தத்துவங்கள்

தத்துவ உலகில், விஞ்ஞானம் என்பது இன்று மேலை நாட்டில் சயின்ஸ் என்ற பெயரில் பூதாகாரமாய் வளர்ந்து, மனிதனைத் தாண்டி, மனித தத்துவத்திற்கு அப்பால் உள்ள இயற்கையின் சக்திகளையெல்லாம் ஆராய்ந்து, ஜடஇயல் கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றின் சாதனைகளை ஆக்கப் பணியை விட அழிவுவெறிக்கே அதிகம் பயன்படுத்தி வருகிறது. ஆனால் நம் பாரதநாட்டுப் பழம்பெரும் விஞ்ஞானமோ ஆத்ம ஞானம் என்ற பெயரால் முழுமையான வளர்ச்சியுற்று, மனிதனின் உடலுக்குள்ளேயே இயற்கையின் சக்திகளையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை அகக் கருவிகளைக் கொண்டே ஒழுங்காக இயக்கி உன்னத நிலைக்கு உயர்த்தி, அந்த உன்னத நிலையில் இறைவனையும் தன் இருதயத்திற்குள்ளேயே இருத்தி, அந்த இறைவனோடு இரண்டறக் கலக்கும் எல்லையில்லா ஆனந்தமான பேரானந்தமான நிலை அடைவதற்கு வழிகாட்டுவதாகும். இந்த வழியில் நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களையும், அறிவுரைகளையும் அறநெறிகளையும் அப்பியாச யோகங்களையும், யுக்தி முறைகளையும் நாடோடிப் பாடல்களாக வழங்கியிருக்கிறார்கள். அப்பாடல்கள் எல்லாம் பாமரர்களின் நெஞ்சங்களிலும் பதியும்படியும் பாலர்களின் வாய்களிலும் எதிரொலிக்கும்படியும் சுவையோடு மிகவும் எளிய தமிழிலே அமைந்திருக்கிறது என்றாலும், பாடல்களினூடே ஆங்காங்கே நுட்பமான தத்துவங்களும், இருபொருட் சொற்களும் இலைமறைகாய்கள் போல் குலுங்குகின்றன. அவற்றைப் புரிந்து கொள்வதற்கு அந்தந்தப் பாடல் வரும் பக்கங்களின் அடியில் அருஞ்சொற்களுக்கும் பாடல்களின் வரி எண்களைக் குறிப்பிட்டு பொருள் தந்திருப்பதோடு, புத்தகத்தின் இறுதியில் தத்துவ விளக்கங்களுக்கும். அருஞ்சொற்களுக்கும் அகர வரிசையில் தொகுக்கப்பட்டு, பொருள் அகராதி ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர இப்புத்தகத்திலுள்ள ஞானசர நூல், குருஞான சம்பந்த சுவாமிகளின் சிவபோக சாரம். அருணாசல குருவின் நிஜானந்த போதம் முதலியனவற்றிலும் தத்துவ விளக்கங்களைப் படித்துணரலாம். அவற்றோடு பொதுவான தத்துவம் பற்றிப் பின்வரும் சில தத்துவக்குறிப்புகளும் வாசகர்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

பிரபஞ்சத் தத்துவம்

இறைவன் படைக்கும் முன் இந்தப் பிரபஞ்சம் பெயர் உருவமற்று சுத்த வெளியாய், நிர்க்குணமாய், சின்மாத்திரப் பரப்பிரம்மமாக இருந்தது.

அதிலிருந்து பிரமையினால் கானல் நீர் தோன்றுவது போல் மூலப் பிரகிருதி என்னும் இல் மாயை ஒன்று தோன்றியது  அந்த மூலப் பிரகிருதி வெண்மை, சிகப்பு, கறுப்பு என்னும் மூன்றுவித நிறங்களோடு மூன்றுவிதச் சக்திகளாயிற்று. வெண்மை நிறத்ததே மாயா சக்தி. சிகப்பு நிறுத்தது அவித்யா சக்தி. கறுப்பு நிறுத்தது ஆவரண விக்ஷேப சக்தி. இவற்றை முறையே மாயை, அறியாமை (அஞ்ஞானம்) முனைப்பு (அகங்காரம் ) எனச் சொல்லலாம்.

மாயா சக்தி சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்கும் அதில் பரப்பிரம்மம் பிரதி பலிப்பதினால் தோன்றிய பிரதிபிம்பமே ஈஸ்வரன் என்று கூறப்படும். ஈஸ்வரன் அந்த மாயையைத் தன் வசப்படுத்திக் கொண்டு பிருமா விஷ்ணு ருத்திர வடிவமாக நின்று உலகங்கள், யாவையும் படைத்தல், காத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம்) என்னும் முத்தொழில்களையும் இயற்றி விளையாடி வருகின்றான்.

எனவே, பரப் பிரம்மத்திலிருந்து மாயையும். மாயையில் இருந்து அவித்தை எனப்படும். அறியாமையும் (அஞ்ஞானமும்) அந்த அவித்தையிலிருந்து ஆவரண விக்ஷேப சக்தி எனப்படும். அகங்கார ஆற்றலும், அந்த அகங்காரத்திலிருந்து ரஸம், ரூபம், ஸ்பரிசம், சப்தம், கந்தம் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) எனப்படும் ஐந்து நுண்பொருட்களான பஞ்ச தன் மாத்திரைகளும், அவற்றிலிருந்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம்) எனப்படும் பருப் பொருள்களான ஐம்பெரும் பூதங்களும் அப்பஞ்ச பூதங்களினால் பிரபஞ்சமும் பிராணிகளும் உண்டாயின. மாயையினால் உண்டான பிரபஞ்சமும் மாயா சரீரமும் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து ஜீவன்களை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புகளுக்கு ஆளாக்கிக் கொண்டே வரும். முடிவில், எல்லாம் அழிவுறும் பிரளய காலத்தில் எல்லா நதிகளும் கடல் நீரிலே உண்டாகிக் கடைசியில் கடலிலே விழுந்து ஒன்றாகக் கலந்து விடுவது போலவே, பிருமா முதல் மனிதர் மிருகங்கள் முதலான சராரசப் பொருட்களெல்லாம் எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து உண்டாயினவோ அந்தப் பரப் பிரமத்திலேயே ஒன்று கலந்து ஏகமாய் ஜக்கியமாகிவிடும்.

நம் உடல்

மனித உடலானது அவரவர் கையினால் எட்டு சாண் அளவு நீளமும் நான்கு சாண் அளவு பருமனும், 96 விரற்கடைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடம்பில் 96 தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.

உடலின் தத்துவங்கள் : 96

அவையாவன: உடலின் வாசல்கள் 9ம். ஆன்ம தத்துவங்கள் 24ம் தாதுக்கள் 7ம் கோசங்கள் 5ம், குணங்கள் 3ம், மலங்கள் 3ம், பிணிகள் அல்லது வியாதிகள் 3ம் ராகங்கள் அல்லது விகாரங்கள் 8ம், ஆதாரங்கள் 6ம், மண்டலங்கள் 3ம் நாடிகள் 10ம், வாயுக்கள் 10ம், அவத்தைகள் 5ம் ஆக தத்துவங்கள் 96.

உடலின் வாசல்கள் ஒன்பது

கண்கள் இரண்டு; செவிகள் இரண்டு, மூக்குத் துவாரங்கள் இரண்டு வாய் ஒன்று; குய்யம் எனப்படும் கருவாயான ஆண் குறி அல்லது பெண் குறி ஒன்று; குதம் எனப்படும் மலவாய் ஒன்று ஆக வாசல்கள் ஒன்பது.

ஆன்ம தத்துவங்கள்  24

அவையாவன: பூதங்கள் 5; ஞானேந்திரியங்கள் 5; கர்மேந்திரியங்கள் 5; தன்மாத்திரைகள் 5; அந்தக் கரணங்கள் 4 ஆக 24,

பூதங்கள் 5

இவை பஞ்ச பூதங்கள் எனப்படும். அவையாவன: 1. பிருதிவி (பூமி) 2. அப்பு (ஜலம்) 3. தேயு, (அக்னி) 4. வாயு, 5. ஆகாயம். இவை முறையே தமிழில் 1. நிலம் (மண்), 2. நீர் (புனல்) 3. நெருப்பு (அனல்) 4. காற்று (கால்) 5. விசும்பு என வகுக்கப்பட்டு ஐம்பெரும் பூதங்கள் ஐந்து பருப்பொருள்கள் எனவும் வழங்கப்படும்.

ஐம்பூதங்களால் உடல் உண்டாதல்

நிலம், நீர்,நெருப்பு, காற்று, விசும்பு எனப்படும் ஐந்து பருப்பொருட்களில் அதாவது பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் ஐம்பெரும் பூதங்களில் ஒவ்வொன்றும் சமஷ்டி, வியஷ்டி, என இரண்டு பாகங்களாகி இரண்டு பூதங்களாயிற்று, சமஷ்டி என்றால் ஒன்றாயிருத்தல், இதற்கு உதாரணம் தோப்பு, வியஷ்டி என்றால் வெவ்வேறாக இருத்தல். இதற்கு உதாரணம் மரம். இவற்றில் முதற்பாகப் பஞ்ச பூதங்களே பிரபஞ்சமாயிற்று. இரண்டாவது பாகப் பஞ்ச பூதங்கள் இருபத்தைந்து தத்துவங்களாகி, அவை ஒன்று சேர்ந்து மனித உடல் உண்டாயிற்று.

அதன் விளக்கம்: முதலில் ஆகாயம் இரண்டு பாகங்களானபோது, முதற்பாதிப் பாகமான சமஷ்டி ஆகாயம் ஞாதாவாயிற்று, அதாவது அதில் தோன்றிய பிரம்மமும், பிரம்மத்தின் பிரதிபிம்பமும் கூடியதே ஞாதாவாகும். இந்த ஞாதாவை அக்ஷரன் எனவும் க்ஷேத்ரஞ்ஞன் எனவும்,  புருஷன் எனவும், ஜீவன் எனவும் சொல்வார்கள்.

ஆகாயத்தின் இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி ஆகாசத்தை நான்கு பாகங்களாக்கி, அவற்றில் முதற்பாக வியஷ்டி ஆகாசத்தை காற்றோடு (வாயுவோடு) சேர்த்தபோது சங்கல்பம் ( மனஸ்) என்னும் மனத் தத்துவம் பிறந்தது. இரண்டாவது பாக வியஷ்டி ஆகாசத்தை நெருப்போடு (தேயுவோடு) சேர்த்தபோது புத்தி (அறிவு) என்னும் தத்துவம் பிறந்தது. மூன்றாவது பாக வியஷ்டி ஆகாசத்தை நீரோடு (அப்புவோடு) சேர்த்தபோது சித்தம் (நினைவிறுத்தல்) என்னும் தத்துவம் பிறந்தது. நான்காவது பாக வியஷ்டி ஆகாசத்தை நிலத்தோடு (பிருதிவியோடு) சேர்த்தபோது அகங்காரம் ( முனைப்பு) என்னும் தத்துவம் பிறந்தது. இந்நான்கும் அந்தக்கரணங்கள் அல்லது அகக்கருவிகள் எனக் கூறப்படும்.

அடுத்ததாக வாயு (காற்று) இரண்டு பாகங்களாகி அவற்றில் முதற்பாதிப்பாகமான சமஷ்டி வாயுவானது வியான வாயுவாக ( தொழிற்காற்றாக) மாறியது. இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி வாயுவோ நான்கு பாகங்களாகப் பிரிந்து முதற்பாக வியஷ்டி வாயுவை ஆகாசத்தோடு சேர்த்தபோது சமான வாயு ( நிரவுக்காற்று) பிறந்தது. இரண்டாவது பாகவியஷ்டி வாயுவை நெருப்போடு சேர்த்த போது உதான வாயு (ஒலிக்காற்று) பிறந்தது. மூன்றாவது பாக வியஷ்டி வாயுவை நீரோடு சேர்த்த போது பிராண வாயு (உயிர்க்காற்று) பிறந்தது. நான்காவது பாக வியஷ்டி வாயுவை பிருதிவியோடு (நிலத்தோடு அல்லது மண்ணோடு சேர்த்த போது அபானவாயு (மலக்காற்று) பிறந்தது. இவ்வைந்து வாயுக்களும் எல்லா ஜீவராசிகளுக்கும் பஞ்ச பிராணன்களாக இருந்து வருகின்றன.

அடுத்ததாக தேயு அக்கினி (நெருப்பு) இரண்டு பாகங்களாகி அவற்றில் முதற்பாதிப் பாகமான சமஷ்டி அக்கினியோ கண்களாயின, இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி அக்கினியோ நான்கு பாகங்களாகப் பிரிந்து.  அவற்றில் முதற்பாக வியஷ்டி அக்கினியை ஆகாசத்தோடு சேர்த்தபோது செவிகள் தோன்றின. இரண்டாவது பாக வியஷ்டி அக்கினியை வாயுவோடு சேர்த்தபோது உடல் பிறந்தது. மூன்றாவது பாக வியஷ்டி அக்கினியை நீரோடு சேர்த்த போது வாய் அல்லது நாக்கு தோன்றியது. நான்காவது பாக வியஷ்டி அக்கினியை பிருதிவியோடு (மண்ணோடு) சேர்த்தபோது மூக்கு தோன்றியது.

அடுத்ததாக அப்பு ( நீர் அல்லது ஜலம்) இரண்டு பாகங்களாகி, அவற்றில் முதற்பாதிப் பாகமான சமஷ்டி ஜலமோ ரசம் (சுவை) என்னும் தன்மாத்திரை ஆயிற்று. அதாவது ருசி அறிவதாயிற்று. இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டி ஜலமோ நான்கு பாகங்களாகி, அவற்றில் முதற்பாகத்தை ஆகாசத்தோடு சேர்த்தபோது சப்தம் (ஓசை) பிறந்தது. இரண்டாவது பாகத்தை வாயுவோடு சேர்த்தபோது ஸபரிசம் ( ஊறு) தோன்றியது. மூன்றாவது பாகத்தை நெருப்போடு சேர்த்தபோது ரூபம் (ஒளி-பார்வை) பிறந்தது. நான்காவது பாகத்தை பிருதிவியோடு (மண்ணோடு) சேர்த்த போது கந்தம் (நாற்றம் – வாசனை நுகர்தல்) பிறந்தது.

அடுத்ததாக பிருதிவி (நிலம், பூமி, மண் எனப்படுவது) இரண்டு பாகங்களாகி, அவற்றில் முதற் பாதிப் பாகமான சமஷ்டி பிருதிவியானது குதம் (மலத்தைத் தள்ளும் மலவாய்) ஆயிற்று. பிறகு இரண்டாவது பாதிப் பாகமான வியஷ்டிப் பிருதிவியோ மேலும் நான்கு பாகங்களாகப் பிரிந்து, அவற்றில் முதற்பாகத்தை ஆகாசத்தோடு சேர்த்தபோது வாக்கு ( பேசுவதற்குரிய வாய்) தோன்றியது.

இரண்டாவது பாகத்தை வாயுவோடு (காற்றோடு) சேர்த்தபோது பாணி (கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் உரிய கை) தோன்றியது. மூன்றாவது பாகத்தை நெருப்போடு சேர்த்தபோது பாதம் (நடப்பதற்கும் நிற்பதற்கும் உரிய கால்) தோன்றியது. நான்காவது பாகத்தை நீரோடு சேர்த்தபோது குய்யம் (அதாவது ஆண் பெண் இன்பத்திற்குரிய மர்மக்குறி) தோன்றியது.

மேற்கூறிய இருபத்தைந்து தத்துவங்களும் சேர்ந்து உடல் பிறக்கிறது.

ரஸம், ரூபம், ஸ்பரிசம், சப்தம், கந்தம் (சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம்) என்னும் ஐந்து குணங்களையுடைய பிருதிவியினால் (மண் தத்துவத்தினால்) தாவர ஜங்கம உருவங்களான பிரபஞ்சம் அனைத்தையும் பிரும்மதேவன் படைக்கிறார். சப்த ஸ்பரிச ரூப ரசம் என்னும் நான்கு குணங்களை உடைய அப்புவினால் (நீர்த் தத்துவத்தினால்) பிரபஞ்சங்கள் அனைத்தையும் மகாவிஷ்ணு காத்தருள்கிறார். சப்த ஸ்பரிச ரூபம் என்னும் மூன்று குணங்களை உடைய தேயுவினால் (நெருப்புத் தத்துவத்தினால்) பிரபஞ்சங்கள் அனைத்தையும் ருத்திரர் அழிக்கிறார். சப்த ஸ்பரிசம் என்னும் இரண்டு குணங்களை உடைய வாயுவினால் (காற்று தத்துவத்தினால் மகேஸ்வரர் மாயா சம்பந்தமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் பிரமையை உண்டாக்குகிறார். சப்தம் என்னும் ஒரே குணமுள்ள ஆகாசத்தினால் ஜீவன்களுக்கு ஞானத்தை (அறிவை) சதாசிவம் உண்டாக்குகிறார்.

பஞ்ச ஞானேந்திரியங்கள் ( ஐம்பொறிகள்)

1. தொக்கு, 2. சிங்குவை, 3. சட்சு, 4. ஆக்கிராணம் 5. சோத்திரம், இவை தமிழில் முறையே 1. மெய் 2. வாய், 3.கண், 4. மூக்கு, 5. செவி என வகுக்கப்பட்டு ஐம்பொறிகள் என வழங்கப்படும்.

இவற்றின் இயல்பு: 1. மெய் (உடம்புத் தோல்) வாயுவின் அம்சமாகையால் அதன் தன்மைகளான குளிர்ச்சி, வெப்பம் மென்மை, வன்மை என்னும் நான்கு வித ஸ்பரிசங்களையும் உணர்ந்தறியும்.

2. வாய் அல்லது நாக்கு: அப்புவின் (நீரின்) அம்சமாகையால் அதன் தன்மைகளான உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, என்னும் அறுசுவைகளையும் (ரசத்தை) ருசித்தறியும்.

3. கண்: தேயுவின் (நெருப்பின்) அம்சமாகையால் அதன் ஒளியை அதாவது கறுப்பு, சிகப்பு, பச்சை, நீலம்,  மாசிர நிறம், நீளம், குட்டை பருமன், மெலிவு முதலான பத்துவித ரூபங்களையும் (ஒளியை) பார்த்தறியும்.

4. மூக்கு: பிருதிவியின் (மண்ணின்) அம்சமாகையால் அதன் தன்மைகளான சுகந்தம் துர்க்கந்தம் என்னும் வாசனைகளை நுகர்ந்தறியும்.

5. செவி: ஆகாசத்தின் (விசும்பின்) அம்சமாகையால், அதன் குணங்களான பலவித சப்தத்தையும் (ஓசையையும்) கேட்டறியும்.

இவை ஐந்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை அறிவதால் பஞ்ச ஞானேந்திரியங்கள் எனக் கூறப்படுகிறது.

பஞ்ச கர்மேந்திரியங்கள்.

1. வாக்கு: 2. பாணி: 3. பாதம்: 4. பாயுரு: 5. உபஸ்தம். கன்மேந்திரியங்கள் எனப்படும். இவை தமிழில் முறையே. 1. வாய். 2. கை: 3. கால்: 4. மலவாய்: (குதம்) 5. கருவாய் என வகுக்கப்பட்டு ஐந்து தொழில் உறுப்புக்கள் என வழங்கப்படும்.

இவற்றில் செயல்கள்: முறையே 1. வசனம் 2. தானம். 3. கமனம்; 4. விசர்ச்சனம்; 5. ஆனந்தம். இவை தமிழில் முறையே. 1. சொல்லல், 2. நடத்தல் 3. ஏற்றல் கொடுத்தல், 4. விடுதல், 5.மகிழ்தல் என வழங்கப்படுகின்றன.

1. வாக்கு – வாய். இது ஆகாசத்தின் அம்சமாகையால் அதன் குணமாக நின்று வசனிப்பது வாக்கு ஆகும்!

2. பாணி – கை; இது வாயுவின் காற்றின், அம்சமாகையால் கொடுத்தல் வாங்கல் பிடித்தல், விடுதல் முதலானவற்றைச் செய்யும்.

3. பாதம் – கால் இது தேயுவின் (நெருப்பின்) அம்சமாகையால் நடத்தல் நிற்றல், அமர்தல் எழுந்திருத்தல் முதலானவற்றைச் செய்யும்.

4. பாயுரு – குதம் மலவாய், இது பிருதிவியின் (மண்ணின்) அம்சமாகையால் மலஜலங்களை வெளியே தள்ளும்.

5. உபஸ்தம் – கருவாய் அல்லது ஆண் பெண் மர்மக்குறி. இது அப்புவின் (நீரின்) அம்சமாகையால் சிறு நீர் கழிப்பதோடு ஆணின் இன்பச் சுரப்பான சுக்கிலத்தையும் பெண்ணின் இன்பச் சுரப்பான சுரோணிதத்தையும் வெளிப்படுத்தி போகானந்தம் விளைவிக்கும்.

இவை இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரியம் செய்வதால் கர்மேந்திரியங்கள் என வழங்கப்படுகின்றன.

பஞ்ச தன்மாத்திரைகள்

1. ரசம் : 2. ரூபம்: 3. ஸ்பரிசம் 4. சப்தம் : 5. கந்தம்: இவை தமிழில் முறையே 1. சுவை; 2. ஒளி ;3. ஊறு; 4. ஓசை; 5. நாற்றம் என வகுக்கப்பட்டு ஐந்து நுண்ணிய பொருள்கள் என வழங்கப்படும்.

இவற்றின் இயல்புகள்:

1. ரசம் – நீரின் தன் மாத்திரையான இது நாவில் நீர் சம்பந்தமிருப்பதால் அந்த நாவிலிருந்து அறு சுவைகளின் பேதங்களை உணர்விக்கும்.

2. ரூபம், தேயுவின் (நெருப்பின்) தன்மாத்திரையான இது. கண்களின் நெருப்பின் இயல்பு சம்பந்தப்பட்டிருப்பதால் பத்து விதமான உருவங்களையும் விழிவழியே காண்பிக்கும்.

3. ஸ்பரிசம் – வாயுவின் தன் மாத்திரையான இது. <உடலில் பிராணன் முதலான வாயுக்கள் அனைத்தோடும் வியாபித்திருப்பதால் தொட்டுக்காட்டும் ஸ்பரிச குணத்தை உடலிலிருந்து உணர்த்தும்.

4. சப்தம் – ஆகாயத்தின் தன் மாத்திரையான இது காதின் உட்புறத்திலுள்ள மெல்லிய ஜவ்வின் வழியாக ஓசையை உணர்விக்கும்.

5. கந்தம் – பிருதிவியின் (மண்ணின்) தன் மாத்திரையான இது மூக்கில் பிருதிவியின் சம்பந்தமிருப்பதால் அந்த மூக்கின் வழியே நறுமணம் துர்க்கந்தமான வாசனைகளை அறிவிக்கும்.

சப்தமானது ஆகாயத்திலும் செவியிலும் ஒடுங்கும்
ஸ்பரிசமானது காற்றிலும் உடம்பிலும் ஒடுங்கும்
ரூபமானது நெருப்பிலும் கண்ணிலும் ஒடுங்கும்
ரசமானது நீரிலும் நாவிலும் ஒடுங்கும்
கந்தமானது மண்ணிலும் மூக்கிலும் ஒடுங்கும்
வசனமானது வாக்கிலும் ஆகாயத்திலும் ஒடுங்கும்
கமனமானது காற்றிலும் காலிலும் ஒடுங்கும்
தானமானது நெருப்பிலும் கையிலும் ஒடுங்கும்.
விசர்க்கமானது நீரிலும் குதத்திலும் ஒடுங்கும்.
ஆனந்தமானது மண்ணிலும் குய்யத்திலும் ஒடுங்கும்

Advertisements