காகபுசுண்டர் காவியம்

Posted on Updated on

காகபுசுண்டர் காவியம் 33

காப்பு

கணபதியே அடியாகி அகில மாகிக்
காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக்
குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக்
குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக்
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற
காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப்
பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை
பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே.

நூல்:

1. எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்:
எந்நேரங் காமசிந்தை யிதுவே நோக்கும்
பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன
பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ?
சண்ணியுண்ணி யிந்நூலை நன்றாய்ப் பாரு
சக்கரமு மக்கரமும் நன்றாய்த் தோணும்;
தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ?
சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே.

2. புகட்டினாள் தசதீட்சை மகிமை தன்னைப்
பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும்
சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள்
சந்திரபுட் கரணிதனீல் தானஞ் சொன்னாள்
பகட்டினா ளுலகமெல்லாம் முக்கோணத்திற்
பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னாள்
அகட்டினா ளைவர்களை யீன்றா ளம்மன்
அந்தருமை சொல்லவினி அடியான் கேளே.

3. கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற்
கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது
வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி
வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ
கோளப்பா செயகால லயந்தா னெங்கே?
குரு நமசி வாயமெங்கே? நீங்க ளெங்கே?
ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே?
அறுத்தெனக்கு இன்னவகை யுரைசெய் வீரே.

4. இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில்
எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ
சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன்
சொல்லுவான் குழந்தையவன் கலக லென்ன
அன்னை தனை முகம்பார்த்து மாலை நோக்கி
அரிகரி! ஈசர் மொழிக் குரைநீர் சொல்வீர்;
பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி
பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே?

5. எங்கென்று மார்க்கண்ட னெடுத்துச் சொல்ல
என்ன சொல்வா ரேகவெளிச் சிவனை நோக்கிக்
கங்கைதனைப் பூண்டானே! கடவு ளோனே!
காரணமே! பூரணமே! கண்ணே! மின்னே!
சங்கையினி யேதறிவேன் மகுடச் சோதி
சந்திரனைப் பூண்டிருந்து தவம்பெற் றோனே!
மங்கையிடப் பாகம்வைத்த மகுடத் தோனே!
மாமுனிகள் ரிடிசித்தர் அறிவார் காணே.

6.அறிவார்கள் ரிடிசித்தர் முனிவேர் ரையா!
அரகரா! அதுக்குக்கோ ளாறென் றக்கால்
பொறியாகப் புசுண்டமுனி சொல்வா ரையா!
போயழைக்க கோளாறி வசிட்ட ராகும்
நெறியாக இவ்வகைநா னறிவே னையா!
நிலைத்தமொழிபுசுகண்டரலால் மற்றோர் சொல்லார்;
புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர்
பொருள் ஞானக் கடவுளப்போ மகிழ்ச்சி பூண்டார்.

7. மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே!
வரலாறு நீ யெவ்வா றறிவாய் சொல்வாய்;
சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும்
சூட்சமிந்த மாலோன்றன் வயிற்றிற் சேர்வான்
அகட்சியுடன் ஆலிலைமே லிருப்பாரை யா!
அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம்
இகழ்ச்சியுட னிவதற்குப்பின் எவரோ காணேன்
இவ்வார்த்தை நானறியே னவரைக் கேளீர்.

8. கேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ
கிருபையுட னிவ்வளவு மறிவா யோடா?
ஆளுகின்ற ஈசனுநா மறியோ மிந்த
அருமைதனை நீயறிந்தா யருமைப் பிள்ளாய்!
காளகண்டர் மாயோனைச் சொல்வீ ரென்றார்
கருவேது நீயறிந்த வாறு மேது!
பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற
பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே.

9.பரமான பரமகயி லாச வாசா!
பார்த்திருப்போ மாலிலைமேற் பள்ளி யாகித்
தரமான புசுண்டமுனி யந்த வேள
சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தி னாலே
துரமாக எவ்வாறோ திரும்பப் போவார்
சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான்
வரமா னவரமளித்த சூரன வாழ்வே
வசிட்டார்போ யழைத்துவரத் தகுமென் றாரே.

10. தகுமென்ற வார்த்தைதனை யறிந்தே யீசர்
தவமான வசிட்டரே புசுண்டர் சாகை
அக மகிழ அங்கேகி அவர்க்கு ரைத்தே
அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன
செகமான செகமுழுது மாண்ட சோதி
திருவடிக்கே நமக்கரித்துத் திரும்பி னார்பின்
உகமானந் தனையறிந்தும் அரனார் சொன்ன
உளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே.

11. காகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற்
காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர்
ஏகமதா யெட்டான வசிட்ட ரே! நீர்
எங்குவந்தீர்? வாரும் என்றே இடமு மீயத்
தாகமுடன் ஈசரும்மை யழைக்கச் சொன்னார்
சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்:
பாகமுடன் எட்டான விவரந் தன்னைப்
பத்துமெய்ஞ் ஞானபொரு ளருள்பெற் றோரே.

12. பெற்றோரே யென்றுரைத்தீர் வசிட்டரே! நீர்
பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்:
சத்தான சத்துகளு மடங்கும் காலம்
சக்கரமுந் திரும்பி விட்டாற் சமயம் வேறாம்
சித்தான பஞ்சவர்க ளொடுங்கும் போது
சேரவே ரிடிமுனிவர் சித்த ரோடு
முத்தாகப் பஞ்செழுத்தி லொடுக்க மாவார்
முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட் டீரே.

13. முளைத்திட்டீ ரித்தோடெட்டுவிசை வந்தீர்
முறையிட்டீ ரிவ்வண்ணம் பெருமை பெற்றீர்:
களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்:
கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவ லென்ன?
கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார்
கிளர்நான்கு யுகந்தோறு மிந்தச் செய்கை
பிழைத்திட்டுப் போவமென்றா லங்கே போவோம்
பேய்பிடித்தோர் வார்த்தைசொல்ல நீர்வந்தீரே.

14. வந்தீரே வசிட்டரே! இன்னங் கேளும்:
வளமைமதான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி
இந்தமா மரக்கொம்பி லிருந்தே னிப்போ
திதுவேளை யெவ்வளவோ சனமோ காணும்
அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார்
அவர்களெல்லாம் ரிடியோகி சித்த ரானார்
சந்தேக முமக்குரைக்கப் போக தையா!
சாமிக்கே சொல்லுமையா இதோ வந் தேனே.

15. வந்தேனே யென்றுரைத்த வாறு கொண்டு
வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி
இருந்தேனே முனிநாதா! சரணங் காப்பீர்
என்று சிவன் சபைநாடி முனிவர் வந்தார்:
மைந்தனையே யின்றருளுங் கடவுள் நாதா!
மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்:
சித்தனைசெய் ஈச்சுரனே வந்தேனையா
சிவசிவா இன்னதென்று செப்பி டீரே?

16. செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச்
சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள்
கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம்
குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே?
அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே?
அயன்மாலும் சிவன் மூவ ரடக்க மெங்கே?
ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே?
ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே!

17. உரையென்றீ ருந்தமக்குப் புத்தி போச்சு:
உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு
பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்:
பரமசிவன் தாமென்னும் பேரும் பெற்றீர்:
இரையென்றால் வாய்திறந்து பட்சி போல்
எல்லோரு மப்படியே இறந்திட்டார்கள்:
நிறையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால்
நிசங்கொள்ளா தந்தரங்கம் நிசங்கொள் ளாதே?

18. கொள்ளமற் போவதுண்டோ மவுன யோகி:
கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்:
உள்ளாக ரிடியொருவரில்லா விட்டால்
யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்;
விள்ளாமற் றீராது முனிவனே! கேள்:
மெஞ்ஞான பரம்புகுந்த அருள் மெய்ஞ் ஞானி:
தள்ளாமற் சபையிலுள்ளோர் ரெல்லார் கேட்கச்
சாற்றிடாய் முனிநாதா! சாற்றிடாயே?

19. சாற்றுகிற னுள்ளபடி யுகங்கள் தோறும்
தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு:
மாற்றுகிறேன் க்ஷணத்தின்முன் னுரைத்துப் போனேன்;
வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்?
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்
திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்
ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது
அரகரா அந்நேரம் நடக்கை கேளே.

20. கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை
கெடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்:
பரமான மவுனமது பரத்திற் சாடும்:
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும்
இருந்தசதா சிவமோடி மணியில் மீளும்
கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார்
ஓகோகோ அண்டமெல்லாங் கவிழ்ந்து போமே.

21.கவிழ்ந்துபோ மப்போது அடியே னங்கே
கருத்துவைத்துத் தியானமொரு தியான முண்டு
தவழ்ந்து போங் காமலப்போ நிறுத்து வேன்யான்
சமையமதி லக்கினிபோல் தம்பங் காணுஞ்
சிவந்த வண்ணம் நீலவுருச் சுடர்விட் டேகும்:
சிவசிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்:
நவந்துஅத னருகேநான் சென்று நிற்பேன்:
நகாரமுத லஞ்செழுத்தும் வரக்காண் பேனே.

22. காண்பேனே நகாரமது மகாரம் புக்கும்
கருத்தான மகாரமது சிகாரம் புக்கும்
தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும்
சிவசிவா வகாரமது யகாரம் புக்கும்
கோண்பேனே வகாரமது சுடரிற் புக்கும்
குருவான சுடரோடி மணியிற் புக்கும்
நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும்
நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக் கேளே.

23. கேளப்பா சிவமோடி அண்டம் பாயும்
கிருபையா யண்டமது திரும்பிப் பாயும்
கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான்
குருவான தசதீட்சை யொன்று மாச்சு
மீளப்பா தம்பமது விளங்குஞ் செய்கை
மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்:
ஆளப்பா நரைத்தமா டேறு வோனே!
அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே.

24. அறிந்திலே னென்றுரைத்த புசுண்ட மூர்த்தி!
அரகரா உன்போல முனியார் காணேன்:
தெரிந்திலே னென்றுரைத்தால் மனங்கே ளாது
சிவனயந்து கேட்கவும்நீ யொளிக்க வேண்டா:
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை
பூரணத்தா லுள்ளபடி புகழ்ந்து சொல்லும்
பரிந்திலேன் மிகப்பரிந்து கேட்டே னையா!
பழமுனியே கிழமுனியே பயன்செய் வாயே.

25. பழமுனிவ னென்றுரைத்தீர் கடவு ளாரே!
பருந்தீப் தமத்தைப் பலுக்கக் கேளும்:
குழுவுடனே தம்பமதில் யானும் போலேன்
கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்:
தழும்பணியச் சாகரங்க ளெங்குந் தானாய்ச்
சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய்
அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய்
அரகரா கண்ணாடி லீலை தானே.

26. லீலைபோற் காணுமுகம் போலே காணும்
நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்:
ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத்துள்ளே
அரகரா சக்கரங்க ளாறுங் காணும்
வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால்
மகத்தான அண்டமது கோவை காணுஞ்
சோலையா யண்டமதிற் சிவந்தான் வீசும்
சிவத்திலே அரகரா பரமுங் காணே.

27. பரத்திலே மணிபி பிறக்கும் மணி யினுள்ளே
பரம்நிற்குஞ் சுடர்வீசும் இப்பாற் கேளும்:
நிரத்திலே சடம்தனில் வகாரங் காணும்
நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும்
வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும்
வரும்போலே சிகாரத்தில் மகரங் காணும்
நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும்
நன்றாமப் பூமியப்போ பிறந்த தன்றே.

28. பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால்
பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம்
கறந்ததையா யிவ்வளவும் அந்த மாது
சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை:
கறந்ததையா உலகமெல்லாங் காமப் பாலைக்
காலடியிற் காக்கவைத்துச் சகல செந்தும்
இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது
எங்கென்றா லுன்னிடத்தி லிருந்தாள் கன்னி.

29. இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம்
இருவருக்கும் நடுவான திவளே மூலம்
தொடக்காக நின்றவளு மிவளே மூலம்
சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம்
அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம்
ஐவருக்குங் குருமூல மாதி மூலம்
கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம்
கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே.

30. கன்னியிவ ளென்றுரைத்தார் புசுண்டமூர்த்தி
கர்த்தரப்போ மனஞ்சற்றே கசங்கி னார்பின்
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த
மார்க்கத்தி லிருப்பதுவோ மவுனப் பெண்ணே!
உன்னிதமா யுன்கருணை யெங்கே காண்போம்
ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள்
கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி
கொலுமுகத்தில் நால்வரும்போய் வணங்கி னாரே.

31. வணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே
மாதுகலி யாணியென வசனித் தார்கள்
வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும்
மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும்
வணங்கினா ரட்டகசந் திகிரி யெட்டும்
வாரிதியுஞ் சேடனுமா லயனு மூவர்
வணங்கினார் மிகவணங்கித் தொழுதா ரப்போ
வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே.

32. அருளீவாள் திருமணியை மாலை பூண்டாள்
அரகரா சின்மயத்தி னீறு பூசிப்
பொருளீவா ளவரவர்க்கும் ஏவல் சொல்லிப்
பொன்றாத பல்லுயிர்க்கைக் கிடங்கள் வேறாய்த்
தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச்
செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித்
திருளீவாள் தாயான சிறிய வாலை
சிவசிவா சூட்சம்பூ ரணமு முற்றே.

33. பூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று
புகன்றுவிட்டுப் புசுண்டருந்தம் பதிக்குச் சென்றார்
காரணத்தி லேவகுத்தே னிந்த ஞானங்
கம்பமணி வாலைகொலுக்கூட்ட மப்பா
நாரணத்தில் நின்றிலங்கும் மவுன மாலை
நாட்டினாள் சிவராச யோகங் கேளு
ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி
ஆதிசக்தி வேதமுத்தி யருள் செய்வாளே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s