இராமதேவர்

இராமதேவர் சித்தர் வாழ்கை வரலாறு

Posted on

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,

மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு
உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா

எனவுரைத்துள்ளார். இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.
ஒருமுறை காசிமாநகரில் திருக்கோயில் கொண்ட இறைவன் விசுவநாதரைக் கொண்டு வந்து தம் ஊரான காயாரோகணத்தில் (நாகப்பட்டினத்தில்) நிறுவிட இராமதேவர் எண்ணம் கொண்டார். இயல்பாகவே இவர் சஞ்சார சமாதியில் லயித்திடுவார். தாம் நடந்து கொண்டே இருந்தபோதும் இவரது எண்ணம் மட்டும் எங்கோ சென்றிருக்கும். எதனையும் இவரது கண்கள் நோக்கிடாது; காதும் கேட்காது; சுவாசமும் ஓடாது.

இத்தைய நிலையில்தான் இராமதேவருக்கு காசி விசுவநாதரை நாகப்பட்டினத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. உடனே எழுந்து இராமதேவர் விரைந்து நடக்கலானார். எத்தனை நாட்கள் அவர் நடந்தார் என்று அவருக்கே தெரியாது. சுயநினைவு இல்லாமலேயே அவர் நடந்தபடி சென்று கொண்டிருந்தார்.

ஒரு நாள் சுயநினைவு வரப் பெற்றார். அப்போது தாம் காசியில் இருப்பதை இராமதேவர் உணர்ந்தார். உடனே விரைந்து சென்று கங்கையில் நீராடி மகிழ்ந்த இராமதேவர் பின் காசி மாநகரத்து இறைவனான விஸ்வநாதப் பொருமானைக் கண்ணாரக் கண்டு தரிசித்து மகிழ்ந்தார். மீண்டும் வந்து கங்கையில் மூழ்கி அவர் எழுந்தார். அப்போது அவருடைய கரத்தில் லிங்கத் திருவுரு ஒன்று இருந்தது. அதைக் கண்டதும் இராமதேவர் மிகவும் மகிழ்ந்தார். மீண்டும் நாகப்பட்டினத்துக்கு வந்த இராமதேவர் தாம் கங்கையில் மூழ்கியெடுத்து வந்த காசி விஸ்வநாதப் பொருமானது திருவுருவமான இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். தினந்தோறும் தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திருவுருவை பூஜித்து வந்ததுடன் தியானத்திலும் மூழ்கினார்.

அந்தக் காலத்தில் நாகைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து சென்றிடும். பெரும்பாலும் அரேபிய நாடுகளிலிருந்து வந்து செல்லும் கப்பல்களே அதிகம். அக்கப்பல்களில் வரும் அரேபியர்களைக் கண்டு இராம இராமதேவர் வியந்தார். தாமும் அவர்களுடன் பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.

ஒரு நாள் வழக்கம் போல் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண் விழித்துப் பார்த்தபோது தாம் அரேபியாவில் இருப்பதை உணர்ந்தார். ‘தாம் எப்படி அங்கு வந்தடைந்தோம்’ என்பது அவருக்கே புரியவில்லை. அந்த எண்ணத்துடன் தியானத்தில் அமர்ந்தவர் சஞ்சார சமாதியில் ஆழ்ந்து மெக்காவுக்கு வந்து சேர்ந்து விட்டார். கடல் வழியில் வந்தாரா? அல்லது தரை வழியில் வந்தாரா? என அவருக்குத் தெரியாது.

வறண்ட பாலைவனம். எங்கு பார்த்தாலும் மணல் பரப்பு. கண்ணுக்கு எட்டிய வரை மணல் பரப்புதான் தென் பட்டது. வெப்பம் மிகுந்திருந்தமயால் வியர்வை ஆறாகப் பெருகியது. இராமதேவர் விழித்தவாறே நின்று கொண்டிருந்தார். வெகு தொலைவில் ஒட்டகம் ஒன்று வருவதை அவர் கண்டார். அந்த ஒட்டகத்தின் பின் ஒன்று, இரண்டு என எண்ணற்ற ஒட்டகங்கள் வரிசையாக வந்தபடி இருந்தன.

பாலைவனத்தில் தன்னந்தனியாக நின்ற இராமதேவரைக் கண்டதும் அரேபியர்கள் தங்களது நாட்டிற்குள் எவனோ அத்துமீறி நுழைந்துள்ளான் என்று எண்ணி விரைந்து வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

“ யார் நீ? ”
“ எங்கிருந்து நீ வருகிறாய்? ”
“ எப்படி இங்கு வந்தாய்? ”

என்று ஆளாளுக்கு அவரிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர். இராமதேவர் அவர்களுக்கு பதில் கூற முயன்றும் அவரது பதிலை காது கொடுத்துக் கேட்போர் யாருமில்லை. அவர்கள் ஆக்ரோஷத்துடன் அவரைக் கொல்ல நெருங்கினர். அவர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். அவனால் இராமதேவர் உயிர் பிழைத்தார்.

இதுபற்றி போகர் 7000 – இல்,

யூகியாம் மதிமந்திரி யோகவானாம்
உத்தமனார் அங்கொருவர் தான் இருந்தார்
யோகியாம் சின்மயத்தில் சேர்ந்த சித்து
ஒளிவான ரிஷி ஒருவர் அங்கிருந்தார்

என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரேபியர்கள் அவரிடம், ”நீ ஏன் தீன் தேசத்துக்கு வந்தாய்? உன்னைத் தண்டிக்காமல் விடமாட்டோம்” என்று கத்தினர். இதுபற்றி…..

போனாரோ மலைநாடு குகை கடந்து
பொங்கமுடன் நபிதனையே காணவென்ரறு
காணாறு பாதைவழி செல்லும் போது
கருங்காளை நபிக்கூட்டம் மிகவாய்க் கண்டு
மானான மகதேவர் பதியிலப்பா
மார்க்கமுடன் வந்ததனால் உநதமக்கு
தீனான தீன்பதியில் உந்தனைத் தான்
திட்டமுடன் சபித்திடுவோம் என்றிட்டாரே.  5800

என்று போகர் 7000 – இல் 5800 – ஆவது பாடலில் கூறப்பட்டுள்ளது மேலும்,

என்றவுடன் இராமதேவர் தாள் பணிந்து
எழிலான வார்த்தையது கூறும்போது
சென்றதுமே யாகோபு என்று கூறி
சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது தானும் ஈந்து
சிறப்புடனே அசன் உசேன் என்று கூறி
வென்றிடவே உபதேச பிரணவத்தை
விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே.  5801

ஓதவே நபிநாயகர் கூட்டத்தாரகள்
உத்தமர்கள் மனம்போலே மனதுவந்து
நீதமுடன் மக்கபுரி கோட்டைக் குள்ளே
நிஷ்களங்க பக்கிரி யாகோபு தன்னை
கோதமுடன் கொண்டு சென்றார் அரண்மனைக்குள்
கேறாமல் கொத்துபா ஓதினார்கள்
வீதமது பயனறிந்த சித்து தாமும்
விடுபட்டு வந்ததொரு யாகோபாச்சே  5802

என்று போகர் 7000 – இல் கூறுப்பட்டுள்ளது. அதாவது ”உன்னைத் தண்டிக்காது விடமாட்டோம்” என்று அரேபியர் கத்தினார். உடனே இராமதேவர் அவர்களின் தாள் பணிந்து மிகவும் நயமான வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார். உடனே அவர்கள் இராமதேவரிடம், ”அப்படியானால் நீ எங்களின் மதத்தில் சேர்ந்துவிடு” என உரைத்து, ”இன்று முதற்கொண்டு உனது பெயர் யாகோபு” என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி அவருக்குச் சுன்னத்தும் செய்து வைத்தனர். பின் அவர் உண்பதற்க்கு ரொட்டியும் கொடுத்து உபதேசமும் செய்து வைத்தனர்.

அன்றிலிருந்து யாகோபு எனப் பெயரிடப்பட்ட இராமதேவர், அவர்கள் மனம்போல் நடந்து கொண்டார். பின் அவரை அரேபியர்கள் மக்கா நகரத்துக் கோட்டையுள் இருந்த அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தங்கள் மறை நூலாகிய குரானை ஓதுவித்தார்கள். யாகோபுவும் அனைத்தையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்து அவர்களது நம்பிக்கைக்கு உரியவரானார்.

வெகு விரைவிலேயே மெக்கா நகர மக்கள் யாகோபுவைத் தம்முள் ஒருவராக ஏற்றுக கொண்டனர். அவரும் அரேபி மொழியில் பேசிப் பழகினார். அவர்களது நோய்களையும் போக்கியருளினார். அவர்களுக்குள் உண்டான வழக்குகளைச் சிக்கல் ஏதுமின்றித் தீர்த்து வைத்தார்.

காலப்போக்கில் யாகோபுக்கு சீடர்கள் பலர் சேர்ந்தனர். தன் சீடர்கள் மூலமாய் அரபு நாட்டிலிருந்து அரிய மூலிகைகளைக் கொண்டுவரச் செய்த யாகோபு அவற்றின் தன்மைகளை ஆராய்ந்தறிந்தார். கற்ப மூலிகைகளின் திறனை சோதித்தறிய தாம் சாமதியில் இருக்க விரும்பிய யாகோபு தம் விருப்பத்தைச் சீடர்களிடம் கூறினார். அவர்களிடம் யாகோபு, ”நான் சமாதியில் அமர்வேன். பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்றெழுவேன்” என்றார். ”இது எப்படி சாத்தியம்?” என்று வியந்த சீடர்கள் அவரது கூற்றை நம்ப முடியாது தவித்தனர். ஆனாலும் தம் குருநாதருடைய வாக்கை அவர்கள் மீறவில்லை.

யாகோபு சமாதி நிலை கொள்வதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டு குழி தோண்டப்பட்டது. அக்குழிக்குள் நான்கு புறமும் சுவர்களும் எழுப்பப்பட்டன. சமாதிக்குள் இறங்கிய யாகோபு தன் சீடர்களிடம் கூறியதாக பின்வரும் பாடல் விளக்குகிறது.

இறங்கியே சமாதிதனில் இருந்துகொண்டு
எழிலாகச் சீடனுக்கு அதிகம் சொல்வார்
சுரங்கம் என்ற குழிதனிலே போறேன் அப்பா
சுருதிபொருள் கருவி கரணாதி எல்லாம்
அரங்கமுடன் உள்ளடக்கி மனதிருத்தி
வையகத்தின் வாழ்க்கை எனும் தளை அகற்றி
உரங்களுடன் பத்தாண்டு இருப்பேன் என்று
உத்தமனார் யாகோபு கூறினாரே.                    போகர் 7000 – 3872

சமாதிக்குள் இறங்கிய யாகோபு தன் சீடனிடம், “பத்தாண்டு காலத்துக்கு நான் சமாதியில் இருப்பேன். பின் வெளியே வருவேன். அவ்வாறு நான் சமாதியில் இருந்து வெளிவரும்போது அற்புதங்கள் பல நிகழ்ந்திடும். பின் தேன்மாரி பொழியும். நறுமண மலர்கள் பூத்துக் குலுங்கி வாசனையப் பரப்பும். விலங்குகளும் ஞானம் பேசும். இம்மாதிரியான அடையாளங்களைக் கொண்டு நான் சமாதியில் இருந்து வெளிவரும் நாளை நீ உணர்ந்திடலாம்” என்று கூறியதுடன் அச்சமாதியை மூடிவிடுமாறும் கூறினார்.

ஆண்டுகள் பத்தும் கழிந்தன. யாகோபு உரைத்தது போன்றே அவர் சமாதியிலிருந்து மீண்டு வந்தார். தனது சீடன் சமாதி அருகிலேயே தனக்காகக் காத்திருந்தது கண்டு மனம் மகிழ்ந்தார். அவனுக்கு உபதேசங்கள் பலவற்றை உரைத்தருளினார். யாகோபு தான் சமாதிக்குள் சென்ற பின் நடந்தது என்ன என்று தனது சீடனிடம் கேட்டபோது அவன், “குருதேவ! தாங்கள் சமாதிக்குள் சென்ற பிறகு பெருங்கூட்டம் கூடியது. யாகோபு சாமாதிக்குப் சமாதிக்கு போய்விட்டார். இனி அவர் திரும்பவே மாட்டார். அவரது உடல் மண்ணோடு மண்ணாய்ப் போகும் ” என்று மிகவும் கேவலமாகப் பேசினர்.

இந்நிகழ்வு பற்றி போகர் 7000 – இல்,

கூச்சலுடன் வெகு மாண்பர் கும்பல் கூடி
குவலயத்தில் வேகமுடன் வார்த்தை சொன்னார்
ஏச்சாகக் கூறினதோர் மொழிகட்கு எல்லாம்
எதிராக யான் ஒன்றும் பேசேன் பாரே                    3886

பாரேதான் வெகுகாலம் சமாதி பக்கம்
பாரினிலே வருவாரும் போவாரும் உண்டு
நேரேதான் அவர்களிடம் வார்த்தை பேசேன்
நேர்மையுடன் சமாதியிடம் பள்ளி கொள்வேன்
கூரேதான் சமாதியிடம் இருந்து கொண்டு
கொப்பெனவே தேவர் வரும் காலம் மட்டும்
ஊரேதான் போகாமல் காத்திருந்து
உறுதியுடன் சேவையது கண்டிட்டேனே.                3887

அதாவது சீடன் யாகோபுவிடம், “பல பேர் பலவிதமாகக் கூச்சலிட்டுப் பேசினர். நான் எதனையும் காதில் கேட்டுக் கொள்ளாதிருந்தேன். தங்களது சமாதிக்கு அருகிலேயே படுத்து உறங்கினேன். இரவும் பகலும் சமாதிக்குக் காவலாய் இருந்தேன். ஒரு முறை கூட நான் எனது ஊருக்குப் போகவே இல்லை” என்றான்.

சீடன் உரைத்து கேட்ட யாகோபு, “சீடனே! அவர்கள் பேசியதில் தவறு ஏதுமில்லை. இந்த மானிட தேகம் நிலையற்றது. காயகற்பம் உண்டு காயத்தைச் சித்தி செய்து நான்கு யுகங்கள் வாழ்ந்தாலும், பின் ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாய்த்தான் போகும். நான் மீண்டும் சமாதியில் இருக்க விரும்புகிறேன்.

இம்முறை முப்பது வருடங்கள் கழிந்த பின்னரே நான் வருவன், நான் சமாதிக்குச் சென்ற பின் என்னைப் பற்றித் தவறாகப் பேசியோருக்குக் கண் பார்வை பறிபோய்விடும்!” எனவுரைத்துவிட்டு மீண்டும் சமாதிக்குள் இறங்கிவிட்டார்.

இம்முறை சமாதியின் மீது பாறாங்கல் கொண்டு மூடப்பட்டது. சமாதியைப் பார்க்க வந்தவர்கள், “அடப் பாவமே! இனி யாகோபு திரும்பி வருவது இயலாது” என்று ஏளனமாகப் பேசியதுமே அவர்கள் பார்வை பறிபோனது. அதுமட்டுமல்லாது.

குருடராய் போனவர்கள் சிலது மாண்பர்
குவலயத்தில் அழிந்தவர்கள் சிலது மாண்பர்
திருடராய் ஒளித்தவர்கள் சிலது மாண்பர்
தீர்க்கமாய் வாய்குளறிச் சிலது மாண்பர்    3901
என்று போகர் 7000 – இல் கூறப்பட்டுள்ளது.

பார்வை பறிபோனதுமே, “ஐயகோ! இவ்வாறு பார்வை பறிபோய்விட்டதோ!” என்று அடித்துக் கொண்டார்கள் ‘வாய்க் கொழுப்பினால் வந்த வினை இனி தீருமோய?’ என்று கதறியழுதனர்.

முன்நின்று யாகோபு வருவதெப்போ
மூவுலகில் சாபமது தவிர்பதெப்போ
மன்னரவர் மாண்பர்களின் வினையைநீக்கி
மானிலத்தில் வரம்கொடுக்கும் காலம் எப்போ.    3902

என்று அழுது புலம்பியவாறு காத்துக் கிடந்தனர். ஆண்டுகள் பல உருண்டோடின. இதனிடையே மாண்டவர்கள் பலர். உயிருடன் இருந்தவர்கள் பலர்.

கோடியாம் சிலபேர்கள் ஞானவான்கள்
குவலயத்தில் வெகுநாளாய்ப் பேருண்டாக
நாடியே சமாதியிடம் கிட்டிருந்து
நாதாந்தப் பேரொளிவின் சாமாதி முன்னே
வாடியே காத்திருந்த சீடர் தாமும்
வன்மையுடன் உபதசம் பெற்றார் தானே.

யாகோபு உரைத்தபடி சமாதியின் அருகேயே முப்பது ஆண்டுகள் சீடர்கள் காத்திருந்தனர். பின் சமாதியிலிருந்து யாகோபு வெளிவந்த்தும் அவரது தரிசனம் பெற்றனர். ஜோதி வடிவாய் வெளிவந்த யாகோபு தம் சீடர்களது குறைகளைப் போக்கியருளினார். ஆனால் அவருக்கு மெக்கா நகரத்து வாழ்க்கை அலுத்துப் போனது. ஜீவன்முக்தி அடைய தான் தமிழகத்திற்குத் திரும்பிச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானத. சிறிது காலம் தம் சீடர்களுடன் தங்கிய யாகோபு அவர்களுக்கு வேண்டிய நல்லுபதேசங்களைச் செய்தருளினார். பின் அவர் தன் சீடர்களிடம், “நான் மீண்டும் சமாதிக்குச் செல்கிறேன். இனி நான் திரும்பமாட்டேன்” என்றுரைத்தருளினார்.

யாகோபு உரைத்ததைக் கேட்டு அவரது சீடர்கள் திடுக்கிட்டனர். அவரைப் பணிந்து தொழுது அழுதனர். ‘அவர் மீண்டும் சமாதிக்குச் செல்லக் கூடாது. தங்களுடனே இருக்க வேண்டும்.’ என்று மன்றாடினர். ஆனால் அவர்களிடம் யாகோபு, “அட மூடர்களே! அவ்வாறே நான் இருந்தாலும் நான் இருக்கும் காலம் வரையில் என்னுடனேயே நீங்களும் இருக்க இயலுமா? பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். இந்த உடம்புதான் அழியுமே தவிர ஆன்மா ஒருபோதும் அழியக்கூடியதல்ல. எனவே நீங்கள் வருந்த வேண்டாம். நான் என்றும் உங்களுடனேயே இருப்பதாக எண்ணுங்கள்” என்று கூறிவிட்டு விடைபெற்று மீண்டும் சமாதிக்குள் புகுந்தார்.
யாகோபு மெக்காவில் சமாதி கொண்டதாக சிலர் கூறுவர். ஆனால் அவர் சமாதியுள் இருந்து வெளிப்பட்டுத் தமிழகம் வந்தவுடன் சதுரகிரியில் சிறிது காலம் தங்கியிருந்தார். தாம் மெக்காவில் இருந்தபோது அரபி மொழியில் எழுதிய மருத்துவ நூல்களைத் தமிழில் இயற்றினார். பின் சதுரகிரி வனத்தில் சிலகாலம் தங்கிய யாகோபு என்ற இராமதேவர் பின் அழகர் மலைக்கு வந்து அங்கேயே சமாதி அடைந்தருளினார்.

தமிழகத்திற்கு வந்து தம் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்ததுமே அவர் மீண்டும் இராமதேவராகவே மாறினார் என்றும், அதனாலேயே அவர் அழகர்மலையில் சமாதியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

Advertisements

இராமதேவர் – பூஜாவிதி

Posted on

ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே.                                        1

போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே.                               2

முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே.                                     3

சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும் சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு
விரிவான முகக்கருவு மூன்று கேளு
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதுரான விதிவிவர மறியக் கேளே.                                               4

கேளப்பா பலிகொடுத்துப் பூசை செய்து
கிருபையுள்ள வுருவேற்றித் திட்ட மாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
வளமாகப் புதைத்துவிடு நடுச் சாமத்தில்
ஆளப்பா அடியற்று மரண மாகி
ஆண்டிருந்த தவசுநிலை தான்கு லைந்து
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி
கதைதெரியச் சொல்லுகிறேனின்னம் பாரே.                       5

இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்
ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்
அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்
அறிவுடைய முளைச்சீவிச் சிங்கை யோதி
வன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்
வலுவான நூற்றெட்டு வுருவம் போடு
சன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டு
சதிராக ஆணிகொண் டடித்தி டாயே.                                     6

அடித்தமுளை பிடுங்கிவைத் திறுக்கிப் போடு
ஆனந்த வுருக்குலைந்து பட்டுப் போகும்
தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானுந்
தொகைமுடிந்து வாச்சுதடா விந்தப் போக்கு
விடுத்தபின்பு விடமேறிக் கருவிப் போகும்
விரிந்துரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது
தடுத்துவிடு நகரத்தி லடித்துப் பாரு
தட்டழிந்து உயிர்புதலாய்ச் சேத மாமே.                                 7

ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்
அதியங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்
வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு
விளையாட்டே யில்லையடா இந்தப் போக்கு
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்
சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு
தவறாது ராமனுடை வாக்யந் தானே.                                      8

தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு
தனதான நூற்றெட்டுக் குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர் பதியெட்டு மாடும்
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்
கோனென்ற கோடு சித்துக் கணத்திலாடுங்
குணமாக ரேவதிநாட் செய்ய நன்று
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று
வளர்பிறையில் செய்தவனே யோகி யாமே.                      9

யோகியா யாவதற்கீ துனக்குச் சொன்னேன்
ஓகோகோ முன்னுரைத்த மூலத் தாலே
யோகிகளா யேகாந்த வல்லி யாட்கிங்
ஏட்டிலே யெழுதினதால் எல்லா மாச்சு
தாகிகளாயத் தாயுடைய கிருபை யாலே
தவமாகும் மவமாகும் சுபமுண்டாகும்
மோகிகளால் மூலபூசா விதிபத் தாலே
முத்திபெறச் சித்திவிளை பத்து முற்றே.                            10

(முடிந்தது)