காரைச் சித்தர்

Posted on Updated on

காரைச் சித்தர் ( கனக வைப்பு)

கனக வைப்பு

மாளாத சக்தியடா மனிதன் சக்தி
மலிவாகக் கிடைக்குதடா கணத்துக் குள்ளே
மீளாத மார்க்கமடா மின்னாத் தாளை
மேவியுனக் குட்காணும் வேதை மார்க்கம்
ஆளாக வென்றேனு மெப்போ தேனும்
அனைவர்க்கும் கிட்டுமடா ஞானப் பேறு
தூளாகக் காமத்தைத் துரத்தி விட்டே
துணையாகக் கம்பத்தே தூங்கு வாயே.                                  1

தூங்குவாய்ச் சாமததே விழித்துக் கொள்ளு
தூங்காமல் தூங்கிவெறுந் தூக்கம் தள்ளு
நீங்காமமல் நியமித்தே நிறைந்து நில்லு
நிலமான சாமத்தைச் சுத்தம் செய்தே
ஆங்காரச் சாதியெலா மகற்றிப் போடு
அன்பாக வாதித்தே விரட்டிப் போடு
பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான்
பண்பாகப் போதித்தேன் சாதிப்பாயே.                                  2

குப்பையிலே பூத்திருப்பாள் மின்மி னுக்கி
கோலத்தே பொன்மேனி கொண்டு நிற்பாள்
தர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள்
தனக்குள்ளே சர்ப்பந்தான் சரண்புக் காடும்
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால்
அனைத்தையுமே யெரித்திடுவாள் சலித்துக்கொள்வாள்
கர்ப்பையிலே தான்பிரித்துக் கண்ணி வைத்தே
கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர்.                          3

சித்தர்மனம் மலர்ந்திட்டா லதுவே போதும்
வெத்துவெறும் விளையாட்டும் சித்தி யாகும்
துத்தியெனும் பணத்துத்தி யிலையின் சாற்றில்
துரிசறுத்துத் தவஞ்செய்வார் தவத்தின் போக்கில்
வித்திதெனும் விந்துவூடன் நாதங்கூட்டி
வேதமுழங் கிடஞான வீறு கொண்டே
துத்தமறத் தானொடுங்கத் தூய்மை பெற்ற
துப்புறவே சித்திக்காம் துறவு கோலே.                                     4

பயனில்லாச் சொல்லகற்றிப் பயனே கூறல்
பயனதையு மினிதான பழமாய்ச் செப்பல்
நயனில்லாக் கடுவழிக ளவைவிட் டோடல்
நாட்டமெலா மருள்நாட்ட மாகக் கொள்ளல்
அயனில்லா தெவையுந்தா னாகக் காணல்
அத்துவிதத் தாலின்பச் சித்தம் பேணல்
இவையெல்லா மருங்குணமா மீசற் கன்பாம்
இடர்நீக்கிச் சுடர்காட்டும் நியமந் தானே.                               5

சித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே
செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர்மொழி நூலதனைத் தொட்டபோதே
சித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார்
சித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார்
சிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும்
சித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர்!                  6

தேவாரம் வாசகந்தான் திகழக் கூட்டித்
திருவாயின் மொழியெல்லா முருவாய்ச் சேர்த்து
போவாரைப் போகாரைப் புலம்ப வைத்து
போக்கற்றார் தமக்குமொரு போக்குக் காட்டி
கோவாரம் பூவாரம் கொழிக்க விட்டு
கோலமுறச் செய்தாலும் குவல யத்தின்
பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது
புகன்றிட்டே னவள் போக்கைப் புகன்றிட்டேனே!               7

ஊறுசுவை யொளிநாற்றம் ஒளியே யென்ன
உலகத்திலே திரிந்து கடலிற் புக்கு
வீதிதிரை நுரைகுமழி விளையாட் டார்ந்து
வினைவிதிகள் வினைவெறிகள் வேகந் தேய்ந்து
ஆறுவரக் குருவருளை யணைந்து பொங்கி
அண்டாண்ட சாரத்தை யறிந்து கொண்டே
சாறுகொள்ளச் சிந்தனையுங் குவிந்து நிற்கும்
சகஜநிலை யேயோகசமாதி கண்டீர்.                                       8

சிந்தித்தா லதுபாவம் சிணுங்கி னாலோ
சேருவது காமமடா தங்கி தங்கிச்
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில்
சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி
வந்தித்தால் வாதமடா வீண்வி வாதம்
வாகான மோகமடா மங்கிப் பொங்கி
நிந்தித்தால் நாசமடா நினைவுப் புந்தி
நிலையமடா மாயையதான் மயக்குத்தானே.                        9

வருத்தித்தான் சொல்வதிலென் வலுவுண் டாமோ
வருத்துவதாற் பலங்குறையும் மௌனம் போகும்
அருந்தித்தான் பருகிடுவான் ருசியைக் காணான்
அமுதப்பால் குடித்தவனே அமர னாவான்
துருந்தித்தான் பசியறிவான் வாணி யானை
சோபையுறுஞ் சேணியனை விலக்கி யப்பால்
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும்
பொக்கமதே யாசனமாம் யோகங் கண்டீர்.                        10

பாருலகி லான்மாவின் ஞானம் தேடப்
பலநூல்கள் கற்றறிந்தும் தெளிவில் லாமல்
நேரியலும் நதியதன் நீர் குளியார் தேத்து
நெட்டிநீர் கசிந்திடுவார் நெறியைக் காணார்
சீரியலும் பற்றற்ற நீரைக் காணார்
தேக்கி வந்து சிதறியநீர்த் தேக்க முண்பார்
ஆரறிவார் அடடாடா அடடா டாடா
அடயோகத் தவநிலைநிலை யதனைத் தானே.               11

இல்லறமே நல்லறமா மென்று சொன்னால்
இன்பமெனப் பள்ளியறைக் குள்ளாகாதே
தொல்லறமே துறவறமே தனது வண்ணம்
துறந்திட்டா பற்றறவே துறந்தி டாமல்
சொல்லறமே யுலகமெல்லாம் கண்ணின் ரூபம்
சொர்ணமய மாம்சொர்க்கம் சுகவை போகம்
கல்லறமே கனகமணிப் பூஷ ணங்கள்
கமலத்தைக் காத்திடுவான் பத்ம யோகி.                           12

பெற்றவர்கள் தங்கடனைத் தீர்க்க வேண்டும்
உற்றவர்கள் உறுகதியைப் பார்க்க வேண்டும்
பற்றுவர வத்தனையு முடிக்க வேண்டும்
பற்றில்லாப் பாமரைக் காக்க வேண்டும்
செற்றபுலன் பொறியடக்கிச்சேர வேண்டும்
சித்தமுறச் சிவபூஜை செய்யத் தானே.
கற்றவர்க்கே பலயோகம கனியும் பாரே.
கல்லாதவர் யோகமெல்லாம் பொல்லா யோகம்.             13

யுகமாறிப் போச்சுதடா கலியுகத்தில்
யோகியவன் நிலைமாறிப் புரண்டு போவான்
சகமாறிப் போச்சுதடா சகத்தி லுள்ளோர்
தமைமறந்தார் பொருள் நினைத்தே தவிக்க லுற்றார்
அகமாறிப் போச்சுதடா காமம் கோபம்
அறுவகையாம் பேய்க்குணங்க ளதிக மாச்சே
புகழ்மாறிப் போச்சுதடா மனிதற் குள்ளே
பூரணர்கள் மறைந்துள்ள ரவரைக் காணே.                        14

காலநெறி யாதுரைப்பேன் கேளாய் கேளாய்
காணவரு மாயிரமா வருடத் துள்ளே
பாலமடா வானத்துக கேற்ப பாதை
பகனவெடி சுகனவெடி பண்ணு வார்கள்
சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்து போகும்
சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப் போகும்
கோலமுறுங் குவலயமே சட்ட திட்டம்
கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம்.                             15

தீராத புயல்களெல்லாம் தினமுண்டாகும்
தீக்கங்கு எரிமலைகள் சிரிப்புக் கூடும்
தேராத நோய்களெலாம் தின முண்டாகும்
திசைகலங்கும் பூகம்பத் திறமே சாடும்
நேரான நெறியெல்லாம் நடுங்கி யோடும்
நெறியில்லா நெறியெல்லாம் நிறைந்தூ டாடும்
போராகக் குருதிகொப் பளித்துப் பொங்கும்
புகையாகப் புவனவளம் புதைந்து போகும்.                        16

தெய்வமெலாம் விண்ணாடிப் போகும் போகும்
தீமையெலாம் மண்ணகத்தின் தெருக்கூத் தாகும்
உய்யுமுண்மை யுளத்துண்மை யோடிப் போகும்
உலகவுண்மை விஞ்ஞானம் கூடிவேகும்
ஐயமில்லை யெனவகங்கா ரந்தான் துள்ளும்
ஐயையோ அகிலமெலாம் கள்ளம் கள்ளம்
துய்யநெறி காட்டிநின்றார் சித்தர் சித்தர்
தூலநெறி காட்டுகின்றா ரெத்தர் ரெத்தர்.                           17

விஞ்ஞான விதியெல்லாம் வேகம் வேகம்
வேகமினல் தாமத்தின் வித்தை வித்தை
அஞ்ஞான விதியெல்லாம் போகம் போகம்
அடடாடா கயிறறுந்த பொம்ம லாட்டம்
செய்ஞ்ஞானக் கதியெல்லா மரண வத்தின்
செயலன்றி வேறில்லை சென்மம் சென்மம்
மெய்யான விதியெல்லாம் யோகம் யோகம்
மின்னான சக்தியுடன் சாகம் சோகம்.                                 18

வித்தென்பான் முனையென்பான் மின்வீச் சென்பான்
வெப்பென்பான் காந்தத்தின் கப்பே யென்பான்
வித்தையடா விண்ணெல்லாம் சுழலும் மார்க்கம்
விந்தையடா ஆகர்ஷண வியப்பே யென்பான்
வெத்தறிவாம் கனியறியான் மேற்றோ லுண்பான்
விஞ்ஞானி யவனறிவைப் பழிக்க வில்லை
சித்தறிவான் சத்தறிவான் சித்தன் சித்தன்
சித்தத் திலேசிருட்டிச் சித்தங் காண்பான்.                        19

அடடாடா விஞ்ஞானி யறையக் கேளாய்
யாவைக்கும் காரணத்தை அறிவா யோநீ
அடடாடா வகிலாண்டக் கவர்ச்சி யேனோ?
அணுவுக்குள் மின்காந்த மமைந்த தேனோ?
கெடடாடா நேர்நிரையான் வின்க ளேனோ?
குவிந்திணைந்து பிரிந்தரனா யனமு மேனோ?
விடடா யிவையெல்லாம் மென்னே யென்னே!
விளக்கிடுவாய்க் களக்கமறச் சொன்னேன்.                    20

வெத்துலக விதியெல்லாம் வெப்பம் தட்பம்
விஞ்ஞான விதியெல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும்
செத்துலக விதியெல்லாம் யாதம் கூதம்
சீவனுடல் விதியெல்லாம் காமம் கோபம்
சத்துலக விதியெல்லாம் சகசம் சாந்தம்
தான்தானாத் தன்மயமாத் தழைவே தாந்தம்
சித்துலக விதிசத்தி னோடு சித்தாய்ச்
சேரனந்தத் தானந்தச் சீராம் வேராம.                                    21

வேரறியா வினைவறியும் விஞ்ஞானந்தான்
வேரறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானந்தான்
சார்பறியுஞ் செயலறியும் விஞ்ஞானந்தான்
சார்ப்புதஞ் சாரமதே மெய்ஞ்ஞானந்தான்
ஈரறியு மீர்மையெலாம் விஞ்ஞானந்தான்
இருமையெலா மொருமையுறல் மெய்ஞ்ஞானந்தான்
பாரறியும் பேதநெறி விஞ்ஞானந்தான்
பரமறியும் போதநெறி மெய்ஞ்ஞானந்தான்.                       22

காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா
கருநொச்சிக் கவசத்தில் காமினியைக் கட்டிடடா
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா
உரையெல்லாம் மித்தையடா உனக்கவளே வித்தையடா
சாமத்தைக் கண்டிடடா சர்மத்தை வென்றிடடா
சகலத்தை யுந்தழுவும் சத்தியத்தில் நின்றிடடா
வாமத்தி யருளாலே வாதத்தி லேவெற்றி
மண்ணேல்லாம் பொன்னாகும் மார்க்கத்தைக் கண்டிடடா. 23

மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி
மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில்
கீலத்தின் கீழ்நெல்லிச் சாற்றைக் காய்ச்சிக்
கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கிச்
சாலத்தான் நீர்மேலே நெருப்பைப் போட்டே
சாரத்தான் மலைதாங்கிக் குள்ளே யோட்டி
ஆலத்தா னமுதைத்தான் விழுதை நாட்டி
ஆறத்தா னமரத்தா னனைத்து மாமே.                                   24

வெப்பெல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய்
வினையெல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய்
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும்
அவற்றின்மே லாடுகின்றா ளன்னை யன்னை
துப்பெல்லாம் துரிசெல்லாம் சுத்தி சுத்தி
சொக்குமடா கைலாசச் சொர்க்க லிங்கம்
கப்பெல்லாம் நீங்குமடா காம தேனு
கறக்குமடா காயத்ரிக் கனிவாம் க்ஷீரம்.                             25

திருவான சேறையடா பஞ்ச சாரம்
திகழ்தெய் வமுஞ் சாரம் தேவிசாரம்
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம்
உற்றதொரு புஷ்கரணி யதுவும் சாரம்
கருவான மானமதுவும் சாரம் சாரம்
கண்ணான சாரமதைக் கண்டேன் கண்டேன்
குருவான பலசாரக் கோப்பும் கண்டேன்
கோக்கனக மாஞ்சாரக் கொதிப்புங் கண்டேன்.               26

சாரைக்கோட் டைக்குள்ளே சாரம் சாரம்
சார்ந்தநவி சாரக்கற் பூரம் பூரம்
கூரைக்கோட் டைக்குள்ளே கோரம் கோரம்
கொள்ளாமற் சிவயோனிக் குள்ளாம் வீரம்
வீரைக்கோட் டைக்குள்ளே விந்துப் பூவை
வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம்
காரைக்கோட் டைக்குள்ளே வந்த சித்தன்
கரையாட யண்டாண்டம் பூண்ட பத்தன்.                             27

பத்தனடா சித்தனடா பரம யோகி
பார்பிழைக்க வேயிந்நூல் பகருகிறேன்
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே
பேயன்யான் பேத்தலிவைப் பேணிப் பார்ப்பீர்
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின்
வித்தையுறும் வேதையெலாம் விரிவாச் சொன்னேன்
இத்ததையி லிந்நூலைப் போலே யில்லை
இதுகண்டார் வாதமுடன் வேதை கண்டார்.                        28

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s