உலகநீதி

உலகநீதி

Posted on

உலகநீதி

இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதனை இயற்றியவர் ஒளவையார் என்று சிலர் எழுதியிருப்பது மாறுபாடாகும். ஒளவையார் இயற்றியது என்பதற்கு ஆன்றோர் வழக்கு முதலிய சான்று ஒன்றுமில்லை. இது பெரும்பாலும் பேச்சு வழக்கு நடையிலேயே அமைந்திருக்கிறது. இதிற் சொல்லப்பட்டனவெல்லாம் யாவரும் கைக்கொள்ள வேண்டிய சிறந்த நீதிகள் என்பதில் ஐயமில்லை. சிறுவர்களும் எளிதாகப் படித்துப்பாடம் பண்ணக்கூடியவாறு எளிய நடையில் ஓசை நலத்தோடு விளங்குவது இதற்குத் தனியாகவுள்ள சிறப்பியல்பு ஆகும். இதனை இயற்றியவர் முருகக் கடவுளிடத்திலும், வள்ளிநாய்ச்சியாரிடத்திலும் பக்தியுடையவரென்பது ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வள்ளிபங்கனாகிய முருகனை வாழ்த்துவாயாக என நெஞ்சை நோக்கிக் கூறுதலால் வெளியாகின்றது. இவர் இருந்த காலம் இடம் முதலியன தெரியவில்லை. ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியவற்றைப் போலவே இந்நூலும் தமிழ்நாட்டில் சிறுவர் சிறுமியர் அனைவரும் படித்துப் பயனெய்தற்குரியதாய் விளங்குகின்றது.

காப்பு

உலக நீதி புராணத்தை யுரைக்கவே
கலைக ளால்வருங் கரிமுகன் காப்பு.

உலக நீதி புராணத்தை – உலக நீதியாகிய பழைய முறைமைகளை, உரைக்க – யான் கூறுவதற்கு, கலைகள் ஆய்வு அரும் – வேதம்முதலிய நூல்களாலும் ஆராய்ந்து காண்பதற்கு அரிய, கரிமுகன் காப்பு – யாணை முகத்தையுடைய விநாயகக் கடவுள் காப்பாவார். என்றவாறு.

சூத்திரம்

ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

ஓதாமல் ஒருநாளும் – (நூல்களைப்) படிக்காமல் ஒருநாளாவது, இருக்கவேண்டாம் – (நீ) இருக்கக்கூடாது, ஒருவரையும் பொல்லாங்கு – எவரையும் தீய சொற்களால், சொல்லவேண்டாம் – நிந்திக்காதே, மாதாவை ஒரு நாளும் – தாயை ஒருபோழுதும், மறக்க வேண்டாம் – மறவாதே, வஞ்சனைகள் செய்வாரோடு – கபடச்செயல்களைச் செய்யுங் கீழ்மக்களுடன், இணங்க வேண்டாம் – சேராதே, போகாத இடந்தனிலே – தாகத இடத்திலே, போக வேண்டாம் – போகாதே, போகவிட்டுப் புறம் சொல்லி – (ஒருவர்) உன்னிடம் வந்து போன பின்னர் அவரைப்பற்றி இழிவாகக் கூறி, திரிய வேண்டாம் – அலையாதே, வாகு ஆரும் – தோள்வலி நிறைந்த, குறவருடை – குறவருடைய (மகளாகிய), வள்ளி பங்கன் – வள்ளிநாச்சிiயாரைப் பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே வாழ்த்தாய் – மனமே வாழ்த்துவாயாக.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

நெஞ்சு ஆர பொய் தன்னை – மனப்பூர்வமாகப் பொய்யை, சொல்லவேண்டாம் – சொல்லாதே, நிலை இல்லா காரியத்தை – உறுதியில்லாத காரியத்தை, நிறுத்தவேண்டாம் – தாபிக்க வேண்டாம், நஞ்சுடனே – விடத்தையுடைய பாம்பு போன்றவர்களுடனே, ஒரு நாளும் – ஒரு பொழுதும், பழக வேண்டாம் – சேர்ந்து பழகாதே, நல் இணக்கம் இல்லாரோடு – நல்லநடத்தை நட்பு இல்லாதவர்களுடன், இணங்க வேண்டாம் – நட்பு கொள்ளாதே, அஞ்சாமல் – பயமில்லாமல், தனி வழி போகவேண்டாம் – தனிமையாக வழிச் செல்லாதே, அடுத்தவரை ஒரு நாளும் – உன்னிடத்து வந்துசேர்ந்தவரை ஒருபொழுதும், கெடுக்க வேண்டாம் – கெடுக்காதே, மஞ்சு ஆரும் குறவருடை – வலிமை மிகுந்த குறவருடைய (மகளாகிய), வள்ளி பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே வாழ்த்தாய் . மனமே (நீ) வாழ்த்துவாயாக.

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினத்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
வனந்தேடுங் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

மனம் போன போக்கு எல்லாம் – உள்ளம் சென்றபடியெல்லாம், போக வேண்டாம் – செல்லாதே, மாற்றானை உறவு என்று – பகைவனை உறவினன் என்று, நம்ப வேண்டாம் – நம்பாதே, தனந்தேடி உண்ணாமல் – பொருளை (வருந்திச்) சம்பாதித்துச் செலவிடாமல், புதைக்கவேண்டாம் – மண்ணிற் புதைக்காதே, தருமத்தை ஒருநாளும் – அறஞ்செய்தலை ஒருபொழுதும், மறக்க வேண்டாம் – மறக்காதே, சினம் தேடி – கோபத்தை அடைந்து, அல்லலையும் – (அதனால்) விளையும் துன்பத்தினையும், தேட வேண்டாம் – தேடாதே, சினந்து இருந்தார் வாசல் வழி – கோபித்திருந்தாருடைய வாசல் வழியாகவும், சேர வேண்டாம் – செல்லாதே, வனம் தேடும் குறவருடை – காட்டின் கண் (விலங்கு முதலியன) தேடித்திரியம் குறவருடைய (மகளாகிய), வள்ளி பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே வாழ்த்தாய் . மனமே வாழ்த்துவாயாக.

குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம்
கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம்
மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

குற்றம் ஒன்றும் பாராட்டி – (ஒருவர் செய்த) தவறை மட்டும் எடுத்துச் சொல்லி, திரிய வேண்டாம் – அலையாதே, கொலைகளவு செய்வாரோடு – கொலையும் திருட்டும் செய்கின்ற தீயோருடன், இணங்க வேண்டாம் – சேராதே, கற்றவரை ஒருநாளும் – (கல்விப்) பண்டிதர்களை ஒரு பொழுதும், பழிக்கவேண்டாம் – பழிக்காதே, கற்பு உடைய மங்கையரை – கற்புடைய பெண்களை, கருத வேண்டாம் – இச்சிக்க வேண்டாம், கொற்றவனோடு – அரசனோடு, எதிர் – எதிரே நின்று, மாறு பேசவேண்டாம் – எதிர்பான சொற்களைப் பேசாதே, கோயில் இல்லா ஊரில் – கோயில் இல்லாத ஊரில், குடி இருக்க வேண்டாம் – குடியிருக்காதே, மற்று நிகர் இல்லாத – பிறர் எவரும் ஒப்பாகாத, வள்ளி பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே வாழ்த்தாய் – மனமே வாழ்த்துவாயாக.

வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

பெண்ணை வைத்து – மனையாளை (வீட்டில் துன்புற) வைத்து, வாழாமல் – (அவளோடு கூடி) வாழாமல், திரியவேண்டாம் – அலையாதே, மனையாளைக் குற்றம் ஒன்றும் – மனைவியின் மேல் குற்றமான சொல் யாதொன்னும், சொல்ல வேண்டாம் – சொல்லாதே, வீழாத படுகுழியில் – (மறுபடியும்) எழுந்திருக்க முடியாத (துன்பப்) படுகுழியில், வீழ வேண்டாம் – வீழ்ந்துவிடாதே, வெஞ்சமரில் புறங் கொடுத்து – கொடிய போரில் எதிர் நின்று சண்டை செய்யாமல் முதுகுகாட்டி, மீளவேண்டாம் – திரும்பிவாராதே, தாழ்வான குலத்துடன் – தாழ்ந்த இழிவான செயல்கள் புரிவாரோடு, சேர வேண்டாம் – கூடாதே, தாழ்ந்தவரை – ஏழைகள் மீது, பொல்லாங்கு – தீங்கு, சொல்லவேண்டாம் – சொல்லாதே, வாழ்வு ஆரும் குறவருடை – செல்வம் நிறைந்த குறவருடைய (மகளாகிய), வள்ளி பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே வாழ்த்ததாய் – மனமே வாழ்த்துவாயாக.

வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வாhத்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோ டிணங்க வேண்டாம்
சேர்த்தபுக ழாளனொரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே.

வார்த்தை சொல்வார் வாய்பார்த்து – வாயாடிகளின் வாயைப் பார்த்துக் கொண்டு, திரிய வேண்டாம் – அவரோடுகூட அலையாதே, மதியாதார் தலைவாசல் – உன்னை மதிக்காதவருடைய கடைவாயிலில், மிதிக்க வேண்டாம் – அடியெடுத்து வைக்காதே, மூத்தோர் சொல் – பெரியோர் கூறுகின்ற, வார்த்தைதனை – சொற்களை, மறக்கவேண்டாம் – மறவாதே, முன்கோபக்காரரோடு – முன்கோப முடையாருடனே, இணங்க வேண்டாம் – சேராதே, வாத்தியார் கூலியை – உபாத்தியாயரின் சம்பளத்தை, வைத் திருக்க வேண்டாம் – (கொடுக்காமல்) வைத்துக்கொள்ளாதே, வழிபறித்துத் திரிவாரோடு – வழி மடக்கித் திரிந்து பொருள் தேடுவாரோடு, இணங்க வேண்டாம் – சேராதே, சேர்ந்த புகழாளன் – ஷட்டிய புகழுடையவனாகிய, ஒரு – ஒப்பற்ற, வள்ளி பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, திரு கை வேலாயுதனை – அழகிய கையின்கண் வேற்படையையுடைய முருகக்கடவுளை, நெஞ்சே செப்பாய் . மனமே புகழ்வாயக.

கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை யொருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்
பொதுநிலத்தி லொருநாளும் இருக்க வேண்டாம்
இருதார மொருநாளுந் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.

கருமங்கள் கருதாமல் – (செய்யத்தக்க) காரியங்கள் (செய்யும் உபாயத்தை) யோசியாமல், முடிக்க வேண்டாம் – முடிக்க முயலாதே, அழிவு கணக்கை ஒருநாளும் – பொய்க் கணக்கை ஒருபொழுதும், பேசவேண்டாம் – பேசாதே, பொருவார் – போர்செய்வாருடைய, போர்க்களத்தில் – போர் (நடக்கும்) இடத்தின்கண், போக வேண்டாம் – போகாதே, பொது நிலத்தில் ஒருநாளும் – பொதுவாகிய இடத்தில் ஒருபொழுதும், இருக்க வேண்டாம் – (குடி) இராதே, இருதாரம் ஒருநாளும் – இரு மனைவியரை ஒரு பொழுதும், தேட வேண்டாம் – தேடிக்கொள்ளாதே, எளியாரை – ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் – பகைத்துக் கொள்ளாதே, குருகு ஆரும் – பறைவைகள் நிறைந்த, புனங்காக்கும் – தினைப்புனத்தைக் காத்த, ஏழை பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் பாதத்தை – குமரவேளின் திருவடியை, நெஞ்சே கூறாய் . மனமே புகழ்வாய்.

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

சேராத இடந்தனிலே – சேரக்கூடாத இடங்களில், சேர வேண்டாம் – போக வேண்டாம், செய்த நன்றி – ஒருவர் செய்த உதவியை, ஒருநாளும் – ஒருபொழுதும், மறக்க வேண்டாம் – மறக்காதே, ஊரோடும் குண்டுணியாய் – ஊர்முழுவதும் கோள் சொல்பவனாக, திரிய வேண்டாம் – அலையாதே, உற்றாரை – உறவினரை, உதாசினங்கள் சொல்ல வேண்டாம் – இகழ்ச்சியாகக் கூறவேண்டாம், பேர் ஆன – புகழ் அடைதற்குரிய காரணமாகிய, காரியத்தை – காரியத்தை, தவிர்க்க வேண்டாம் – (செய்யாது) விட வேண்டாம், பிணைபட்டுத் துணைபோகி – (ஒருவனுக்கு) உடன்பட்டுத் துணையாகச் சென்று, திரிய வேண்டாம் – அவன் செல்லும் கெட்ட வழிக்கெல்லாம் போய் அலையாதே, வார் ஆரும் குறவர் உடை – பெருமை நிறைந்த குறவருடைய (மகளாகிய), வள்ளி பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே வாழ்த்தாய் – மனமே வாழ்த்துவாயாக.

மண்ணினின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்
மனஞ்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

மண்ணில் நின்று – நிலத்தில் நின்று, மண் ஓரம் – மண்ணைப்பற்றி ஒருதலைச் சார்பாக, சொல்ல வேண்டாம் – பேசாதே, மனம் சலித்து – உள்ளச்சலிப்பினால், சிலுகிட்டு – (யார்மாட்டும்) சண்டையிட்டு, திரிய வேண்டாம் – அலையாதே, கண் அழிவு செய்து – அருளை அழித்து, துயர் காட்ட வேண்டாம் – பிற (உயிர்களுக்குத்) துன்பஞ் செய்யாதே, காணாத கட்டுவார்த்தையை – காணாதவற்றைப்பற்றிய கட்டுவார்த்தைகளை, உரைக்க வேண்டாம் – சொல்லாதே, புண்பட வார்த்தைதனை – (கேட்போர் மனம்) புண்படுமாறு சொற்களை, சொல்ல வேண்டாம் – சொல்லாதே, புறம் சொல்லித் திரிவாரோடு – புறங்கூறி அலைபவருடன், இணங்க வேண்டாம் – சேராதே, மண் அளந்தான் – நிலத்தை (மூவடியால்) அளந்த திருமாலுக்கு, தங்கை உமை – தங்கையாகிய ஊமாதேவிக்கு, மைந்தன் எம்கோன் -மகனுக்குத் தலைவனும் ஆகிய, மயிலேறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே வாழ்த்ததாய் – மனமே வாழ்த்துவாயாக.

மறம்பேசித் திரிவாரோடு டிணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே.

மறம்பேசித் திரிவாரோடு – வீரமொழி கூறி (போருக்கு) அலைபவனுடன், இணங்க வேண்டாம் – சேராதே, வாதாடி அழிவு வழக்கு – வாது கூறிக் கெடு வழக்கு, சொல்ல வேண்டாம் – கூறாதே, திறம் பேசிக் கலகம் இட்டு – வலிமை கூறிக் கலகம் செய்து, திரிய வேண்டாம் – அலையாதே, தெய்வத்தை ஒருநாளும் – இறைவனை ஒருபொழுதும், மறக்க வேண்டாம் – மறக்காதே, இறந்தாலும் பொய்தன்னை – (கூறாதிருப்பின்) இறக்க நேரிட்டாலும் பொய்யை, சொல்ல வேண்டாம் – சொல்லாதே, ஏசல் இட்ட உற்றாரை – இகழ்ச்சி செய்த உறவினரை, நத்த வேண்டாம் – விரும்பாதே, குறம்பேசி வாழ்கின்ற – குறிசொல்லி வாழும் (குடியிற் பிறந்த), வள்ளி பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் நாமத்தை – முருகவேளின் பெயர்களை, நெஞ்சே கூறாய் . மனமே சொல்லித் துதிப்பாயாக.

அஞ்சுபேர் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்
அதுவேதிங் கென்னின்நீ சொல்லிக் கேளாய்
தங்சமுடன் வண்ணான்நா விதன்றன் கூலி
சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.

அஞ்சுபேர் கூலியை – ஜவருடைய கூலியை, கைக்கொள்ளவேண்டாம் – கைப்பற்ற வேண்டாம் (கொடுத்துவிட வேண்டாம்), அது ஏது என்னின் – அக் கூலி யாது என்று கேட்பின், சொல்ல நீ கேளாய் – நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக, வண்ணான் கூலி – வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி – அம்பட்டன் கூலியும், சகல கலை ஓதுவித்த – பல கலைகளையும் படிப்பித்த, வாத்தியார் கூலி – ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற நஞ்சு அறுத்த – வஞ்ச மனப்பான்மை சிறிதும் இல்லையாக நஞ்சுக்கொடி அறுத்த, மருத்துவிச்சி கூலி – மருத்துவிச்சியின் கூலியும், மகா நோயைத் தீர்த்த – நீக்குதற்கு அரிய கொடிய நோயினை நீக்கிய, மருத்துவன் கூலி – வைத்தியன் கூலியுமாகிய, இவர் கூலி – இவர்கட்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன் இன்சொல்லுடன் – அன்புடனும் இன்சொல்லோடும், கொடாதபேரை – கொடுக்காதவர்களை, ஏமன் – இயமன், ஏதுஏது – என்ன என்ன துன்பம், செய்வானோ – செய்வானோ, (நான் அறியேன்).

கூறாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

ஒரு குடியை கூறு ஆக்கி – ஒரு குடும்பத்தைப் பிரித்து, கெடுக்க வேண்டாம் – கெடுக்காதே, பூத்தேடி – (கடவுளுக்குரியதான) பூவை (வலிந்து) தேடி, கொண்டைமேல் – தலைமயிரில், முடிக்க வேண்டாம் – முடித்துக் கொள்ளாதே, தூறு ஆக்கித் தலையிட்டு – அவதூறு பேசி அதே வேலையாக இருந்து, திரிய வேண்டாம் – திரியாதே, துர்ச்சனராய்த் திரிவாரோடு – தீயவர்களாகி (ஊர்தோறும்) அலைபவருடன், இணங்க வேண்டாம் – சேராதே, வீறு ஆன தெய்வத்தை – பெருமையுடையனவாகிய தெய்வங்களை, இகழ வேண்டாம் – இகழாதே, வெற்றி உள்ள பெரியோரை – மேன்மையுடைய பெரியோர்களை, வெறுக்க வேண்டாம் – வெறுக்காதே, மாறு ஆன குறவர் உடை – போரை விரும்பும் இயல்புடைய குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி பங்கன் – வள்ளிநாச்சியாரைப் பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை – மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே வாழ்த்ததாய் – மனமே வாழ்த்துவாயாக.

ஆதரித்துப் பலவகையாற் பொருளுந் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோருங் கேட்ட பேருங்
கருத்துடனே நாடோறுங் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுங் தேடிப்
பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே

உலகநாதன் என்னும் புலவன் பல நல் வழியாற் பொருள் சேர்த்து, பின்பு, தமிழ் மொழியால் முருகக் கடவுளைப் பாட விரும்பி, அப்பெருமான் உணர்த்திய வாசகங்களாற் பாடி வைத்த ‘உலகநீதி’ என்னும் இந் நூலை விரும்புடன் கற்றவரும் கேட்டவரும் நல்லெண்ணமும், மனமகிழ்ச்சியும், ஞானமும், வாழ்வும், புகழும் உடையவர்களாய் உலக முள்ளவரையும் வாழ்வார்கள்.

முற்றும்

Advertisements