அகப்பேய்ச் சித்தர்

அகப்பேய்ச் சித்தர்

Posted on Updated on

 

மனத்தைப் பேய் என உருவகித்துப் பாடியதால் அகப்பேய்ச் சித்தர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அகம்+பேய்+சித்தர் = மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவரென இவருக்குக் காரணப் பெயராக அமைந்துள்ளது. அகப்பேய்ச் சித்தர் நாயனார் சாதியைச் சேர்ந்தவர். துணி வணிகஞ் செய்து பிழைத்து வந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார்.

வேட்டி, புடவை முதலான துணிமணிகளை வீடு வீடாகச் சென்று விற்கும்போது எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்திருப்பார். அவர்களின் ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள் அவர் மனத்தைத் தொட்டன. மனிதன் துன்பம் இல்லாமல் வாழ முடியாதா? இரவு பகலாகச் சிந்தித்தார். அவ்வாறு பாதிக்கப் படுகிறவர்கள் ஏதாவது விமோசனம் காண வேண்டும் என்று நினைத்தார். தம் மனத்தை அடக்கிட நினைத்தார்.

அப்போது ஏ! என் அகமே! ஆசையால் ஆடுகிறாய்;
ஆணவத்தால் ஆடுகிறாய் ; பாசத்தால் ஆடுகிறாய் ;
வேஷத்தால் ஆடுகிறாய் இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே !
அடங்கிக் கிடக்க மாட்டாயா? என்று குமுறுகிறார்.

நஞ்சுண்ண வேண்டாமே – அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்சம் அலையாதே – அகப்பேய்
நீ ஒன்றும் சொல்லாதே

என்று பாடி, மனம் பேய் போன்று அலைவதைத் தடுத்து நிலைநிறுத்தி விடு என்று அறிவுரை கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர். இவரது நூல்களுள் வாத வைத்தியம், யோக ஞானப் பாடல்கள் பரிபாஷைகளைப் பெற்று, கடினமானதாக அமைகின்றன. (பரிபாஷை :ஒவ்வொரு துறையிலும் அதற்கே உரிய கலைச்சொற்கள் உண்டு. அவற்றைப் பரிபாஷை என்று குறிப்பிடுவார்கள்.) மேலும் அகப்பேய்ச் சித்தர் பாடல் 90, பூரண ஞானம் 15 என்ற நூல்கள் யோக ஞான சாஸ்திரத் திட்டு ஏழாம் பாகத்தில் (தாமரை வெளியீடு) உள்ளன. அகப்பேய்ச் சித்தர் திருவையாற்றில் சித்தியடைந்தார் என்பர்.

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது. மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார்.

மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் “அகப்பேய் சித்தர் பாடல்கள் 90” என்ற நூலை இயற்றினார். “அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான்”, என்பது இவரின் வாக்கு. இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை: அகப்பேய் சித்தர் பாடல் – 90 அகப்பேய் பூரண ஞானம். இவர் சித்தியடைந்த திருத்தலம் : – திருவையாறு.

தியானச்செய்யுள் இலை உடையுடன் கலை உருவாய் காட்சி தரும் காரியசித்தி சுவாமியே மாறாத சித்தியை மரப்பொந்தினில் பெற்ற மங்காச் செல்வரே அசைகின்ற புத்தியை இசைக்கின்ற சித்தியால் இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே. தன்னை அறியவேண்டும் – அகப்பேய்! சாராமல் சாரவேண்டும் பிள்ளை அறிவதெல்லாம் அகப்பேய்! பேய் அறிவு ஆகும் அடி ஒப்பனை அல்லவடி – அகப்பேய்! உன் ஆனை சொன்னேனே! அப்புடன் உப்பெனவே – அகப்பேய்! ஆராய்ந்திருப்பாயே! கருத்து: தன்னை அறியவேண்டும் – தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும்.

நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார்.

தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர். அகப்பேய் சித்தர்

பூசை முறைகள்:

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் சுவானியின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்கான தியானச் செய்யுளை மனமுருகக் கூற வேண்டும். பின்பு பின்வருன் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களைக் காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தைப் போக்குபவரே போற்றி!
7. சங்கீதப்பிரியரே போற்றி!
8. சூரியன் சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூசை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்கு காட்சியளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் சுவாமியே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் அகப்பேய் சித்தரே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக இளநீர் (வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பழம் பால் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்ட வேண்டும்.

நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ அகப்பேய் சித்தரின் பூசை பலன்கள்:

இவர் நவக்கிரகத்தில் குரு பகவானைப் பிரதிபலிப்பவர்.

வியாழக்கிழமை இவரை பூசிக்க சிறந்த நாள். இவரை வழிபட்டால்,

1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷ்ங்கள் அகலும்.
2. பணப்பிரச்சினைகள், புத்திர பாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினை போன்றவை அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும்.
4. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
5. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
6. கொடுக்கல், வாங்கல், பிரச்சினை வழக்குகள் அகலும்.
7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.
8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

மருதிருவர் பெற்ற சாபம் சிவகங்கை அருகே உள்ள காளையார்கோவில் பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர்.

1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. கருவறைக்குள் மாமிச பண்டங்கள் மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.

பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஓற்றரை நியமித்தார் மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.

சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர். மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார். மண்ணுக்குள் புதைக்கப்பட்டார் அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.

அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். மருதிருவர்களுக்கு சாபம் தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார். அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.

ஜீவ சமாதி :

அகப்பேய்ச் சித்தரின் கொளஞ்சியப்பர் ஆலயம் – விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். பெருமை மிக்க அருட்கூடமாய் திகழும் இத்தலமானது சித்தர் பூமி என்கிற நம்பிக்கை நிறைவாய் இருக்கிறது. பாம்பாட்டிச் சித்தரின் குருவாகிய அகப்பேய் சித்தர் இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போன்று கோரக்கர் ஜீவ சமாதி கொண்ட 12 தலங்களில் இதுவும் ஒன்றென சொல்கிறார்கள்.

பெரும்பாலும் சித்தர் சமாதிகளில் சிவலிங்கம் தான் இருக்கும். சிலவிடங்களில் விநாயகர் இருப்பார் , சீர்காழி சட்டைநாதர் சமாதி , விருத்தாசலம் பாம்பாட்டி சித்தர் மற்றும் நாகப்பட்டினம் அழுகன்னி சித்தர் சமாதிகளில் பலிபீடம் தான் இருக்கிறது . இங்கும் அருகருகேயுள்ள இரண்டு மூல ஸ்தானத்தில் ஒன்றில் விநாயகரும் மற்றொன்றில் பலிபீடமும் அமைந்துள்ளது .

மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் அருள்பாலிக்க கூடிய இவ்விடமே அகப்பேய் சித்தரின் சமாதியாகும் .  மணிமுத்தாற்றை தீர்த்தமாகவும், கொளஞ்சி மரத்தை தல விருட்சமாகவும் கொண்ட இத்தலத்தில் சித்தர்களின் அருளும், சிவனின் சாந்நித்யமும், குமரக் கடவுளின் நீதி பரிபாலனமும் நிறைந்திருக்கிறது. தற்போது இங்கு சித்தர்கள் மண்டபம் ஒன்று அமைத்துள்ளார்கள் அருமையாக உள்ளது ,, கோவில் பின்புறம் மான்கள் இருப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாகும் .. இவர் இங்கு கோயில் கொண்ட கதையும் சுவாரஸ்யமானது. >> இத்தலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்தது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து கொண்டு மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டியபடி அந்த பக்கம் செல்வார்கள். காலை சுமார் பத்து மணிக்கு செல்லும் அவர்கள் அந்தி சாய்வதற்குள் வீடு திரும்பி விடுவார்கள். அந்த அளவுக்கு மனித நடமாட்டம் குறைந்த காட்டுப்பகுதியாக விளங்கியது. >> எல்லா மாடுகளும் பால் தருகிறது . ஆனால் ஒரு வெள்ளைப் பசு மட்டும் நான்கைந்து நாட்களாக சொட்டு பால் கூட தர மாட்டேங்குதே என்று கவலையுடன் இருந்த பண்ணையார் ஒரு நாள் அப்பசுவை கண்காணித்தார்.ஒருநாள் தோட்டத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது அந்த வெள்ளைப் பசு மட்டும் தனியாக ஒரு புதருக்குள் சென்றதை கவனித்த பண்ணையார் அதை பின் தொடர்ந்து சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி கண்டு அதிர்ந்து நின்றார். >> புதரின் அருகே சென்றதும், பசு சுற்றும் முற்றும் பார்த்து, தனது கண்களை மூடி நின்றது. அதன் காம்பிலிருந்து தானாக பால் பொழிந்து கொண்டிருந்தது. பசுவின் அருகில் சென்ற பண்ணையார் ஆதூரமாய் அதைத் தொட்டார். கண் திறந்த பசு, தன் பணி முடிவடைந்த நிலையில் அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தது. பால் பொழிந்த இடம் ஒரு கல் பீடமாக இருக்க கண்டார்.ஊராரிடம் நடந்ததை சொல்லி கூட்டி வந்து காட்டினார். இவர் குமரக்கடவுள் என்று உணர்ந்த மக்கள் கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே தோன்றியதால் கொளஞ்சியப்பர் என்று திருநாமம் சூட்டி வழிபட்டார்கள். >> சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் கோயிலின் அழகிய ராஜகோபுரம் காண்பவர் கண்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது உள்ளே சென்றவுடன் பலிபீடம், கொடிமரம், மயில் ஆகியவற்றைக் கடந்து துவாரபாலகர்களின் அனுமதியோடு உள்ளே செல்லும் நாம் கருவறைகளைக் காண்கிறோம். ஒன்றில் சித்தி விநாயகர். அண்ணனின் அருகே அருவமாய், சுயம்புவாய் தோன்றிய கொளஞ்சியப்பர் வீற்றிருக்கிறார். விநாயகருக்கும், கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் மூன்றடி உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. >> இத்தலத்தில் ‘பிராது கட்டுதல்’ என்ற ஒரு வழிபாடு இருக்கிறது. கோயிலின் பிரகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு…. நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை, பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இக்கோயிலில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பெண்ணெய் மருந்து தரும் வழக்கமும் இருக்கிறது திருத்தல வரலாறு : விருதாச்சலத்திற்கு வருகை தந்த சுந்தரர் சிவஅடியார்களுடன் சிவாலய தரிசனம் செய்து அந்ததந்த தல நாதனையும், தேவியையும் தமிழ் மணக்க, உள்ளம் உருகச் செய்யும் பாடல்களால் ஆராதித்த இவர் பழமலையை அடைந்தார். சுந்தரர் இது என்ன ஊர்? என்று தொண்டர் ஒருவரிடம் கேட்டார். இவ்வூர் பெயர் பழமலை என்னும் விருதாச்சலம். பரமனின் திருநாமம் பழமலைநாதர், அம்பிகை விருத்தாம்பிகை என்று பதில் கூறிய தொண்டரிடம் ஊரும் பழமலை, அம்பாளும் கிழவி, அரனோ தொண்டுக்கிழம் இவர்களை போற்றிப் பாடி ஆகப்போவது ஒன்றுமில்லை நடையை கட்டுவோம் என்று அலட்சியமாக கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தார் சுந்தரர். பிரபஞ்சத்திற்கே ஆதாரமான சிவபெருமான் மெல்ல சிரித்தார். அன்னையோ அடுத்து நடக்க போவதை அறிந்து கொள்ளும் ஆவலோடு ஈசனின் முகம் பார்த்து நின்றாள். பழமலைநாதர் தனது ஞானக்குழந்தையான முருகனிடம் சுந்தரருக்கு பாடம் புகட்டும்படி அருளாணை இட்டார். வேடனாய் வடிவெடுத்த வேலவன் சுந்தரர் கூட்டத்தை சுற்றி வளைத்தார். நாணேற்றி அம்பின் முனையில் நிறுத்தினார். அஞ்சி நின்ற சுந்தரர் வசமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துக்கொண்டார் முருகன். அவற்றைத் திரும்பத் தரும்படி கெஞ்சினார் சுந்தரர். வேலவன் பழமலை வந்து பெற்றுக்கொள் என்று கம்பீரமாய் கட்டளை இட்ட போதுதான், தான் ஈசனை மதிக்காமல் வந்தது தவறு என்பதை உணர்ந்த சுந்தரர் உடனே பழமலை சென்று ஈசனை பாடி துதித்தார். உடனே இறையருள் பெற்றார். ஈசனின் ஆணைப்படி பழமலை பதியின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாய் அமர்ந்தார் வேலவன். அமைவிடம் : கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாளநல்லூர் கொளஞ்சி யப்பர் திருக்கோயில். இத்தலத்திற்கு செல்ல விருத்தாசலத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதிகள் இருக்கின்றன. இங்கே இன்னொரு வசதி, மற்ற கோயில்களைப் போல மதிய வேளையில் நடை சாத்தப்படாததுதான். காலை 6 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 14 மணிநேரம் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.

 

Advertisements

அகப்பேய்ச் சித்தர்

Posted on

 

1. நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய்!
நாயகன் தாள்பெறவே
நெஞ்சு மலையாதே அகப்பேய்!
நீஒன்றுஞ் சொல்லாதே.

2. பராபர மானதடி அகப்பேய்!
பரவையாய் வந்ததடி
தராதலம் ஏழ்புவியும் அகப்பேய்!
தானே படைத்தபடி

3. நாத வேதமடி அகப்பேய்!
நன் நடம் கண்டாயோ?
பாதஞ் சத்தியடி அகப்பேய்!
பரவிந்து நாதமடி

4. விந்து நாதமடி அகப்பேய்!
மெய்யாக வந்ததடி:
ஐந்து பெரும்பூதம் அகப்பேய்!
அதனிடம் ஆனதடி.

5. நாலுபாதமடி
நன்னெறி கண்டாயே: அகப்பேய்!
மூல மானதல்லால்
முத்தி அல்லவடி அகப்பேய்!

6. வாக்காதி ஐந்தடியோ
வந்த வகைகேளாய்: அகப்பேய்!
ஒக்கம் அதானதடி
உண்மையது அல்லவடி. அகப்பேய்!

7. சத்தாதி ஐந்தடியோ
சாத்திரம் ஆனதடி; அகப்பேய்!
மித்தையும் ஆகுமடி
மெய்யது சொன்னேனே அகப்பேய்!

8. வசனாதி ஐந்தடியோ அகப்பேய்!
வண்மையாய் வந்ததடி;
தெசநாடி பத்தேடி
திடன்இது கண்டாயே. அகப்பேய்!

9. காரணம் ஆனதெல்லாம்
கண்டது சொன்னேனே; அகப்பேய்!
மாரணங் கண்டாயே
வந்த விதங்கள் எல்லாம் அகப்பேய்!

10. ஆறு தத்துவமும் அகப்பேய்!
ஆகமஞ் சொன்னதடி;
மாறாத மண்டலமும் அகப்பேய்!
வந்தது மூன்றடியே.

11. பிருதிவி பொன்னிறமே அகப்பேய்!
பேதைமை அல்லவடி
உருவது நீரடியோ அகப்பேய்!
உள்ளது வெள்ளையடி.

12. தேயு செம்மையடி அகப்பேய்!
திடனது கண்டாயே.
வாயு நீலமடி அகப்பேய்!
வான் பொருள் சொல்வேனே.

13. வான மஞ்சடியோ அகப்பேய்!
வந்தது நீ கேளாய்;
ஊனமது ஆகாதே அகப்பேய்!
உள்ளது சொன்னேனே

14. அகாரம் இத்தனையும் அகப்பேய்!
அங்கென்று எழுந்ததடி;
உகாரங் கூடியடி அகப்பேய்!
உருவாகி வந்ததடி

15. மகார மாயையடி அகப்பேய்!
மலமது சொன்னேனே;
சிகார மூலமடி அகப்பேய்!
சிந்தித்துக் கொள்வாயே

16. வன்னம் புவனமடி அகப்பேய்!
மந்திர தந்திரமும்;
இன்னமும் சொல்வேனே அகப்பேய்!
இம்மென்று கேட்பாயே

17. அத்தி வரைவாடி
ஐம்பத்தோர் அட்சரமும் அகப்பேய்!
மித்தையாங் கண்டாயே
மெய்யென்று நம்பாதே. அகப்பேய்!

18. தத்துவம் ஆனதடி
சகலமாய் வந்ததடி; அகப்பேய்!
புத்தியுஞ் சொன்னேனே
பூத வடிவலவோ? அகப்பேய்!

19. இந்த விதங்களெல்லாம்
எம்இறை அல்லவடி அகப்பேய்!
அந்த விதம்வேறே
ஆராய்ந்து காணாயோ? அகப்பேய்!

20. பாவந் தீரவென்றால்
பாவிக்க லாகாதே; அகப்பேய்!
சாவதும் இல்லையடி
சற்குரு பாதமடி அகப்பேய்!

21. எத்தனை சொன்னாலும்
என் மனந் தேறாதே! அகப்பேய்!
சித்து மசித்தும் விட்டே
சேர்த்து நீ காண்பாயே. அகப்பேய்!

22. சமய மாறுமடி
தம்மாலே வந்தவடி அகப்பேய்!
அமைய நின்றவிடம்
ஆராய்ந்து சொல்வாயே. அகப்பேய்!

23. ஆறாரும் ஆகுமடி
ஆகாது சொன்னேனே அகப்பேய்!
வேறே உண்டானால்
மெய்யாது சொல்வாயே. அகப்பேய்!

24. உன்னை அறிந்தக்கால் அகப்பேய்!
ஒன்றையும் சேராயே.
உன்னை அறியும்வகை அகப்பேய்!
உள்ளது சொல்வேனே.

25. சரியை ஆகாதே
சாலோகங் கண்டாயே அகப்பேய்!
கிரியை செய்தாலும்
கிட்டுவது ஒன்றுமில்லை. அகப்பேய்!

26.யோகம் ஆகாதே
உள்ளது கண்டக்கால்; அகப்பேய்!
தேக ஞானமடி
தேடாது சொன்னேனே. அகப்பேய்!

27. ஐந்தலை நாகமடி
ஆதாயங் கொஞ்சமடி அகப்பேய்!
இந்த விடந்தீர்க்கும்
எம்இறை கண்டாயே. அகப்பேய்!

28. இறைவன் என்றதெல்லாம்
எந்த விதமாகும்? அகப்பேய்!
அறைய நீ கேளாய்
ஆனந்த மானதடி. அகப்பேய்!

29. கண்டு கொண்டேனே
காதல் விண்டேனே அகப்பேய்!
உண்டு கொண்டேனே
உள்ளது சொன்னாயே. அகப்பேய்!

30. உள்ளது சொன்னாலும்
உன்னாலே காண்பாயே. அகப்பேய்!
கள்ளமுந் தீராதே
கண்டார்க்குக் காமமடி. அகப்பேய்!

31. அறிந்து நின்றாலும்
அஞ்சார்கள் சொன்னேனே; அகப்பேய்!
புரிந்த வல்வினையும்
போகாதே உன்னை விட்டு அகப்பேய்!

32. ஈசன் பாசமடி
இவ்வண்ணங் கண்டதெல்லாம் அகப்பேய்!
பாசம் பயின்றதடி
பரமது கண்டாயே. அகப்பேய்!

33. சாத்திர சூத்திரமும்
சங்கற்பம் ஆனதெல்லாம் அகப்பேய்!
பார்த்திடல் ஆகாதே
பாழ் பலங்கண்டாயே. அகப்பேய்!

34. ஆறு கண்டாயோ
அந்த வினை தீர; அகப்பேய்!
தேறித் தெளிவதற்கே
தீர்த்தமும் ஆடாயே. அகப்பேய்!

35. எத்தனை காலமுந்தான்
யோகம் இருந்தாலென்? அகப்பேய்!
முத்தனு மாவாயோ?
மோட்சமும் உண்டாமோ? அகப்பேய்!

36. நாச மாவதற்கே
நாடாதே சொன்னேனே அகப்பேய்!
பாசம் போனாலும்
பசுக்களும் போகாவே அகப்பேய்!

37. நாணம் ஏதுக்கடி
நல்வினை தீர்ந்தக்கால்? அகப்பேய்!
காண வேணு மென்றால்
காணக் கிடையாதே. அகப்பேய்!

38. சும்மா இருந்துவிடாய்
சூத்திரஞ் சொன்னேனே. அகப்பேய்!
சும்மா இருந்தவிடம்
சுட்டது காண்டாயே. அகப்பேய்!

39. உன்றனைக் காணாதே
ஊனுள் நுழைந்தாயே! அகப்பேய்!
என்றனைக் காணாதே
இடத்தில் வந்தாயே! அகப்பேய்!

40. வானம் ஓடிவரில்
வந்தும் பிறப்பாயே! அகப்பேய்!
தேனை உண்ணாமல்
தெருவோடு அலைந்தாயே. அகப்பேய்!

41. சைவ மானதடி
தானாய் நின்றதடி; அகப்பேய்!
சைவம் இல்லையாகில்
சலம் வருங் கண்டாயே. அகப்பேய்!

42. ஆசை அற்றவிடம்
ஆசாரங் கண்டாயே அகப்பேய்!
ஈசன் பாசமடி
எங்ஙனஞ் சென்றாலும் அகப்பேய்!

43. ஆணவ மூலமடி
அகாரமாய் வந்ததடி அகப்பேய்!
கோணும் உகாரமடி
கூடப் பிறந்ததுவே. அகப்பேய்!

44. ஒன்றும் இல்லையடி
உள்ளபடி யாச்சே அகப்பேய்!
நன்நிலை தீதிலையே
நாணமும் இல்லையடி அகப்பேய்!

45. சும்மா இருந்தவிடம்
சுட்டது சொன்னேனே; அகப்பேய்!
எம்மாயம் இதறியேன்
என்னையுங் காணேனே! அகப்பேய்!

46. கலைகள் ஏதுக்கடி?
கண்டார் நகையாரோ அகப்பேய்!
நிலைகள் ஏதுக்கடி?
நீயார் சொல்வாயே. அகப்பேய்!

47. இந்த அமிர்தமடி
இரவி விடமோடி அகப்பேய்!
இந்து வெள்ளையடி
இரவி சிவப்பாமே. அகப்பேய்!

48. ஆணல பெண்ணலவே
அக்கினி கண்டாயே; அகப்பேய்!
தாணுவும் இப்படியே
சற்குரு கண்டாயே. அகப்பேய்!

49.என்ன படித்தாலும்
எம்முறை யாகாதே; அகப்பேய்!
சொன்னது கேட்டாயே
சும்மா இருந்துவிடு. அகப்பேய்!

50. காடும் மலையுமடி
கடுந்தவம் ஆனால் என்? அகப்பேய்!
வீடும் வெளியாமோ?
மெய்யாக வேண்டாவோ? அகப்பேய்!

51. பரத்தில் சென்றாலும்
பாரிலே மீளுமடி; அகப்பேய்!
பரத்துக்கு அடுத்த இடம்
பாழது கண்டாயே. அகப்பேய்!

52. பஞ்ச முகமேது
பஞ்சு படுத்தாலே? அகப்பேய்!
குஞ்சித பாதமடி
குருபாதங்கண்டாயே. அகப்பேய்!

53. பங்கம் இல்லையடி
பாதம் இருந்தவிடம்; அகப்பேய்!
கங்கையில் வந்ததெல்லாம்
கண்டு தெளிவாயே. அகப்பேய்!

54. தானற நிறைவிடம்
சைவங் கண்டாயே. அகப்பேய்!
ஊனற நின்றவர்க்கே
ஊனமொன்று இல்லையடி அகப்பேய்!

55. சைவம் ஆருக்கடி?
தன்னை அறிந்தவர்க்கே அகப்பேய்!
சைவ மானவிடம் அகப்பேய்!
சற்குரு பாதமடி அகப்பேய்!

56. பிறவி தீரவென்றால்
பேதகம் பண்ணாதே அகப்பேய்!
துறவி யானவர்கள்
சும்மா இருப்பார்கள். அகப்பேய்!

57. ஆரலைந்தாலும்
நீயலையாதேயடி; அகப்பேய்!
ஊர லைந்தாலும்
ஒன்றையும் நாடாதே. அகப்பேய்!

58. தேனாறு பாயுமடி
திருவடி கண்டவர்க்கே; அகப்பேய்!
ஊனாறு மில்லையடி
ஒன்றையும் நாடாதே அகப்பேய்!

59.வெள்ளை கறுப்பாமோ?
வெள்ளியுஞ் செம்பாமோ? அகப்பேய்!
உள்ளது உண்டோடி
உள் ஆணை கண்டாயே; அகப்பேய்!

60. அறிவுள் மன்னுமடி
ஆதாரம் இல்லையடி அகப்பேய்!
அறிவு பாசமடி
அருளது கண்டாயே. அகப்பேய்!

61. வாசியி லேறியபடி
வான் பொருள் தேடாயோ? அகப்பேய்!
வாசியில் ஏறினாலும்
வாராது சொன்னேனே அகப்பேய்!

62. தூராதி தூரமடி
தூரமும் இல்லையடி! அகப்பேய்!
பாராமற் பாரடியோ
பாழ்வினைத் தீரவென்றால் அகப்பேய்!

63. உண்டாக்கிக் கொண்டதல்ல
உள்ளது சொன்னேனே: அகப்பேய்!
கண்டார்கள் சொல்வாரோ
கற்பனை அற்றதடி அகப்பேய்!

64. நாலு மறைகாணா
நாதனை யார் காண்பார்? அகப்பேய்!
நாலு மறை முடிவில்
நற்குரு பாதமடி. அகப்பேய்!

65. மூலம் இல்லையடி
முப்பொருள் இல்லையடி; அகப்பேய்!
மூலம் உண்டானால்
முத்தியும் உண்டாமே. அகப்பேய்!

66. இந்திர சாலமடி
எண்பத் தொருபதமும் அகப்பேய்!
மந்திரம் அப்படியே
வாயைத் திறவாதே. அகப்பேய்!

67. பாழாக வேணுமென்றால்
பார்த்ததை நம்பாதே; அகப்பேய்!
கேளாமற் சொன்னேனே
கேள்வியும் இல்லையடி. அகப்பேய்!

68. சாதி பேதமில்லை
தானாகி நின்றவர்க்கே; அகப்பேய்!
ஓதி உணர்ந்தாலும்
ஒன்றுந்தான் இல்லையடி அகப்பேய்!

69. சூழ வானமடி
சுற்றி மரக்காவில் அகப்பேய்!
வேழம் உண்டகனி
மெய்யது கண்டாயே. அகப்பேய்!

70. நானும் இல்லையடி
நாதனும் இல்லையடி; அகப்பேய்!
தானும் இல்லையடி;
சற்குரு இல்லையடி. அகப்பேய்!

71. மந்திரம் இல்லையடி
வாதனை இல்லையடி; அகப்பேய்!
தந்திரம் இல்லையடி
சமயம் அழிந்தததடி. அகப்பேய்!

72. பூசை பசாசமடி
போதமே கொட்டமடி! அகப்பேய்!
ஈசன் மாயையடி
எல்லாமும் இப்படியே! அகப்பேய்!

73. சொல்ல லாகாதே
சொன்னாலுந் தோடமடி அகப்பேய்!
இல்லை இல்லையடி
ஏகாந்தங் கண்டாய். அகப்பேய்!

74. தத்துவத் தெய்வமடி
சதாசிவ மானதடி: அகப்பேய்!
மற்றுள்ள தெய்வமெல்லாம்
மாயை வடிவாமே. அகப்பேய்!

75. வார்த்தை அல்லவடி
வாச மகோசரத்தே அகப்பேய்!
ஏற்ற தல்லவடி
என்னுடன் வந்ததல்ல அகப்பேய்!

76. சாத்திரம் இல்லையடி
சலனங் கடந்ததடி; அகப்பேய்!
பார்த்திடல் ஆகாதே
பவானைக் கெட்டாதே. அகப்பேய்!

77. என்ன படித்தால் என்?
ஏதுதான் செய்தால் என்? அகப்பேய்!
சொன்ன விதங்களெலாம்
சுட்டது கண்டாயே. அகப்பேய்!

78.தன்னை அறியவேணும்
சாராமற் சாரவேணும்; அகப்பேய்!
பின்னை அறிவதெலாம்
பேயறி வாகுமடி அகப்பேய்!

79. பிச்சை எடுத்தாலும்
பிறவி தொலையாதே; அகப்பேய்!
இச்சை அற்றவிடம்
எம்இறை கண்டாயே; அகப்பேய்!

80. கோலம் ஆகாதே
குதர்க்கம் ஆகாதே: அகப்பேய்!
சாலம் ஆகாதே
சஞ்சலம் ஆகாதே அகப்பேய்!

81. ஒப்பனை அல்லவடி
உன் ஆணை சொன்னேனே அகப்பேய்!
அப்புடன் உப்பெனவே
ஆராய்ந்து இருப்பாயே. அகப்பேய்!

82. மோட்சம் வேண்டார்கள்
முத்தியும் வேண்டார்கள்; அகப்பேய்!
தீட்சை வேண்டார்கள்
சின்மய மானவர்கள். அகப்பேய்!

83. பாலன் பிசாசமடி
பார்த்தக்கால் பித்தனடி அகப்பேய்!
கால மூன்றுமல்ல
காரியம் அல்லவடி. அகப்பேய்!

84. கண்டதும் இல்லையடி
கண்டவர் உண்டானால் அகப்பேய்!
உண்டது வேண்டடியோ
உன் ஆணை சொன்னேனே. அகப்பேய்!

85. அஞ்சையும் உண்ணாதே
ஆசையும் வேண்டாதே; அகப்பேய்!
நெஞ்சையும் விட்டுவிடு
நிட்டையில் சாராதே. அகப்பேய்!

86. நாதாந்த உண்மையிலே
நாடாதே சொன்னேனே; அகப்பேய்!
மீதான சூதானம்
மெய்யென்று நம்பாதே. அகப்பேய்!

87. ஒன்றோடு ஒன்றுகூடில்
ஒன்றுங் கெடுங்காணே: அகப்பேய்!
நின்ற பரசிவமும்
நில்லாது கண்டாயே. அகப்பேய்!

88. தோன்றும் வினைகளெலாம்
சூனியங் கண்டாயே; அகப்பேய்!
தோன்றாமல் தோன்றிவிடும்
சுத்த வெளிதனிலே அகப்பேய்!

89. பொய்யென்று சொல்லாதே
போக்கு வருத்துதானே அகப்பேய்!
மெய்யென்று சொன்னக்கால்
வீடு பெறலாமே. அகப்பேய்!

90. வேதம் ஓதாதே
மெய் கண்டோம் என்னாதே; அகப்பேய்!
பாதம் நம்பாதே
பாவித்துப் பாராதே. அகப்பேய்!