பட்டினச் சித்தர் ஞானம் – 100

காப்பு நேரிசை வெண்பா

நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்லபுத்தி
வெண்பாவாய் நூறும் விளம்பவே – பண்பாக்
ககனப் பதமுறவக் கன்ம மருகக்
ககனகதிர் வேல்முருகன் காப்பு. 1

நெஞ்சுட னே தான்புலம்பி நீலநிறத்தாளீன்ற
குஞ்சரத்தை ஆதரித்துக் கும்பிட்டால் – கஞ்சமுடன்
காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்
பூமிதனில் வாழ்வ ரெப்போதும். 2

எப்போதிறைவன் எழுத்தைவிட்டுத் தப்புவோம்
எப்போது எழுத்திரெண்டை ஏத்துவோம் – எப்போது
காமன்வலையறுப்போம் காரொளியைக் கண்டுநெஞ்சே
ஏமன்வலை அறுப்ப தென்று. 3

என்றும் பயமறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய்
நின்றசிவ லிங்கத்தை நெஞ்சேகள் – உண்டுறங்கித்
தேசமெல்லாம் நின்றசைந்த தீயெழுத்தே லிங்கங்காண்
ஆசைவிந்தே ஆவுடையாள். 4

ஆவுடையா ளோடிருந்தேன் அருளானந் தம்பெறவே
கோவுடையாள் நின்றதினம் கூடிய – பூவுடையாள்
கட்டழகி யைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சேஇரு. 5

இருவினைக்கு உளாகாதே என்னுடமைஎண்ணாதே
பெருகுசினங்கொண்டு பினத்தாதே – மருவுமலக்
கள்ளமெலாம் விட்டுக் கரைந்து கரைந்துருகி
உள்ளுணர்ந்து நெஞ்சேபார் ஒன்று. 6

ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே
சென்று மயங்கித் திரியாதே – நின்ற
நிலை பிரியா தேநெடிய னெஞ்சே கொடிய
புலைவினையும் மாற்றும் பொருள். 7

பொருளுடைமை நம்பாதே பொய்வாழ்வை நத்தாதே
இருளுறவை நம்பி இராதே – பொருளுறவு
கொண்டறிவி னாலே குறித்து வெளியதனைக்
கண்டுபிடித் தேறுநெஞ்சே காற்று. 8

காற்றுடனே சேர்ந்து கனலுருவைக் கண்டவழி
மாற்றி இனிப்பிறக்க வாராதே – ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை
நாடியிருப் போம்மனமே நாம். 9

நானென தென்றுவினை நாடி அலையாதே
தானவனே யென்று தரியாய்நீ – ஏன்மனமே
வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காணாவல் கொள்ளாய் கருத்து. 10

கருத்து வேறாகாதே கண்டிடத்து ஓடாதே
விரித்துப் பலவேடம் மேவாய் – பெருத்ததொரு
சஞ்சலத்தை விட்டுச் சலமறிந்து காண்மனமே
அஞ்செழுத் தாலொன் பது. 11

ஒன்பது வாய்க்கூட்டை உறுதிஎன்று நம்பாதே
ஐம்புல னேயென் றணுகாதே – இன்பமுடன்
சிற்பரத்தி னுள்ளே தெளிந்தபர மானந்தத்
துட்பொருளே மெய்யென் றுணர். 12

மெய்யுணர்ந்து பாராமல் விரிந்தகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே – செய்யதோர்
ஆணெழுத்தும் பெண்ணெழுத்துமாகி நடுநின்ற
காணும் பொருளுரைக்குங் கல். 13

கல்லான நெஞ்சே கவலைக் கருத்தாகிப்
பொல்லாப் பவக்கடலில் போகாதே – எல்லாம்
செலக்குமிழி யென்று நினை செம்பொன்னம்ப லத்தை
கலக்கமறப் பார்த்தே கரை. 14

கரைதெரியா இன்பக் கடலில் மூழ்காதே
வரைகடந்த வாழ்வைநத் தாதே – உரையிறந்த
ஓசைவிந்து வேமனமே உற்றசபை யாலறிந்து
நேசமுள்ள பாக்கியத்தில் நில். 15

பாக்கியத்தைக் கண்டு பரிந்து மகிழாதே
தாக்குமிடி வந்தால் சலியாதே – நோக்குமே
ஒருவத்தன் திருவிளையாட் டென்று உணரு நெஞ்சே
கருத்தாலே நின்று கருது. 16

கருதாதே மங்கையர் காமவலைக் கேங்கி
உருகாதே நெஞ்சே ஒருவன் – இருகாலைக்
காத்தயர்ந்து சேர்த்துக் கனலைக்கண் காட்டினகண்
போற்றிப்பார், ஒத்தநல் பொன். 17

பொன்னாசை மண்ணாசை பூங்குழலா ராசையெனச்
சொன்னாசை யென்றறிந்து சோராதே – எந்நாளும்
ஈசன் அமைத்தாங் கிருக்குங்கா ணிம்மூன்றும்
பாசமது நெஞ்சே பரிந்து. 18

பரிந்து திரியாதே பார்வினைக்கும் அஞ்சாதே
அறிந்துருகிச் சிந்தித் தலையேல் – வருந்தி
நடந்துசித்ர நாடியிலே நாதமறி நெஞ்சே
உடைந்திடு முன்னே உடம்பு. 19

உடம்பழிந்த பின்மனமே ஒன்றுங் கிடையாது
உடம்பழியு முன்கண் டுணராதே – உடம்பிற்
கருநிறத்தைச் சேர்ந்து கருமலச் சிற்றற்றுப்
பருகு கலைமதியப் பால். 20

பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள்
காலிடுக்கை நத்திக் கரையாதே – கோலெடுத்து
வீர மறலி இவருமுன் வினையறுக்கும்
பார வழிஇன்னருளைப்பார். 21

பார்த்த இடமெல்லாம் பரமென் றிருமனமே
காற்றனல் மண்நீர் வெளியாம் கண்டவெல்லாம் – மாத்திரண்ட
ஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே
என்புடலும் நில்லாது இனி. 22

இனியசுகம் ஐம்புலனென்று எண்ணாதே நெஞ்சே
இனிய சுகமற வாதே – இனியசுகம்
கண்டதெல்லா மெவ்வுலகு காணாத இவ்வுலகில்
நின்றதோ நில்லாததா. 23

நில்லாமல் ஓடுகின்ற நெஞ்சே நிலையில்லா
எல்லாம் பகையா யிருக்குங்காண் – பொல்லாக்
கருக்குழியிலே பிறந்த கன்மவினை யானால்
திருக்கறுக்க வேணும் தினம். 24

தினந்தினைப் போதாகிலுந்தான் தீதறநில் லாமல்
இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் – தினந்தினமும்
ஓங்காரத் துள்ளொளியை உற்றுணர்ந்த நீமனமே
ஆங்கார அச்சம் அறு. 25

அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத் தால்மேய்ந்த
கச்சத்தா னியச்சயமாய்க் கள்ளதோ – மெச்சத்தான்
அண்டமெல்லாம் ஊடுருவ ஆகாச முங்கடந்து
நின்ற நிலைதான் நிலை. 26

நிலையறிந்து நில்லாமல் நீபாவி நெஞ்சே
அலைமதி போலே தினமும் ஆனாய் – கலையறிந்து
மாரனையுங் கூற்றினையும் மாபுரத்தை யும்புகைத்த
வீரனையும் தேட விரும்பு. 27

விரும்பித் தனித்தனியே மெய்யுணரா தேமா
இரும்புண்ட நீர்போல வேகும் – கரும்பதனைத்
தின்றாலல்லோ தெரியும் நெஞ்சே நின் ஐம்புலனை
வென்றாலல்லோ வெளிச்ச மாம். 28

வெளிச்சமில்லா வீடே விளக்கேற் றினதாக்
களிசிறந்து நின்றதைக்கா நெஞ்சே – வெளிச்சமற
தொண்ணூற் றறுதத் துவமொன்றாய்த் தோன்றுங்காண்
எண்ணிலிவை காணா திருட்டு. 29

இருட்டனைய மாய்கையா லெவ்வுலகுந் தாய
பொருட்டனையே மூடு ஐம்புலனால் – திருட்டுமன
வண்டருடன் கூடாதே வாழ்மனமே நாமிருவோர்
கண்டுகொள்வோம் காணா தது. 30

காணா ததைக்கண்டால் கண்டதெல்லாங்காணாது
வீணாவல் கொண்டுள் மெலியாதே – நாணாதே
இந்திரியத் தோடு பிணங்காதே பாவிநெஞ்சே
செஞ்சொல்மறை அக்கரத்தை தேடு. 31

தேடினா லைந்துதிரு வக்கரத்தைச் சென்றுவெளி
நாடினால் நெஞ்சே நலம்பெறலாம் – வாடியே
பொல்லாப் புவிகாணப் போகமதை நம்பாதே
எல்லாம் வெயில் மஞ்சளே. 32

மஞ்சனைய கூந்தல் மடவாரைக் கண்டுருகும்
பஞ்சமல நெஞ்சே பகரக்கேள் – மஞ்சள்
மயங்காணும் இந்தவுடல் மாயவாழ் வெல்லாம்
அயன் காணழி சூத்திரம். 33

சூத்திரத்தா லாடும் சுழுமுனையைத் தான்திறந்து
பார்த்திருந்தால் வாராது பாவமெல்லாம் – சூத்திரத்தைப்
பாராமலேயிருந்து பாவிமன மேபிறக்க
வாராம லேயிருக்க வா. 34

வாசி தனைப்பிடித்து வண்கனலோ டேசேர்த்துச்
சீசீ யெனவே திரியாமல் – மாசி
இருளா னதைச் சேர்த்து இருந்தாயே நெஞ்சே
பொருளா னதைமறந்து போட்டு. 35

போட்டுவிக்கும் பொல்லாப் புழுச்சொரியும் நாய்விடக்கே
கூட்டங் குலைந்து குலைந்திடுமுன் – காட்டிடில்
தாழ்வுறாய் நெஞ்சே தராதா மாயெங்கும்
மூழ்வா னதையுயிர்போம் முன். 36

முன்னே யயனெழுதும் மூன்றுவினை கண்டுழன்று
பின்னும் தெரியலையோ பேய்மனமே – தன்னை
அறியா திருந்தால் அவனறிவானோ
குறியான புத்தியென்றே கொள். 37

கொள்ளைக்குட் பட்டுக் குடிகேட ரோடிருந்து
கள்ளக் கருத்தால் கருதாதே – மெள்ளமெள்ள
அய்ந்தாய்ந்து பார்த்துநீ ஆறாறுக் கப்பாலே
தேர்ந்ததாய்ந்து பார்த்துத் தெளி. 38

தெளிந்தநீர் பட்டமுதம் சேர்ந்தால் தெளியா
தெளிந்தநீர் காட்டா தவைபோல் – தெளிந்தால்
சகலப் பொருள் தோற்றும் தாழ்வுறா தொன்றும்
பகலிர வில்லாத பதி. 39

பதிபசுபா சங்களையும் பற்றி யுருவப்
பதிதனிலே தங்கிப் பலரும் – கதிபெறவே
வீணாமோ நெஞ்சேகேள் வேதாந்தத் துட்பொருளை
காணா மலாமோ கணக்கு. 40

கணக்கறியா மாயக் கருவீகர ணாதிப்
பிணக்கறியா மற்பேதை நெஞ்சே – இணக்கம்
அறிந்திணங்க வேணும் அருள்வெளியி னுள்ளே
செறிந்தவிந்து நாதத்தைச் சேர். 41

சேராதே மாய்கைதனை சேர்ந்து கருக்குழியை
பாராதே நெஞ்சே பதையாதே – சீரான
சித்திரத்தைப் பார்த்து தினமே சித்திரத்தில்
உத்திரத்தைக் கொள்ளா உகந்து. 42

உகந்து உகந்து நெஞ்சமே ஓரெழுத்தி னாலே
அகந்தனையே சுத்தி பண்ணி பாய்ந்து – முகந்து
குடியாம லாமோ குலவுமல மான
மிடியா னதுதீர வேண்டி. 43

வேண்டுந் திரவியமும் மேலுயர்ந்து பள்ளியெல்லாம்
ஆண்ட திரைநாடு மம்பலமும் – மாண்டுபெருங்
காடுயர்ந்தா ரேமனமே கண்டாயோ மாயனயன்
தேடரிய ஈசன் செயல். 44

செயமகா நெஞ்சே திருட்டுமலக் கோட்டை
பயமறவே வெட்டிப் பரப்பி – நயமான
வாசியினால் சுட்டு மதிமயங்கக் கண்டிருப்போம்
பேசிய நாம் பேசாம லே. 45

பேசாத ஞானப் பெருமைக் கிடப்பதுதான்
ஆசாபா சங்களில்லா தார்க்கல்லோ – சுசாமல்
தேசமெல்லாம் ஓடித் திரிகின்றாயே மனமே
ஆசாபா சங்களும் நீ யாய். 46

பாசங் களைந்து பதியி லிருந்துகொண்டு
பேசரிய காலைப் பிடித்திருக்க – நேசமுடன்
நாமிருவ ருங்கூடி நாதாந்த ஞானத்தை
தாமொருவ னாயிருக்கத் தங்கு. 47

தங்கு நெடுவளையில் சகலங் களுங்கடந்து
எங்குநான் றானா யிருக்காமல் – மங்கு
கருவானாய் நெஞ்சே கரிக்கால தூதன்
வருவானே யென்ன வகை. 48

என்னவகை செய்வோம் எமதூதன் வந்தக்கால்
பின்னையென ஒட்டானே பேய்நெஞ்சே – சொன்ன
படியேகேள் தூதன் பரிந்துவரு முன்னே
அடிதேடிக் கொண்டே அமர். 49

அமரும் மனம்புத்தி யாங்கார மேசித்
தமரும் பொழுது வேறானோர் – அமரும்
கோவென் றுரைத்தநமன் கொண்டுபோம் போதறிவு
வாவென்றால் நெஞ்சே வாராது. 50

வாராது நெஞ்சே மயக்கம் வருமுன்னே
வேரா னதைப்பிடித்து மேலேறிப் – பாராமல்
பொய்யிலே நில்லாதே புத்திகெடா தேயிருந்தால்
மெய்யிலே நின்றறிவோம் மெய். 51

மெய்யாறு வீடுகளாய் மேலாம் படைவீடாய்
ஐயாறு மாதம் அறுபதாய் – மெய்யாகக்
கண்டதெல்லாம் நான்காண் காணா ததைத்தேடிக்
கண்டுருகி நெஞ்சே கனி. 52

கனியருந்த மாட்டாமல் காயருந்து கின்றாய்
கனிருசிபோ லாகுமோ காய்தான் – இனியதுகேள்
நானும் நீயும் கனிகாண் நடுவிருந்த தேருசிகாண்
தேனும் பாலும் போல் சிவன். 53

சிவதலங்க ளைத்தேடி சீயெழுத்த றுத்துச்
சிவதலங்க ளைத்தேடி சேரா – தவ தவங்கள்
பண்ணாதே நெஞ்சேகேள் பாரவினை வந்தக்கால்
எண்ணாதே அஞ்சியேங்கா தே. 54

ஏங்காதே நெஞ்சேகேள் எவ்வினைகள் வந்தாலும்
ஏங்காதே சற்றும் இளைக்காதே – தாங்காமல்
கொண்ட வனும் செத்தவனும் கூட்டத்தானும் வந்தான்
இன்றுகுறித் துண்மையிதென் றெண். 55

எண்ணரிய நெஞ்சே இனியநற் பாலதனை
அன்னந்தண் ணீர்நீக்கி யேயிருந்து – தன்மைபோல்
துன்பங் களைந்து தூயவெளி யூடுருவாய்
இன்பங் களைச்சேர்ந் திரு. 56

சேர்ந்திருவோ ரும்பாலும் தேனும் போலே கலந்து
வார்ந்ததிலே யுள்ளுரிசி வாங்காமல் – போங்காலம்
வைத்தமறக் காலன் வருவானே வந்தக்கால்
ஏய்த்திடுவா னெஞ்சே எவன். 57

எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாரு முண்டோ
கவனமற நின்று கருதின் – புவனமெல்லாம்
வித்துயிரெல் லாங் கழண்டு விண்ணுடைந்த தேமனமே
மற்றுடலைஉண்கிறதே மண். 58

மண்ணெழுந்தும் நீரெழுந்தும் வாய்வெழுந்தும் தீயெழுந்தும்
விண்ணெழுந்துங் கூடி ஒரு வீடாகி – நண்ணரிய
மாயமெல்லா முண்டாக்கி வைத்தான் காண்நெஞ்சேஇக்
காயமெல்லாம் நானாக் கரு? 59

கருவழிந்தால் வித்தையில்லாக் காரணம் போல் நெஞ்சே
கருவழிந்த தெல்லாம் கண்டதெல்லாம் – கருதித்
திரியாதே நெஞ்சே சிவன் செயலே யல்லால்
மரியாரில் லாதக்கால் வந்து. 60

வந்ததுவும் நாதாந்த வாதனைக்கண்டே வணங்கித்
தந்திரமாய்ச் சென்று தரியாமல் – அந்தரத்தில்
விட்டபட்டம் போலலைந்து வெவ்வினையி னால்மனமே
தட்டுகெட்டுப் போகாதே தான். 61

தானந் தவமுயற்சி தாளாண்மை யோடுநெஞ்சே
வானம் பிளந்து வழிகூடின் – நானுமதில்
நீயு மொருநிழலில் நின்றங் கிளைப்பாறி
தோயுமதி தானே தொடங்கு. 62

தொடங்கு வினையறுத்து சுற்றமெலா நீத்தே
அடங்கு மிடத்தில் அடங்காமல் – கிடந்து
பறந்தெடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே
அருஞ்சரத் தம்மத னடி. 63

மதனசரத் தால்மனமே வையம் மயங்கி
விதனத் துறலால் வேறில்லை – மதனாலே
தத்துச் சுகத்தை நத்தி தானலைய வேண்டாங்காண்
மெத்த சுகத்தை வெறுத்து. 64

வெறுத்துவெருக் கொண்டதுபோல் வீணிலே நெஞ்சே
பொறுத்த மயக்கிற் போகாதே – குறித்தெடுத்து
தேடியே வாசிதனை சேர்ந்து கலந்தபொருள்
கூடினா லாமே குணம். 65

குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே
வணங்குங் குணமாக வந்து – வணங்கியே
மண்டல மெலாங் கடந்து மாவீட்டை நீதிறந்து
கண்டெடுத்துக் கொள்வாய் கனம். 66

கன தனத்து மாதர் கழிகாதல் கொண்டே
வினையார் நகைக்குருக வேண்டா – தினமனமே
சோதித்தா னல்லால் சுபகா ரியமாகப்
போதித்தால் கொள்விலையோ புத்தி. 67

புத்திதரும் வித்தைதரும் பொல்லாப் பில்லாமல் நெஞ்சே
சித்திமுத்திபேரின்பம் சேர்ந்திடலாம் – நித்தநித்தம்
தானந்த மானதொரு சற்குருவோடே பழகி
ஆனந்த முண்டிருந்தக் கால். 68

கால்வழிச் சென்று கருபைக் குழிக்குக்கீழ்
மூலமற்ற நல்வழியே மூழ்கின்றி – மாலை
இருட்டறுத்துப் போடாமஎன்பாவி நெஞ்சே
திருட்டுவித்தை செய்கிறாய் சென்று. 69

சென்று சிவனடியில் சேர்ந்த பெரும்பாம்பு
ஒன்றுமிக வாசியைத்தான் ஓட்டாமல் – நன்றாய்
நிலையாக நில்லா தலைவாய் மனமே
அலைவாயி னில்துரும்ப தாய். 70

தாய்தந்தை பெண்டுபிள்ளை தானென் றிரங்கிநித்தம்
காய்பறிக்கி றாயே கனியிருக்க – தாய்தந்தை
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமுந்தான்
எத்தனை பேரைப்பெற்றோம் இங்கு. 71

இங்குஅங்குமாய் மனமே ஈடழிய வேண்டாங்காண்
அங்கம் பொருளா அறிந்துகொண்டு – எங்குமெங்கும்
நாமேசிவமாக நாடினால் ஞானமொழி
தாமே அருளைத் தரும். 72

அருளில்லா தார்க்கும் அருளறிவங் காமோ
அருளறிவு தானே ஆனந்தம் – அருளறிவு
தேடுவதும் கூடுவதும் சிந்தையா னந்தமுடன்
நாவதும் தானறி வினால். 73

நாடிலெழுத்து ஆறும் நடுவெழுத் தீரைந்தும்
ஓடி னொருபதினா லாகுமோ – ஓடாய்நீ
ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோடுறங்கி நெஞ்சே
ஓரெழுத்தி லேசென் றுரை. 74

உறைகலத்தினாய் போல உள்ளமல மெல்லாம்
அறுத்தடைந்து நெஞ்சே அறுதி – நிறைத்துப்
புளியம் பழத்தோடு போலிருக்க வேண்டும்
களியழியுங் காலத்துக் கே. 75

காலங் கழித்துக் கடைவாயில் பாலுறுமுன்
வேலங் கனைய விழிமடவார் – ஏலக்
குழியில்வைத்து மாரடித்து கூப்பிடுமுன் மாய்கைக்
கழியெடுத்துப் போடுமுன் கண்ணால். 76

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ
எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் – நண்ணாய் கேள்
பார்க்கவேண் டுந்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால். 77

உன்னாலே நெஞ்சமே ஊழ்வினை வந்தாலும்
எந்நாளும் பாம்பின்வாய் தேரைபோல் – முன்னால்
அம்பிபட்டுப் போகாதே ஆனந்த மெய்விளக்கு
நம்பி துணைக்கு முற்றும் நம்பு. 78

நம்பினான் றன்னை நடுவணையி லேயிருந்து
கும்பிடா தார்க்குங் குறையுண்டோ – நம்பிப்
பளிங்கொளிபோல் நெஞ்சே பரந்திடாலா மெங்கும்
விளங்கனலோ டேசேருமே. 79

ஏமன்வரு முன்நெஞ்சே எவ்வினையுமே வென்று
சாம நடுவதனில் சார்ந்ததிலே – சேமமுடன்
காலனையும் வென்று சில காமனையும் வென்றுபின்பு,
பாலிக்க லாமதுநாம் பார். 80

பாரயனும் மாலும் பரவவரு ருத்திரனும்
காரனைய வாரணத்தை தான்கண்டு – சீராய
நக்கத் திடைநடுவே நற்க்கன பொற்பதியில்
சொற்கனகத் தற்பதியில் தோன்று. 81

தோன்றுமே யெல்லாச் சுகமுற்றதில் மனமே
தோன்றுமே ஆனந்தச் சுந்தரர்பின் – தோன்றுமே
அட்சரச் சுருக்கி னொடும் அக்கரப் பெருக்கமுடன்
உச்சரித்து ரைக்கிறவுண்மை. 82

உண்மை யிதுகாண் ஒளியிருந்த வீடதுகாண்
உண்மை சிவனிருக்கும் ஊருகாண் – உண்மை
கருமை ஒளியேழ் கதியுள் பதங்கள்
மருவுதங்கி நீ வருந்து மாறு. 83

வருந்தும் பொழுதுகாண் மாயையாய் நெஞ்சே
வருந்தும் குணமாக வந்து – வருந்தும்
இருவினை தொடக்கறும் ஏழ்வகைப்பிறப்பாம்
கருமலத் திருக்கறுங் காண். 84

காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை
காண்மனமே மாலயனுங் காணரிதை – காண்மனமே
செம்பொன்னி னம்பலத் துள் சேருஞ்செஞ் சொல்லென்றும்
அம்பலத்தில் ஆடுநட னம். 85

நடனமது பார்மனமே நயனத் திடையே
நடனமது நாலாம் பதங்காண் – நடனம்
பதிமதிவித் தாய் மனமே பலகதிவித் தாயெனவே
அதிவிதசித் தாந்த மாடும். 86

ஆடும் பதிமனமே அம்பலத்தைச் சுட்டுநடம்
ஆடும் பரமகுரு ஆனந்தம் – ஆடுகின்ற
கூத்தனை கூற்றிற்ற கூத்தபிரா னையசுத்தம்
நீத்தவனைச் சித்தம்வைத்து நில். 87

நில்லு நிலவறமாய் நேசமுடனே பதியில்
நில்லு பிறவியற நீநெஞ்சே – நில்லு
கனல்மதியும் கார்மிடறும் கதிரும் மதியும்
புனலொடு செஞ்சடையும் போற்றி. 88

போற்றித் தினமனமே பொல்லாக் குலங்கள் விட்டுக்
காற்றுங் கனலுங் கருத்துஒன்றாய்ப் – பார்த்தறிவால்
சுத்தமலப் பித்தையற்றுச் சுற்றஒழி சுற்றிலுற்றுச்
சத்தமறித் துற்றதிலே தங்கு. 89

தங்குநீ சென்று சதாசிவத்திலே மனமே
மங்குங் கருக்குழிக்குள் வாராமல் – தங்கும்
கருவும் புனலும் கதியும் கெதியும்
விதியும் திருத்தான வெளி. 90

வெளியில் வெளியாகி விண்ணவன் றானாய்
வெளியி லொளியா யிருக்க – வெளியிற்
கரியுரித்துப் போர்த்தவனைக் கார்மதிசென் றானைக்
கருவறுத்துப் பார்த்தலே காண். 91

காணு மனமே கரிகாலனை வதைத்துக்
காணு முலகமெல்லாம் காணுருவாய் – தானு
மனவிரக மானபுலி மன்றுள் நடனப்
பணவரவின் உற்ற பாதம். 92

பாதத்தான் அஞ்செழுத்தான் பரமன் சிங்க
நாதத்தா னென்று நெஞ்சே நன்றாகப் – போதத்தான்
ஆரணத்தி னோடடைந்து அண்டமெல்லாம் சுட்டதிரு
நீறணிந்து கொண்டிரு நித்தம். 93

நித்தனாய் நிர்மலனாய் நின்றுலகம் மூன்றுரைக்கும்
கர்த்தனாய் அஞ்செழுத்தின் காரணமாய்ப் – பெற்ற
குருவினிரு பாதங் குளிர நினைநீ
தருமதுபற் றாமனமே தான். 94

தானவனா காவிட்டால் சண்டாள னிற்றடிவான்
தானவனு மங்கே தரிக்கொட்டான் – மானார்
கலங்கும் கலவிக்கருத்திற்றால் தான் கொடுப்பான்
இலங்கும் அடிதேர் நெஞ்சே. 95

நெஞ்சே உனக்கு நிலவறமாய்ச் சொன்னவெலாம்
எஞ்சாவென் சொல்லென் றிகழாதே – நெஞ்சே
கருத்திச்சை தள்ளி கருதென்று செப்பின்
கருத்திச்சை தள்ளு கருத்துள். 96

உள்ளிருந்து நெஞ்சே உலாவுஞ் சிவகுருவை
வெள்ளெருக்கின் பூச்சூடும் வேணியனை – உள்ளே
மனமுருகப் பார்த்தால் மலைசிலையாகச் சென்றால்
உனதறிவால் பார்த்து நீ ஓது. 97

ஓதுநீ நெஞ்சேகேள் ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை – ஓதில்
கடிய மிடியும் கடிய பிணியும்
கடிய வணுகாமல் காக்கும். 98

காக்குந் தினமே கடியப் பிறப்பறுத்து
கார்க்கும் பலபிணிநோய் காட்டாமல் – நோக்குமந்தி
வந்து பகல்வெளியில் வாராத மன்மதனை
யுந்து மதையுணர்ந்தில் வாழ். 99

வாழுநீ நெஞ்சே மயங்கித் திரியாதே
ஏழெழுத்துக் கப்பா லிருப்பானை – ஏழை
வருத்தந்தீர்த் தன்பன்மனமதனில் தங்கு
பருத்தரத்தி னத்தைப் பணி. 100

பணிந்து துதிமனமே பல்லுயிர்கட் கெல்லாம்
அணுவிலணு வாங்கியிருந் தானை – துணிவாய்ப்
பிறவா திருக்கவும் பேரின்ப வாழ்வைத்
திறமாக நம்பிச் செலுத்து. 101

Advertisements