சத்திய நாதர் என்ற ஞானச் சித்தர் பாடல்

ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே
சோதிச் சுடரொளியே சுத்த நிராமயமே.                                                       1

தாயே பகவதியே தற்பரையே அற்புதமே
நேயமுடன் ஞான நெறியைஅறி விப்பாயே.                                                2

முடிநடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய்
மடிவில்லா மெய்ஞ்ஞான மார்க்கத் தகோசரமாய்.                                  3

அஞ்ஞானக் காடு கடந் தாங்குவழி யேதொடர்ந்து
மெய்ஞ்ஞானங் காணநின்னை வேண்டிஅலைகிறண்டி                      4

நிலையில்லாப் பொய்கூட்டை நிச்சயங் கொண்டாசை
வலையில் அகப் பட்டுஉழன்று வாடித் திரிகிறண்டி                               5

தன்னைஅறி யாமல் தலமெட்டுங் காணாமல்
அன்னை அன்னை என்று அலறித் திரிகிறண்டி                                        6

தவநிலையில் தேறாமல் உன்னை உணராமல்
பவநிலையில் புக்கி அகப் பட்டுஉழன்று வாடுறண்டி.                          7

பொல்லாக் கொலையும் புலைஅவா விட்டு உன்றன்
வல்லபதம் காண மயங்கித் திரிகிறண்டி.                                                    8

துன்பமெல்லாம் போக்கிச் சுகானந்த மானநின்தாள்
இன்பம் அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறண்டி.                                              9

வஞ்சகம்பொய் சூதுகொலை மானார் மயக்கமெனும்
சஞ்சலதை நீங்கித் தனித்திருக்கத் தேடுறண்டி.                                     10

ஆசைப் பெருக்காறதில்வீழாது உன்பந்த
பூசைப் புரியப் புலம்பித் தவிக்கிறண்டி                                                       11

ஊணுறக்கம் இன்பதுன்பத் துஉற்றவினை யைஒழித்துக்
காணுதற்கு எட்டாப்பொருளைக் கண்டு மகிழ்ந்தனடி                        12

பஞ்சபூதாதிப் பகுப்புகள்பொய் யென்றுணர்ந்துன்
செஞ்சரணக் கஞ்சம் அதைத் தேடி அலைகிறண்டி                               13

ஆசை ஒழிந்தும் அருள்ஞானம் கண்டு அறிந்தும்
பேசத் தெரியாமல் பேய்போல் அலைகிறண்டி.                                      14

ஆங்காரம் விட்டு அருள்வெளியைக் கண்டு அடுத்து
நீங்காப்பே ரின்ப நிலையறித் தேடுறண்டி?                                              15

சருவம் பிரமம் எனத் தான்தெரியுந் தன்மை
மருமம் கா ணாமல் மயங்கித் திரிக்கிறண்டி.                                         16

ஐங்காயக் கோட்டை அதுமெய்யென்று உன்பாத
பங்கயம்போற் றாமல் பரிதவித்து நிற்குறண்டி.                                    17

பச்சைப்பாண் டத்தைப் போலநாள் இருக்குமென
நிச்சயமாய் எண்ணி நிலைதவறி வாடுறண்டி.                                      18

நீரிற் குமிழியைப்போல் நில்லா உடம்பினைவி
சாரிக்கப் பொய் என்றே தானறிந்து வாடுறண்டி.                                 19

நானென்ற கர்வம் நசித்ததனைச் சுட்டறுத்துத்
தான் என்ற அமிர்மந் தனைஅறிய வேண்டுறண்டி.                             20

யோகந் தெரிந்ததன்றன் னுண்மை யறிவதற்குப்
பாகமுண ராமற் பதறி யலைகுறண்டி.                                                      21

மவுனத்தை உச்சரித்து மந்திரபீ டத்தேறிக்
கெவுன மறிந்து கிலேசம்அதை விட்டேண்டி.                                         22

கற்பஞ்சாப் பிட்டே கனத்தவஞ் செய்ததினால்
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள்                                 23

காயசித்தி யோகசித்தி கண்டதனில் ஒண்டினதால்
மாயசித்தி யாலே மயங்காது இருக்கிறண்டி.                                        24

ஓமென்ற அக்கரத்தின் உட்பொருளைக் கண்டுவந்தும்
தாமென்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி.                                25

பிரணவமும் தானறிந்து பேச்சடங்கி நின்ற
சொருபந் தெரிந்தத் துலக்கத்தில் நிற்குறண்டி.                                   26

நந்தி கொலுவிருப்பை நான் அறிந்து கண்டுகொண்ட
சத்தி தெரிந்து தவியாது இருந்தண்டி.                                                        27

அட்டகரு மம்தெரிந்தும் ஐவர் நிலை அறிந்தும்
இட்ட மதிற்சற்றும் இல்லாது இருக்குறண்டி.                                           28

நானென்னும் ஆணவங்கள் அணுகாது நான் எனலும்
தான் எனலும் அற்றுத் தனியே திரிகுறண்டி.                                           29

எட்டாச் சுழிமுனையி லேயிருந்து என்மனதுக்கு
எட்டாப் பொருளதனை எட்டிப் பிடித்தேண்டி.                                        30

சாகாக்கால் இன்னதெனத் தானறிந்து கொண்டதன் பின்
வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி.                                           31

மோகாந்த காமெனும் மோகம் தவிர்ந்தன்பின்
வேகாத் தலையும் விரைவில் அறிந்தேண்டி.                                          32

சரியைகிரி யையோகந் தாண்டியபின் ஞான
புரிக்கோட்டைக் குள்ளே புகுந்து திரிகுறண்டி.                                     33

மந்திரமுந் தந்திரமும் மாய விசர்க்கமெலாம்
உந்திரம் என்று எண்ணி உறுதியது கொண்டேண்டி.                        34

சத்தத்தின் உள்ளே சதாசிவத்தைத் தானறிய
உத்தமியே நின்னுரு என்று ஓர்ந்தறிந்து கொண்டேண்டி.               35

Advertisements