சேஷ யோகியார்

ஞான ஏற்றம்

பிள்ளையாரும் வாரி
பிள்ளையாரும் அங்கே
பெருத்தமூலர் தாரஞ்
சிறுத்தஇதழ் நாலாம்
உரைத்தகம்ப மாகி
ஒங்கியுச்சி தொட்டுத்
தாங்கியதன் கீழாய்த்
தான் இரண்ட தாகித்
தங்கிவாயு வானால்
அங்குமே கடந்து
சங்கிலி பிளந்து
சமத்தவாயு வானால்
இங்கிது உரைத்தே
இரண்டுடனே வாரி
இன்னம் அதன் மேலே
வன்னமதைச் சொல்வேன்;
அன்னத்துக்கு ராசன்
அயன் சரஸ் வதியாம்;
நயந்த இதழ் ஆறாம்
நல்ல நிலம் பொன்னாம்
நகரமேயெ ழுத்தாம்
உகரங்கந்த மாகும்;
முத்திதந்த நாதா
மூன்றுடனே வாரி
மோசம்பண்ண மாயன்
வாசமணி பூரம்
நேசம் லட்சுமியாம்
வீசம்பத் திதழும்
ஓசைமவ்வெ ழுத்தாம்
தேசமே வெளுப்பாம்
ஆறுசுவை யாலே
நடுவேதேயு வீடாம்
நாலுடனே வாரி
நாலும்எட் டிதழும்
நல்ல செம்பு மேனி
எல்லைருத்தி ரனாம்
தொல்லைவிழிப் பார்வை
செல்லுமே சிகாரம்
அல்லல்உண்டே யின்னம்
அஞ்சுடனே வாரி
நெஞ்சில் அவ்வே ழுத்தாம்
கொஞ்சிய மயேசன்
மிஞ்சுமறு கோணம்
மேனிகறுப் பாமே
தன்னிதழைப் பார்க்கில்
தனியேபதி னாறாம்
முந்தவேலை யோடல்
அந்தரங்கஞ் சொல்வேன்
ஆறுடனே வாரி
கூறுவேனே நானும்
குருவிருந்த நேர்மை
அருகிருந்த பூசம்
அமைச்சல்லவோ அத்தான்!
என்னவென்று சொல்வேன்!
ஏழுடனே வாரி
தாழச்சொன்ன பேச்சுச்
சத்தியங்காண் அத்தான்!
ஏழைசொன்ன பேச்சு
எட்டுடனே வாரி
எட்டுச்சாண் உடம்பு!
கட்டையைநம் பாதே;
ஒன் றல்லவோ தெய்வம்;
ஒருபதியா லெட்டாம்
ஊமையெழுத் தாலே
ஓங்காரம்உண் டாச்சு:
ஓங்காரத்தி னாலே
உண்டாச்சுதே லோகம்:
இதுவுங்குரு வாலே
இருபதியா லெட்டாம்
இறைக்கிறரண் டேற்றம்
சுரக்குமேழை நாலாம்
முந்திகுரு பாதம்
முப்பதியா லெட்டாம்
முப்பாழுங் கடந்து
அப்பாலே நடந்தால்
அதிசயம்பார் அத்தான்!
நல்லகுரு பாதம்
நாற்பதியா லெட்டாம்
நாலுமூலைக் குண்டம்
நடுவெழுந்த தூணாம்
படுமுதல் இரண்டாம்
படுமுதல் பிடுங்கி
பருத்தமரம் ஏறிக்
குருத்தில்கள்ளி றக்கிக்
கூசாமற் குடித்தாற்
பேசாதே பிறகு
அஞ்சாதே நீ அத்தான்!
ஐம்பதியா லெட்டாம்
அஞ்சல்லவோ பூதம்?
பஞ்சல்லோவெ ழுத்து?
அஞ்சொடுங்கும் போது
நெஞ்சடங்கும் அத்தான்!
ஆறுமுக மல்லோ
அறுபதியா லெட்டாம்
ஆறல்லவோ தாரம்?
வேறெல்லோ சொரூபம்?
வேறறிந்த போக்குத் 
தூரமில்லை அத்தான்!
என்னவென்று சொல்வேன்
எழுபதியா லெட்டாம்
ஏழல்லவோ நாடி?
வாழின்பத்து நாடி
பாழல்லவோ நானும்?
பாழ்கடந்த பேர்க்குப்
பத்துக்கோடி தெண்டம்
என்னவென்று சொல்வேன்?
எண்பதியா லெட்டாம்
எண்ணிக்கை யறிந்து
கண்ணப்பனைக் கண்டு
திண்ணப்பா பழத்தைக்
குண்ணப்பா வறுமை.
விண்ணப்பம் உரைத்துச்
சண்ணப்பா குருவை
சொன்னதப சாரம்
தொண்ணூறுடன் எட்டாம்
மண்ணில்வெகு தூரம்
குண்ணறிந்த பேரை
எண்ணறிந்தே வாடி
ஏகமன மாகிப்
பாரமும் அறிந்து
நாகத்தை யெழுப்பிப்
பீசத்தைத் துறந்து
யோகத்தை நடத்திப்
போகத்தைக் கடந்தால்
தாகத்தை நிறுத்தும்:
சோதியறிந் தோர்க்குத்
தூரமில்லை அத்தான்!
சாதிகுல மில்லை
சற்குருவ றிந்தால்;
நித்தியம் இதுவே;
பத்தியாய்ப் பணிந்தால்
முத்திதரும் அத்தான்!
வாமநெறி சீவன்
ராமயோகி தந்த
ராசயோகி சேடன்
தாசன் அரு ளாலே
பாசமறச் சொன்னேன்
பிரியாமலே அத்தான்
பிள்ளையாரும் வாரி.

Advertisements