

வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள்

பூட்டது வேணது உண்டுஇங்கே

பூட்டக்கமின்னதெனத்தெரிந்தோர் சாவி

போட்டுத் திறந்திடுவார். 31

கண்டபேர் கொண்டதை விண்டுதான்

பேசுவர் காரியா காரியமாய்

கண்டு மறிந்து மறியாதார்

போலவே காணாதார் போலிருப்பர். 32

நித்திய பூசையும் நேமாநுட்

டானமும் நேரான பூரணத்தைப்

புத்தியு டனறிந் தேயனு

போகமாய் பூசைகள் செய்திடலாம். 33

காலையு மாலையுங் கண்டது

கொண்டு கற்பூர தீபமுடன்

மாலை மனோன்மணி தாய்பதம்

போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம். 34

Advertisements