கருவூரார் – பூஜாவிதி

Posted on Updated on

காப்பு

எண்சீர் விருத்தம்

தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்;
செணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்;
வழியதனில் நல்லவழி ஞானங் கூடும்;
மகத்தான வேதாந்தஞ் சித்தி காட்டும்;
ஒளிவுதனி லொளிவுதரு முறுதி சொல்வார்
உற்பனத்தி லுற்பனமா யுறுதி தோணும்;
வெளியதனில் வெளியாகி நாதத் துள்ளே
விளங்கிநின்ற வாலைப்பெண் ணாதி காப்பே!

நூல்

1. ஆதியந்தம் வாலையவ ளிருந்த வீடே
ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு;
சோதியந்த நடுவீடு பீட மாகிச்
சொகுசுபெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ணாத்தாள்
வீதியந்த ஆறுதெரு அமர்ந்த வீதி
விளையாடி நின்றதிரு மாளி கண்டாய்;
பாதிமதி சூடியே யிருந்த சாமி
பத்துவய தாகுமிந்த வாமி தானே.

2. வாமியிவள் மர்மம் வைத்துப் பூசை பண்ண
மதியுனக்கு வேணுமடா அதிக மாக:
காமிவெகு சாமிசிவ காமி ரூபி
காணரிது சிறுபிள்ளை கன்னிகன்னி
ஆமிவளை யறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்தாலு மனமடக்க மறிய வேணும்;
நாமிவளைப் பூசை பண்ண நினைத்த வாறு
நாட்டிலே சொல்லவென்றால் நகைப்பார் காணே;

3. காணப்பா இவளுடைய கற்பு மெத்த
கண்டவர்க்குப் பெண்ணரசு நானே யென்பாள்;
ஊணப்பா அமிர்தமிவ ளூட்டி வைப்பாள்;
உள்வீட்டுக் குள்ளிருந்து மேலே யேறப்
பூணப்பா மனமுறைந்து வாவா வென்பாள்;
புத்திரனே யென்மகனே யென்று சொல்லி
வேணப்பா வேண்தெல்லாந் தருவே னென்பாள்;
வேதாந்த சூட்சமெலாம் விளங்குந் தானே.

4. தானென்ற வாலையிவள் ரூபங் காணச்
சமர்த்துண்டோ ஆண்பிள்ளை தானு முண்டோ?
பானென்ற வாமத்துக் குள்ளே யப்பா
பராபரையாள் பலகோடி விதமு மாடிக்
தேனென்ற மொழிச்சியிவள் சித்தர்க் கெல்லாஞ்
சிறுபிள்ளை பத்துவய துள்ள தேவி;
ஊனென்ற வுடலுக்குள் நடுவு மாகி
உத்தமியாள் வீற்றிருந்த வுண்மை தானே.

5. உண்மையிவள் நாணமில்லா திருந்த வீடே
ஊருக்குள் நடுவீடே உற்றுப் பாரு;
செம்மையாய்க் கண்டவர்க ளுண்டோ அப்பா!
செகசால வித்தையிவ ளாடும் வித்தை;
உண்மையடா பஞ்சவண்ண மாகிநின்ற
உலகதனி லலைந்தவர்கள் கோடா கோடி
நின்மலமாய்க் கண்டவர்கள் சொல்லா ரப்பா!
நேசமுட னெனக்குரைத்த நிசங்கண் டேனே.

6. கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு;
காலமேலுந் தனலகீழும் நடுவு மாகி
அண்டரொடு முனிவர் களுங் கண்டு போற்ற
ஆதவனு மம்புலியு மதிலே நின்று
தொண்டுபண்ணு மவர்களிலே நாலு பேர்கள்
சுகம்பெறலா மென்று சொன்ன வாசல் நாலு
கொண்டவர்கள் கண்டுவந்த தொண்ணூற் றாறு
கொள்கையெனக் காத்திருந்த குறிப்பைப் பாரே.

7. பார்த்தவர்கள் செய்தொழிலும் மனமும் வேறாய்ப்
பலநூலைப் படித்துப்படு குழியில் வீழ்வார்
ஏற்றபடி மனம் போனாற் புத்தி போச்சே;
ஏழைமதி போகாதே என்தாய் பாதம்
போற்றுதற்கே ஐவரையு மனத்தி லொன்றாய்ப்
புத்தி சித்த மோர்நிலையில் நிறுத்திவாசம்
பூத்தமல ரெடுத்துதிருப் பாதம் போற்றப்
பொறியைந்து கருவிகர ணாதி போமே.

8. போச்சுதடா மனமாய்கை வீறு போச்சு;
பொறியைந்து கருவிகர ணாதி போச்சு
ஏச்சுதடா வென்றுமன மிறக்க லாச்சு;
எனக்கொருவ ரிணையில்லை யென்ற பேச்சு
வாய்ச்சுதடா மனமடங்க வங்கென்றோர் சொல்;
வாய்பேசா மவுனத்தை யதிலே சேர்க்கக்
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை யூன்று
கனியாகு மக்கனியைக் கண்டு கொள்ளே.

9. கொள்ளுதற்கிங் கின்னமொரு குறிப்பைக் கேளு;
கோடியிடி மின் முழங்குங் கண்ணை மூடு;
விள்ளுதற்கு மனமடங்காப் பூதங் காணும்;
விள்ளாதே யுள்ளபடி சிங்கென் றோர்சொல்
விள்ளவுமே யுபாயமதால் நடுவே நில்லு,
வேகமெல்லா மொடுங்குமடா சத்தம் போச்சு;
கள்ளரைப்போல் மயங்காதே மவுனத் தூன்று;
கண்ணிணையுந் திறக்காதே கருதிப் பாரே.

10. பாரேது புனலேது அனலு மேது?
பாங்கான காலேது? வெளியு மாகும்
நாரேது பூவேது வாசமேது?
நல்ல புட்பந்தானேது பூசை யேது?
ஊரேது பேரேது சினமு மேது?
ஒகோகோ அதிசயந்தா னென்ன சொல்வேன்!
ஆறேது குளமேது கோயிலேது?
ஆதிவத்தை யறிவதனா லறிய லாமே.

11. ஆமெனவும் ஊமெனவு மிரண்டுங் கூட்டி
அப்பனே ஒமென்ற மூன்று மொன்றாய்
நாமெனவுந் தாமெனவு மொன்றே யாகும்;
நல்லவர்களறிவார்கள்; காமி காணான்!
வாமம் வைத்துப் பூசைபண்ண இந்த மார்க்கம்
வந்தவர்க்குச் சத்திசிறு பிள்ளை வாலை
சோமநதிய முதமுண்ண வாவா வென்பாள்;
சுகமுனக்குப் பரமசுக மருள்செய் வாளே.

12. செய்குவாய் பூசையது செய்யும்போது
செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும்
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம்;
ஊமை யென்ற நடுத்தீயை யதிகங் கொண்டால்;
பைகுவாய் அரவுவிடம் பொசுங்கிப் போகும்;
பங்கமுனக் கில்லையடா அங்கமீதில்
ஐகுவா யுள்ளடங்கிப் பேச்சை விட்டே
அழைத்திடவே யஞ்சுமது கொஞ்சுங் காணே.

13. காணாத காட்சி யெல்லங் கண்ணிற் காணும்
கலங்காதே மெய்ம்மயக்கம் மெத்த வாகும்;
பூணாத பணிபூண்டு சிறு பெண்ணாகப்
போதமெனும் பொருள்பறிக்க வருவாள் கண்டாய்;
வாணாளை மடக்கியிவள் ரூபங் கண்டு
மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு!
கோணாத முக்கோணக் குறியைப் பாரு;
கூசாதே கண் கூசுங் கூசுங் காணே.

14. கூச்சமற்றுப் பார்க்கையிலே இருள்போல் மூடும்;
கொள்ளிகொண்டு கொளுத்தியதை வெளிச்சம் போடு
வாய்ச் சமர்த்துப் பேசாதே மவுனத் தூன்று;
வாவாவென் றேநீயும் வருந்திக் கூவச்
சூட்சமது விருந்தவிடஞ் சொல்ல லாமோ?
சொல்லுதற்கு வாய்விட்டுச் சொல்ல லாமோ?
தாய்ச் சமர்த்துப் பாராதே தாயைப் போற்று;
சற்குருபோ லுற்பனத்தைத் தாய்சொல் வாளே.

15. சொல்வதற்கிங் கிவளையலால் சுகம்வே றுண்டோ?
சூட்சமெல்லா மிவளை விடச் சூட்ச முண்டோ?
நல்லவர்க்கு நடுவில்விளை யாடும் வல்லி
நாதவிந் தோங்கார நிலையுங் காட்டி
வல்லவர்க்கும் வல்லவளும் நானே யென்பாள்;
வரமவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி;
புல்லருக்கிங் காயுதமும் புல்லே யாகும்.
புத்திகெட்ட லோபிகட்குப் புகலொ ணாதே.

16. புகலுவார் வேதமெல்லாம் வந்த தென்று
பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவுங் கற்றே
அகலுவார் பெண்ணாசை விட்டோ மென்றே;
அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்
சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி
இகலுமன மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே.

17. பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப்
புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்
பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்
படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார்;
ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே
அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்
பேசையிலே மனம்வேறாய் நினைப்பான் பாவி
புரட்டுரூட்டாய் நினைவுதப்பபி பேசு வானே.

18. பேச்சென்றால் வாய்ச்சமர்த்தாய்ப் பேசிப் பேசிப்
பின்னுமுன்னும் பாராமல் மதமே மீறி
நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதுங் காணார்
நிர்மூட ரனேகவித சாலங் கற்றே
ஆச்சென்றா லதனாலே வருவ தேது?
ஆத்தாளைப் பூசித்தோ னவனே சித்தன்
மூச்சென்ன செய்யுமடா நரகிற் றள்ளும்;
மோசமது போகாதே முக்கால் பாரே.

19. முக்காலும் பொருந்துமென்று சொன்ன போதே
மோசமில்லை சூட்சமது மொழிந்து கூடும்;
தக்காமற் போனபே ரனேக ருண்டு;
சமர்த்தறிந்தா லவன்வாமி யவனே சித்தன்;
எக்காலும் நடந்திரு நீ காலு முன்னி
இருந்தடங்கி யுள்ளிருந்து வெளியிற் போன
அக்காலைக் காணாம லலைந்தே யோடி
அழிந்துகெட்டுப் போனவர்கள் அறிந்து கொள்ளே.

20. அறிந்தகுறி யடையாளங் காண  வேண்டும்;
அக்குறியிற் சொக்கிமனந் தேற வேண்டும்;
அறிந்தவன்போ லடங்கிமன மிறக்க வேண்டும்;
அலகையது வழிபாதை அறிய வேண்டும்;
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண
மயக்கத்தைக் கண்டுனையு மதிக்க வேண்டும்;
நிறைந்தமதி குறைந்தவகை அறிய வேண்டும்;
நிச்சயத்தை யறிவார்க்கு முத்தி தானே.

21. முத்திதரு மென்றுமனம் புத்தி யற்று
மோசமது போகாதே பாசங் கையில்
சித்தமதில் சந்திரனை, நிறுத்திக் கொண்டு
செந்தீயில் உன்தீயை நடுவில் வாங்கிச்
சுத்தியுடன் ஆதியந்த மனத்தில் வைத்துச்
சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி
நித்யமல ரர்ச்சனைசெய் பாதம் போற்றி
நீயுமதி மதியுமதி லதிக மாமே.

22. மதிபெருகுங் கதிபெருகும் வாதம் வாதம்
வருந்தாதே யந்தமுறை யாகா தப்பா!
நிதிபெருகு மிவள்குறியே வாத மாகும்;
நிர்மூட ரறியாமல் வகாரம் பேசி
நதிகள்தனை யறியாமல் சலத்தில் மூழ்கி
நானேநா னென்றுவாய் மதங்கள் பேசி
உரியபொரு ளுள்ளதெல்லாஞ் சுட்டுச் சுட்டே
உட்பொருளைப் பாராம லழிந்திட் டாரே!

23. இட்டகுறி நாதவிந்து ரூபங் காண
இயலறியாச் சண்டாளர் சுட்டு மாய்வார்;
விட்டகுறை வந்ததென்றால் தானே யெய்தும்;
விதியில்லார்க் கெத்தனை தான் வருந்தி னாலும்
பட்டுமன மாய்தலல்லால் வேறொன் றில்லை;
பத்தியிலார்க் குரைத்து மனம் பாழ்போக்காதே;
திட்டமதாய்ப் பாணம்வைத்துத் தேவி பூசை
சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே.

24. எட்டிரண்டு மொன்றுமது வாலை யென்பார்;
இதுதானே பரிதிமதி சுழுனை யென்பார்;
ஒட்டிமுறிந் தெழுந்ததுமுக் கோண மென்பார்;
உதித்தெழுந்த மூன்றெழுத்தை யறியா; ரையோ!
கொட்டுமொரு தேளுருவாய் நிற்கும் பாரு;
கூட்டமிட்டுப் பாராதே குறிகள் தோன்றும்;
சுட்டசுடு காடுமது வெளியு மாகும்;
சொல்லுதற்கு வாய்விளங்காச் சூட்சந் தானே.

25. சூட்சமிவள் வாசமது நிலைத்த வீடு.
சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடு;
தேசமதில் போய்விளங்கு மிந்த வீடு;
சித்தாந்த சித்தரவர் தேடு வீடு;
ஓசைமணிப் பூரமதி லுதிக்கும் வீடு;
ஒகோகோ அதிசயங்க ளுள்ள வீடு;
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு;
அவனருளுங் கூடிவிளை யாடும் வீடே.

26. வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல்
வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல்;
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல்;
திறமையான பன்னிருவர் காக்கும் வாசல்;
ஆடுகிற புலியாகி நின்ற வாசல்;
அரகர சிவசிவா வாசி வாசல்;
கூடுகிற முக்கோணப் பரங்க ளாகிக்
குறுகுமதி பெருகுமதி கூறொண் ணாதே;

27. ஒண்ணாகி இரண்டாகி விளைவு மாகி
உத்தமியா ளுட்கருத்தை யறியப் போமோ?
தின்னாத விடக்கெடுத்துத் தின்னச் சொன்னாள்;
செத்தசவம் போலிருந்து செபிக்கச் சொன்னாள்;
பண்ணாத பணக் கோடிப் பண்ணி வைத்தாள்;
பார்த்திருந்து கழுத்தறுக்கப் பார்த்தாள் பாவி!
எண்ணாது மெண்ணிமனம் ஏங்கி நாளும்
எனக்கபயம் ஏதெனவே யெழுந்திட் டேனே.

28. எழுந்திட்ட திவள்பார்த்துத் தொடர்ந்து கூடி
என்னையுமே யிழுத்துமடி பிடித்துக் கொண்டு
கொழுந்துவிட்டு வளர்ந்தெரியும் அனலை மூட்டிக்
குடிகேடி சத்துருப்போல் கூச்சலிட்டாள்;
அழுதேனே முந்தியினி யந்த வூரில்
அரகரா துணையெனக்கே யாரு மில்லை;
எழுந்திட்டா ரெல்லோரும் மோடிப் போனார்;
என்ன செய்வேன் தனித்திருந்தே ஏங்கி னேனே!

29. ஏங்கினேன் ஈடழிந்தேன் வீடும் அற்றேன்;
என்னைத்தான் கண்டவர்கள் சீசீ யென்னத்
தூங்கினேன் காலறிந்து மடக்க மாட்டேன்;
துணையெனக்கு யாருமில்லை சூழ்ச்சி யாக
வாங்கினேன் காலறிந்து மடக்க வேண்டும்;
வகையான வெனக்கொருத்தி யுறுதி சொன்னாள்;
தேங்கினேன் முன்னுவள் பின்னு மாகத்
திடமெனக்குச் சொன்னதிந்தத் தெளிவு தானே.

30. தெளிவதற்குச் சூட்சமிது தெளிவாய்ப் பாரு:
சிவனிருந்து விளையாடுந் தெருவைப் பாரு:
மொழிவதற்கிந் நூலைவிட வேறொன் றில்லை;
முன்னாதி யந்தமொடு நடுவுஞ் சொன்னோம்;
சுழியதற்குள் சுழியிருந்த சூட்சம் சொன்னோம்;
சொல்லாத மவுனமுதற் கருவுஞ் சொன்னோம்.
ஒளிபிறக்கு முறுதியிந்த வுறுதி சொன்னோம்
உற்பனமாய்ப் பார்த்தவர்கள் சித்தர் தாமே.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s