காகபுசுண்டர் உபநிடதம்

Posted on Updated on

காகபுசுண்டர் உபநிடதம் – 31

காப்பு

ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு;
அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு;
நீதியா மாரூட ஞானம் பெற்ற
நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு;
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற்
துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
சீவேச ஐக்யமது தெரியுந் தானே.

நூல்

தானென்ற குருவினுப தேசத் தாலே
தனுகரண அவித்தை யெல்லாந் தவறுண்டேபோம்;
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்;
மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்;
நானென்ற பிரபஞ்ச வுற்பத் திக்கு
நாதாநீ தக்யானம் நன்றா யெய்தும்;
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே. 1

பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்?
பதமில்லை யாதெனினும் பவ்ய மில்லை
சேருமிந்தப் பிரமாணந் தானு ணர்ந்து
தெரிவிக்கப் படாதருளிற் சிவசொ ரூபம்;
ஊருகீன்ற காலத்ர யங்க ளாலே
உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும்
சாருமிந்த வுபாதான காரணத்தின்
சம்பந்த மில்லாத சாட்சிதானே. 2

சாட்சிசத்தா யதீதகுணா தீத மாகிச்
சட்சுமனத் தாலறியத் தகாது யாதும்
சாட்சியதே யேதுசா தனமுந் தள்ளிச்
சகலவந்தர் யாமித்வ சர்வ பூத
சாட்சியினை யிவ்வளவவ் வளவா மென்று
தனைக்குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர்ஞான ஞேய ரூபஞ்
சத்தாதி பிரமாதி தானே சொல்வாம். 3

சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன்
தூலகா ரணப்பிரமந் துரியா தீதம்
அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம்
அம்சோகம் அசபாமந் திரத்தி யானம்
செல்லுமவ னேநானென் றபிமா னிக்குச்
சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தாலே
வெல்லறிஞர் பலபோக விர்த்தி யோகி
விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம். 4

பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும்
பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும்
கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும்
கரணாதி நான்குபிரா ணாதி யைந்தும்
வர்மமிவை யிருபத்து நான்குங் கூடி
வருந்தூல சரீரவிராட் டெனவே சொல்லும்
தர்மவத்தைச் சாக்கிரபி மானி விசுவன்
தனக்குவமை யாங்கிரியா சத்தி தானே. 5

சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்
தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு
விவகார சீவனிதை விராட்டென் பார்கள்;
வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்
விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு;
தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே
தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே. 6

கொள்ளடா ஞானேந்திரி யங்க ளைந்து
கூடினவை கர்மேந்திரி யங்க ளைந்து
தள்ளடா பிராணாதி வாயு வைந்து
சார்வான மனம்புத்தி தானி ரண்டு
விள்ளடா பதினேழு தத்து வங்கள்
விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண் கர்ப்பத்
துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ்
சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே. 7

நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள்
நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு?
காலான கண்டமெனுந் தானத் துள்ளே
கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்?
நாலான ஆன்மாவே அந்த ரான்மா
ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு;
தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று
சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே. 8

தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத்
தானமதே இதயமா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தை யாகில்
வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும்
கோனிதற்கே ஆனந்த போக மாகும்
கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம்
கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக்
காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே. 9

கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல
கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல
உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல
உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு;
தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல
தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி
விள்ளுமந்தப் படிதானே வேத பாடம்
விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே. 10

விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள்
விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு;

தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந்
துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும்
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்
தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி;
தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற்
சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம். 11

சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம்
தத்வாதி வாசனைகள் தாமே போகும்;
சூட்சாதி பிராந்தியெனும் மாயா சத்தி
தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்;
தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள்
சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்;
காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமற்
காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டு கொள்ளே. 12

கண்டு பார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக்
காணாது சீவான்மா பரமான் மாவும்;
தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச்
சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே
உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம்
யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை;
விண்டுசொல்வோம் நதிகடக்க வோட மல்லால்
விடயத்தாற் சாதனங்கள் வீணா மென்றே. 13

வீணல்லோ சாதனப்ர யோச னங்கள்
மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது?
வீணல்லோ வேதபா டத்தி னிச்சை
வியோமபரி பூரணத்தில் மேவி நின்றால்?
வீணல்லோ இருட்டறையிற் பொருளைக் காண
விளக்கதனை மறந்தவன்கை விடுதல் போலும்
வீணல்லோ தியானதா ரணைக ளெல்லாம்?
மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே. 14

வேணுமென்றா லெள்ளுக்கு ளெண்ணெய் போலும்
வித்தினிடத் தடங்கிநின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவிலுறை வாசம் போலும்
கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும்
தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்;
ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால்
அபரோட்ச ஞானமுத்தி யரிது தானே. 15

அரிதில்லை பிரமவியா கிருத சீவன்
ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச்
சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை
சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக்
குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால்
குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும்
திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது;
சீவவை ராக்யமெனுந் திறமி தானே. 16

திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே. 17

என்னவே அஞ்ஞானி உலகா சாரத்
திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள்
முன்னமே செய்ததன்பின் மரண மானால்
மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல்
வின்னமதா யாங்கார பஞ்ச பூத
விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு
தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச்
சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே. 18

தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ்
சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்;
ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே
இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார்
வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும்
வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி
நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி
நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே. 19

ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்
அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்;
மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத
முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்;
கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம்
குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்;
பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது
பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே. 20

பேர்கொண்டேன் சொரூபசித்தி யனேகம் பெற்றேன்
பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன்
வேர்கண்டே னாயிரத்தெட் டண்ட கூட
வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன்
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்;
சாத்திரவே தங்கள்வெகு சாயுங் கண்டேன்;
ஊர்கண்டேன் மூவர்பிறப் பேழுங் கண்டேன்;
ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே. 21

யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான்
உரைத்தாரே பெரியோர்க ளிரண்டா மென்றே;
ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான்
அநித்யமல்ல நித்தியமென் றறைய லாகும்;
சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்;
சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி;
மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி
மம்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே. 22

மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல் லாத
மூடர்களுக் கபரோட்சம் மொழிய லாகா;
சூட்சமறிந் தாலவனுக் கனுசந் தானம்
சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்;
தாட்சியில்லை சாதனைத் துட்ட யத்தில்
சட்சேந்த்ரி யாநாதா தீத மாகும்;
மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை
மூலவிந்து களாதீத மொழிய லாமே. 23

மொழிவதிலே அகாரமெனும் பிரண வத்தின்
மோனபிரா ணாதியதே நாத மாச்சு;
தெளியுமிந்த ஓங்காரத் தொனிவி டாமற்
சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்;
ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்
உத்கிருட்ட பரமபத வுபகா ரத்தான்
வெளியோடே வெளிசேர்ந்தால் வந்து வாச்சு
விரோதசத் ராதியெலாம் விருத்த மாச்சே. 24

விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே. 25

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே. 26

கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே; 27

அறைகின்றேன் அசபையெனும் பிராணான் மாவை
அகண்டபரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக்
குறைவில்லை ஓங்கார மூல வட்டக்
குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான்
நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு
நீக்காம லேகமாய் நிர்ண யித்துப்
பறைகின்றே னட்சரசா தனமுந் தள்ளிப்
பந்தமற்ற மாமோட்சப் பதிபெற் றேனே. 28

புதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும்
பவள நிறம் போன்றிருக்குந் திரிகோ ணந்தான்
துதிபெறுசிங் குவையுபத்த சுகந்தி யாகச்
சுபாவசா தனையினால் மவுன மாச்சு;
விதிவிகிதப் பிராரத்வ கர்மம் போச்சு;
விடயபோ கத்தினிச்சை விட்டுப்போச்சு;
மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு;
வத்துவதே காரணமா மகிமை யாச்சே. 29

மகிமையென்று யோகசா தனையி னாலே
மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே;
அகமகமென் றாணவத்தை நீக்க லாச்சே;
அத்துவிதப் பிரமசித்தா னந்த காரம்
சகளாதீ தங்கடந்து களாதீ தத்தில்
சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு;
பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு;
பந்தமற்ற மாமோட்சப் பதம்பெற்ற றேனே. 30

பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை
பிரிந்து முப்பத் தொன்றினிலே பிரம ஞானம்
தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகி யானால்
சாதனைசெய் வானறிவான் சைதன் யத்தில்
முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான்
மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தி யாவான்
நித்யமெனு முபநிடதப் பொருள்தான் சொல்லும்
நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே. 31

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s