அருள் புலம்பல்

Posted on Updated on

மகளை முன்னிலையாகக் கெண்ட

அருள் புலம்பல்

குறள் வெண்செந்துறை

1. ஐங்கரனைத் தெண்டனிட்டேன் அருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்து ஒருவன் தன் சொரூபம் காட்டிஎனை

2. கொள்ளைப் பிறப்பு அறுக்கக் கொண்டான் குருவடிவம்;
கள்ளப் புலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி!

3. ஆதாரம் ஓராறும் ஐம்பத்தோர் அட்சரமும்
சூதான கோட்டை எல்லாம் சுட்டான் துரிசு அறவே!

4. மெத்த விகாரம் விளைக்கும் பலபலவாம்
தத்துவங்கள் எல்லாம் தலைகெட்டு வெந்ததடி!

5. என்னோடு உடன் பிறந்தார் எல்லாரும் பட்டார்கள்;
தன்னம் தனியே தனித்திருக்க மாட்டேண்டி!

6. எல்லாரும் பட்டகளம் என்று தொலையுமடி
சொல்லி அழுதால் துயரம் எனக்கு ஆறுமடி!

7. மண்முதலாம் ஐம்பூதம் மாண்டு விழக் கண்டேண்டி!
விண்முதலாம் ஐம்பொறிகள் வெந்துவிழக் கண்டேண்டி!

8. நீங்காப் புலன்கள் ஐந்தும் நீறாக வெந்ததடி;
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழக் கண்டேண்டி!

9. மனக்கரணம் அத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரணத் தோடே எரிந்துவிழக் கண்டேண்டி!

10. ஆத்தும தத்துவங்கள் அடுக்கு அழிய வெந்ததடி!
போற்றும் வகை எப்படியோ போதம் இழந்தானை?

11. வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி
சுத்தவித்தை ஐந்தினையும் துரிசு அறவே.

12. மூன்று வகைக் கிளையும் முப்பத்து அறுவரையும்
கான்றுவிழச் சுட்டுக் கருவேர் அறுத்தாண்டி!

13. குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ

14. கேடுவரும் என்றறியேன்; கெடுமதிகண் தோற்றாமல்
பாடுவரும் என்றறியேன்; பதியாண்டு இருந்தேண்டி;

15. எல்லாரும் பட்டகளம் இன்ன இடம் என்றறியேன்;
பொல்லாங்கு, தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி!

16. உட்கோட்டைக் குள்ளிருந்தார் ஒக்க மடிந்தார்கள்;
அக்கோட்டைக் குள்ளிருந்தார் அறுபது பேர் பட்டார்கள்.

17. ஒக்க மடிந்ததடி! ஊடுருவ வெந்ததடி!
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி!

18. தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசு அறவே;
கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி!

19. ஓங்காரம் கெட்டதடி! உள்ளதெல்லாம் போச்சுதடி!
ஆங்காரம் கெட்டதடி! அடியோடு அறுத்தாண்டி!

20. தரையாம் குடிலை முதல் தட்டுருவ வெந்ததடி!
இரையும் மனத்து இடும்பை எல்லாம் அறுத்தாண்டி!

21. முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி!
தன்னை அறியவே தான் ஒருத்தி யானேண்டி!

22. என்னையே நான் அறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியத் தலம் எனக்குச் சொன்னாண்டி!

23. தன்னை அறிந்தேண்டி! தனக்குமரி ஆனேண்டி!
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?

24. வீட்டில் ஒருவரில்லை வெட்ட வெளி ஆனேண்டி!
காட்டுக்கு எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்

25. நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ?
பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக்கு ஏச்சலவோ?

26. இந்நிலைமை கண்டாண்டி! எங்கும் இருந்தாண்டி!
கன்னி அழித்தாண்டி! கற்பைக் குலைத்தாண்டி.

27. கற்புக் குலைத்தமையும், கருவோ அறுத்தமையும்,
பொற்புக் குலைத்தமையும், போதம் இழந்தமையும்.

28. என்ன வினைவருமோ! இன்னம் எனக்கு என்றறியேன்!
சொன்ன சொல் எல்லாம் பலித்ததடி! சோர்வறவே.

29. கங்குல்பகல் அற்றிடத்தைக் காட்டிக் கொடுத்தாண்டி!
பங்கம் அழித்தாண்டி! பார்த்தானைப் பார்த்திருந்தேன்.

30. சாதியில் கூட்டுவரோ? சாத்திரத்துக்கு உள்ளாமோ?
ஓதிஉணர்ந்ததெல்லாம் உள்ளபடி ஆச்சுதடி!

31. என்ன குற்றம் செய்தேனோ எல்லாரும் காணாமல்,
அன்னை சுற்றம் எல்லாம் அறியாரோ அம்புவியில்?

32. கொன்றாரைத் தின்றேனோ? தின்றாரைக் கொன்றேனோ?
எண்ணாத எல்லாம் எண்ணும் இச்சை மறந்தேனோ?

33. சாதியில் கூட்டுவரோ? சமயத்தோர் எண்ணுவரோ?
பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி?

34. கண்டார்க்குப் பெண்ணலவோ? காணார்க்கும் காமமடி!
உண்டார்கள் உண்டதெலாம் ஊணல்ல துண்டர்களோ?

35. கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார்
கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?

36. பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ?
தொண்டாய தொண்டர்உளம் தோற்றி ஒடுங்குமதோ.

37. ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?
பேதம்அற எங்கும் விளங்கும் பெருமையன்காண்.

38. வாக்கும் மனமும் கடந்த மனோலயன் காண்!
நோக்க அரியவன் காண்; நுண்ணியரில் நுண்ணியன் காண்!

39. சொல்லுக்கு அடங்கான் காண்! சொல்லிறந்து நின்றவன் காண்!
கல்லுள் இருந்த கனல்ஒளிபோல் நின்றவன் காண்!

40. சுட்டிறந்த பாழ் அதனில் சுகித்திருக்கச் சொன்னவன் காண்!
ஏட்டில் எழுத்தோ? எழுதினவன் கைப்பிழையோ?

41. சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்;
அம்மா! பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி!

42. பார்த்த இடம் எல்லாம் பரமாகக் கண்டேண்டி!
கோத்த நிலைகுலைத்த கொள்கை அறியேண்டி!

43. மஞ்சனம் ஆட்டி மலர்பறித்துச் சாத்தாமல்
நெஞ்சு வெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி!

44. பாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்;
ஓடித் திரியாமல் உருக்கெட்டு விட்டேண்டி!

45. மாணிக்கத் துள்ஒளிபோல் மருவி இருந்தாண்டி!
பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன் காண்!

46. அன்றுமுதல் இன்றளவும் அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாய் இருந்த நிராமயன் காண்!

47. சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல்
புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே.

48. பத்தி அறியாமல் பாழில் கவிழ்ந்தேண்டி!
ஒத்தஇடம் நித்திரை என்று ஒத்தும் இருந்தேண்டி!

49. செத்தாரை ஒத்தேண்டி! சிந்தை தெளிந்தேண்டி!
மற்றாரும் இல்லையடி! மறுமாற்றம் காணேண்டி!

50. கல்வியல்ல; கேள்வியல்ல; கைநாட்டும் காரணம்காண்
எல்லையள வற்றதடி! எங்கும் நிறைந்ததடி!

51. வாசா மகோசரத்தை மருவிஇடம் கொண்டாண்டி;
ஆசூசம் இல்லாண்டி! அறிவுக்கு அறிவாண்டி!

52. பத்துத் திசைக்கும் அடங்காப் பருவமடி!
எத்திசைக்கும் எங்கும் இடைவிடாத ஏகமடி!

53. தித்திக்க ஊறுமடி! சித்தம் உடையார்க்குப்
பத்திக் கடலுள் பதித்தபரஞ் சோதியடி!

54. உள்ளுணர்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி!
எள்ளளவும் உள்ளத்தில் ஏறிக் குறையாண்டி!

55. தூரும் தலையும் இலான்; தோற்றம் ஒடுக்கம் இலான்
ஆரும் அறியாமல் அகண்டமாய் நின்றாண்டி!

56. எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனை பேர்
அத்தனைபேர் உண்டாலும் அணுவும் குறையாண்டி!

57. வாக்கும் மனமும் வடிவும் இலா வான் பொருள் காண்!
போக்கும் வரவும் இலான்; பொருவரிய பூரணன் காண்!

58. காட்சிக்கு எளியான் காண்! கண்டாலும் காணான்காண்!
மாட்சி மனம் வைத்தார்க்கு மாணிக்கத் துள்ஒளிகாண்!

59. வாழ்த்தி அவனை வழிபட்டால் மன்னுயிர்கள்
தோற்றம் அறியான் காண்! சொல் இறந்த சோதியன் காண்!

60. ஐயம் அறுத்தவனை ஆராய்வார் உண்டானால்
வையகத்தே வந்து மலர்ப்பாதம் வைத்திடுவான்.

61. அணுவுக்கும் மேருவுக்கும் அகம்புறமாய் நின்றான் காண்!
கணுமுற்றும் ஞானக் கரும்பின் தெளிவான் காண்!

62. எந்நாளும் இந்நாளும் இப்படியாய் அப்படியாய்ச்
சொன்னாலும் கேளான் காண்! தோத்திரத்தில் கொள்ளான் காண்!

63. ஆத்தாளுக்கு ஆத்தாளாம்; அப்பனுக்கும் அப்பனுமாம்;
கோத்தார்க்குக் கோத்தநிலை கொண்ட குணக்கடல்காண்;

64. இப்போ புதிதோடி! எத்தனை நாள் உள்ளதடி!
அப்போதைக்கு அப்போது அருளறிவும் தந்தாண்டி!

65. பற்றற்றார் பற்றாகப் பற்றி இருந்தாண்டி!
குற்றம் அறுத்தாண்டி! கூடி இருந்தாண்டி!

66. வெட்ட வெளியில் எனைமேவி இருந்தாண்டி!
பட்டப் பகலிலடி பார்த்திருந்தார் எல்லோரும்.
67. வாழ்வான வாழ்வெனக்கு வந்ததடி வாழாமல்
தாழாமல் தாழ்ந்தேண்டி! சற்றும் குறையாமல்.

68. பொய்யான வாழ்வு எனக்குப் போதுமெனக் காணேண்டி!
மெய்யான வாழ்வு எனக்கு வெறும் பாழாய் விட்டதடி!

69. கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேண்டி!
என்இயல்பு நான் அறியேன்; ஈதென்ன மாயமடி!

70. சொல்லாலே சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையடி!
எல்லாரும் கண்டிருந்தும் இப்போது அறியார்கள்!

71. கண்மாயம் இட்டாண்டி! கருத்தும் இழந்தேண்டி!
உள்மாயம் இட்டவனை உரு அழியக் கண்டேண்டி!

72. என்ன சொல்லப் போறேன் நான் இந்த அதிசயத்தைக்
கன்னி இளங்கமுகு காய்த்ததடி கண்ணார.

73. ஆர்ந்த இடம் அத்தனையும் அருளாய் இருக்குமடி!
சார்ந்த இடம் எல்லாம் சவ்வாது மணக்குதடி!

74. இந்தமணம் எங்கும் இயற்கை மணம் என்றறிந்து
அந்தசுகா தீதத்து அரும்கடலில் மூழ்கினண்டி!

75. இரும்பின் உறை நீர்போல் எனைவி ழுங்கிக் கொண்டாண்டி!
அரும்பில்உறை வாசனை போல் அன்றே இருந்தாண்டி!

76. அக்கினிகற் பூரத்தை அற விழுங்கிக் கொண்டாற்போல்
மக்கினம் பட்டுள்ளே மருவி இருந்தாண்டி!

77. கடல்நீரும் ஆறும்போல் கலந்துகரை காணேண்டி!
உடலும் உயிரும் போல் உள்கலந்து நின்றாண்டி!

78. பொன்னும் உரை மாற்றும்போல் பொருவு அரிய பூரணன்காண்
மன்னுமனு பூதியடி மாணிக்கத் துள்ஒளிபோல்.

79. கங்குகரை இல்லாண்டி! கரைகாணாக் கப்பலடி!
எங்கும் அளவில்லாண்டி! ஏகமாய் நின்றாண்டி.

80. தீவகம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயன் காண்:
பாவகம் ஒன்று இல்லாண்டி! பார்த்தஇடம் எல்லாம் பரன்காண்!

81. உள்ளார்க்கும் உள்ளாண்டி! ஊருமில்லான்! பேருமில்லான்!
கள்ளப்புலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி!

82. அப்பிறப்புக்கு எல்லாம் அருளாய் அமர்ந்தாண்டி!
இப்பிறப்பில் வந்தான் இவனாகும் மெய்ப்பொருள் காண்!

83. நீர் ஒளிபோல் எங்கும் நிறைந்த நிராமயன்காண்!
பார் ஒளிபோல் எங்கும் பரந்த பராபரன் காண்!

84. நூலால் உணர்வரிய நுண்மையினும் நுண்மையன்காண்!
பாலூறு சர்க்கரைபோல் பரந்தபரி பூரணன் காண்!

85. உளக்கண்ணுக்கு அல்லால் ஊன் கண்ணால் ஒருமதோ?
விளக்குத் தடர் ஒளிபோல் மேவிஇருந்தாண்டி!

86. கல்லுள் இருந்த கனல் ஒளிபோல் காரணமாய்ப்
புல்லி இருந்தும் பொருவு அரிய பூரணன்காண்!

87. பொற்பூவும் வாசனைபோல் போதம் பிறந்தார்க்குக்
கற்பூவும் வாசனை போல் காணாக்கயவருக்கு.

88. மைக்குழம்பும் முத்தும்போல் மருவி, மறவாதவர்க்குக்
கைகுள் கனியாகும் கரு அறுத்த காரணர்க்கு.

89. பளிங்கில் பவளமடி! பற்று அற்ற பாவலர்க்குக்
கிளிஞ்சிலை வெள்ளி என்பார் கிட்டாதார் கிட்டுவரோ?

90. ஏட்டுக்கு அடங்காண்டி! எழுத்தில் பிறவாண்டி!
நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி

91. பஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி!
நஞ்சு பொதிமிட ற்றான் நயனத்து அழல்விழியான்.

92. அகம்காக்கும்: புறம்காக்கும்! அளவிலா அண்டமுதல்
செகம்காக்கும்: காணாத்திசை பத்தும் காக்குமடி!

93. பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்!
ஆசா பாசங்கள் அணுகாத பேரொளிகாண்!

94. தேசம் இறந்தவன் காண்! திசை இறந்த தென் கடல்காண்!
ஊசி முனை இன்றி இல்லா உருபொருள்காண்!

95. சிப்பியில் முத்தொளிகாண்! சின்மய நோக்கு இல்லார்க்கு
அப்பில் ஒளிபோல் அமர்ந்த அரும் பொருள்காண்!

96. ஆல விருட்சமடி! அளவிலாச் சாகையடி!
மேலாம் பதங்கள் விசும்பு ஊடுருவும் மெய்பொருள்காண்!

97. வங்கிஷம் எல்லாம் கடந்து மருவா மலர்ப்பதம்காண்!
அங்கிஷமாய் எங்கும் ஆழ்ந்த அரும்பொருள்காண்!

98. நாமநட்டம் ஆனதடி! நவில இடம் இல்லையடி!
காமனைக் கண்ணால் எரிக்கக் கனல் விழித்த காரணன் காண்!

99. கொட்டாத செம்பொனடி! குளியாத் தரளமடி!
எட்டாத கொம்பிலடி ஈப்புகாத் தேனமுதம்.

100. காணிப்பொன் னாணியுடன் கல்லுரைமாற்று இன்னதென்றே
ஆணியுடன் கூட்டி அடங்கலிட்டுக் கொண்டாண்டி!

101. அளவிறந்த அண்டத்தார் அத்தனைபேர் உண்டாலும்
பிளவளவும் தான்சற்றும் பேசாப் பிரமமடி!

102. கல்நெஞ்சின் உள்ளே கழுநீலம் பூத்தாற்போல்
என்நெஞ்சின் உள்ளே இணை அடிகள் வைத்தாண்டி!

103. வேதப் புரவியடி! விரைந்தோடியும் அறியார்:
காதற்ற ஞானமடி! காண்பார் கருத்துடையோன்.

104. பாச வினையைப் படப்பார்த்த பார்வையுடன்
நேசத்தைக் காட்டி நில் என்று சொன்னாண்டி!

105. ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள் ஒளிகாண்!
பேசாது இருக்கும் பிரமம் இது என்றாண்டி!

106. சின்மய நல்நோக்கால் சிற்சொரூபம் காட்டி எனைத்
தன் மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி!

107. தான் என்னைப் பார்த்தாண்டி! தன்னைத்தான் அல்லாமல்
நான் என்ன சொல்லுவண்டி! நவில இடம் இல்லையடி!

108. இன்றிருந்து நாளைக்கு இறக்கிறபேர் எல்லாரும்
என்றும் பரிபூரணத்தில் இனிது இருக்கச் சொன்னாண்டி!

109.பார்க்கில் எளிது அலவோ? பற்றற்ற பற்று அலவோ?
ஆர்க்கும் இடம் காட்ட அவனிதனில் வந்தாண்டி!

110. இத்தனை காலமடி இறந்து பிறந்த தெல்லாம்
இத்தனையும் இல்லையடி இரும்பில் உறை நீரானேன்.

111. எக்காலம் பட்டதடி! இறந்து பிறந்ததெல்லாம்
அக்காலம் எல்லாம் அழுந்தினேன் நான் நரகில்.

112. காலம் கழிந்ததடி! கர்மம் எல்லாம் போச்சுதடி!
நாலு வகைக்கருவும் நாமநட்டம் ஆச்சுதடி!

113. முப்பாழுக்கு அப்பால் முதற்பாழ் முழு முதலாய்
இப்போது வந்தான் காண்! எனை விழுங்கிக் கொண்டான் காண்.

114. பாலின்கண் நெய் இருந்தாற் போலப் பரஞ்சோதி
ஆலிங்கனம் செய்து அறவிழுங்கிக் கொண்டாண்டி!

115. செத்தபடம் ஆனேண்டி! தீ இரும்பில் நீரானேன்.
ஒத்தவிட நித்திரை என்று ஓதும் உணர்வறிந்தேன்

116. ஒப்பும் உவமையும் அற்ற ஓத அரிதாய பொருள்
இப்புவி நில்குருவே என்னவந்தோன் தாள் வாழி.

117. ஒப்பாரி சொல்லிடினும் உவமை பிழைத்திடினும்
முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுத்தருள்வார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s