அகஸ்தியர்

அகஸ்தியர் ஞனம்

Image Posted on

ஞனம் – 1

1. சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு:
பத்தியினா லறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு:
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி:
கத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம் சுழியிலே நிலையறிந்தால் மோட்சந்தானே.

2. மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலைசெய் யாதே:
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு: காசியினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு:
பாய்ச்சலது பாயாதே: பாழ்போ காதே: பலவேத சாஸ்திரமும் பாரு பாரு:
ஏச்சலில்லா தவர் பிழைக்கச் செய்த மார்க்கம் என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே

3. பாரப்பா நால்வேதம் நாலும் பாரு: பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி:
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே யவர் பிழைக்கச் செய்த மார்க்கம்:
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள் தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்:
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ! ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!

4. ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி:
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி: தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி:
வருவார்க ளப்பனே அனேகங் கோடி: வார்த்தையினால் பசப்புவார் திருடா தானே.

5. தானென்ற தானேதா னொன்றே தெய்வம்: தகப்பனுந் தாயுமங்கே புணரும்போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த நாதனைநீ எந்நாளும் வணங்கி நில்லு;
கோனென்ற திருடனுக்குந் தெரியு மப்பா கோடானு கோடியிலே யொருவனுண்டு:
ஏனென்றே மனத்தாலே யறிய வேணும் என்மாக்கள் நிலைநிற்க மோட்சந் தானே.

6. மோட்சமது பெறுவதற்குச் சூட்சங் கேளு: முன்செய்த பேர்களுடன் குறியைக் கேளு!
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு: எல்லாருங் கூடழிந்த தெங்கே கேளு:
பேச்சலது மாய்கையப்பா வொன்றுமில்லை: பிதற்றுவா ரவரவரும் நிலையுங்காணார்:
கூச்சலது பாளையந்தான் போகும் போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத் தானே.

7. மூச்சொடுங்கிப் போனவிடம் ஆருங் காணார்: மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்.
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்: வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்:
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு, வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே:
ஆச்சப்பா கருவுதனில் அமைத்தாற் போலாம்: அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே.

8. பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி: படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி:
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி: வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு:
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும் குணவியவா னானக்காற் சத்திய மாமே.

9. சத்தியமே வேணுமடா மனித னானால் சண்டாளஞ் செய்யாதே தவறிடாதே:
நித்தியகர் மம்விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதிவிட்டு நிலைபே ராதே:
புத்திகெட்டுத் திரியாதே: பொய்சொல்லாதே: புண்ணியத்தை மறவாதே: பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளியிட்டுத் தர்க்கி யாதே கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே.

ஞானம் – 2

மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா:
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா:
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா:
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.

உயர் ஞானம்

2. உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்.
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு:
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்: தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு: மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.

தனிஞானம்

3. ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும் விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு: பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு வாச்சு:
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே:

4. விந்துநிலை தனியறிந்து விந்தைக் கண்டால் விதமான நாதமது குருவாய்ப் போகும்:
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால் ஆதியந்த மானகுரு நீயே யாவாய்:
சந்தேக மில்லையடா புலத்தி யன்னே! சகலகலை ஞானமெல்லா மிதற் கொவ்வாவே:
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த மூலமதை யறியாட்டால் மூலம்பாரே.

5. மூலமதை யறிந்தக்கால் யோகமாச்சு: முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு:
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்: சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்:
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞாலமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே:

ஞானம் – 3

1. பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்: உயிர்போச் சென்பார்:
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை: ஆகாய சிவத்துடனே செரு மென்பார்:
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்: கருவறியா மானிடர்கள் கூட்டமப்பா!
சீரப்பா காமிகள் தா மொன்றாய்ச் சேர்ந்து தீயவழி தனைத் தேடிப் போவார் மாடே.

2. மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு: மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்: சொர்க்க மென்பார்: நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்.
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு; அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்:
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித் தளமான தீயில்விழத் தயங்கி னாரே.

3. தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்: சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே:
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி மாட்டினார் கதைகாவ்ய புராணமென்றும்
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும் இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்;
வயலான பயன்பெறவே வியாசர் தாமும் மாட்டினார் சிவனாருத் தரவினாலே

4. உத்தார மிப்படியே புராணங் காட்டி உலகத்தில் பாரதம்போல கதையுண்டாக்கிக்:
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக் கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ் சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்
பத்தாகச் சைவர்க்கொப் பனையும்செய்து பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே.

5. பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு: பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும் நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ரரசனென்றும் முனிவரென்றும் நிறையருள் பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும் பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே.

6. கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும் கட்டியநால் வேதமறு சாத்திரங்கள்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை: அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண்டாக்கி
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும் உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீடரென்றும் சிவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே!

ஞானம் – 4

1. பூரணமே தெய்வமென உரைத்தா ரையா! பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்: நினைவாய்க் கேளு: கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம் வைத்துப் பூரணத்தைக் காத்தால் வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே.

2. ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும் அயன்மாலும் அரனோடுந் தேவரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்: முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்:
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப் பேரான பூரணத்தை நினைவாய்க் காரு:
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள் வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே.

3. தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்;
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்:
நானென்றும் நீயென்றும் சாதி யென்றும் நாட்டினாருலகத்தோர் பிழைக்கத்தானே;

4. பிழைப்பதற்கு நூல்பலவுஞ் சொல்லா விட்டால் பூரணத்தை யறியாமலிறப்பா ரென்றும்
உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால் உலகத்திற் புத்திகெட்டே யலைவா ரென்றும்
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்துவென்றும் தந்தைதாய் பிள்ளையென்றும் பாரி யென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை: உத்தமனே யறிந்தோர்கள் பாடினாரே.

5. பாடினா ரிப்படியே சொல்லா விட்டால் பரிபாடையறியார்கள் உலகமூடர்:
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத் தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்:
வாடுவார் நாமமென்றும் ரூப மென்றும் வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியார் மூடர்: நாய்போலே குரைத்தல்லோ வொழிவார் காணே.

6. காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி:
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ? விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக் குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே;

7. ஊதியதோ ரூதறிந்தா லவனே சித்தன்: உத்தமனே பதினாறும் பதியேயாகும்
வாதிகளே யிருநான்கும் பதியின் பாதம் வகைநான்கு முயிராகும் மார்க்கங் கண்டு
சோதிபரி பூரணமும் இலைமூன் றுந்தான் தூங்காமற் றூங்கியங்கே காக்கும்போது
ஆதியென்ற பராபரையு மரனு மொன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ளாகும் பாரே.

8. பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக் கருவான் சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே.

9. ஒன்றான பூரணமே யிதுவே யாச்சு: உதித்தகலை தானென்று மிதுவே யாச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானஞ் சித்தி நாட்டாமற் சொன்னதனால் ஞானமாமோ?
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவ மாகும்:
திண்டாடு மனத்தோர்க்குக் காணப் போகா, தெளிந்தவர்க்குத் தெரிவித்த வுகமை தானே.

10. உகமையின்னஞ் சொல்லுகிறேன் உலகத் துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனிபே சாதே:
பகைமை பண்ணிக் கொள்ளாதே வீண்பே சாதே; பரப்பிலே திரியாதே; மலையே றாதே;
நகையாதே சினங்காதே யுறங்கி டாதே; நழுகாதே சுழுமுனையிற் பின்வாங்காதே;
செகமுழுதும் பரிபூரண மறிந்து வென்று தெளிந்ததுபின் புலகத்தோ டொத்து வாழே!

11. வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான் குடிதோறும் இரப்பான் மட்டை: தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக் கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே.

12. உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே; உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால் உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்; உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்:
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே: உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே

13. பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலைரண்டாகும்
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு: விண்ணான விண்ணுக்குள ண்ணாக் கப்பா!
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசமெட்டும்
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம், பகருவார் சொர்க்கமும்கை லாச மென்றே

14. கைலாசம் வைகுந்தந் தெய்வ லோகம் காசிகன்யா குமரியென்றுஞ் சேது வென்றும்
மயிலாடு மேகமென்றும் நாகமென்றும் மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும் சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும் தாயான வத்துவென்றும் பதியின் பேரே.

15. பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன் பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்;
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்; பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்;
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்; சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்; நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்;

16. பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்; விள்ளாதே இந்த நன்னூலிருக்கு தென்று
கருத்துடனே அறிந்து கொண்டு கலைமா றாதே காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு:
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்; சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே.

ஞானம் – 5

1. கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா! கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சாற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்; துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.

2. கூடப்பா துரியமென்ற வாலை வீடு கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்:
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு: நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும் ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்; செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே.

3. ஆமென்ற பூர்ணஞ்சுழு முனையிற் பாராய்: அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார்
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு; மற்றொன்றும் பூசையல்ல மகனே! சொன்னேன்;
நாமென்ற பரமனல்லோ முதலே ழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே.

4. பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும் பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்.
நாடுகின்ற பரமனதோங் கார மாகும் நலம் பெரிய பசுதானே உகாரமாகும்;
நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்; நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்:
ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும் ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே.

5. ஊணியதோர் ஓங்காரம் மேலு முண்டே உத்தமனே சீருண்ட வூணிப்பாரே;
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும் ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்
ஏணியா யிருக்குமடா அஞ்சு வீடே ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப் பாரு:
தோணிபோற் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்குந் துறந்திட்டேனே.

6. துறந்திட்டேன் மேல்மூலங் கீழ்மூ லம்பார்: துயரமாய் நடுநிலையை யூணிப் பாராய்:
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்: அப்பவல்லோ வரைதாக்கும் தாரை காணும்:
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும் ஒளிவெளியும் சிலம்பொலியு மொன்றாய்க் காணும்;
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா! நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே:

7. சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா சுழுமுனையிலோட்டியங்கே காலைப் பாராய்:
அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்: அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி:
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று:
நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா! நாதர்களிலிதையாரும் பாடார் காணே!

8. காணுகின்ற ஒங்கார வட்டஞ் சற்றுக் கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்:
பூணுகின்ற இடைகலையில் பரம்போ லாடும் பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும்
ஆணவங்களான வெல்லா மழிந்து போகும் அத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்.
ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்: ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே.

9. உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே;
அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்.
கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி: கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு
துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே.

10. மூவெழுத்தும் ஈரெழுத்து மாகி நின்ற மூலமதை யறிந்துரைப் போன் குருவுமாகும்;
ஊவெழுத்துக் குள்ளேதா னிருக்கு தப்பா உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்;
யவாருக்குந் தெரியாதே அறிந்தோ மென்றே அவரவர்கள் சொல்வார்க் ளறியா மூடர்:
தேவரோடு மாலயனுந் தேடிக் காணார் திருநடனங் காணமுத்தி சித்தியாமே.

11. ஈரெழுத்து மோரெழுத்து மாகி யாங்கே இயங்கிநிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டுங் கொண்டு வித்திலே முளைத்தெழுந்து விளங்கி நிற்கும்
சீரெழுத்தை யூணிநல்ல வாசி யேறித் தெரு வீதி கடந்தமணி மண்டபத்துச்
சாரெழுத்தி னுட்பொருளாம் பரத்தை நோக்கிச் சார்ந்தவர்க்குச் சித்திமுத்தி தருமே தானே.

12. ஏகமெனு மோரெழுத்தின் பயனைப் பார்த்தே எடுத்துரைத்து மிவ்வுலகி லெவரு மில்லை.
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே அறிந்தமென்பார் மவுனத்தை அவனை நீயும்
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்: விடுத்ததனை யுரைப்பவனே ஆசா னாகும்;
தேகமதி லோரெழுத்தைக் காண்போன் ஞானி திருநடனங் காணமுத்தி சித்தி யாமே.

13. குருவாக உமைபாக னெனக்குத் தந்த கூறரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான் பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள் அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள் ஆகாயம் நின்றநிலை அறியலாமே.

Advertisements