கஞ்சமலைச் சித்தர் பாடல்

Posted on

 

கஞ்சமலை என்னும் மலையில் வாழ்ந்தமையால் இவர் கஞ்சமலைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார் போலும். பெண்களின் மோக ஆசை கூடாது. அப்படி தப்பித் தவறி அஃது
ஏற்பட்டு விடுமானால் அவ்வளவு சீக்கிரத்தில் அதனைவிட்டுவிட இயலாது, அல்லது அது போகாது என்று கூறும் இவர் பிற்காலச் சித்தர் என்பது ‘பாடானது’, துற்கந்தம்’ முதலான சொல்லாட்சிகளால் புலனாகிறது.

நாமசொரூபமே சித்தி – அதை
நாடித் தெளிந்து கொண்டாலல்லே முத்தி

என்று முத்திக்கான வழியைச் சொல்கின்றார்.

 

பரிபூர ணானந்த போதம் – சிவ
பரப்பிர்ம மான சதானந்த பாதம்

உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம்
உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு
அரிதான சிவநாமம் விள்ளு – சிவன்
அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு. 1

துச்சமு சாரவி சாரம் – அற்பச்
சுகமது துக்கமதாம் வெகு கோரம்
நிச்சய மானவி சாரம் – ஞான
நிர்மல வேதாந்த சாரமே சாரம். 2

கற்பனை யாகிய ஞாலம் – அந்தக்
கரணங்க ளாலே விளைந்த விசாலம்
சொற்பன மாம்இந்த்ர சாலம் – அன்று
தோன்றி விட்டாலது சூட்சானு கூலம். 3

அற்பம தானப்பிர பஞ்சம் – அது
அனுசரித்தாலே உனக்கிது கொஞ்சம்
நிற்பது அருள்மேவி நெஞ்சம் – அன்று
நிகரில்லை நிகரில்லை மெய்ஞ்ஞான பொஞ்சம். 4

ஆங்காரத் தால்வந்த கேடு-முதல்
ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு
தாங்காம லானந்த வீடு-அன்று
தாக்கும னோலயந் தானாகக் கூடு. 5

தத்துவக் குப்பைகள் ஏது-சித்தி
சாத்திர மான சடங்குகள் ஏது
பத்தி யுடன் மறவாது – குரு
பாதத்தைக் கண்டாற் தெரியும் அப்போது. 6

தூராதி தூரங்கள்இல்லை – அத்தைத்
தொட்டுப் பிடிக்க வென்றால் வெகு தொல்லை,
காரண தேசிகன் சொல்லை-நம்பிக்
கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை. 7

ஆணவத் தால்வந்த காயம் – அதில்
ஐவரிருந்து தொழில்செய்யும் ஞாயம்
காணவ மாம்போகு மாயம்-நன்றாய்க்
கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம். 8

மூடர் உறவு பிடியாதே-நாரி
மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம் பரம் படியாதே-ஞான
அமுதம் இருக்க விஷம் குடியாதே. 9

தான் என்று வாது கூறாதே-பேசி
தர்க்கங்கள் இட்டுச் சள் என்று சீறாதே
ஊனென்ற பாசம் மாறாதே-போனால்
உன்னாணை உன்மனஞ் செத்துந் தீராதே. 10

வந்த பொருளைத் தள்ளாதே-நீயும்
வாராததற்கு வீணாசை கொள்ளாதே
சிந்தை வசமாய்த் துள்ளாதே – சும்மா
சித்திரம் போலிருந்தது ஒன்றும் விள்ளாதே. 11

தேகபாச பவ பந்தம்-அப்பொருள்
சிற்றின்ப மானது சிச்சீர்க்கந்தம்
பாகம தானவே தந்தம்-பொருள்
பாவித்துப் பார்க்கில் உனக்கிது சொந்தம். 12

வஞ்சியர் ஆசை ஆகாதே-அந்த
மயக்கமானாற் கொஞ்ச மட்டிற் போகாதே
அஞ்சி யமன்கைச் சாகாதே-கெட்ட
ஆசா பாசமாம் நெருப்பில் வேகாதே. 13

கல்வி மயக்கங் கடந்து-எல்லாம்
கற்றோ மென்று றெண்ணுங் கசட்டைத் தொலைந்து
சொல்வெப் பினாலே கிடந்து-இரு
சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து. 14

ஓடித் திரியும் கருத்து-அதை
ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து
நாடிக் கொண்டம்பைப் பொருத்து – அந்த
நாதாந்த வெட்டவெளிக் குள்இருத்து. 15

சாண்வயிற் றால்அலை யாதே-நிதம்
சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே
ஆணவத் தால்உலை யாதே-உனக்கு
கானந்த முத்தி அது நிலையாதே. 16

அபிமானி யாகிய சீவன்-அவன்
அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான்
தபம்நினைந்தால் போதம் சார்வான்-நிலை
சார்ந்து கொண்டால் சத்தி ரூபமும் ஆவான். 17

நற்குரு சொன்னதே சொல்லு-தம்பம்
நாட்ட மென்றால் வன்னி நிலையிலே நில்லு
தற்சம யங்களை விள்ளு-உண்டு
தன்மயமாகவே தானே நீ கொள்ளு. 18

துன்ப இன்பங்களைத் தொட்டு-அந்தத்
தொந்தங்கள் எல்லாந் துருசறச் சுட்டு
பின்பு பாசத்தைக் கைவிட்டு-ஒன்று
பேசாம லந்தம் பெருமையை விட்டு. 19

பேச்சினால் என்னென்ன தோணும்-சும்மா
பேசப்பேசப் பிழைஅல்லோ காணும்
வாச்சுத லால்அம்பு பூணும்-நல்ல
மாசற்ற ஞான விசாரணை வேணும். 20

அநித்திய மானது தேகம்-அதில்
ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம்
தனித்திருந் தால்அந்த போகம்-ஒன்று
தானாகி நிற்பது வேசிவ யோகம். 21

விரும்பாசைக்கு இடங்கள் கொடாதே-காய
வேதனைக் குள்ளேநீ கட்டுப்படாதே
திரும்பச் செனனம் எடாதே-குரு
தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே. 22

கோடான கோடி தவங்கள்-அந்தக்
கோவிலைச் சுற்றிச் செபிக்குஞ்செபங்கள்
பாடான தல்லோ பவங்கள்-இது
பண்ணுமுன் நண்ணும் துன்ப அமலங்கள். 23

அந்தக் கரணவி லாசம்-அதை
யாராலும் தள்ளக்கூ டாது பிரயாசம்
தொந்தித்து நிற்பதே பாசம்-அதிற்
தோன்றாமற் தோன்றுஞ் சுயம்பிரகாசம். 24

நாமசொ ரூபமே சித்தி-அதை
நாடித் தெளிந்துகொண்டால் அல்லோ முத்தி
நேம சொரூபமே வித்து-எங்கும்
நிச்சய மாகும் நிரந்தர வத்து. 25

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s