இராமலிங்க சுவாமிகள்

இராமலிங்க சுவாமிகள் திருவருட்பாத் திரட்டு

Posted on

(சிவநாமாவளித் திரட்டு)

1.சிவநாமாவளி

திருச்சிற்றம்பலம்

இந்துஸ்தான் பியாக்)        (ஆதி தாளம்)

சிவசிவ கஜமுக கணநாதா! சிவகுண வந்தித குணநீதா!
சிவசிவ சிவசிவ தத்துவ போதா!
சிவகுரு பரசிவ சண்முக நாதா!
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா! சிவசுந் தரகுஞ் சித நடராஜா!

அம்பலத் தரசே அருமருந்தே!- ஆனந்தத் தேனே அருள் விருந்தே!
பொதுநடத் தரசே! புண்ணியனே புலவரெ லாம்புகழ் கண்ணியனே!

மலைதரு மகளே! மடமயிலே! மதிமுக அமுதே! இளங்குயிலே!
ஆனந்தக் கொடியே! இளம்பிடியே! அற்புதத் தேனே! மலைமானே!

சிவசிவ சிவசிவ சின்மய தேஜா!-சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா!
படன விவேக பரம்பர வேதா! நடன சபேச சிதம்பர நாதா!

அரிபிர மாதியர் தேடிய நாதா! அரகர சிவசிவ ஆடிய பாதா!
அந்தண அங்கண அம்பர போகா! அம்பல நம்பர அம்பிகை பாகா!

அம்பர விம்ப சிதம்பர நாதா! அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா!
தர்திர மந்திர யந்திர பாதா! சங்கர சங்கர சங்கர நாதா!
கனக சிதம்பர சங்கர புரஹர! அனக பரம்பர சங்கர ஹரஹர!
சகல கலாண்ட சராசர காரண! சகுண சிவாண்ட பராபர பூரண!

இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரையே
என்னுயி ருடம்பொடு சித்தமதே இனிப்பது நடராஜ புத்தமுதே
ஐயா திருச்சபை ஆடகமே ஆடுதலானந்த நாடகமே.
உத்தர ஞான சிதம்பரமே சித்தியெல்லாந்தரு பம்பரமே.

அம்பல வாசிவ மாதேவா! வம்பல வாவிங்கு வாவாவா!
நடராச னெல்லார்க்கும் நல்லவனே நல்லவெ லாஞ்செய வல்லவனே
ஆனந்த நாடகங் கண்டோமே பர மானந்த மோனகங் கொண்டோமே.
சகள வுபகள நிட்கள் நாதா! உகள சததள மங்கள பாதா!

சந்தத முஞ்சிவ சங்கர பசனம் சங்கீதமென்பது சற்சன வசனம்
சங்கர சிவசிவ மாதேவா! எங்களை யாட்கொள் வாவாவா!
அரகர சிவசிவ மாதேவா! அருளமு தந்தர வாவா!
நடன சிகாமணி நவமணியே திடன் கமாமணி சிவமணியே.

நடமிடு மம்பல நன்மணியே புடமிடு செம்பல பொன்மணியே.
உவட்டாது தித்திக்கும் உள்ளமுதே தெவிட்டாது தித்திக்குந் தெள்ளமுதே
நடராச வள்ளலை நாடுதலே நந்தொழி லாம்விளை யாடுதலே
அருட்பொது நடமிடு தாண்டவனே! அருட்பெருஞ் சோதியென் ஆண்டவனே!

நடராச மாணிக்க மொன்றதுவே நண்ணுத லாணிப்பொன் மன்றதுவே
நடராச பலமது நம்பலமே நடமாடு வதுந்திரு வம்பலமே
நடராசப் பாட்டே நறும்பாட்டு ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு சீவர்கள் பாட்டெல்லாந் தெருப்பாட்டு

அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லா மருட்பாட்டு
அம்பல வாணனை நாடினனே: அவனடி யாரொடுங் கூடினனே.
தம்பத மாம்புகழ் பாடினனே தந்தன வென்றுகூத் தாடினனே
நான் சொன்ன பாடலுங் கேட்டாரே ஞான சிதம்பர நாட்டாரே.

இனித்துயர் படமாட்டேன் விட்டேனே: என் குரு மேலாணை யிட்டேனே.
இனிப்பாடு படமாட்டேன் விட்டேனே: என்னப்பன் மேலாணை யிட்டேன
சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்: சகமார்க்கந் துன்மார்க்கந் துன்மார்க்கம்
நாதாந்த நாட்டுக்கு நாயகரே-நடராசரே சபா நாயகரே.

நான் சொல்லு மிதுகேளீர் சத்தியமே-நடராச ரெனில்வரும் நித்தியமே
நல்லோரெல் லார்க்குஞ்ச பாபதியே நல்வர மீயுந் தயாநிதியே.
நடராசர் தந்நடம் நன்னடமே நடம்புரி கின்றது மென்னிடமே.
சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளையே திருவாள னானவன் சீர்ப்பிளையே

சிவகாம வல்லியைச் சேர்ந்தவனே சித்தெல்லாஞ் செய்திடத் தேர்ந்தவனே
இறவா வரந்தரும் நற்சபையே எனமறை புகழ்வது சிற்சபையே
என்னிரு கண்ணு ளிருந்தவனே இறவா தருளு மருந்தவனே.
கிற்சபை யப்பனை யுற்றேனே சித்தியெ லாஞ்செயப் பெற்றேனே.

அம்பல மாணர்தம் அடியவரே அருளர சான்மணி முடியவரே
அருட்பெருஞ் சோதியைக் கண்டேனே ஆனந்தத் தெள்ளமு துண்டேனே
இருட்பெரு மாயையை விண்டேனே எல்லாஞ்செய் சித்தியைக் கொண்டேனே
கருணா நிதியே குணநிதியே கதிமா நிதியே கலாநிதியே
தருணா பதியே சிவபதியே தனிமா பதியே சபாபதியே.
கருணா நிதியே சபாபதியே கதிமா நிதியே பசுபதியே

சபாபதி பாதம் தபோபிர சாதம் தயாநிதி போதம் சுகோதய வேதம்
கருணாம் பரவா நரசிர பலபவ அருணாம் பரதர ஹரஹர சிவசிவ!
கனகா கரபுர ஹரசிர கரதர! கருணா கரபர கரவர ஹரஹர.
கனக சபாபதி பசுபதி நவபதி-அனக வுமாபதி அதிபதி சிவபதி
வேதாந் தபராம் பரசய சயசய!-நாதாந் தடநாம் பரசய சயசய!
ஏகாந்த சர்வேச சமோதம! யோகாந்த நடேச நமோநம

ஆதாம் பரவா டகவதி சயசய! பாதாம் புசநா டகசய சயசய!
போதாந்த புரசே சிவாகம!-நாதாந்த நடசே நமோநம!
ஜால கோலகன காம்பர சாயக!-கால காலவன காம்பர நாயக!
உபல சிரதல சுபகண வங்கண!-சுபல சுரதல கண்பண கங்கண!

அபய வரதகர தலபுரி காரண! உபய பரதபத பரபரி பூரண!
அகர வுகரசுப கரவர சினகர!-தகர வகரநவ புரசிர தினகர!
வகர சிகரதின கரசசி கரபுர!-மகர வகரவர புரஹர ஹரஹர!
பரமமந் திரிசக ளாகள கரணா!-படனதந் திரநிக மாகம சரணா!

அனந்த கோடிகுண கரகர சொலிதா!-அகண்ட வேதசிரகரதர பலிதா
பரிபூரண ஞான சிதம்பர!-பதிகாரண நாத பரம்பர!
சிவஞானப தாடக நாடக!-சிவபோதப ரோகள கூடக!
சகல லோகபர காரக வாரக!-சபள யோகசர பூரக தாரக!

சத்வ போதக தாரண தன்மய!-சத்ய வேத பூரண சின்மய
வரகே சாந்த மகோதய காரிய பரபர சாந்த சகோதய சூரிய
பளித தீபக சோபித பாதா!-லளித ரூப ஸ்தாபித நாதா!
அனுர்த போபகரு ணாம்பக நாதா! அமிர்த ரூபதரு ணாம்புச பாதா!
அம்போ ருகபத அரஹர சங்கர!-சம்போ சிவசிவ சிவசிவ சங்கர!
சிதம்பர காசா பரம்பிர காசா!-சிதம்பர ரேசா சுயம்பிர காசா!

அருட்பிர காசம் பரப்பிர காசம்! அகப்பிர காசம் சிவப்பிர காசம்
நடப்பிர காசம் தவப்பிர காசம் நவப்பிர காசம் சிவப்பிர காசம்
நாத பரம்பரனே! பர நாத சிதம்பரனே! நாத சிதம்பரனே! தச நாத சுதந்தரனே!

ஞான நடத்தவனே! பர ஞானி யிடத்தவனே!
ஞான வரத்தவனே! சிவ ஞான புரத்தவனே!
ஞான சபாபதியே! மறை நாடு சாதகதியே!
தீன தயாநிதியே! பர தேவியு மாபதியே!
புத்தந் தரும்போதா! வித்தந் தருந்தாதா!
நித்தி தரும்பாதா! சித்தற் திரும்பாதா!

திருச்சிற்றம்பலம்

2. அருள் விளக்க மாலை

எண்சீர் விருத்தம்

1. கல்லார்க்குங் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பே!
காணார்க்குங் கண்டவர்க்குங் கண்ணளிக்கும் கண்ணே!
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே!
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே!
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே!
எல்லார்க்கும் பொதுவில்நட மிடுகின்ற சிவமே!
என்னரசே! யான்புகலு மிசையுமணிந் தருளே!

2. தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
தன்வருத்த மெனக்கொண்டு தரியாதக் கணத்தே
பனிப்புறுமவ் வருத்தமெல்லாந் தவிர்த்தருளி மகனே!
பயமுனக்கேன்? என்றென்னைப் பரிந்தனைத்த குருவே!
இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசைநின் மலர்த்தாள்
இணையமர்த்தி யெனையாண்ட வென்னுயிர்நற் றுணையே!
கனித்தநறுங் கனியேயென் கண்ணேசிற் சபையில்
கலந்தநடத் தரசேயென் கருத்து மணிந் தருளே!

3. இருளிரவி லொருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க வெனைத்தேடி வந்தே
பொருளுணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கியருள் புரிந்தவென்றன் புண்ணியநற் றுணையே!
மருளிரவு நீக்கியல்லா வாழ்வுமெனக் கருளி
மணிமேடை நடுவிருக்க வைத்தவொரு மணியே!
அருளுணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே!
அம்பலத்தென் னரசேயென் அலங்கலணிந் தருளே!

4. நான் பசித்த போதெல்லாம் தான் பசித்த தாகி
நல்லுணவு கொடுத்தென்னைச் செல்வமுற வளர்த்தே
ஊன்பசித்த இளைப்பொன்றுந் தோற்றாத வகையே
ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே!
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கு மரிதாம்
வாழ்வெனக்கே யாகியுற வரமளித்த பதியே!
தேன் பரித்த மலர் மணமே! திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ்செய் யரசேயென் சிறுமொழியேற் றருளே!

5. திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
தெளிவித்து மணிமாடத் திருத்தவிசி லேற்றி
நசையறியா நற்றவரு மற்றவருஞ் சூழ்ந்து
நயப்பவருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே!
வசையறியாப் பெருவாழ்வே! மயலறியா அறிவே!
வானடுவே யின்பவடி வாயிருந்த பொருளே!
பசையறியா மனத்தவர்க்கும் பசையறிவித் தருளப்
பரிந்தநடத் தரசேயென் பாட்டுமணிந் தருளே!

6. நன்மையெலாந் தீமையெனக் குரைத்தோடித் திரியும்
நாய்க்குலத்திற் கடையான் நாயடியே னியற்றும்
புன்மையெலாம் பெருமையெனப் பொறுத்தருளிப் புலையேன்
பொய்யுரைமெய் யுரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
தன்மையெலா முடையபெருந் தவிசேற்றி முடியுந்
தரித்தருளி ஐந்தொழில்செய் சதுரளித்த பதியே!
இன்மையெல்லாந் தவிர்ந்தடியா ரின்பமுறப் பொதுவில்
இலங்குநடத் தரசேயென இசையுமணிந் தருளே!

7. மதமென்றுஞ் சமயமென்றுஞ் சாத்திரங்க ளென்றும்
மன்னுகின்ற தேவரென்றும் மற்றவர்கள் வாழும்
பதமென்றும் பதமடைந்த பத்தரனு பவிக்கப்
பட்டவனு பவங்களென்றும் பற்பலவா விரிந்த
விதமொன்றுந் தெரியாதே மயங்கியவென் றனக்கே
வெட்டவெளி யாயயறிவித் திட்டவரு ளிறையே!
சதமொன்றுஞ் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
தனிநடஞ்செய் யரசேயென் சாற்றுமணிந் தருளே.

8. அருளுடையா ரெல்லாருஞ் சமரசசன் மார்க்கம்
அடைந்தவரே யாதலினா லவருடனே கூடித்
தெருளுடைய அருள்நெறியிற் களித்துவிளை யாடிச்
செழித்திடுக வாழ்கவெனச் செப்பியசற் குருவே!
பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே!
போதாந்த முதலாறும் நிறைந்தொளிரு மொளியே!
மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
வயங்குநடத் தரசேயென் மாலையுமேற் றருளே

9. காலையிலே யென்றனக்கே கிடைத்தபெரும் பொருளே!
களிப்பேயென் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே!
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவையெல்லாந் தருமச்
சாலையிலே யொருபகலிற் றந்ததனிப் பதியே!
சமரசசன் மார்க்கசங்கத் தலையமர்ந்த நிதியே!
மாலையிலே சிறந்தமொழி மாலையணிந் தாடும்
மாநடத்தென் ரைசேயென் மாலையணிந் தருளே!

10. தலைகாலிங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
தான்வலித்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
மலைவறுமெய் யறிவளித்தே அருளமுதம் அருத்தி
வல்லபசத் திகளெல்லா மருவியிடப் புரிந்து
நிலையுறவே தானுமடி யேனுமொரு வடிவாய்
நிறையநிறை வித்துயர்ந்த நிலையதனமே லமர்த்தி
அவா தலைப்பே ரருட்சோதி அரசுகொடுத் தருளி
ஆடுகின்ற அரசேயென அலங்கலணிந் தருளே!

3. முறையீடு

1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ?
இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே!

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன்
நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன்
நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன்;
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ?
இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே!

3. கற்குமுறை கற்றறியேன்: கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்:
நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன்:
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்:
சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந்
திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ?
இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன்
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே!

4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன்
சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன்:
யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன்:
ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே
அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ?
ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன்!

5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்:
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே
தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன்:
உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ?
இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே;

4. ஆனந்த மேலீடு

திருச்சிற்றம்பலம்

இராகம் சஹானா) குறள் வெண் செந்துறை ஆதி தாளம்)

1. கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு:
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு:
ஐவர்மிக வுய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

2. சிற்சபையும் பொற்சபையுஞ் சொந்தமென தாச்சு:
தேவர்களு மூவர்களும் பேசுவதென் பேச்சு:
இச்சமய வாழ்விலெனக் கென்னையினி ஏச்சு?
என்பிறவித் துன்பமெலா மின்றோடே போச்சு!

3. ஐயரருட் சோதியா சாட்சியென தாச்சு:
ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு:
இவ்வுலக வாழ்விலெனக் கென்னையினி ஏச்சு?
என்பிறவித் துன்பமெலா மின்றோடே போச்சு!

4. ஈசனரு ளாற்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை யேறினைங் கிருந்ததொரு மாடம்:
தேசுறுமம் மாடநடுத் தெய்வமணிப் பீடம்:
தீபவொளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்!

5. மேருமலை உச்சியினில் விளங்குகம்ப நீட்சி
மேவுமதன் மேலுலகில் வீறுமர சாட்சி:
சேருமதிற் கண்டபல காட்சிகள்கண் காட்சி
செப்பலரி தாமிதற்கென் அப்பனருள் சாட்சி

6. துரியமலை மேலுளதோர் சோதிவள நாடு:
தோன்றுமதி லையர்நடஞ் செய்யுமணி வீடு:
தெரியுமது கண்டவர்கள் காணிலுயி ரோடு
செத்தவரெ ழுவரென்று கைத்தாளம் போடு.

7. சொல்லால ளப்பரிய சோதிவரை மீது
தூயதரி யப்பதியில் நேயமறை யோது:
எல்லாஞ்செய்  வல்லசித்தர் தம்மையுறும் போது
இறந்தா ரெழுவரென்று புறந்தாரை யூது.

8. சிற்பொதுவும் பொற்பொதுவும் நானறிய லாச்சு:
சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு:
இப்பெரிய அவ்வுலகி லென்னையினி ஏச்சு?
என்பிறவித் துன்பமெலா மின்றோடே போச்சு!

9. வலது சொன்னபேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு:
மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு:
வலதுபுச மாடநம்மால் வந்தருள் வாழ்வு:
மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு;

10. அம்பலத்தி லெங்களையர் ஆடியநல் லாட்டம்
அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்:
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்:
வந்ததலை யாட்டமன்றி வந்ததுபல் லாட்டம்.

11. நாத்திகஞ்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு:
நாக்குருசி கொள்ளுவது நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்குத் தேவர்திரு வாக்கு.

5. வேட்கைக் கொத்து

தலைமகள் பாங்கியொடு கூறல்:

1. வீண்படைத்த புகழ்த்தில்லை அம்பலத்தா னெவர்க்கும்
மேலான அன்பருளம் மேவுநட ராசன்
பண்படைத்த எனையறியா இளம்பருவந் தனிலே
பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்:
பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சியென் லானேன்:
கண்படைத்துங் குழியில்விழக் கணக்குமுண்டோ? அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாயென் தோழி!

2. சீய்த்தமணி யம்பலத்தான் என்பிராண நாதன்
சிவபெருமா னெம்பெருமான் செல்வநட ராசன்
வாய்த்தவென்னை யறியாத இளம்பருவந் தனிலே
மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்துமுகம் பாரான்:
ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
ஆர்செய்த போதனையோ! ஆனாலு மிதுகேள்:
காய்த்தமரம் வளையாத கணக்குமுண்டோ? அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாயென் தோழி!

3. என்னுயிரிற் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
என்னிறைவன் பொதுவில்நடம் இயற்றுநட ராசன்
தன்னையறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
தன்னையறிந்த பருவத்தே எனையறிய விரும்பான்:
பின்னையன்றி முன்னுமொரு பிழைபுரிந்தே னில்லை:
பெண் பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ?
கன்னலென்றால் கைக்கின்ற கணக்குமுண்டோ அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாயென் தோழி!

4. தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
செல்வரறி விடத்தும்நடஞ் செய்யுநட ராசன்
அருளமுதம் அளிப்பேனென்றே அன்றுமணம் புணர்ந்தான்
அளித்தறியான் அணுத்துணையு மனுபவித்து மறியேன்
மருளுடையான் அல்லனொரு வஞ்சகனும் அல்லன்:
மனவிரக்க மிகவுடையான் வல்வினையேன் அடவில்
இருடையார் போலிருக்கும் இயல்பென்னை? அவன்றன்
இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தானென் தோழி!

5. சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
திருநடஞ்செய் பெருங்கருணைச் செல்வநட ராசன்
என்மயநான் அறியாத இளம்பருவந் தனிலே
என்னை மணம் புரிந்தன்னீ தெல்லாரும் அறிவர்:
இன்மயமில் லாதவர்போ லின்றுமணந் தருளான்
இறையளவும் பிழைபுரிந்தேன் இல்லையவன் இதயம்
கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே யென்னுங்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாயென் தோழி!

6. என்குணத்தான் எல்லார்க்கும் இறைவனனெல்லாம் வல்லான்
என்னகத்தும் புறத்துமுளான் இன்பநட ராசன்
பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
பிச்சேற்றி மணம்புரிதான் பெரிதுகளித் திருந்தேன்:
வண்குணத்தால் அனுபவ நானறிய நின்ற பொழுதில்
வந்தறியான் இன்பமொன்றுந் தந்தறியான் அவனும்:
வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லனெனப் பலகால்
விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாயென் தோழி!

7. பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
புண்ணியர்பால் நுண்ணியநற் புனிதநட ராசன்
கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
குறித்துமணம் புரிந்தனனான் மறித்துவரக் காணேன்:
செய்யாத செய்கையொன்றுஞ் செய்தறியேன் சிறிதும்
திருவுளமே அறியமற்றென் ஒருவுளத்தின் செயல்கள்:
நையாத வென்றனுயிர் நாதனருட் பெருமை
நானறிந்தும் விடுவேனோ நவிலாயென் தோழி!

8. கண்ணனையான் என்னுயிரிற் கலந்து நின்ற கணவன்
கணக்கறியான் பிணக்கறியான் கருணைநட ராசன்
தண்ணனையாம் இளம்பருவத் தன்னிலெனைத் தனித்துத்
தானேவந் தருள் புரிந்து தனிமாலை புனைந்தான்:
பெண்ணனையார் கண்டபடி பேசவும் நான் கூசாப்
பெருமையோடும் இருந்தேனென் அருமையெலாம் அறிந்தான்
உண்ணனையா வகைவரவு தாழ்த்தனனின் றவன்றன்
உளமறிந்தும் விடுவேனோ உரையாயென் தோழி!

9. ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
உலகமெலா முடையவனென் னுடையநட ராசன்
பான்மறந்த சிறியவிளம் பருவமதில் மாலை
பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்:
தான்மறந்தா னெனினுமிங்கு நான் மறக்க மாட்டேன்:
தவத்தேறி அவத்தழியச் சம்மதமும் வருமோ?
கோன்மறந்த குடியேபோல் மிடியேனான் அவன்றன்
குணமறிந்தும் விடுவேனோ கூறாயென் தோழி!

10. தனித்தபர நாதமுடித் தலத்தினமிசைத் தலத்தே
தலைவரெலாம் வணங்கிநின்ற தலைவனட ராசன்
இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
என்புருவ நடுவிருந்தான் பின்புகண்டே னில்லை:
அனித்தமிலா இச்சரிதம் யார்க்குரைப்பே னந்தோ!
அவனறிவான் நானறிவேன் அயலறிவா ருளரோ?
துனித்தநிலை விடுத்தொருகாற் சுத்தநிலை யதனிற்
சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாயென் தோழி!

திருச்சிற்றம்பலம்

6. சிவதரிசனம்

1. பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே!
பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்த்தேன்:
ஆவியுடல் பொருளையன்பாற் கொடுத்தேனுன் னருட்பே
ராசைமய மாகியுனை அடுத்துமுயல் கின்றேன்:
கூலியெனை ஆட்கொள்ள நினையாயோ? நினது
குறிப்பறியேன் பற்பலகால் கூவியளைக்கின்றேன்:
தேவிசிவ காமவல்லி மகிழுமண வாளா!
தெருணிறைவா னமுதளிக்குந் தருணமிது தானே.

2. கட்டவிழ்ந்த கமலமெனக் கருத்தவிழ்ந்து நினைவே
கருதுகின்றேன் வேறொன்றுங் கருதுகிலேன் இதுதான்
சிட்டருளந் திகழ்கின்ற சிவபதியே! நினது
திருவுளமே யறிந்துநான் செப்புதலென்? புவிமேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டுநிறைந் தனனீ
விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளுந் தருணம்
தொட்டதுநான் துணிதுந்ரைத்தேன் நீயுணர்த்த உணர்ந்தே
சொல்வதலால் என்னறிவாற் சொல்லவல்லே னன்றே

3. காட்டையெலாங் கடந்துவிட்டேன் நாட்டையடைந் துனது
கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்:
கோட்டையெலாங் கொடி நாட்டி கோலமிடப் பார்த்தேன்:
கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாந் தவிர்ந்தேன்:
சேட்டையற்றுக் கருவியெலாம் என்வசநின் றிடவே
சித்தியெலாம் பெற்றேனான் திருச்சிற்றம் பலமே
பாட்டையெலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே!
பலந்தருமென் னுளந்தனிலே கலந்துநின்றந் தருளே!

7. பிரியேனென்றல்

1. அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
அச்சமெலாந் துன்பமெலாம் அறுத்துவிரைந் துவந்தே
இப்பாரில் இத்தருணம் என்னையடைந் தருளி
எண்ணமெலா முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியநின்
தாளிணைகள் அறிகவிது தயவுடையோய் எவர்க்குந்
துப்பாகித் துணையாகித் துலங்கிய மெய்த் துணையே!
சுத்தசிவா னந்தவருட் சோதிநடத் தரசே!

2. படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே!
பட்டதெல்லாம் போதுமிந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
உடலுயிரா தியவெல்லாம் நீயெடுத்துக் கொண்டுன்
உடலுயிரா தியவெல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாயென் கண்ணுள்
மணியேயென் குருமணியே! மாணிக்க மணியே!
நடனசிகா மணியேயென் நவமணியே! ஞான
நன்மணியே! பொன்மணியே! நடராச மணியே!

3. உன்னமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர் விடுவேன் கணந்தரியேன் உன்னாணை யிதுநீ
என்னைமறந் திடுவாயோ? மறந்திடுவா யெனில்யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்!
அன்னையினுந் தயவுடையாய் நீ மறந்தா யெனினும்
அகிலமெலாம் அளித்திடுநின் அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே

4. பெரியனருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
பெரும்புகழைப் பேசுவதே பெரும்பேறென் றுணர்ந்தே
துரியநிலத் தவரெல்லாந் துதிக்கின்றா ரேழை
துதித்தல்பெரி தளவிங்கே துதித்திடவென் றெழுந்த
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே: அதுவென்
அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
உரியவருள் அமுதளித்தே நினைத்து திப்பித் தருள்வாய்
உலகமெலாங் களித்தோங்க ஓங்குநடத் தரசே!

5. கவலையெலாந் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
கைகுவித்துக் கண்களினீர் கனிந்துசுரந் திடவே
சவலைமனச் சலனமெலாந் தீர்ந்துசுக மயமாய்த்
தானேதா னாதியின்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
தானாகி நானாடத் தருணமிது தானே:
குவலயத்தா ரதிசயிக்க எழுந்தருளி வருவாய்
குருவேயென் குற்றமெலாங் குணமாகக் கொண் டவனே!

8. வாதனைக்கிரங்கல்

1. படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவு மாட்டேனும் பதத்துணையே பிடித்தேன்:
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மையிது நும்மாணை விளம்பினனும் மடியேன்:
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவு மாட்டேன்:
கிளரொளியம் பலத்தாடல் வளரொளிநும் மல்லால்
நடமாட்டேன் என்னுளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிரு வருளாலே நன்றானே னானே!

2. சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்:
மாகாத லுடையவனான் மனங்கனிவித் தழியா
வானமுதும் மெய்ஞ்ஞான மருந்துமுணப் புரிந்தீர்:
போகாத புனலாலே சுத்தவுடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்:
நாகாதி பதிகளுநின் றேந்தவளர் கின்றீர்
நடராச ரேநுமக்கு நானெதுசெய் வேனே?

3. வேதாந்த நிலையுமதன் அந்தத்தே விளங்கும்
மெய்ந்நிலையுங் காட்டுவித்தீர்: விளங்கியசித் தாந்தப்
போதாந்த நிலையுமப்பாற் புகலரிதாம் பெரிய
பொருள் நிலையுந் தெரிவித்தீர் புண்ணியரே! நுமது
பாதாந்தம் அறிவித்தீர்: சுத்தவலி வுடனே
பகர்பிராண வாகாரப் பரிசுமெனக் களித்தீர்:
நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
நடராச ரேநுமக்கு நானென்செய் வேனே?

4. பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
பாட்டே யென் றறிந்துகொண்டேன் பரம்பொருளுன் பெருமை
ஆயிரமா யிரங்கோடி நாவுடையோ ரெனினும்
அணுத்துணையும் புகலரிதேல் அந்ததாவிச் சிறியேன்
வாயிரங்கா வகைபுலத் துணிந்தேனென் னுடைய
மனத்தாசை ஒரு கடலோ? ஏழுகடலிற் பெரிதே
சேயிரங்கா முனமெடுத்தே அனைத்திடுந்தாய் அனையாய்!
திருச்சிற்றம் பலம்விளங்குங் சிவஞான குருவே!

5. அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
அருளை நினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்:
முன்னாளில் யான்புரிந்த பெருந்தவத்தா லெனக்கு
முகமலர்ந்து மொழிந்தவருள் மொழியை நினைந்தந்தச்
செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளுங் கழித்தேன்
சிந்தைமலர்ந் திருந்தேனச் செலவமிகு திருநாள்
இந்நாளே யாதலினால் எனக்கருள்வீ ரென்றேன்
என்பதன் முன் அளித்தீரநும் அன்புலகிற் பெரிதே!

திருச்சிற்றம்பலம்

9. ஆனந்தக் களிப்பு

நாதநாமக்கிரியை)    (ரூபக தாளம்

பல்லவி:

நல்ல மருந்திம்         மருந்துசுகம்
நல்கும் வயித்திய    நாத மருந்து

சரணங்கள்:

அருள்வடி வான் மருந்து நம்முள்
அற்புதமாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கு மருந்து அன்பர்க்
கின்புரு வாக இழிந்த மருந்து        நல்ல

சஞ்சலந் தீர்க்கும் மருந்து – எங்குந்
தானேதா னாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து        நல்ல

வித்தக மான மருந்து சதுர்
வேத முடிவில் விளங்கும் மருந்து
தத்துவா தீதமருந்து என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாள மருந்து    நல்ல

பிறப்பை ஒழிக்கும் மருந்துயார்க்கும்
பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து என்னுள்
என்றும் மதுரித்தி னிக்கும் மருந்து        நல்ல

அம்பலத் தாடும் மருந்து பர
மானந்த வெள்ளத் தழுத்தும் மருந்து
எம்பல மாகும் மருந்துவேளூர்
என்னுந் தலத்தி லிருக்கும் மருந்து        நல்ல

சேதப் படாத மருந்து உண்டால்
தேன்போ லினிக்குந் தெவிட்டாத மருந்து
பேதப் படாத மருந்துமலைப்
பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து     நல்ல

பால்வண்ண மாகும் மருந்து அதிற்
பச்சை நிறமும் படர்ந்த மருந்து
நூல்வண்ணம் நாடும் மருந்து உள்ளே
நோக்குகின் றோர்களை நோக்கும் மருந்து    நல்ல

பார்க்கப் பசிபோம் மருந்து தன்னைப்
பாராத வர்களைச் சேரா மருந்து
கூர்க்கத் தெரிந்த மருந்து அனு
கூல மருந்தென்று கொண்ட மருந்து    நல்ல

கோமளங் கூடும் மருந்து நலம்
கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
நாமள வாத மருந்து நம்மை
நாமறி யும்படி நண்ணும் மருந்து        நல்ல

மூவர்க் கரிய மருந்து செல்வ
முத்துக் குமரனை ஈன்ற மருந்து
நாவிற் கினிய மருந்து தையல்
நாயகி கண்டு தழுவும் மருந்து        நல்ல

10. மெய்யருள் வியப்பு

செஞ்சுருட்டி)        (ரூபக தாளம்

பல்லவி:

எனக்கு முனக்கு மிசைந்த பொருத்த மென்ன பொருத்தமோ!
இந்தப் பொருத்த முலகில் பிறருக் கெய்தும் பொருத்தமோ!

சரணம்

தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்ப மொன்றதே
தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்றதே!
கனக்கத் திகைப்பற்றங்கே நானுங் கலங்கி வருந்தவே
கலக்க நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்தவே    எ

இங்கோர் மலையி னடுவி லுயர்ந்த தம்பம் நணுகவே
ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுகவே
அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கியே
அதன்மே லுயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை யாக்கியே!    எ

இரவிற் பெரிய வெள்ளம் பரவி எங்குந் தயங்கவே
யானுஞ் சிலரும் படகி லேறியே மயங்கவே
விரவித் தனித்தங் கென்னை யொருகல் மேட்டி லேற்றியே
விண்ணி லுயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றியே    எ

மேலைப் பாற்சிவ கங்கை யெனுமோர் தீர்த்தந் தன்னையே
மேவிப் படியிற் றவறி நீரில் விழுந்த என்னையே
ஏலத் துகிலு முடம்பும் நனையா தெடுத்த தேயொன்றோ
எடுத்தென் கரத்திற் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன்றோ    எ

என்ன துடலு முயிரும் பொருளும் நின்ன அல்லவோ?
எந்தா யிதனைப் பெருக வெனநான் இன்று சொல்லவோ?
சின்ன வயதி லென்னை யாண்ட திறத்தை நினைக்குதே
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே!    எ

அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பா ரில்லையே!
அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வா ரில்லையே!
எப்பா  லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே!
எனக்கும் நின்மே லன்றி யுலகி லிச்சை இல்லையே!        எ

அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே!
அணைப்போ மென்னு முண்மை யாலென் ஆவி தங்குதே!
விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளுதே!
மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளுதே!    எ

தனியன் மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே!
தகுமைந் தொழிலும் வேண்டுந் தருதல் வல்லையே!
வினவு மெனக்கென னுயிரைப் பார்க்க மிகவும் நல்லையே!
மிகவும் நான்செய் குற்றங் குறித்து விடுவாய் அல்லையே!    எ

என்னை யாண்ட வண்ணம் எண்ணில் உள்ள முருகுதே!
என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகுதே!
உன்ன வுன்ன மனமு முயிரு முடம்பு மினிக்குதே!
உன்னோ டென்னை வேறென் றெண்ணின் மிகவும் பனிக்குதே    எ

உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்குதே!
உண்டு பசிதீர்ந் தாற்போற் காதல் மிகவும் துடிக்குதே!
அன்பே அமையு மென்ற பெரியார் வார்த்தை போயிற்றே!
அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருள லாயிற்றே!    எ

திருவருள் விலாசப்பத்து

சிவசண்முக சிவஞான தேசிகன் திருவடி வாழ்க!

ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
யானைமகிழ் மணிக்குன்றே! அரசே! முக்கட்
பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே! செவ்வேல்
பிடித்தருளும் பெருந்தகையே! பிரம ஞானம்
வீறுமுகம் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
விளக்கமே ஆனந்த வெள்ளமே! முன்
தேறுமுகப் பெரியவருட் குருவா யென்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே!

கண்ணிமதி புனைந்தசடைக் கனியே! முக்கட்
கரும்பேயென் கண்ணேமெய்க் கருணை வாழ்வே!
புண்ணிய நன் னிலையுடையோ ருளத்தில் வாய்க்கும்
புத்தமுதே! ஆனந்த போகமே! சீர்
எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதி லீந்த
என்னரசே! ஆறுமுகத் திறையாம் வித்தே!
திண்ணியவென் மனமுருகக் குருவா யென்னைச்
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே!

பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே! ஞானப்
பரஞ்சுடரே! ஆறுமுகம் படைத்த கோவே!
என்னிருகண் மணியேயென் தாயே என்னை
ஈன்றானே! என்னரசே! என்றன் வாழ்வே!
மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
விரும்புமடி யார்காண மேவுந் தேவே!
சென்னியினின் அடிமலர்வைத் தென்னை முன்னே
சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே!

12.பாங்கியர்க்கு அறிவுறுத்தல்

ஆனந்த பைரவி)        கண்ணிகள்    (ஆதி தாளம்

1. அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே! அவர்
ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே!

2. ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமாரே மிக
ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே!

3. இன்படி வாய்ச்சபையிற் பாங்கிமாரே! நடம்
இட்டவர்மே லிட்டம் வைத்தேன் பாங்கிமாரே!

4. ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமாரே நட
னேசர்தமை எய்தும் வண்ணம் பாங்கிமாரே!

5. உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமாரே! இன்ப
உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே!

6. ஊனவுல கைக்கருதேன் பாங்கிமாரே மன்றில்
உத்தமருக்குறவானேன் பாங்கிமாரே!

7. கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமாரே!-என்றன்
கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமாரே!

8. கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமாரே!-மூன்று
கண்ணுடைய ரென்பாரையோ பாங்கிமாரே!

9. கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமாரே! மனம்
கரையாரென் னளவிலே பாங்கிமாரே!

10. கள்ளமொன்று மறியேனான் பாங்கிமாரே என்னைக்
கைவிடவுந் துணிவாரோ பாங்கிமாரே!

11. கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமாரே!-இன்று
கைநழுவ விடுவாரோ பாங்கிமாரே!

12. கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமாரே என்றன்
கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமாரே!

13. காமனைக் கண் ணாலெரித்தார் பாங்கிமாரே என்றன்
காதலைக்கண் டறிவாரோ பாங்கிமாரே!

14. காவலையெல் லாங்கடந்து பாங்கிமாரே! என்னைக்
கைகலந்த வள்ளலார் பாங்கிமாரே!

15. காணவிழைந் தேனவரைப் பாங்கிமாரே! கொண்டு
காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமாரே!

16. கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமாரே! நான்
கிட்டுமுன்னே எட்டிநின்றார் பாங்கிமாரே!

17. கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமாரே – நான்
கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமாரே!

18. கிள்ளையைத்தூ தாவுடுத்தேன் பாங்கிமாரே-அது
கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே!

19. கீதவகை பாடிநின்றார் பாங்கிமாரே-அது
கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமாரே!

20. கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமாரே! மனக்
கேண்மைக்குறித் தாரேயன்று பாங்கிமாரே!

21. கீடமனை யேனெனையும் பாங்கிமாரே! அடிக்
கேயடிமை கொண்டாரன்று பாங்கிமாரே!

22. குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமாரே!-கொள்ளும்
கொற்றவரென் கொழுநர் காணீர் பாங்கிமாரே!

23. குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமாரே!-என்னைக்
கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமாரே!

24. குஞ்சிதப்பொற் பாதங்கண்டார் பாங்கிமாரே!
குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமாரே!

25. கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமாரே-எங்கள்
குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமாரே!

26. கூறரிய பாதங்கண்டு பாங்கிமாரே!-களி
கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமாரே!

27. கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமாரே!-அது
கூடும்வண்ணங் கூட்டிடுவீர் பாங்கிமாரே!

13. வெண்ணிலா

புன்னாகவராளி)        கண்ணிகள்    (ஆதி தாளம்

1. தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே!-ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!

2. நாதர்முடி மேலிருந்த வெண்ணிலாவே! அங்கே
நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!

3. சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலாவே!-நானும்
தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!

4. இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலாவே!-நானும்
இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே!

5.தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலாவே நானுஞ்
சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலாவே!

6.போதநடு வூடிருந்த வெண்ணிலாவே-மலப்
போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!

7. ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே!-அரு
ளாளர்வரு வாரோசொல்வாய் வெண்ணிலாவே!

8.அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே! எங்கள்
ஐயர்வரு வாரோசொல்வாய் வெண்ணிலாவே!

9. வேதமுடி மேலிருந்த வெண்ணிலாவே மல
வேதையுள வேதுசொல்வாய் வெண்ணிலாவே!

10. குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலாவே!-அந்தக்
குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!

11. ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலாவே-அந்த
ஆதியந்த மாவதென்ன வெண்ணிலாவே!

12. வித்திலாம லேவிளைந்த வெண்ணிலாவே!-நீ தான்
விளைந்தவண்ண மேது சொல்வாய் வெண்ணிலாவே!

13. முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலாவே!-அப்த
மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலாவே!

14. நானதுவாய் நிற்கும் வண்ணம் வெண்ணிலாவே! ஒரு
ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலாவே!

15. ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலாவே!- என்னை
நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலாவே!

16. வாசி வாசி என்றுரைத்தார் வெண்ணிலாவே! அந்த
வாசியென்ன பேசக் கண்டாய் வெண்ணிலாவே!

17. ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலாவே -அவர்
அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலாவே!

18. ஓரெழுத்தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே-அது
ஊமையெழுத்த தாவதென்ன வெண்ணிலாவே!

19. அந்தரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே!-அவர்
ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலாவே!

20.அம்பலத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே!-அவர்
ஆடும்வகை எப்படியோ வெண்ணிலாவே!

21. அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலாவே!-எங்கும்
ஆகின்றன வண்ணமென்ன வெண்ணிலாவே!

22. அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலாவே!-ஐயர்
ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலாவே!

23. அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே!-என்னை
ஆட்டுகின்ற ரிப்பரத்தே வெண்ணிலாவே!

14. காட்சிக்கண்ணி

எதுகுல காம்போதி)     பல்லவி:        (அட தாளம்

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சியடி அம்மா
அற்புதக் காட்சியடி!

சரணங்கள்

சோதி மலையொன்று தோன்றிற் றதிலொரு
வீதியுண் டாச்சுதடி அம்மா!
வீதியுண் டாச்சுதடி!    (ஆணிப்)

வீதியிற் சென்றேனவ் வீதி நடுவொரு
மேடை இருந்ததடி அம்மா!
மேடை இருந்ததடி!    (ஆணிப்)

மேடையி லேறினேன் மேடைமே லங்கொரு
கூட மிருந்ததடி அம்மா!
கூட மிருந்ததடி!        (ஆணிப்)

கூடத்தை நாடவக் கூடமே லேழ்நிலை
மாட மிருந்ததடி அம்மா!
மாட மிருந்ததடி!        (ஆணிப்)

ஏழ்நிலைக் குள்ளு மிருந்த அதிசயம்
என்னென்று சொல்வனடி அம்மா!
என்னென்று சொல்வனடி    (ஆணிப்)

ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நில மாச்சுதடி அம்மா!
சீர்நில மாச்சுதடி!        (ஆணிப்)

பாரோர் நிலையிற் கருநீலஞ் செய்ய
பவளம் தாச்சுதடி! அம்மா!
பவளம தாச்சுதடி!    (ஆணிப்)

மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்க மாச்சுதடி அம்மா!
மாணிக்க மாச்சுதடி!    (ஆணிப்)

பின்னோர் நிலையிற் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி யாச்சுதடி அம்மா!
பேர்மணி யாச்சுதடி.    (ஆணிப்)

வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி யாச்சுதடி அம்மா!
வெண்மணி யாச்சுதடி!    (ஆணிப்)

புகலோர் நிலையிற் பொருந்தி பன்மணி
பொன்மணி யாச்சுதடி-அம்மா
பொன்மணி யாச்சுதடி    (ஆணிப்)

பதியோர் நிலையிற் பகர்மணி யெல்லாம்
படிகம தாச்சுதடி அம்மா!
படிகம தாச்சுதடி!        (ஆணிப்)

பொற்றம்பங் கண்டேறும் போதினில் நான்கண்ட
புதுமையென் சொல்வனடி அம்மா!
புதுமையென் சொல்வனடி!    (ஆணிப்)

ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
என்னள வல்லவடி அம்மா!
என்னள வல்லவடி!    (ஆணிப்)

ஆங்காங்கே சத்திகள் ஆயிர மாயிரம்
ஆகவந் தார்களடி அம்மா!
ஆகவந் தார்களடி!    (ஆணிப்)

வந்து மயக்க மயங்காமல் நானருள்
வல்லபம் பெற்றேனடி அம்மா!
வல்லபம் பெற்றேனடி!    (ஆணிப்)

வல்லபத் தாலந்த மாதம்பத் தேறிநான்
மணிமுடி கண்டேனடி அம்மா!
மணிமுடி கண்டேனடி!    (ஆணிப்)

மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேனடி அம்மா!
மற்றது கண்டேனடி!    (ஆணிப்)

கொடுமுடி மேலா யிரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயி லிருந்ததடி-அம்மா!
கோயி லிருந்ததடி!    (ஆணிப்)

கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலிற்
கூசாது சென்றேனடி அம்மா!
கூசாது சென்றேனடி!    (ஆணிப்)

கோபுர வாயிலுட் சத்திகள் சத்தர்கள்
கோடிபல கோடியடி அம்மா!
கோடிபல கோடியடி!    (ஆணிப்)

ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
ஐவண்ண மாகுமடி அம்மா!
ஐவண்ண மாகுமடி!    (ஆணிப்)

அங்கவ ரெல்லாமிங் காரிவ ரென்னவும்
அப்பாலே சென்றேனடி அம்மா!
அப்பாலே சென்றேனடி!    (ஆணிப்)

அப்பாலே சென்றேனங் கோர்திரு வாயிலில்
ஐவ ரிருந்தாரடி அம்மா!
ஐவ ரிருந்தாரடி!

மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
மணிவாயி லுற்றேனடி அம்மா!
மணிவாயி லுற்றேனடி!    (ஆணிப்)

எண்ணுமவ் வாயிலிற் பெண்ணோ டாணாக
இருவ ரிருந்தாரடி அம்மா!
இருவ ரிருந்தாரடி!    (ஆணிப்)

அங்கவர் காட்ட அணுகத் திருவாயில்
அன்பொடு கண்டேனடி அம்மா!
அன்பொடு கண்டேனடி!    (ஆணிப்)

அத்திரு வாயிலி லானந்த வல்லியென்
அம்மை யிருந்தாளடி அம்மா!
அம்மை யிருந்தாளடி!    (ஆணிப்)

அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமு முண்டேனடி! அம்மா!
அமுதமு முண்டேனடி!    (ஆணிப்)

தாங்கும் அவளரு ளாலே நடராசர்
சந்நிதி கண்டேனடி அம்மா!
சந்நிதி கண்டேனடி!    (ஆணிப்)

சந்நிதி யிற்சென்று நான்பெற்ற பேறது
சாமி யறிவாரடி அம்மா!
சாமி யறிவாரடி!        (ஆணிப்)

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சியடி அம்மா!
அற்புதக் காட்சியடி!    (ஆணிப்)

15. அக்கச்சி

எதுகுல காம்போதி)     கண்ணிகள்:    (அடதாளம்)

வானத்தின் மீது மயிலடாக் கண்டேன்
மயில்குயி லாச்சுதடி அக்கச்சி!
மயில்குயி லாச்சுதடி!

துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி அக்கச்சி!
வள்ளலைக் கண்டேனடி!

சாதி சமயச் சழக்கைவிட் டேனருட்
சோதியை கண்டேனடி அக்கச்சி!
சோதியைக் கண்டேனடி!

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேனடி அக்கச்சி!
ஐயரைக் கண்டேனடி!

Advertisements