கோயில் திரு அகவல் – 3

பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்
உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து                   5

இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்;
ஐய! நின் அடைக்கலம்; அடியன் நின் அடைக்கலம்;
மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்;                                     10

ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்;
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்,
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின                                                    15

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,
பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,
முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை;
உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை                                       20

எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச்
செழும்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக்                                       25

கொலை படைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக்
கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை,
ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தை.                                              30

புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக்,
கடுவெளி உருட்டிய சகடக் காலைப்                                                      35

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்
நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப்                            40

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்;
வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்;
இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்;                                     45

அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்;
மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக்
கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம்,
தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும்                                 50

எம்பெரு மானின் இணையடிக்கு அபயம்
அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே!

Advertisements