அழுகணிச் சித்தர் பாடல்

Posted on Updated on

 

 

கலித்தாழிசை

1. மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கந் தெருநடுவே
சாலப் பதிதனிலே தணலாய் வளர்த்த கம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ!

2. எண்சாண் உடம்படியோ எழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரரைவர் பட்டணமுந் தானிரண்டு
அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி

3. முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ் பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
கோலமிட்டுப் பாரேனோ!

4. சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
தித்திக்குந் தேனமிர்தம் என் கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ!

5. பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல் தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ!

6. எட்டாப் புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ!

7. கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு!
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை!
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ!

8. ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா!
உன் பாதஞ் சேரேனோ?

9. வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி:
தாழைப்பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ!

10. பையூரி லேயிருந்து பாமூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்;
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா!
பாழாய் முடியாவோ

11. மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்!
காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி!
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா!
கண் விழிக்க வேகாவோ!

12. அந்தரத்தை வில்லாக்கி, ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத் தேரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரருஞ் சூரியருந் தாம்போ ந்த காவனத்தே
வந்து விளையாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!

13. காட்டானை மேலேறித் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைவிரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறிந்து நகைபுரியப் பார்த்தாலுங்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா
கண்குளிரக் காண்பேனோ!

14. உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா!
வகைமோச மானேண்டி!

15. மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான் தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா!
முழுதுந் தவிக்கிறண்டி!

16. காம மலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி;
பாம வலிதொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை;
பாம வலிதொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா!
கண்ணெதிரே நில்லாவோ!

17. தங்காயந் தோன்றாமல் சாணகலக் கொல்லைகட்டி
வெங்காய் நாற்றுவிட்டு வெகு நாளாய்க் காத்திருந்தேன்!
வெங்காய்ந் தின்னாமல் மேற்றோலைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா!
சாகிறண்டி சாகாமல்!

18. பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை!
உற்றுற்றுப் பார்த்தாலும் உன்மயக்கந் தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா!
பாசியது வேறாமோ!

19. கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்;
உற்றாரும் பெற்றாரும் ஊரை விட்டுப் போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா!
துணையிழந்து நின்றதென்ன?

20. கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன் புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன் புதுமை கண்டவர்க்குக்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா
காரணங்கள் மெத்தவுண்டே!

21. சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கந் தான் சேர்த்து
மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா!
இவ்வேட மானேண்டி!

22. பாதாள மூலியடி பாடாணந் தான் சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்சாரை நெய்யூற்றிச்
செந்தூர மையடியோ செகமெலாந் தான்மிரட்டித்
தந்த மருந்தாலே என் கண்ணம்மா!
தணலாக வேகுறண்டி!

23. கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால் பெற்றவட்குப் பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா
கடுகளவு காணாதோ!

24. பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமுந் தான்பறி போய் என் கண்ணம்மா!
படைமன்னர் மாண்டதென்ன?

25. ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான் பேசிச்
சாகாத தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி;
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா!
நொடியில் மெழு கானேனடி!

26. தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி!
மாயக் கலவி விட்டு மதிமயக்கந் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்ணம்மா!
தந்தையரு மொப்பாமோ!

27. அஞ்சாத கள்ளனடி ஆளுமற்ற பாவியடி
நெஞ்சாரப் பொய்சொல்லும் நேயமில்லாநிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ!

28. உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்?
தன்னை மறந்தார்க்குத் தாய் தந்தை யில்லையடி!
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா!
ஒத்திருந்து வாழேனோ!

29. காயப் பதிதனிலே கந்தமூ லம்வாங்கி
மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்கு முன்னே
மாயச் சுருளோலை என் கண்ணம்மா!
மடிமேல் விழுந்ததென்ன?

30. சித்திரத்தைக் குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்பலமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்ணம்மா
சிலையுங் குலையாதோ!

31. புல்லரிடத்திற் போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி!
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
பொருளெனக்குத் தாராயோ!

32. வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீக்கி என் கண்ணம்மா!
விழித்து வெளி காட்டாயோ!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s