சதோத நாதர் என்ற யோகச் சித்தர் பாடல்

அண்டத்துக்குள்ளே அனாதி பரவெளியைக் கண்டறிந்து கொண்டேன்,
கவலையை விட்டேன் என்று தாமறிந்த இன்பத்தைப் பாடலாக வடித்துள்ளார்.

கண்ணிகள்

அக்கரங்கள் தோன்ற அருள்கொடுக்கும் பூரணிஎன்
பக்கம் இருந்து பலகலையும் சொல்வாளே. 1

வாலை அபிராமி மாரிதிரி சூலிஅருட்
பாலை எனக்கருளும் பார்வதியின் தாள்போற்றி 2

அம்பிகையால் சோதரி என்னாத்தாள் திருப்பாதம்
கும்பிட்டு ஞானக் குயிற்கண்ணி கூறுவனே. 3

ஓங்கார வட்டமதின் உட்பொருள்கண் ஓர்ந்ததற்பின்
நீங்காத ஆசை நிலைக்குமோ மாங்குயிலே. 4

இயம்பும் இடைகலைக்கும் இன்பதாம் பிங்கலைக்கும்
சுயமாம் சுழிமுனையுந் தோற்றுமடி மாங்குயிலே. 5

ஆன்மா பரத்தோடு அமருந் திருக்கூத்தை
நான்வாயி னாலே நவில்வனோ மாங்குயிலே. 6

அஞ்செழுத்தைக் கண்டு அதன் உண்மை யும்தெரிந்து
வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே. 7

சூரியனும் சந்திரனும் தோன்றும் இடைநின்றே
பூரித்து னந்த போகமுற்றேன் மாங்குயிலே. 8

ஊமையெழுத் தாலேதான் ஓங்கார மாகினதைச்
சீமையிலுள் ளோர்கள் தெரிவரோ மாங்குயிலே. 9

முப்பாழும் தாண்டி முடிவின் இடந்தாண்டி
அப்பாழும் தாண்டின் அறிவுளதோ மாங்குயிலே. 10

அட்டாங்க யோக மறிந்து தெரிந்தபின்பு
வெட்டவெளி யுண்மை விளங்குமே மாங்குயிலே 11

ஆறாதா ரத்தில் அறிவை மிகச்செலுத்திச்
சீராய்த் தவசிலிருந்து சிக்கறுத்தோம் மாங்குயிலே. 12

துர்க்குணத்தைச் சுட்டறுத்துச் சூட்ம நிலைதெரிந்து
நற்குணத்தோடு எண்டியங்கு நானிருந்தேன் மாங்குயிலே. 13

அல்லலெல்லம் நீக்கி அறிவைஅறிவால் அறிந்து
வல்லசித்தன் என்றே மகிழ்வுற்றேன் மாங்குயிலே. 14

ஆனந்தம் பொங்கி அறிவே மயமான
ஞானம் அறிந்து நலமுற்றேன் மாங்குயிலே. 15

மெய்பொருளைக் கண்டுடனே வேதாந்தவீடடைந்த
வைப்பதனில் ஒன்றி மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே.16

நாதாந்த உண்மை நடுவறியா மாந்தருக்கு
வேதாந்தப் பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே. 17

நித்திரையும் விட்டு நினைவைஅறிவிற்செலுத்தி
சித்தியெலாம் பெற்றுத் தெளிவுற்றேன் மாங்குயிலே. 18

பேச்சொடுங்கி நின்ற பிரமநிலையைஅறிந்தோர்
ஏச்சுக்கு இடமற்று இருப்பார்காண் மாங்குயிலே. 19

காணாப் பொருளதனைக் கண்டுபிரமானந்தமுற்று
வீணாள் ஒழித்துமுத்தி வீடடைந்தேன் மாங்குயிலே 20

அருள்வெளியி னுட்பொருளை ஆராயமோனக்
குருமொழியை அன்றியில்லை கோதையெனும் மாங்குயிலே 21

அத்துவிதம் தன்னை அதுவதுவாய்க்காண்பதற்குத்
தத்பதத்தைக் காட்டித் தருவாயே மாங்குயிலே. 22

நம்பி உனைப்பணிந்து நாடோறும்பூசிப்பதற்குத்
தொம்பத்தை என்று துலக்குவாய் மாங்குயிலே. 23

நிசிபகலென் றெண்ணாது ஞேயஞா னத்தால்
அசிபதத்தை நீயென் றருள்செய்வாய் மாங்குயிலே. 24

நித்தநித்தம் என்னுளத்தில் நீஇருப்பதுஉண்மை எனில்
தத்துவம் சிற்பொருளைத் தந்தருள்செய் மாங்குயிலே. 25

சுத்த நிராமயத்தின் தோற்றத்தினால்உதித்த
வத்துவெலாஞ் சுத்தமயம் அன்றோ மாங்குயிலே. 26

தேறாப் பொருள் அனைத்துந் தேறித்தெளிவதற்கு
மாறா நின் இன்பமது வாய்க்குமோ மாங்குயிலே. 27

அசரசரத்தின் உற்ற அண்டபிண்டம் பல்லுயிரும்
நசிதம் எனக் கண்டறிந்து நின்றேன் நான் மாங்குயிலே. 28

பாசபந்தம் விட்டுப் பரகதிஎன் றேயிருந்தால்
பேசஒண்ணாப் பிரமம் பிறக்குமே மாங்குயிலே. 29

அந்தக்கர ணத்தை அடக்கிப் பரவெளியைச்
சொந்தமென நம்பித் துதிப்பாய்நீ மாங்குயிலே. 30

சுத்தப் பிர மத்தின் தொடர்புவழி யேகாணில்
முத்தியைத் தேட முழிப்பாயோ மாங்குயிலே. 31

எக்கனியை யும்பரித்து ஏக்கமறச் சாப்பிடலாம்
கைகனியே பிரமமெனக் கண்டுதேர் மாங்குயிலே. 32

துர்க்கந்தத் தால் எடுத்த தூலமிது பொய்யென நீ
நற்கந்த மானசுக ஞானம் அறி மாங்குயிலே. 33

வெட்டவெளியதனில் மெய்ப்பொருளைக் கண்டபின்பு
பட்டப் பகற்தீபப் பார்வையேன் மாங்குயிலே? 34

எங்கும் நிறைத்துநின்ற ஏகபர வத்துவினை
அங்கைநெல் லிக்கனிபோல் யானறிந்தேன் மாங்குயிலே. 35

சத்தாகிச் சித்தாகித் தாபரமுந் தானாகி
வித்தாகி வந்த விதம்தெரிவாய் மாங்குயிலே. 36

அருவாய் உருவாகி அண்டர் அண்டந்தானாய்க்
கருவாகி வந்த கணக்கறிவாய் மாங்குயிலே. 37

ஆதிசகத் தென்றும் அனாதி மகத்தென்றும்
சோதிச் சுயவடிவாய்த் தோன்றுமே மாங்குயிலே. 38

பார்க்குள் ஆகாயமதைப் பார்த்துப்பார்த்து எல்லைகண்டு
யார்க்கும் சொல்எளிதே ஆய்ந்திடுவாய் மாங்குயிலே. 39

அண்டத்துக்குள்ளே அனாதி பரவெளியைக்
கண்டறிந்து கொண்டேன் கவலைவிட்டேன் மாங்குயிலே. 40

அணுவுக்கு அணுவாய் அருட்சோதி என்றகுரு
மணியாய் விளங்கும் மகிமைஅறி மாங்குயிலே. 41

பற்றற்று நின்றே பரவெளியைக் கண்டேன்நான்
வற்றற்றல் ஆசை மறந்திருந்தேன் மாங்குயிலே. 42

Advertisements