நெஞ்சொடு மகிழ்தல்

Posted on

நெஞ்சொடு மகிழ்தல்

1.அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய்
நின்ற நிலை அறிய நேசமுற்றாய், நெஞ்சமே!

2. அங்கங்கு உணர்வாய் அறிவாகி யே நிரம்பி
எங்கெங்கும் ஆனதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே!

3. அலையாத பேரின்ப ஆனந்த வெள்ளத்தில்
நிலையாய் உரு இருந்து நின்றனையே; நெஞ்சமே!

4. பாராமல் பதையாமல் பருகாமல் யாதொன்றும்
ஓராது உணர்வுடனே ஒன்றினையே; நெஞ்சமே!

5. களவிறந்து, கொலையிறந்து, காண்பனவும் காட்சியும்போய்
அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே!

6. பேச்சிறந்து, சுட்டிறந்து, பின்னிறந்து, முன்னிறந்து,
நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய்; நெஞ்சமே!

7. விண்ணிறந்து, மண்ணிறந்து, வெளியிறந்து, ஒளியிறந்து
எண்ணிறந்து நின்றதிலே ஏகரித்தாய்; நெஞ்சமே!

8. பார்த்த இடம் எங்கும் பரம் எனவே உள் புறம்பும்
கோத்தபடி உண்மையெனக் கொண்டனையே நெஞ்சமே!

9. ஊரிறந்து, பேரிறந்து, ஒளியிறந்து, வெளியிறந்து,
சீரிறந்து நின்றதிலே சேர்ந்தனையே; நெஞ்சமே!

10. ஆண்பெண் அலியென்று அழைக்கஅரி தாய் நிறைந்து
காண்ப அரி தாய இடம் கண்ணுற்றாய் நெஞ்சமே!

11. ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே!

12. ஆதியாய் நின்ற அகண்டபரி பூரணத்தைச்
சாதியா நின்ற இடம் சார்வுற்றாய் நெஞ்சமே!

13. விருப்புவெறுப்பு இல்லாத வெட்டவெளி யதனில்
இருப்பே சுகம் என்று இருந்தனையே நெஞ்சமே!

14. ஆரும் உறாப் பேரண்டத்து அப்புறத்தும் இப்புறத்தும்
நீரும் உப்பும் என்ன நிலை பெற்றாய் நெஞ்சமே!

15. உடனாகவே இருந்து உணர அரி யானோடு
கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே; நெஞ்சமே!

16. நெடியகத்தைப் போக்கி, நின்ற சழக்கறுத்துப்
படிகத்துக் கும்பம்போல் பற்றினையே; நெஞ்சமே!

17. மேலாகி எங்கும் விளங்கும் பரம் பொருளில்
பாலூறும் மென் சுவைபோல் பற்றினையே; நெஞ்சமே!

18. நீரொடுதண் ஆலிவிண்டு நீரான வாறேபோல்
ஊரொடுபேர் இல்லானோடு ஒன்றினையே; நெஞ்சமே!

19. இப்பிறப்பைப் பாழ்படுத்தி இருந்தபடி யேஇருக்கச்
செப்ப அரிதாய இடம் சேர்ந்தனையே; நெஞ்சமே!

20. மேலாம் பதங்கள் எல்லாம் விட்டுவிட்டு ஆராய்ந்து
நாலாம் பதத்தில் நடந்தனையே; நெஞ்சமே!

21. கடங்கடங்கள் தோறும் கதிரவன் ஊடாடி
அடங்கும் இடம்தான் அறிந்து அன்புற்றாய்; நெஞ்சமே!

22. கற்றவனாய்க், கேட்டவனாய்க், காணானாய்க், காண்பவனாய்
உற்றவனாய் நின்றதிலே ஒன்று பட்டாய் நெஞ்சமே!

23. நாலு வகைக் கரணம் நல்குபுலன் ஐந்தும் ஒன்றாய்
சீலமுற்று நின்றதிலே சேர்ந்தனையே நெஞ்சமே!

24. விட்டிடமும், தொட்டிடமும், விண்ணிடமும், மண்ணிடமும்
கட்டும்ஒரு தன்மைஎனக் கண்ணுற்றாய்; நெஞ்சமே!

25. எந்தெந்த நாளும் இருந்தபடி யேஇருக்க
அந்தச் சுகாதீதம் ஆக்கினையே; நெஞ்சமே!

26. வாக்கிறந்து நின்ற மனோகோச ரம்தனிலே
தாக்கறவே நின்றதிலே தலைசெய்தாய்; நெஞ்சமே!

27. எத்தேசமும் நிறைந்தே எக்கால மும்சிறந்து,
சித்தாய சித்தினிடம் சேர்ந்தனையே; நெஞ்சமே!

28. தாழாதே நீளாதே தன்மய மாய்நிறைந்து
வாழாதே வாழ மருவினையே; நெஞ்சமே!

29. உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்
கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய்; நெஞ்சமே!

30. வாதனை போய், நிட்டையும்போய், மாமௌன ராச்சியம்போய்
பேதம்அற நின்ற இடம் பெற்றனையே; நெஞ்சமே!

31. இரதம் பிரிந்துகலந்து ஏகமாம் ஆறேபோல்
விரகம் தவிர்ந்து அணல்பால் மேவினையே, நெஞ்சமே!

32. சோதியான் சூழ்பனிநீர் சூறைகொளும் ஆறேபோல்
நீதிகுரு வின்திருத்தாள் நீபெற்றாய்; நெஞ்சமே!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s