திரிகோணச் சித்தர் பாடல்

திரிகோணச் சித்தரின் உண்மையான பெயர் தெரியவில்லை. இவர்
யாழ்ப்பாணத் தமிழ்ச் சித்தர் என்பாரும் உளர். வேறு பல சித்தர்கள்
இசையையும் எண்ணத்தையும் இணைக்கும்போது இவர் கலிவெண்பா யாப்பில்
உயர்ந்த சிறந்த எண்ணங்களைப் பாவில் இணைப்பதால் இவர்
யாழ்ப்பாணத்தவர் என்பதற்கு ஒரு சான்றாகும்.

காரணம் ஈழத் தமிழ்நாடு போராட்டம் தொடங்குவதற்கு முன்
வரையிலும் ஈழத்தமிழ் நாட்டில் பார்ப்பனர் பெரிதும் இல்லையாதலால்
யாப்பின் மரபு அறாமல் நூல்கள் இங்கு எழுந்து வந்தன. வாழ்கின்றன.
எனவே இம் முடிவு, இவர் 92 கண்ணிகளில் யோகம், ஞானம் பற்றி
அனைத்தையும் சீர்திருத்தச் சிந்தனையோடும், பகுத்தறிவுப் பாங்கோடும்
அணுகும் முறை மிகமிக மேலானதாக உள்ளது. இவர் காலம் 17ஆம்
நூற்றாண்டின் முற்காலப் பகுதியாக இருக்கலாம்.

கலிவெண்பா

சிவனே பரமகுரு தேசிகனே பாதம்
அவனே அனுதினமும் ஆகும் நவநீத

1

பொன்பூத்த நீலப் புயல்வண்ண னும் பொறிவாய்
மின்பூத்த நான்முகனும் வேதாவும் தென்பூத்த

2

செக்கச் சடையானும் தேசுபெற வேயுருவாய்
ஒக்கத் தனிவந்து உதித்தபிரான் தர்க்கமிடும்

3

வேதமுஞ் சாத்திரமும் வேண்டும் பலசமயம்
பேதமும் காணாப் பெருஞ்சமயம் நாதத்தில்
4

ஓசை அடங்க ஒளியம் பரமனையில்
ஆசை அடங்க அனுபவிப்போன் பூசைபுரி
5

தொண்டர் இதயச் சுனைமடலில் வேரூன்றி
விண்ட நறைக்கமல மெல்லடியான் எண்டிக்கும்
6

சாதியான் தோன்றும் சமரச மாயிருந்து
பேதியான் வஞ்சம் இலாப் பேதமையான் ஆதி
7

முதலாய் நடுவாய் முடிவாய் முடிந்து
சிதலாய் வெளியொளியாஞ் சென்மம் சதகோடி
8

சத்தியும் மந்திரமும் தானாகப் பாவித்து
முத்தி கொடுக்கும் முழுமுதல்வன் சுத்திய
9

செஞ்சடையான் யோகநிலை தேர்ந்து தனைக்குறியார்
நெஞ்சடையான் பிஞ்சு நிலாச்சுடையான் நஞ்சார்ந்த
10

கண்டத்தான் தேடரிய காட்சியான் பல்கோடி
அண்டத்தான் சோதி அருவுருவான் முண்டகச்செம்
11

போதம் கடலும் பொருப்பும் விருப்பாகிச்
சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும்
12

சரியை கிரியை தவயோக ஞானம்
தெரிய அமைத்த சிவசித்தன் துரியத்தில்
13

தோத்தி அணுவாய்த் துகழாய்ச் சுடரொளியாய்த்
தேத்தியுரு வாகவந்து சென்மிப்போன் சாத்தரிய
14

முக்குணமும் ஐம்பொறியும் மும்மலமு முண்டாகி
எக்குணமுந் தானாய் இருந்தருள்வோன் அக்கரமாம்
15

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் எங்கும் பிரணவமாய்க் கொஞ்சப்
16

பொருளாய் மருளாய்ப் புரையாய் உரையாய்
அருளாய்ந் தனியிருந்த ஆனந்தன் இருளாத
17

காட்சியான் கண்டவர்க்குக் காணாத பேர்க்குருவும்
சூட்சியாய் நின்ற தொழிலாளி ஆட்சி
18

இடைபிங் கலைசுழியினை எட்டாமல் மூலக்
கடையில் நடக்கும் கடலுடையோன் விடையேறும்
19

பாசன் குடிலைப் பராசத்தி வீட்டிலுறை
ஏகன் பிறப்புறப்பு ஒன்று இல்லாதான் யோகன்
20

சிறியன் பெரியன் சிவப்பன் கறுப்பன்
குறியன் நெடியன் எனக் கூறாதான் பொறிகலந்த
21

பாசத்தான் பாசக் கட்டை அறுத்தவர்க்கு
மாசத்தான் சோதிமணி மண்டத்தான் நேசத்தான்
22

பொய்யர்க்குப் பொய்யன் பொருந்தி யுளந்தோறும்
மெய்யர்க்கு மெய்யாய் வெளிநின்றோன் ஐயன்
23

உருவும் அருவும் ஒளியும் வெளியும்
கருவும் கடந்த கன மாயன் குருவாகித்
24

தோத்திப் பழவடியார் சூழ்வினையை நீக்கியுரு
மாத்தித் தனது வசம் ஆக்கியே சாத்தரிய
25

மானிடச் சட்டை வடிவெடுத்த மாயோகி
யானிடப முந்தும் அருள் ஆனந்தன் தேனடர்ந்த
26

செங்கமலத் தோற்கரிய தேவன் அடியவர்கள்
அங்கலமத் தேயுறையும் ஆனந்தன் எங்கள் குரு
27

நேசிக்கும் அன்பர்துயர் நீக்கி நிலைபெறவே
யாசிக்கு மெங்கள்குரு ஆனந்தன் பூசிக்கும்
28

பொன்மலைக்கும் வெள்ளிப் பொருப்புக்கும் பொற்புடைய
கன்மலைக்குந் தானே கடவுளாய் பன்மலைக்கும்
29

எட்டாய்ச் சிகரம் எழுத்துக் கொழுந்தோட
மட்டான ஓங்கார வன்மலையான் கட்டாகத்
30

தேடும் அடியார்கள் சின்னம் துகளறவே
ஆடுஞ் சிவகருணை ஆற்றினான் நாடுதவம்
31

பண்ணும் அடியார் பழவினைபோய்ப் பாதமலர்
நண்ணும் மொழியிற் பேரின்பம் நாட்டினான் எண்ணும்நிறை
32

கற்புடையான் என்னக் கலங்காத நெஞ்சுகொண்ட
பொற்புடைய காயா புரிநகரான் அற்பவிசை
33

வண்டு தொடாமல் மதுஒழுகி வாய்ந்தாறைக்
கொண்டு மணத்த குண்மலையான் துண்டத்
34

துரமே கரமாய் ஒருநாளும் ஓயாச்
சரமே முழங்கும் தவத்தோன் கரமெடுக்கும்
35

தொண்டர் பலபகையைச் சூறைகொள வேணும் எனக்
கொண்டதவ வேடக் கொடியினான் சண்டமிகும்
37

சமையப் பகைதுடைத்துச் சாதிமுறை எல்லாம்
குமைய மிதித்துக் குளப்பி அமையாத
38

ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி
நாணமுற்ற பாகம் நறுக்கியே காணத்
39

துடர்ந்த கிளைநிகழச் சூரைபட வீசி
அடர்ந்தமக வாகைக்கு அடங்காப் படர்ந்ததெரு
40

வீதியும் அம்பலமும் மிக்கதொரு சாதிகட்குப்
பூதிப் பொடி அணிந்து பொய்மிதித்துக் காதிச்
41

சினக்குறும்பை வாரிச் சிதறித் திரட்டி
மனக்குறும்பைப் பற்றி வனைத்து உனக்கென்கென்
42

ஓது குறும்பை உழக்கி எமராசன்
தூதனைப் பாய்ந்து துரத்தியே தாதுசெறி
43

அஞ்ஞான மோகம் அறுக்கு அனுபோக
மெய்ஞ்ஞான மோனமத வேளத்தான் பைநாகம்
44

நெட்டுடலை மாறி நெருக்கிப் பரிபடுத்திக்
கட்டும் இசைக்கும் கடிவாளந் தொட்டுத்
45

திசைவாயு என்னுஞ் சின்னூல் அகப்பட்டுக்
குசையால் இறுக்கிக் குணப்படுத்தி அசையா
46

மனம் என்னுங் கல்லணையை வைத்திறுக்கி வாய்ந்த
சினமென்னும் அங்கவடி சேர்த்துக் கனமான
47

நாகபந்தஞ் சாரி நடைதுலுக்குத் தூவான
மாகமுற விட்டுள் ளடக்கியே சோகப்
48

புரியட்ட காயப் பொருப்பைத் தகர்த்துச்
சரியுட்ட ஐம்பொறியைத் தாண்டித் துரியத்தில்
49

ஓடிவிந்து நாதமெனும் உட்கோட்டை யும்கூத்து
வாடியிடும் நாடி வரம்பு அழித்து ஆடியிடும்
50

தொண்டுபுரி அன்பர் தொடநரகில் வீழாமல்
மண்டுசினம் கொண்டெழுந்த வாசியான் கண்டுதொழும்
51

தன்னாணை தானே தனக்காணை யாவதன்றிப்
பின்னாணை இல்லாத பெற்றியான் எந்நாளும்
52

மாறாத கீர்த்திமது மாலையான் வாய்திறந்து
சீறாத மோனச் சிவயோகி நேராக
53

ஆண்டகுரு சிற்றம் பலவன் அடிஅருளும்
வேண்டி வளர்த்த இருபதத்தான் பூண்டசிவ
54

வேடத்தான் ஓங்கி விளங்கும் செழுங்கமல
பீடத்தான் ஞானப் பிரகாசன் ஆடில்
55

பரியான் உரியான் பசியான் பொசியான்
பெரியான் அரியான்பேர் இல்லான் துரியா
56

தீதம் கடந்து திகழம் பரங்கடந்து
போதம் கடந்துநின்ற பொற்பதத்தான் சீதம்
57

கருணை ஆனந்தமுனி கண்டுதொழ வந்த
வருணன் ஆனந்த மழைமேகம் அருணப்
58

பிரகாசம் கொண்டுநின்ற பேரொளிபோல் மாயைப்
பிரகாசம் மாற்றும் பெருமையான் இறவாத
59

மெய்ப்பொருளைக் காட்டி விரும்பும் அடியாரைக்
கைபொருளாய்க் கொண்ட கருணையான் துய்க்கும்
60

உடல்பொருள் ஆவி யுதகத்தாற் கொண்டு
சடவினையை மாற்றும் சமனன் இடைபிங்
61

கலைசுழினைக்கு எட்டாத காட்சியான் காமம்
கொலை களவு தீர்த்தகு டோரி அலையாமல்
62

ஆட்கொண்ட சித்தம் பலவ அடிக்கமலத்
தாட்கொண்ட தொண்டர்தனக்கு அடியேன் ஆட்கொண்ட
63

தூர்த்தன் இவ னென்பர் சொல்லத் துயருழைந்து
பார்த்தவிடம் எல்லாம் பகையாகி வேர்த்துக்
64

கலங்கி விதிவிதித்துக் கண்ணீர்ஒழுக
மலங்கிக் குருநாட்டில் வந்தேன் துலங்குமெனக்
65

காயா புரிநகரைக் கண்ணுற்றேன் அவ் ஊரில்
போய் ஆதரித்துப் பொருந்தினேன் மாயாத
66

மாது சிவானந்த வல்லி எனப் பேரிட்டாள்
ஓதுதிரி கோணவல்லி யூதார் ஆதரவாய்
67

கொஞ்சி வளர்த்த குடிலை மகள்தனையே
மிஞ்சுசிலம் பத்தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய்
68

கால்மாறி யாடக் கலாதி கரணவித
மேல்மாறிச் சுத்தி விளையாட நூல்மாறிக்
69

கைலாகு பாயக் கலந்து பலசமய
மெய்லாகு தாவிஅதன் மேல்மிதிக்கப் பையப்
70

பரதத் தொழிலும் பலகோடி வேத
கரதத் தொழிலும் தொகுத்து விரதவுரை
71

தென்னூல் வடநூலைத் தேர்ந்து பலகோடி
முந்நூனூறுந் தானே மொழிந்திட்டாள் இந்நிலத்தில்
72

ஆடப் பதுமைதனை ஆட்டிவிக்க அப்பதுமை
பாடத் தொழிலும் பலகற்றாள் நாடறிந்த
73

வம்பி திரிகோண வல்லி வடகிரியைக்
கெம்பீரம் எல்லாங் கிரிகித்தேன் அம்புவியில்
74

மின்னே எரிந்தெழுந்த மேகம்போல் மெய்குளிர்ந்து
தன்னை அறிந்த தளதளத்தாள். பொன்னனையாள்
75

பக்குவத்தை நோக்கிமுகம் பார்த்துப் பரிமளிக்க
முக்குணமும் கற்ற முதுகிழவி தொக்கறுத்து
76

மின்னே அமுதம் விளைந்த மனக்கமலப்
பொன்னே உறுதியுள்ள புத்திகேள் பன்னரிய
77

வேத புராணர் வெறும்பிலுக்காய் உன்கமலப்
பாதம் பணிவர்முகம் பாராதே நாதத்
78

துரியமணி வாசலிலே தோன்றிமுகம் சத்தே
தெரியநின்று பின்னை உள்ளே சென்று அரிதாகச்
79

சாற்றுஞ் சரியைச் சளுக்கர் உனைத்தழுவப்
போற்றுவார் அங்கவர்பின் போகாதே ஏற்றும்
80

அவலக் கிரியை அசடர் உருனை மேவக்
கவலைப் படுவார் கடத்திச் சிவயோக
81

ஆதியர்கள் வந்துன் மலரடியைத் தெண்டனிட்டால்
பேதியாது உள்ளழைத்துப் பேசிக்கொள் ஆதி
82

தவஞான மோனத் தனக்காரர் வந்தால்
அவமானம் பண்ணாது அழைத்துச் சிவபொருளைத்
83

தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே
நாடாத வஞ்சரிடம் நத்தாதே கோடாத
84

சாத்திரத் தூரித்தர்தமைச் சாராதே தக்கமிடும்
கோத்திரப் பஞ்சியளைக் கூடாதே சூத்திரப்
85

பொய்வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய்
மெய்வீணர் ஆசை விரும்பாதே கையோகக்
86

காமத்துக்கு ஆன கலாதிவேள் நூல்கற்ற
வாமத்தார் பால்மனது வையாதே நாமமிட்டுப்
87

பஞ்சரிக்கும் பாசிப் பதப்பிலுக்கர் வந்தக்கால்
நெஞ்செரியத் தள்ளிவிடு நில்லாமல்
88

சித்தக் கெருவியிடம் செல்லாதே சீலமதக்
கொத்தவன்தன் னாசை குறியாதே பற்றற்ற
89

மோனக் குறும்பரசர் மோகித்தால் நீஅவருக்கு
ஆன படியே அழைத்துவிடு ஞானப்
90

பொருள்தேடும் வல்லாரைப் போற்றிப் பொருந்தி
அருளோடு நீசென்றிடு
91

Advertisements